இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரில் இந்தியா 'ஏ' அணிக்காக விளையாடி வரும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை, கிரிக்கெட்டின் 50 ஓவர் வடிவத்திலும் சிறப்பாகச் செயல்படுவார் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பாராட்டியுள்ளார். ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பி வென்று அசத்தியதைத் தொடர்ந்து, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்காக இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.
2024-25 விஜய் ஹசாரே தொடரில் அறிமுகமான பிறகு, 15 வயதான வைபவ், இதுவரை எட்டு லிஸ்ட்-ஏ (List-A) போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். வைபவ் சூர்யவன்ஷியின் மனநிலை மற்றும் சூழலுக்கு ஏற்ப விளையாடும் திறமையைக் கண்டு ஈர்க்கப்பட்ட மஞ்ச்ரேக்கர், அவர் நீண்ட காலம் இந்த வடிவிலும் நீடிப்பார் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் பேசும் போது "இலங்கையில் இந்தியா 'ஏ' அணி முத்தரப்பு தொடரில் விளையாடி வருகிறது. நான் வைபவ் சூர்யவன்ஷியை மிக அருகில் கவனித்து வருகிறேன். இதுவரை அவர் பெயர் எடுத்தது ஐபிஎல் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே. ஆனால், அது ஒரு வீரரை மதிப்பிடுவதற்கு சரியான சூழல் அல்ல. இது வெறும் 'ஏ' தொடர் என்று எனக்குத் தெரியும், ஆனால் இங்குள்ள ஆடுகளங்கள் ஐபிஎல்லில் இருப்பது போல ரன் குவிப்புக்கு சாதகமானது அல்ல. சூர்யவன்ஷியின் பேட்டிங்கில் நான் ஆழத்தைக் காண முடிந்தது," என்று தெரிவித்துள்ளார்.
"அவருடைய பேட்டிங்கைப் பார்த்த பிறகு எனக்கு உற்சாகமாக இருக்கிறது. அவர் வெறும் டி20 வீரர் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. அவர் தடுப்பாட்டத்தை நேர்த்தியாக விளையாடுவதையும், பந்தைச் சரியாகக் கணித்து டைமிங் செய்வதையும் நான் கண்டேன். சிறிய அளவிலான வாய்ப்புதான் என்றாலும், அவர் 50 ஓவர் போட்டியிலும் சிறந்து விளங்குவார் என்று நான் நினைக்கிறேன்," என்று குறிப்பிட்டார்.
IND vs AFG: இந்திய அணி பிளேயிங் லெவனில் அறிமுகமாகும் 29 வயது வீரர்.. ஆகாஷ் சோப்ரா கணிப்பு
இந்த முத்தரப்புத் தொடரின் முதல் சுற்று ஆட்டங்களுக்குப் பிறகு இந்தியா 'ஏ' அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அவர்கள் அடுத்ததாக ஜூன் 15, திங்கட்கிழமை அன்று இலங்கை 'ஏ' அணியை எதிர்கொள்கிறார்கள். இந்தியா 'ஏ' அணிக்காக தனது அறிமுகப் போட்டியில் 14 ரன்கள் எடுத்த சூர்யவன்ஷி, ஆப்கானிஸ்தான் 'ஏ' அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் மிகவும் நம்பிக்கையளிக்கக்கூடிய வகையில் விளையாடினார். பவுன்சர் பந்தில் ஆட்டமிழக்கும் வரை, அவர் 22 பந்துகளில் அதிரடியாக 44 ரன்களைக் குவித்தார். இம்மாத இறுதியில் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் வைபவ் முதல் முறையாக இந்திய அணிக்கு அறிமுகமாக உள்ளார்.