கொல்கத்தா: ஈடன் கார்டனில் நடைபெற்ற வங்காள டி20 லீக் போட்டியில், சர்வோடெக் சிலிகுரி ஸ்டிரைக்கர்ஸ் (Servotech Siliguri Strikers) அணிக்காக விளையாடிய ஆல்ரவுண்டர் கரண் லால், அதிரடியான சதம் விளாசி, பின்னர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது அணிக்கு அபார வெற்றியைத் தேடித்தந்துள்ளார். இந்த போட்டியில் அடாமஸ் ஹவ்ரா வாரியர்ஸை 73 ரன்கள் வித்தியாசத்தில் சிலிகுரி ஸ்டிரைக்கர்ஸ் வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த சிலிகுரி ஸ்டிரைக்கர்ஸ் அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை எட்டியது. கரண் லால் வெறும் 64 பந்துகளில் 145 ரன்களைக் குவித்து ஆட்டத்தின் நாயகனாகத் திகழ்ந்தார். அவர் இந்த இன்னிங்ஸின் போது 14 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அவருக்குத் துணையாக சுதீப் சாட்டர்ஜி (58) மற்றும் விஷால் பதி (27) ஆகியோர் ரன் குவிக்க உதவினர்.

232 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய அடாமஸ் ஹவ்ரா வாரியர்ஸ், 19.2 ஓவர்களில் 158 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைச் சந்தித்தது. தனது அதிரடி சதத்திற்குப் பிறகு, பந்துவீச்சிலும் தனது திறமையை வெளிப்படுத்திய கரண் லால் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அகிலேஷ் யாதவ் (3/19) மற்றும் சிவம் பாரதி (2/21) ஆகியோர் பந்துவீச்சில் சிறப்பான பங்களிப்பை வழங்கினர்.
இந்த இன்னிங்ஸின் மூலம் கரண் லால் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அவரது 145 ரன்கள் (64 பந்துகள்) வங்காள டி20 லீக் வரலாற்றில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோராகும். இந்த லீக் தொடரில் ஒரே இன்னிங்ஸில் 14 சிக்ஸர்கள் விளாசியதும் சாதனையாகும். மேலும், இந்தத் தொடரில் மொத்தம் 22 சிக்ஸர்களை அடித்து, ஒரே சீசனில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். 15-வது ஓவரில் பந்துவீசிய வ்ருத்திக் சாட்டர்ஜிக்கு எதிராக 6, 4, 6, 6, 6, 4 என விளாசி, ஒரே ஓவரில் 32 ரன்களைக் குவித்து லீக் வரலாற்றில் புதிய சாதனை படைத்தார்.
IND vs AFG: இந்திய அணி பிளேயிங் லெவனில் அறிமுகமாகும் 29 வயது வீரர்.. ஆகாஷ் சோப்ரா கணிப்பு
தனது வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்பாடு குறித்துப் பேசிய கரண் லால், "இப்படியொரு இன்னிங்ஸை விளையாட வேண்டும் என்று நான் விரும்பினேன். எனது பேட் வேகம் மற்றும் சிக்ஸ் அடிக்கும் திறனை மேம்படுத்த கடினமாக உழைத்துள்ளேன்," என்று தெரிவித்தார்.