ராய்ப்பூர்: விராட் கோலி கடந்த இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்ததால் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். இந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது வழக்கமான ‘சேசிங் மாஸ்டர்’ அவதாரத்தை மீண்டும் எடுத்துள்ளார். ராய்ப்பூர் மைதானத்தில் நடந்த போட்டியில் சதம் விளாசியது மட்டுமின்றி, டி20 கிரிக்கெட் வரலாற்றில் யாருமே எதிர்பார்க்காத ஒரு பிரம்மாண்ட உலக சாதனையை செய்து சரித்திரம் படைத்துள்ளார். இதன் மூலம் கடந்த இரண்டு போட்டிகளில் தன்னை விமர்சித்த விமர்சகர்களின் வாயை அடைத்து இருக்கிறார் “கிங்” கோலி.
ராய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் 2026 தொடரின் முக்கிய லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் கொல்கத்தா நிர்ணயித்த 193 ரன்கள் இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு விராட் கோலி தனி ஆளாக நின்று வெற்றியைத் தேடித்தந்தார். ஆரம்பம் முதலே நேர்த்தியாக விளையாடிய அவர், வெறும் 32 பந்துகளில் அரைசதத்தையும், 58 பந்துகளில் தனது 9வது ஐபிஎல் சதத்தையும் பதிவு செய்து அசத்தினார். முடிவில் 60 பந்துகளில் 11 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 105 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.

இந்த மிரட்டலான இன்னிங்ஸ் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 14000 ரன்களை கடந்த அதிவேக வீரர் என்ற மாபெரும் உலக சாதனையை கோலி படைத்துள்ளார். இந்த இமாலய இலக்கை எட்ட கோலி வெறும் 409 இன்னிங்ஸ்களை மட்டுமே எடுத்துக்கொண்டார். இதற்கு முன் டி20 கிரிக்கெட் ஜாம்பவானான வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் 423 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டியதே உலக சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை கோலி முறியடித்துள்ளார். டேவிட் வார்னர் 431 இன்னிங்ஸ்களுடன் இந்தப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார்.
கடந்த 2 போட்டிகளில் தொடர்ச்சியாக 'டக் அவுட்' ஆனதால் கோலியின் பேட்டிங் பார்ம் குறித்து சமூக வலைதளங்களில் பல கேள்விகள் எழுந்தன. ஆனால், தனது விமர்சகர்களுக்கு பேட் மூலம் பதிலளித்துள்ள கோலி, ஐபிஎல் வரலாற்றில் தனது 9வது சதத்தை பதிவு செய்துள்ளார். ஒரு இலக்கை துரத்தும்போது கோலி அடிக்கும் 3வது ஐபிஎல் சதம் இதுவாகும். மேலும் கொல்கத்தா அணிக்கு எதிராக அவர் அடிக்கும் 2வது சதம் இது. கொல்கத்தா அணிக்கு எதிரான கடந்த 5 இன்னிங்ஸ்களில் கோலி 54, 83, 18, 59 மற்றும் 105 என ரன்களை குவித்து அந்த அணிக்கு சிம்மசொப்பனமாக விளங்குகிறார்.
IPL 2026: மெகா சேஸிங்.. சரித்திரம் படைத்த விராட் கோலி.. கொல்கத்தாவை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி
தற்போதைய டி20 கிரிக்கெட் உலகமே முதல் பந்தில் இருந்தே கண்மூடித்தனமாக பந்தை விளாசுவதை மட்டுமே நம்பியுள்ள நிலையில், நிதானம், நேர்த்தி மற்றும் அபாரமான ஆட்டத்திறன் மூலம் கோலி தொடர்ந்து சாதித்து வருகிறார். தன்னை விமர்சிப்பவர்களுக்கு சதம் மூலம் பதிலடி கொடுத்து, கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னன் தான் என்பதை விராட் கோலி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.