மும்பை: தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 2027 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு தகுந்த மாற்று வீரரை இந்திய அணி கண்டறிய வேண்டும் என்று முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா வலியுறுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் சனிக்கிழமை (ஜூன் 13) தொடங்குகிறது.
இத்தொடருக்கான பயற்சியில் இந்திய அணி தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகியுள்ளார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவர் இந்த தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ஜியோஸ்டார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சுரேஷ் ரெய்னா பேசுகையில், "ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயமடைவது கவலையளிக்கிறது. 2027 உலகக் கோப்பை தொடங்குவதற்குள் அவருக்கு ஒரு நம்பகமான மாற்று வீரரை இந்திய அணி தயார்படுத்த வேண்டும். கடந்த 2023 உலகக் கோப்பையின் போது பாண்டியா பாதியில் காயமடைந்ததால் அணியின் சமநிலை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இறுதிப்போட்டியில் நமக்கு 6வது பந்துவீச்சாளர் இல்லாதது பின்னடைவாக அமைந்தது" என்றார்.
பாண்டியாவுக்கு மாற்றாக இளம் வீரர் நிதிஷ் குமார் ரெட்டியை ரெய்னா பரிந்துரைத்துள்ளார். "நிதிஷ் ரெட்டியின் பேட்டிங் தற்போது மிகவும் வலுவடைந்துள்ளது. ஐபிஎல் 2026 தொடரில் அவர் மணிக்கு 135 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் சிறப்பாக பந்துவீசினார். அவரது பணிச்சுமையை சரியாக கையாண்டு அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்க வேண்டும்" என்று ரெய்னா கூறினார். நிதிஷ் ரெட்டி இதுவரை 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, கடந்த ஜனவரியில் நியூசிலாந்துக்கு எதிராக அரைசதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
FIFA: ‘0’வில் இருந்து மீண்டு எழுந்த தென்கொரியா.. செக் குடியரசுக்கு எதிராக உலகக் கோப்பையில் வெற்றி
மேலும், கேப்டன் சுப்மன் கில்லுக்கு ஆதரவாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் உலகக் கோப்பை அணியில் நீடிக்க வேண்டும் என்றும் ரெய்னா ஆதரித்துள்ளார். "ரோஹித் மற்றும் விராட் ஆகிய இருவருக்கும் ஐசிசி தொடர்களில் விளையாடி பெரும் அனுபவம் உள்ளது. சுப்மன் கில் முதல்முறையாக உலகக் கோப்பையில் இந்திய அணியை வழிநடத்த உள்ளதால், இவர்களின் அனுபவம் அவருக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருக்கும்" என்றும் ரெய்னா கூறினார்.