மன்னார் காணிகளும் இநதியாவிற்கு?

by admin

மன்னாரில் இந்திய தொழிலதிபர் அதானியின் காற்றாலைக்கு எதிர்ப்பு தொடரும் நிலையில் தனியாருக்கு சொந்தமான காணிகளை இந்திய நிறுவனம் ஒன்றிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை குழப்பங்களை தோற்றுவித்துள்ளது.

அவ்வாறு விற்பனை செய்யப்பட்ட காணியில் உள்ள பல நூற்றுக்கணக்கான பனை மரங்கள் அழிக்கப்பட்டு கனிய மணல் அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், எச்சரிக்கப்பட்டுள்ளது.

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா பாவிலான்பாட்டன் குடியிருப்பு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 160 ஏக்கர் காணிகள் சட்ட விரோதமான முறையில் இந்திய தனியார் நிறுவனம் ஒன்றிற்கு கனிய மணல் அகழ்வுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமது பூர்வீக காணிகளே அத்துமீறி பிடிக்கப்பட்டு தற்போது சுற்று வேலி அமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் காணியின் உரிமையாளர்கள் அங்கு சென்று தடுக்க முயற்சித்த நிலையில், அவர்களை அரச காவல்துறை கைது செய்வோம் என அச்சுறுத்துவதாகவும், அடாவடித்தனத்துடன் காணி அபகரிப்பு இடம் பெற்று வருவதாகவும் மக்கள் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் வாழும் மக்கள் பனை உற்பத்தியை நம்பி வாழ்ந்து வந்த நிலையில் தற்போது பனை மரங்கள் உள்ள காணிகள் அபகரிக்கப்பட்டு பனை மரங்களும் வெட்டப்பட்டு வருகிறன. 

தற்போது இந்திய தனியார் நிறுவனம் ஒன்றிற்கு மணல் அகழ்வுக்காக காணியை விற்பனை செய்துள்ள நிலையில் தங்களை உள்ளே நுழைய விடாது காணிக்கு சுற்று வேலி அடைக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு;க்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்