டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்ற ஜாமீன், ஆனால் அலுவலகம் செல்ல முடியாது – முழு விவரம்

அர்விந்த் கேஜ்ரிவால்

பட மூலாதாரம், Getty Images

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான விவகாரத்தில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால் ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனால் பல நிபந்தனைகளுடன்.

ஜாமீன் பெற்ற பிறகும் அவர் முதல்வர் அலுவலகம் செல்ல முடியாது. அதிகாரப்பூர்வ கோப்புகளில் கையெழுத்திடவும் முடியாது.

இது தவிர இந்த வழக்கு தொடர்பான சாட்சிகளிடம் கேஜ்ரிவால் பேச முடியாது. இதுமட்டுமின்றி, ஜாமீன் நிபந்தனைகளின் கீழ், தற்போதைய வழக்கு குறித்து கேஜ்ரிவால் கருத்து தெரிவிக்க முடியாது.

கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்ததையடுத்து, ஆம் ஆத்மி கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, இது உண்மைக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் ஏற்கெனவே மணீஷ் சிசோடியா, சத்யேந்திர குமார் ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அரவிந்த் கேஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு என்பது என்ன?

அதன் பின்னணி குறித்து விளக்குகிறது இந்தக் கட்டுரை.

டெல்லி மதுபானக் கொள்கை

பட மூலாதாரம், @AAP/TWITTER

சிபிஐ விசாரணையின் பின்னணி என்ன?

டெல்லி தலைமைச் செயலாளர் நரேஷ் குமாரின் அளித்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆரின் நகல் தான் இந்த விசாரணையின் மையப் புள்ளி.

மணீஷ் சிசோடியா மற்றும் 14 பேர் மீது 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபிஐ. இதில் அப்போதைய கலால் துறை ஆணையர், மூன்று அதிகாரிகள், இரண்டு நிறுவனங்கள் மற்றும் ஒன்பது தொழிலதிபர்களும் அடங்குவர்.

புதிய மதுபானக் கொள்கை அமலுக்கு வந்த பிறகு, அரசின் கருவூலத்துக்கு நஷ்டம் ஏற்பட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியது. அதே வழக்கில், உரிமம் பெற்ற மதுபான விற்பனையாளர்களுக்கு நியாயமற்ற சலுகைகளை வழங்கும் நோக்கத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் புதிய மதுபானக் கொள்கையில் தன்னிச்சையான மாற்றங்களைச் செய்தனர் என்றும் கூறப்பட்டது.

சிசோடியாவின் நெருங்கிய கூட்டாளிகளான அமித் அரோரா, தினேஷ் அரோரா மற்றும் அர்ஜுன் பாண்டே ஆகியோர் (பட்டி ரீடெய்ல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள்) உரிமம் வைத்திருப்பவர்களிடம் இருந்து பணத்தைப் பெற்று, அதை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் அனுப்பியதாக எஃப்ஐஆர் கூறுகிறது.

டெல்லி மதுபானக் கொள்கை

பட மூலாதாரம், @CHAIRMANKVIC

புதிய மதுக்கொள்கையில் நடந்த ஊழல் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

ஜூலை 8, 2022 அன்று, துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா (பொருளாதார குற்றப்பிரிவு), டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா ஆகியோருக்கு டெல்லி தலைமைச் செயலாளர் நரேஷ் குமார் அறிக்கை ஒன்றை அனுப்பினார்.

இந்த அறிக்கை பொதுக் களத்தில் வெளியிடப்படவில்லை. ஆனால் இந்தியன் எக்ஸ்பிரஸ், நியூஸ்லாண்ட்ரி போன்ற பல ஊடக நிறுவனங்கள் நம்பகமான ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டன.

அதன்படி கலால்துறையின் பொறுப்பாளராக இருக்கும் சிசோடியா, புதிய கலால் கொள்கையின் மூலம் துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் மோசடியாக வருவாய் ஈட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் எனக் கூறப்பட்டது.

தலைமைச் செயலாளர் அறிக்கையில் என்ன இருந்தது?

டெல்லி மதுபானக் கொள்கை

பட மூலாதாரம், Getty Images

அறிக்கையின்படி, “கொரோனாவின் போது மதுபான விற்பனையாளர்கள் உரிமக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய டெல்லி அரசாங்கத்தை அணுகினர். டிசம்பர் 28 முதல் ஜனவரி 27 வரை உரிமக் கட்டணத்தில் 24.02 சதவீத தள்ளுபடியை அரசு வழங்கியது.

இது உரிமதாரருக்கு அளவுக்கதிமான பலனை வழங்கியது, மேலும் கருவூலத்திற்கு சுமார் 144.36 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, “நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கையில் கலால் துறை ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், முதலில் அதை அமைச்சரவைக்கும் பின்னர் துணைநிலை ஆளுநருக்கும் அனுமதிக்காக அனுப்ப வேண்டும். அமைச்சரவை மற்றும் துணைநிலை ஆளுநரின் அனுமதியின்றிச் செய்யப்படும் எந்த மாற்றமும் சட்டவிரோதமாக கருதப்படும்.”

உரிமம் வைத்திருப்பவர்களுக்கு அளவுக்கு அதிமான லாபத்தை வழங்குதல்

மணீஷ் சிசோடியா வெளிநாட்டு மதுபானங்களின் விலையை மாற்றியதாகவும், ஒரு பீருக்கான இறக்குமதி வரியான 50 ரூபாயை நீக்கியதன் மூலம் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு அளவுக்கு அதிமான லாபத்தை வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

டெல்லி மதுபானக் கொள்கை

பட மூலாதாரம், Getty Images

30 கோடியை திருப்பிக் கொடுத்த கலால் துறை

புதுச்சேரியைச் சேர்ந்த பிக்சி எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் விமான நிலைய மண்டலத்தில் திறக்கப்படும் 10 மதுபானக் கடைகளுக்கான உரிமத்தைப் பெற்றுள்ளது, ஆனால் அந்த நிறுவனத்தால் விமான நிலைய அதிகாரிகளிடமிருந்து தடையில்லா சான்றிதழைப் பெற முடியவில்லை.

உரிம ஏலத்திற்காக டெபாசிட் செய்யப்பட்ட ரூபாய் 30 கோடியை அந்நிறுவனத்திடம் அரசு திருப்பி அளித்தது. இது டெல்லி கலால் வரி விதிகள், 2010ஐ மீறுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு விண்ணப்பதாரர் உரிமத்திற்கான சம்பிரதாயங்களை முடிக்கத் தவறினால், அவருடைய வைப்புத் தொகை பறிமுதல் செய்யப்படும். இதில் சிசோடியா கமிஷன் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது, மேலும் இந்த பணம் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட்டது என்றும் கூறப்பட்டது.

அறிக்கை கிடைத்த 15 நாட்களுக்குள் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்து உள்துறை அமைச்சகத்துக்கு துணைநிலை ஆளுநர் கடிதம் எழுதினார்.

இங்கிருந்துதான் சிபிஐ அமைப்பு இந்த முழு விஷயத்திலும் நுழைந்தன, இந்த விவகாரம் அரசியல் சாயலை எடுக்கத் தொடங்கியது.

பலகட்ட தாக்குதல்களுக்கு மத்தியில், ஜூலை 30, 2022 அன்று புதிய கலால் கொள்கையை திரும்பப் பெறுவதாக சிசோடியா அறிவித்தார், ஆனால் டெல்லியில் ஏற்கெனவே மதுபானக் கொள்கை இருந்தபோது, ​​புதிய கொள்கையை அரசாங்கம் கொண்டு வந்தது ஏன்?

அரவிந்த் கேஜ்ரிவால் கைது: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு என்பது என்ன? முழு விவரம்

பட மூலாதாரம், Getty Images

புதிய கலால் கொள்கை என்றால் என்ன?

கடந்த 2020ஆம் ஆண்டில், மது மாஃபியாவை ஒடுக்கி வருவாயை அதிகரிக்கும் நோக்கத்துடன் டெல்லி அரசு புதிய மதுபானக் கொள்கையை முன்மொழிந்தது.

  • நவம்பர் 17, 2021 அன்று, டெல்லியில் புதிய கலால் கொள்கை அமல்படுத்தப்பட்டது.
  • புதிய கலால் கொள்கையின் கீழ், டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது. இதில் 30 எம்சிடி, 1 என்டிஎம்சி மற்றும் கண்டோன்மென்ட் பகுதி, 1 டெல்லி விமான நிலைய மண்டலம் ஆகியவை அடங்கும். மண்டலத்திற்கு ஏற்ப மதுபானக் கடைகள் முடிவு செய்யப்பட்டன.
  • எம்சிடி மண்டலத்திற்கு 27 மதுபானக் கடைகளும், என்டிஎம்சி மற்றும் கண்டோன்மென்ட் பகுதியில் 29 மதுக்கடைகளும், டெல்லி விமான நிலைய மண்டலத்தில் 10 மதுக்கடைகளும் திறக்கப்பட உள்ளன.
  • மது அருந்தும் வயது 25லிருந்து 21 ஆகக் குறைக்கப்பட்டது.
  • டெல்லி அரசு மது வணிகத்தில் இருந்து விலகி அனைத்து கடைகளையும் தனியாரிடம் ஒப்படைத்தது.
  • எல்1க்கான கட்டணம் (இந்திய மதுபானங்களின் மொத்த விற்பனைக்கான உரிமம்) 5 கோடி ரூபாயாகவும், எல்7க்கான கட்டணம் (தனியார் துறையில் இந்திய மதுபானங்களை சில்லறை விற்பனை செய்வதற்கான உரிமம்) 11.18 கோடி ரூபாயாகவும் வைக்கப்பட்டது.
  • கட்டாய எம்ஆர்பிக்கு பதிலாக, மதுபானங்களின் விலையைத் தானே தீர்மானிக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டது.
  • புதிய மதுக்கடைகள் திறக்கப்படாது. ஹோட்டல்களில் உள்ள பார்கள், கிளப்புகள் மற்றும் உணவகங்கள் பிற்பகல் 3 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டது.
  • புதிய கொள்கையின் பல விதிகள், தலைமைச் செயலர் தனது அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு முன்பே அமல்படுத்தப்படாமல் இருந்தது. இதனால் டெல்லி மதுபானக் கொள்கை குறித்த சந்தேகம் எழுந்தது.
டெல்லி மதுபானக் கொள்கை

பட மூலாதாரம், Getty Images

வழக்கின் முழு விவரம் என்ன?

செப்டம்பர் 04, 2020: புதிய மதுபானக் கொள்கை தொடர்பான பரிந்துரைகளுக்காக கலால் ஆணையர் ரவி தவான் தலைமையில் நிபுணர் குழுவை சிசோடியா அமைத்தார்.

அக்டோபர் 13, 2020: நிபுணர் குழு தனது அறிக்கையை டெல்லி அரசிடம் சமர்ப்பித்தது. அறிக்கை பொது தளத்தில் வைக்கப்பட்டது. 14 ஆயிரத்து 761 பேர் தங்கள் ஆலோசனைகளை அரசுக்கு அனுப்பியதாக அரசு கூறியது.

பிப்ரவரி 05 , 2021: முன்னாள் மதுபானக் கொள்கையின் அனைத்து அம்சங்கள், பங்குதாரர்கள் மற்றும் பொது மக்களின் கருத்து ஆகியவற்றை ஆழமாக ஆய்வு செய்வதற்காக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் ஆகியோர் தலைமையில் அமைச்சர்கள் குழுவை டெல்லி அரசு அமைத்தது.

மார்ச் 22, 2021: சிசோடியா தலைமையிலான இந்தக் குழு தனது பரிந்துரைகளை மாநில அமைச்சரவையில் சமர்ப்பித்தது. புதிய கலால் கொள்கை அங்கீகரிக்கப்பட்டது.

ஏப்ரல் 15, 2021: அப்போதைய துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு அனுப்பப்பட்டது. சில ஆலோசனைகளை வழங்கிய அவர், கொள்கையை மறுபரிசீலனை செய்து உரிய திருத்தங்களைச் செய்யுமாறு அரசுக்கு அறிவுறுத்தினார்.

நவம்பர் 17, 2021: டெல்லி அரசாங்கம் பரிந்துரைகளைப் பின்பற்றி புதிய கலால் கொள்கையை அமல்படுத்தியது.

ஜூலை 8, 2022: டெல்லி தலைமைச் செயலாளர் நரேஷ் குமார், துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா ஆகியோரிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார்.

சிசோடியா மதுபான விற்பனையாளர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு ‘கமிஷன்’ மற்றும் ‘லஞ்சம்’ ஈடாக தேவையற்ற உதவிகளை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. தலைமைச் செயலாளர் பொருளாதார குற்றப்பிரிவுக்கும் அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

ஜூலை 22, 2022: துணைநிலை ஆளுநர், உள்துறை அமைச்சகத்திற்கு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்து கடிதம் எழுதினார்.

ஜூலை 30, 2022: புதிய கலால் கொள்கையை திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பு. அடுத்த ஆறு மாதங்களுக்கு பழைய மதுபானக் கொள்கையை மீண்டும் அமல்படுத்தப்பட்டது.

ஆகஸ்ட் 6, 2022: புதிய கலால் கொள்கையை அமல்படுத்துவதில் அலட்சியம் காட்டியதற்காக முன்னாள் கலால் ஆணையர் ஆரவ் கோபி கிருஷ்ணா உட்பட டெல்லியின் கலால் துறையின் 11 கலால் அதிகாரிகளை துணைநிலை ஆளுநர் வினய் சக்சேனா இடைநீக்கம் செய்தார்.

ஆகஸ்ட் 7 , 2022: சிசோடியா மற்றும் 14 பேர் மீது சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்தது. இவர்களில் அப்போதைய கலால் ஆணையர் உட்பட மூன்று அதிகாரிகள் அடங்குவர். அவர்கள் மீது கிரிமினல் சதி மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 19, 2022: சிசோடியா வீட்டில் சிபிஐ சோதனை. ஏழு மாநிலங்களில் மொத்தம் 21 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

ஆகஸ்ட் 23, 2022: டெல்லியின் கலால் கொள்கையில் பணமோசடி குறித்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்ததாக அதன் அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்தது.

செப்டம்பர் 28, 2022: இண்டோஸ்பிரிட் (IndoSpirit) நிர்வாக இயக்குநர் சமீர் மகேந்திரு, தொழிலதிபர் மற்றும் ஆம் ஆத்மி கட்சி அதிகாரி விஜய் நாயர் ஆகியோர் அமலாத்துறையால் கைது செய்யப்பட்டனர்.

அக்டோபர் 8, 2022: டெல்லி, ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட 35 இடங்களில் அமலாத்துறை சோதனை நடத்தியது.

அக்டோபர் 10, 2022: மதுபான வியாபாரி அபிஷேக் போயின்பாலியை சிபிஐ கைது செய்தது.

மார்ச் 21, 2024: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.

மே 10, 2024: அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்ற நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமீன் வழங்கியது