இரண்டு தேர்தல்களைச் சந்திக்கும் ஆந்திர பிரதேசம் – மக்கள் என்ன சொல்கிறார்கள்? – கள நிலவரம்

ஆந்திரப் பிரதேசம், ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

நாடாளுமன்றத் தேர்தலையும் சட்டமன்றத் தேர்தலையும் ஒன்றாக சந்திக்கிறது ஆந்திர மாநிலம்.

தனது ஐந்தாண்டு கால ஆட்சியில் செயல்படுத்திய சமூக பாதுகாப்புத் திட்டங்களை முன்வைத்து வெற்றியைப் பெற நினைக்கிறார் ஆளும் ஜெகன்மோகன் ரெட்டி. ஆனால், ஜெகன்மோகனின் கோட்டையை தனது கூட்டணி பலத்தாலும் வளர்ச்சி வாக்குறுதிகளாலும் தகர்க்க முடியுமென நம்புகிறது தெலுங்கு தேசம்.

கள நிலவரம் என்ன?

விசாகப்பட்டினத்தில் கீழ் மத்தியதர வர்க்கத்தினர் வசிக்கும் ஞானபுரம் பகுதி.

சில அரசியல் கட்சியினர் தேர்தலில் வாக்களிப்பதற்கான ஸ்லிப்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அந்தப்பகுதியில் ஒரு வீட்டின் மூன்றாவது தளத்தில் வசிக்கும் குடும்பத் தலைவியான ஷ்ரமிகாவைப் பொறுத்தவரை வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலைவிட சட்டமன்றத் தேர்தலே முக்கியமானது.

கடந்த ஐந்தாண்டுகளில் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் சமூக பாதுகாப்புத் திட்டங்களில் இரண்டு திட்டங்களில் அவரது குடும்பம் பயனடைகிறது. ஓட்டுநர் என்பதால் அவரது கணவருக்கு வருடம் ரூ.10,000 உதவித் தொகையாக கிடைக்கிறது. ‘அம்மாவோடி’ திட்டத்தின் கீழ் அவரது பள்ளிசெல்லும் மகனுக்கு வருடத்திற்கு ரூ.13,000 கிடைக்கிறது.

ஆந்திரப் பிரதேசம், ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு
படக்குறிப்பு, ஷ்ரமிகா

தேர்தலுக்குப் பிறகு நடக்கும் அரசியல் மாற்றங்கள் குறித்து அவருக்கு பெரிய ஆர்வமில்லை. “இந்தத் தொகை குழந்தையின் படிப்புச் செலவு, மருத்துவச் செலவு, சில சமயங்களில் குடும்பச் செலவுகளுக்கும் உதவிகரமாக இருக்கிறது. இது தொடர்ந்து கிடைத்தால் போதும்,” என்கிறார் ஷ்ரமிகா.

அதே பகுதியைச் சேர்ந்த முடி திருத்தும் கலைஞரான ரமேஷும் இதுபோன்ற திட்டங்களில் பலன் பெறுபவர்தான். ஆனால், அவருக்கு கூடுதலாக சில எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன. “அவர்கள் வருடத்திற்கு 3 சிலிண்டர் இலவசமாகத் தருவதாகச் சொல்கிறார்கள். மேலும், இப்போது ஒரு குழந்தைக்குத்தான் ரூ.15,000 தருகிறார்கள். அவர்கள் வந்தால் எல்லாக் குழந்தைக்கும் தருவதாகச் சொல்கிறார்கள்,” என தெலுங்கு தேசம் கூட்டணியின் வாக்குறுதிகள் பற்றி பேசுகிறார் அவர்.

இந்த இரண்டு எதிர்பார்ப்புகளுக்கும் நடுவில்தான், மிகப் பெரிய தேர்தலை எதிர்கொள்கிறது ஆந்திரப் பிரதேசம்.

ஆந்திரப் பிரதேசம், ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு

ஆந்திர அரசியல் களம் எப்படி இருக்கிறது?

இந்தியாவில் தற்போது நடந்துவரும் நாடாளுமன்றத் தேர்தல்களோடு, சட்டமன்றத் தேர்தலையும் சேர்ந்து சந்திக்கும் வெகு சில மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசமும் ஒன்று.

இங்குள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 25 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 13-ஆம் தேதியன்று வாக்குப் பதிவு நடக்கவிருக்கிறது.

இந்தத் தேர்தலில் ஆளும் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.சி.பி எனப்படும் யுவஜன ஷ்ரமிக ரைது காங்கிரஸ் கட்சி, எந்தக் கட்சியுடனும் கூட்டணியின்றி எல்லா தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.

சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி, பாரதீய ஜனதா கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது. சட்டமன்றத் தொகுதிகளைப் பொறுத்தவரை, தெலுங்கு தேசம் கட்சி 144 தொகுதிகளும் பா.ஜ.க. 10 இடங்களிலும் ஜன சேனா கட்சி 21 இடங்களிலும் போட்டியிடுகின்றன. நாடாளுமன்றத் தொகுதிகளைப் பொறுத்தவரை, தெலுங்கு தேசம் கட்சி 17 தொகுதிகளிலும் பா.ஜ.க. 6 தொகுதிகளிலும் ஜன சேனா கட்சி 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. நாடாளுமன்ற தொகுதிகளில் இடதுசாரி கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியைக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள 23 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது காங்கிரஸ். சட்டமன்றத் தொகுதிகளில், இடதுசாரிக் கட்சிகள் தலா 8 இடங்களில் போட்டியிட, காங்கிரஸ் கட்சி 159 இடங்களில் போட்டியிடுகிறது.

ஆளும் கட்சியாக இருக்கும் ஒய்.சி.பி கட்சியைப் பொறுத்தவரை, கடந்த ஐந்தாண்டுகளாக செயல்படுத்திய சமூக பாதுகாப்புத் திட்டங்கள் பலனளிக்குமென நம்புகிறது. 2019-ஆம் ஆண்டு தேர்தலின்போது சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும் நேரடி பண உதவி உள்பட பல உதவிகளை வழங்கும் வகையில் ‘நவரத்னாலு’ என்ற 9 திட்டங்களைச் செயல்படுத்தப்போவதாக வாக்குறுதி அளித்தது ஒய்சிபி.

அதன்படி, ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளுக்கு வருடம் ரூ.13,500 ரூபாய் வழங்கும் திட்டம், பள்ளி செல்லும் குழந்தையின் பெற்றோருக்கு வருடம் ரூ.15,000 அளிக்கும் ‘அம்மாவோடி’ திட்டம், ஓட்டுநர்கள், முடி திருத்தும் தொழிலாளர்கள் போன்றோருக்கு வருடம் ரூ.10,000 அளிக்கும் திட்டங்கள் போன்றவற்றை அக்கட்சி செயல்படுத்தியது. இந்தத் திட்டங்கள் பெருமளவில் மக்களைச் சென்று சேர்ந்திருப்பதாகக் கருதுவதால், அந்த உற்சாகத்தில் தேர்தலை தனித்தே சந்திக்கிறார் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி.

தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஏற்கனவே உள்ள நலத் திட்டங்கள் தொடரும் என்பதோடு, சில நலத் திட்டங்களில் நிதி உதவி அதிகரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. அதன்படி, ‘அம்மாவோடி’ திட்டத்தில் ரூ.15,000-க்கு பதிலாக ரூ.17,000 வழங்கப்படும். முதியோர் உதவித் தொகையைப் பொறுத்தவரை மாதம் ரூ.3,000 என்பது படிப்படியாக ரூ.3,500 ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளுக்கான நிதியுதவி ரூ.13,500-இலிருந்து ரூ.16,000 உயர்த்தப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.

ஆந்திரப் பிரதேசம், ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு

எதிர்க்கட்சியின் ‘சூப்பர் சிக்ஸ்’

எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியைப் பொறுத்தவரை, என்னதான் சமூக பாதுகாப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் வளர்ச்சி வரவில்லை எனக் குற்றம்சாட்டி தேர்தலைச் சந்திக்கிறது. மேலும், அக்கட்சியும் பல நலத் திட்ட வாக்குறுதிகளை அளித்திருக்கிறது. தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ.க. ஆகியவை இணைந்து வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை ‘சூப்பர் சிக்ஸ்’ என்ற பெயரில் சில புதிய மக்கள் நலத் திட்டங்களை அறிவித்திருப்பதோடு, ஏற்கனவே உள்ள திட்டங்களிலும் நிதியுதவியை அதிகரித்துத் தருவதாகக் கூறியிருக்கிறது.

தெலுங்கு தேசத்தின் ‘சூப்பர் சிக்ஸில்’ வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 ரூபாய், பள்ளி செல்லும் எல்லாக் குழந்தைகளுக்கும் வருடம் ரூ.15,000 ரூபாய், 19-59 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,500, பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம், வருடத்திற்கு 3 சிலிண்டர்கள் இலவசம் ஆகியவை வாக்குறுதியாக தரப்பட்டிருக்கின்றன.

சூப்பர் சிக்ஸ் இல்லாமல், வேறு சில பண உதவித் திட்டங்களையும் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது அக்கட்சி. குறிப்பாக, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களில் 50 வயதைத் தாண்டியவர்களுக்கு ரூ.4,000, நெசவாளர்களுக்கு மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசம் போன்ற வாக்குறுதிகள் கவனிக்கத்தக்கவையாக இருக்கின்றன.

ஆந்திரப் பிரதேசம், ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு
படக்குறிப்பு, சுமித் பட்டாச்சார்ஜி

‘தலைநகரமே இல்லாத மாநிலம்’

இந்த இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டிருக்கும் வாக்குறுதிகள் தவிர, இந்தத் தேர்தலில் வேறு சில பிரச்சனைகளும் முக்கிய பங்கை வகிக்கும் என்கிறார் `தி இந்து` நாளிதழின் மூத்த பத்திரிகையாளரான சுமித் பட்டாச்சார்ஜி.

“முதலாவதாக, ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்த பிரச்சனை. மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதிலிருந்து இது குறித்து பேசப்படுகிறது. பல கட்சிகளும் இதைப் பற்றிப் பேசினாலும் எந்தக் கட்சியும் இந்த விவகாரத்தைத் தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது,” என்கிறார்.

“இதற்குப் பிறகு, 60 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள போலாவரம் அணை விவகாரம். இதுபோக, மக்கள் நலத் திட்டங்களுக்கு கவனம் கொடுத்த அளவுக்கு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்படவில்லையென சிலர் கருதுகிறார்கள்.

மேலும், ஆந்திர மாநிலத்தின் தலைநகரம் குறித்த பிரச்சனையும் இருக்கிறது. மாநிலம் பிரிக்கப்பட்டபோது அமராவதி தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சரான பிறகு, ஒரே இடத்தில் தலைநகரத்தை வைக்காமல், அமராவதி, கர்னூல், விசாகப்பட்டணம் என மூன்று இடங்களில் உருவாக்கப் போவதாகச் சொன்னார். ஆனால், இதுவரை எதுவும் நடக்கவில்லை. இந்தப் பிரச்சனைகள் தேர்தலில் எந்த அளவுக்கு தாக்கம் செலுத்தும் என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்,” என்கிறார் சுமித் பட்டாச்சார்ஜி.

இவற்றில் சிலவற்றை முக்கியப் பிரச்சனைகளாக ஆளும்கட்சிக்கு எதிராக முன்னிறுத்துகிறது தெலுங்கு தேசம் கட்சி. “ஆந்திராவுக்கு மூன்று தலைநகரங்களைத் தருவதாகச் சொன்னார்கள். ஆனால், இப்போது ஆந்திராவுக்கு தலைநகரமே இல்லை. இந்தியாவிலேயே தலைநகரமே இல்லாத மாநிலம் ஆந்திராதான். அதேபோல, 30 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி அளிக்கக்கூடிய போலாவரம் அணை திட்டமும் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. அதேபோல இந்த அரசு உள்கட்டமைப்பிலும் கவனம் செலுத்தவில்லை. நாங்கள் வந்தால் இவற்றில் எல்லாம் கவனம் செலுத்துவோம்,” என்கிறார் முன்னாள் எம்.எல்.ஏவும் தற்போது காஜுவாக்கா தொகுதியில் தெலுங்கு தேசம் கூட்டணியின் சார்பில் போட்டியிடுபவருமான பல்லா ஸ்ரீநிவாஸ ராவ்.

ஆனால், தாங்கள் நிறைவேற்றிய திட்டங்களை நாங்கள் சரியாக விளம்பரம் செய்யவில்லை. அதுதான் எங்கள் பிரச்சனை என்கிறார் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான கொண்ட ராஜீவ் காந்தி.

“இங்கே மக்கள் நலத் திட்டங்கள் இருக்கின்றன, வளர்ச்சி இல்லை என்கின்றன எதிர்க்கட்சிகள். அது உண்மையில்லை. ஜெகன்மோகன் ரெட்டி வந்த பிறகு 4 துறை முகங்களைக் கொண்டுவந்திருக்கிறார்.

எங்களுடைய மக்கள் நலத்திட்டங்கள் கீழ் மட்டம்வரை சென்றடைந்திருக்கின்றன. அதேபோல, மாநிலம் முழுவதும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியிருக்கிறோம். நாடு முழுவதுமே அரசுப் பள்ளிக்கூடங்கள் மோசமாக இருக்கும். ஆந்திராவில் அவை சிறப்பாக மாற்றப்பட்டுள்ளன. அதேபோல அரசு மருத்துவமனைகளும் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன.

வேலை வாய்ப்பைப் பொறுத்தவரை, 2019-இல் இருந்து 2023வரை ஆந்திர மாநிலத்தில் 16 லட்சம் தொழிலாளர் வைப்பு நிதி கணக்குகள் துவங்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இங்கு வேலை வாய்ப்பு அதிகரித்திருப்பதற்கு இதைவிட பெரிய சான்று வேறு என்ன வேண்டும்? வேலை அதிகம் செய்தாலும் விளம்பரம் குறைவாகச் செய்கிறோம் என்பதுதான் பிரச்சனை,” என்கிறார் கொண்ட ராஜீவ் காந்தி.

தலைநகரைப் பொறுத்தவரை, மூன்று தலைநகரங்கள் இருப்பதில் என்ன பிரச்சனை எனக் கேள்வி எழுப்பும் அவர், விரைவில் தலைநகரம் தொடர்பான பணிகள் முடிவடையும் என்கிறார்.

ஆந்திரப் பிரதேசம், ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு
படக்குறிப்பு, உருக்காலை தொழிலாளர்கள் யூனியனின் தலைவரான ஜே. அயோத்தி ராம்

பவன் கல்யாணுக்கும் முக்கியமான தேர்தல்

இவை தவிர, வேறு சில பிரச்சனைகளும் தேர்தலில் தாக்கம் செலுத்தக்கூடும். விசாகப்பட்டினத்தில் உள்ள விசாகப்பட்டினம் இரும்பு உருக்காலையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவுசெய்திருக்கிறது. இதனை எதிர்த்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அங்குள்ள தொழிலாளர்கள் போராடிவருகின்றனர்.

“பல ஆண்டுகால கடுமையான போராட்டத்திற்குப் பிறகு கொண்டுவரப்பட்ட இந்தத் தொழிற்சாலை ஆந்திர மக்களின் உணர்வோடு கலந்தது. இதில் சுமார் 30,000 தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். மறைமுகமாக 70,000 பேர் வேலை வாய்ப்பு பெறுகிறார்கள். ஆகவே ஒரு லட்சம் குடும்பங்கள் இந்த ஆலையைச் சார்ந்திருக்கின்றன. ஆலையை தனியார்மயமாக்கமாட்டோம் என்று சொல்லும் கட்சிக்குத்தான் எங்கள் வாக்கு,” என்கிறார் உருக்காலை தொழிலாளர்கள் யூனியனின் தலைவரான ஜே. அயோத்தி ராம். இந்த விவகாரம் விசாகப்பட்டினம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

இந்தத் தேர்தலில் மூன்றாவது அணியாக, களத்தில் இருக்கிறது காங்கிரஸ். ஆந்திரா இரண்டாகப் பிரிந்த பிறகு தனது ஆதரவை முழுமையாக இழந்துவிட்ட காங்கிரஸ், முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியும் மறைந்த காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ். ராஜேசேகர ரெட்டியின் மகளுமான ஒய்.எஸ்.ஷர்மிளாவின் வரவால் சற்று புத்துயிர் பெற்றிருக்கிறது. வாக்கு வங்கியை அதிகரித்து ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் தேர்தலைச் சந்திக்கிறது அந்தக் கூட்டணி.

பவன் கல்யாணின் ஜன சேனா கட்சிக்கும் இது மிக முக்கியமான தேர்தல். 2019-ஆம் ஆண்டு தேர்தலில் 175 இடங்களில் போட்டியிட்டு பெரும் தோல்வியைச் சந்தித்த ஜன சேனா, இந்த முறை தெலுங்கு தேசம், பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து, சட்டமன்றத் தொகுதிகளில் 21 இடங்களிலும் நாடாளுமன்றத் தொகுதிகளில் 2 இடங்களிலும் போட்டியிடுகிறது.

ஆந்திரப் பிரதேசத்தில் நாடாளுமன்றத் தொகுதிகளைப் பொறுத்தவரை, எந்தக் கட்சி எத்தனை இடங்களைப் பெற்றாலும், மத்தியில் ஆளும் கட்சியுடன் இசைந்து செல்வே விரும்புவார்கள். ஆகவே, சட்டமன்றத் தேர்தலில் யார் வெற்றிபெறுகிறார்கள் என்பதே மிக முக்கியமானது. ஆகவே இந்தக் கோடை காலத்தில் இங்கே கூடுதலாக அனல் பறக்கிறது.