தமிழ்நாடு, மரணம், இறப்பு விகிதம், குழந்தைகள், பெண்கள்,

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் கடந்த 2018-2022 வரையிலான 5 ஆண்டுகளில் நடைபெற்ற இறப்புகளை ஆய்வு செய்துள்ளது தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை. அவற்றில் 70% முதல் 76% வரையிலான இறப்புகள் வீடுகளில் நடந்துள்ளன. 21.8% முதல் 27.4% வரையிலான இறப்புகளே மருத்துவமனைகளில் நடந்துள்ளன. எனவே, இதற்கான காரணங்களைக் கண்டறிந்து வீடுகளில் நடைபெறும் இறப்புகளைக் குறைக்க வேண்டும் எனவும் தமிழக அரசு கூறுகிறது.

இதே போன்றதொரு ஆய்வை, தமிழ்நாடு சுகாதாரத்துறையும் மேற்கொண்டது. 2018-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் பதிவான இறப்புகளை ஆய்வு செய்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் அதிக மரணங்கள் வீட்டிலேயே நடப்பது தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு, மரணம், இறப்பு விகிதம், குழந்தைகள், பெண்கள்,

வீட்டில் இறப்பவர்கள் யார்?

முதியவர்களின் மரணமே மிக அதிகமான அளவில் வீடுகளில் நடந்துள்ளன. 65 வயதுக்கு மேற்பட்டோரில் 82% முதல் 86.5% வீடுகளில் இறக்கின்றனர், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீடுகளில் இறப்பது 2018 முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 16 மாவட்டங்களில் அதிகரித்துள்ளது. 2022-ஆம் ஆண்டு தரவுகள் படி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், இந்த வயது பிரிவில் ஆண்களை விட பெண்களே அதிகமாக வீடுகளில் இறக்கின்றனர். ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 2.1% முதல் 3.6% இறப்புகள் வீடுகளில் நடைபெறுகின்றன.

இந்த ஆய்வை மேற்கொண்ட ஐந்து பேரில் ஒருவரான தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் டி.எஸ்.செல்வ விநாயகம் பிபிசி தமிழிடம் பேசும் போது, “குழந்தை பிறப்பு மருத்துவமனைகளில் நிகழ்வதை கிட்டத்தட்ட 100% தமிழ்நாடு எட்டிவிட்டது. ஆனால் இறப்புகள் மருத்துவமனைகளில் நடைபெறவில்லை என்பதை இந்த ஆய்வின் தரவுகள் முதல் முறையாக காட்டுகின்றன என்று கூறலாம். வயது முதிர்ந்தவர்கள் வீடுகளில் இறப்பது அச்சுறுத்தும் போக்கு கிடையாது. எனினும் மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் முதியவர்களை சிகிச்சைக்காக கொண்டு வர வேண்டும் என்று மக்களை கேட்டுக் கொள்கிறோம். தரவுகளை மிக கடினமாக தேடி எடுக்கும் நிலையை மாற்றி, தற்போது தரவுகளை ஒருங்கிணைத்து ஆய்வு செய்துள்ளோம். இந்த நிலைக்கான காரணங்கள், இதன் மீதான நடவடிக்கைகள் குறித்து இப்போது எதுவும் ஆலோசிக்கப்படவில்லை,” என்றார்.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தின் விவரங்களும் இந்த ஆய்வில் உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும் மிக அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில் அதற்கு முந்தைய ஆண்டுகளை விட 4% குறைவாக வீடுகளில் இறப்புகள் நிகழ்ந்தன. 2018-ஆம் ஆண்டு 75.4%, 2019-ஆம் ஆண்டு 74.2%, 2020-இல் 74.6%, 2021-ஆம் ஆண்டில் 70.2%, 2022-இல் 73.8% இறப்புகள் வீடுகளில் நிகழ்ந்துள்ளன.

தமிழ்நாடு, மரணம், இறப்பு விகிதம், குழந்தைகள், பெண்கள்,

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாடு, மரணம், இறப்பு விகிதம், குழந்தைகள், பெண்கள்,

பட மூலாதாரம், Getty Images

குழந்தைகள் ஏன் வீடுகளில் இறக்கின்றனர்?

ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகள் வீடுகளில் இறக்கும் விகிதம் மற்ற வயதினருடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது. மாநிலத்தில் சராசரியாக 2.1% முதல் 3.6% வரையிலான இறப்புகள் வீடுகளில் நடைபெறுகின்றன. இருப்பினும் நாமக்கல் (15.3%), கன்னியாகுமரி (12.5%) மாவட்டங்களில் ஒரு வயதுக்கும் கீழான குழந்தைகளின் வீட்டு இறப்பு விகிதம் மாநில சராசரியை விட மிக அதிகமாக உள்ளது. இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட ஐந்து ஆண்டுகளில் இந்த விகிதம் 11 மாவட்டங்களில் அதிகரித்துள்ளது. 2022-ஆம் ஆண்டு தரவுகள் படி, வீட்டில் இறக்கும் ஒரு வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் சதவிகிம், ஆண் குழந்தைகளை விட 30 மாவட்டங்களில் அதிகமாக உள்ளது.

ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வீடுகளில் இறப்பதற்கு நிமோனியா, இருதய பலவீனம் உட்பட பிறக்கும் போதே இருக்கும் பிரச்னைகள், உடல் நலமில்லாத குழந்தைக்கு வலுக்கட்டாயமாக பால் கொடுப்பதால் ஏற்படும் மூச்சு திணறல் ஆகியவை முக்கிய காரணங்கள் ஆகும் என்று தமிழ்நாடு பச்சிளங் குழந்தைகள் நல மாநில ஒருங்கிணைப்பு அதிகாரியும் மூத்த குழந்தைகள் நல மருத்துவருமான எஸ்.சீனிவாசன் கூறுகிறார்.

பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், “மருத்துவ காரணங்கள் அல்லாமல், வீடுகளில் தண்ணீரில் மூழ்குவதால், பாம்பு தேள் கடி காரணமாகவும் குழந்தைகள் இறக்கின்றன. குறை பிரசவ குழந்தைகள் மருத்துவமனைகளில் தங்கி குறைந்தபட்ச எடையை அடைவதற்கு முன்பாகவே பெற்றோர்கள் வீட்டுக்கு அழைத்து செல்லும் சூழல்களிலும் இறப்புகள் ஏற்படலாம்,” என்றார்.

தமிழ்நாடு, மரணம், இறப்பு விகிதம், குழந்தைகள், பெண்கள்,

பட மூலாதாரம், Getty Images

சிறுவர்களின் மரணங்கள் உயர்வு

5 – 14 வயது வரையிலான குழந்தைகளின் இறப்பை ஆய்வு செய்யும்போது, வீடுகளிலோ, மருத்துவமனைகளிலோ அல்லாத சூழலில் மரணம் நேர்ந்திருப்பது அதிகரித்து வருவதை இந்த விபரங்கள் காட்டுகின்றன. மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மரணம், தங்கும் இல்லங்களில் மரணம் ஆகியவை இதில் அடங்கும். மாநிலம் முழுவதும் 2018-ஆம் ஆண்டு 11.4% ஆக இருந்த இந்த இறப்பு விகிதம், 2022-ஆம் ஆண்டு 15.1% ஆக அதிகரித்துள்ளது. ஆய்வு மேற்கொள்ளப்பட்ட ஐந்து ஆண்டுகளில் 26 மாவட்டங்களில் இவ்விகிதம் அதிகரித்துள்ளது. சென்னையில் 6.8% லிருந்து 17.2% ஆக உயர்ந்துள்ளது. கடலூரில் 4.2% லிருந்து 16.2% ஆக அதிகரித்துள்ளது. திண்டுக்கல்லில் 18.8% ஆக இருந்தது, 26.2% ஆக உயர்ந்துள்ளது. சிவகங்கையில் 3.6% ஆக இருந்தது, 12.9% ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்திலேயே அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 28.9%, திண்டுக்கல்லில் 26.2% குழந்தைகளும் 5-14 வயது பிரிவில் வீடு மருத்துவமனை அல்லாத இடங்களில் உயிரிழக்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 26% இறப்புகள் நிகழ்கின்றன.

அரியலூரில் அதிகம், சென்னையில் குறைவு

2022-ஆம் ஆண்டின் விவரங்களை மட்டும் வைத்து பார்க்கும்போது மொத்தமாக 73.8% இறப்புகள் வீடுகளில் நிகழ்ந்துள்ளன. இவற்றில் அரியலூர் மாவட்டம் முதலில் இடத்தில் உள்ளது. இங்கு நடைபெறும் இறப்புகளில் 82.4% வீடுகளில் நடைபெறுகின்றன. அதற்கு அடுத்தபடியாக கள்ளக்குறிச்சியில் 81.8%, கடலூரில் 81.7% இறப்புகள் வீடுகளில் நிகழ்ந்துள்ளன.

மாநிலத்தின் தலைநகரும், நான்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும் கொண்டதுமான சென்னையில் வீடுகளில் குறைவான இறப்புகள் பதிவாகியுள்ளன. சென்னையில் 57.7% இறப்புகளும் அதையொட்டியுள்ள மாவட்டமான காஞ்சிபுரத்தில் 56.5% இறப்புகளும் வீடுகளில் நிகழ்ந்துள்ளன. சிவகங்கை, விழுப்புரம், விருதுநகர், போன்ற பின் தங்கிய மாவட்டங்களிலும் 80%-க்கும் மேலான இறப்புகள் வீடுகளில் நடைபெறுகின்றன. அதே நேரம் சற்று வளார்ந்த நகரங்களான- கோவையில் 69%, மதுரையில் 73.4% இறப்புகள் வீடுகளில் நிகழ்கின்றன. முழுப்பட்டியல்

இந்த ஏற்றத்தாழ்வு மருத்துவ சேவைகளை அணுகுவதில் கிராமப்புற சமூகங்கள் எதிர்கொள்ளும் சவால்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.மாநிலத் திட்டக்குழு உறுப்பினரும் மூத்த மருத்துவருமான அமலோற்பாவநாதன், “அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் மருத்துவ சேவையை மேம்படுத்துவதற்கான அவசியத்தை இந்த விபரம் உணர்த்துகிறது. அந்த மாவட்டங்களின் பின் தங்கிய தன்மையை பிரதிபலிக்கின்றன,” என்றார்.

தமிழ்நாடு, மரணம், இறப்பு விகிதம், குழந்தைகள், பெண்கள்,

பட மூலாதாரம், Getty Images

‘பெண்களின் நிலைமை மோசம்’

பெண்கள் வீடுகளில் இறக்கும் சதவீதம் அதிகமாகவே இருந்து வருகிறது. 2018 முதல் 2022 வரை, 23.7% முதல் 29.9% வரை ஆண்களின் இறப்புகள் மருத்துவமனைகளில் நிகழ்ந்தன. அதே நேரம், பெண்களின் இறப்புகள் 19.0% முதல் 23.9% வரை மட்டுமே மருத்துவமனை இறப்புகளாக பதிவாகியுள்ளன.

அதிக பெண்கள் வீடுகளில் உயிரிழப்பது அரியலூர் மாவட்டத்தில் ஆகும், இங்கு பெண்களில் ஏற்படும் இறப்புகளில் 86.2% வீடுகளில் நடைபெறுகின்றன. கடலூரில் 85.6%, கள்ளக்குறிச்சியில் 85.1%, விருதுநகரில் 85% பெண்களில் இறப்புகள் வீடுகளில் நிகழ்கின்றன. மாநிலத்திலேயே குறைவாக காஞ்சிபுரத்தில் 61.8% மற்றும் சென்னையில் 63.3% பெண்கள் இறப்புகள் வீடுகளில் நிகழ்கின்றன.

இந்த ஆய்வின் பல்வேறு அம்சங்கள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மருத்துவர் அமலோற்பாவநாதன் “இந்த ஆய்வு மிகவும் முக்கியமானது. 5-14 வயது குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பது கவலைக்குரியது. என்ன ‌நோய்களால் இறப்பு நேர்கிறது? தகுந்த சிகிச்சை கிடைத்ததா? போன்ற கேள்விகள் எழுகின்றன,” என்றார்.

மேலும் பேசிய அவர், “ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு 0% ஆக வேண்டும். தற்போது 2.3% – 4.1% ஏன் வீட்டில் நடந்தன என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். அதிலும் நாமக்கல், கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகள் இறப்பு சதவீதம் கவலையளிக்கிறது. நாம் போக வேண்டிய தூரம் அதிகம் உள்ளது என்பதை தான் காட்டுகிறது. பெண்கள் அதிகமானவர்கள் வீடுகள் இறப்பதற்கு சமூக காரணிகள் உண்டு. பெண்கள் மருத்துவமனைக்கு தாமாக செல்ல மாட்டார்கள். ஆண்களை நம்பியிருப்பார்கள். எனவே அவர்களுக்கு உரிய கவனம் உரிய நேரத்தில் கிடைக்காமல் போகும். இதை மாற்ற வேண்டும்,” என்றார்.