ஐந்தாவது முறை ரஷ்ய அதிபரான விளாதிமிர் புதின்

பட மூலாதாரம், Sputnik/Sergei Bobylev/Kremlin via REUTERS

  • எழுதியவர், ஸ்டீவ் ரோசன்பர்க்
  • பதவி, ஆசிரியர், பிபிசி ரஷ்ய சேவை

ஐந்தாவது முறையாக ரஷ்ய அதிபர் பதவியேற்பதற்கு விளாதிமிர் புதின் கிரெம்ளின் அரண்மனை வழியாக செயின்ட் ஆண்ட்ரூ சிம்மாசன மண்டபத்திற்கு நடந்து சென்றார். அவர் அந்தப் பாதையில் கண்களைக் கட்டிக்கொண்டே நடந்திருக்கலாம்.

அங்கு அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டு, அடுத்த 6 ஆண்டு காலத்திற்கு ரஷ்யாவின் அதிபராகப் பதவியேற்றார்.

“நாம் ஒன்றுபட்ட, சிறந்த மக்கள். ஒன்றாக நாம் அனைத்து தடைகளையும் சமாளிப்போம். நமது திட்டங்களை நிறைவேற்றுவோம். ஒன்றாக வெற்றி பெறுவோம்,” என்று அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்கள் கூட்டத்தில் அதிபர் புதின் கூறினார்.

சிவப்புக் கம்பளப் பாதை அவருக்கு நன்கு தெரிந்திருக்கலாம். ஆனால் 2000ஆம் ஆண்டு மே மாதம் புதினின் முதல் பதவியேற்பு விழாவிற்குப் பிறகு நிறைய மாறிவிட்டது. அப்போது, அதிபர் புதின், “ஜனநாயகத்தைப் பாதுகாத்து வளர்ப்பதாகவும் ரஷ்யாவைக் கவனித்துக் கொள்வதாகவும்” உறுதியளித்தார்.

அதற்கு 24 ஆண்டுகளுக்குப் பிறகு, புதின் இன்று யுக்ரேனுக்கு எதிராக ஒரு போரை நடத்தி வருகிறார். இதில் ரஷ்யா பெரும் இழப்பைச் சந்தித்திருக்கிறது. உள்நாட்டில், ஜனநாயகத்தை வளர்ப்பதற்குப் பதிலாக, அதிபர் புதின் அதைக் குறைத்து வருகிறார். விமர்சகர்களை சிறையில் அடைக்கிறார், அவரது அதிகாரத்தின் மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குகிறார்.

‘தன்னை நவயுக மன்னர் என நினைக்கிறார் புதின்’

ஐந்தாவது முறை ரஷ்ய அதிபரான விளாதிமிர் புதின்

பட மூலாதாரம், GAVRIIL GRIGOROV/POOL/AFP

படக்குறிப்பு, ஏறக்குறைய கால் நூற்றாண்டு ரஷ்யாவை இயக்கிய பிறகு, புதின் நிச்சயமாகத் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.

“புதின் இப்போது தன்னை ‘விளாதிமிர் தி கிரேட்’ என்ற ரஷ்ய மன்னர் என நினைத்துக்கொள்கிறார்,” என்கிறார் வெள்ளை மாளிகையின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஃபியோனா ஹில்.

“புதினின் முதல் இரண்டு அதிபர் பதவிக் காலங்களை மதிப்பிட்டால், அவர் ரஷ்யாவை அரசியல் ரீதியாக உறுதிப்படுத்தியுள்ளார். ரஷ்ய பொருளாதாரம் அதன் வரலாற்றில் எந்த முந்தைய காலகட்டத்தை விடவும் சிறப்பாகச் செயல்பட்டது,” என்கிட்றார் அவர்.

“பத்து ஆண்டுகளுக்கு முன்பு கிரைமியாவை ரஷ்யா தன்னோடு இணைத்ததில் இருந்து தற்போதைய யுக்ரேன் வரையான சம்பவங்கள், அந்தச் சாதனைகளை வியத்தகு முறையில் மாற்றியுள்ளன. அவர் ஒரு நடைமுறைவாதியாக இல்லாமல் தன்னை ஒரு ஏகாதிபத்தியவாதியாக மாற்றிக்கொண்டார்,” என்கிறார்.

விளாதிமிர் புதின் முதன்முதலில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அமெரிக்கா ஐந்து வெவ்வேறு அதிபர்களையும், பிரிட்டன் ஏழு பிரதமர்களையும் பெற்றுள்ளது.

ஏறக்குறைய கால் நூற்றாண்டு ரஷ்யாவை இயக்கிய பிறகு, புதின் நிச்சயமாகத் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார். ரஷ்ய மக்கள் தங்கள் கடந்த அதிபர்களைப் பற்றி ‘ப்ரெஷ்நேவிசம்’, ‘கோர்பச்செவிசம்’ அல்லது ‘யெல்ட்சினிசம்’ பற்றி அரிதாகவே பேசினர்.

ஆனால் ‘புதினிசம்’ ரஷ்யாவின் எல்லா இடங்களிலும் உள்ளது.

“எங்கள் வரலாற்றில் இன்னும் ஒரு-இசம் உள்ளது, அது ஸ்டாலினிசம்,” என்கிறார் கார்னகி யூரேசியா ரஷ்யா மையத்தின் மூத்த ஆய்வாளர் ஆண்ட்ரி கோல்ஸ்னிகோவ். அவர் ரஷ்யாவின் முன்னாள் சர்வாதிகாரியான ஜோசஃப் ஸ்டாலினை பற்றிக் கூறுகிறார். ஜோசப் ஸ்டாலினது ஆட்சியில் நாட்டுக்கும் அவருக்கும் எதிரானவர்கள் என்று கருதப்பட்ட பல லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர்.

“புதினிசம் என்பது ஸ்டாலினிசத்தின் மற்றோர் அவதாரம் என்று நான் கூறுவேன். அவர் ஸ்டாலினை போலவே நடந்துகொள்கிறார். அவருடைய அதிகாரம் ஸ்டாலினின் காலத்தைப் போலவே தனிநபர் மயமாக்கப்பட்டது. அவர் நிறைய அரசியல் அடக்குமுறைகளைப் பயன்படுத்த விரும்புகிறார். மேலும் ஸ்டாலினை போலவே அவர் தன்னை அதிகாரத்தில் வைத்திருக்கத் தயாராக இருக்கிறார். அவர் தனது இறுதிநாள் வரை அதிகாரத்தில் இருப்பார்,” என்கிறார் கார்னகி யூரேசியா.

மேற்கு நாடுகளுக்கு புதின் விடுக்கும் சவால்

ஐந்தாவது முறை ரஷ்ய அதிபரான விளாதிமிர் புதின்
படக்குறிப்பு, காஷிரா நகரில் ஒரு பிரமாண்டமான புதின் உருவப்படச் சுவரோவியம், ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு முழு பக்கத்தையும் நிரப்பியிருக்கிறது

அதீதமாகச் சர்வாதிகார முறையில் செயல்படும் ரஷ்ய தலைவரை, ரஷ்யாவின் மகத்துவமாகத் தாம் கருதுவதை மீட்டெடுப்பதில் உறுதியாக உள்ள அந்தத் தலைவரை, அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் ஒரு நவீன மன்னரை எவ்வாறு கையாள்வது என்பதுதான் மேற்கு நாடுகளுக்கு முன்னிருக்கும் மிகப்பெரும் சவால்.

“அணு ஆயுதம் குறித்த பிரச்னையில், நாம் நிறைய செய்யக்கூடும்,” என்கிறார் ஃபியோனா ஹில். “யுக்ரேனில் அணு ஆயுங்கள் பயன்படுத்துவதாக மிரட்டி, புதின் பின்வாங்கியபோது, சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற சில நாடுகள் பதற்றமடைந்தன. இந்த வரைமுறையற்ற அணு ஆயுத ஊகப்பேச்சைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரு சர்வதேச கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம், ரஷ்யா மீது கட்டுப்பாட்டை அமல்படுத்த முடியும்,” என்கிறார் அவர்.

“ஒருவேளை, விளாதிமிர் புதினை நாம் எவ்வாறு கையாள்வது என்பதற்கு இதுவொரு முன்மாதிரியாக இருக்கலாம். அவர் பல விஷயங்களில் ஒரு முரட்டுத்தனமான தலைவராக இருக்கிறார். அவர் மேற்கொள்ள விரும்பும் செயல்களை அனுமதிக்காத, கட்டுப்பாடான சூழலை நாம் உருவாக்க வேண்டும்,” என்றார் அவர்.

சென்ற மார்ச் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் அதிகாரப்பூர்வமாக விளாதிமிர் புதின் 87%-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். இருப்பினும், இத்தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடக்கவில்லை என்று பரவலாகக் கூறப்படுகிறது. புதினுக்கு இந்தத் தேர்தலில் வலுவான எதிரியும் இல்லை.

‘புதின் இல்லையெனில் வேறு யார்?’

ஐந்தாவது முறை ரஷ்ய அதிபரான விளாதிமிர் புதின்
படக்குறிப்பு, “எனக்கு புதினை பிடிக்கும்,” என்கிறார் சாலையோரம் பூக்கள் விற்கும் ஓய்வூதியதாரர் வாலண்டினா.

ஜோசஃப் ஸ்டாலினுக்கு அடுத்து ரஷ்யாவை நீண்டகாலம் ஆண்டு வரும் புதினை ரஷ்ய மக்கள் எவ்வாறு பார்க்கின்றனர்.

அதை அறிந்துகொள்ள மாஸ்கோவில் இருந்து 70 மைல் தொலைவில் உள்ள காஷிரா நகருக்குச் சென்றோம். அங்கே ஒரு பிரமாண்டமான புதின் உருவப்படச் சுவரோவியம், ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு முழு பக்கத்தையும் நிரப்பியிருக்கிறது.

காஷிராவில் புதின் உங்களைப் கவனித்துக்கொண்டிருக்கிறார். “எனக்கு அவரைப் பிடிக்கும்,” என்கிறார் சாலையோரம் பூக்கள் விற்கும் ஓய்வூதியதாரர் வாலன்டினா.

“புதின் நல்ல சிந்தனைகள் உள்ளவர். மக்களுக்காக நிறைய செய்கிறார். எங்கள் ஓய்வூதியம் பெரிதாக இல்லை என்பது உண்மைதான். ஆனால் அவரால் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சரிசெய்ய முடியாது,” என்கிறார் அவர்.

“அவர் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறார்,” என்று நான் சுட்டிக்காட்டினேன். “ஆனால் புதின் இல்லையென்றால் அடுத்து யார் வருவார்கள் என்று தெரியாது,” என்று வாலன்டினா பதிலளித்தார்.

புதின் சுவரோவியத்தைக் கடந்து செல்லும் விக்டோரியா என்ற பெண்மணி, “ரஷ்யாவில் நாங்கள் அனைவரும் ஒரே மாதிரியாக சிந்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்கிறார்.

“புதினுக்கு எதிராக நான் ஏதாவது சொன்னால் என் கணவர் ‘நீ புதினை மீண்டும் விமர்சித்தால், நான் உன்னை விவாகரத்து செய்துவிடுவேன்!’ என்று கூறுவார். அவர் புதின்மீது வெறித்தனமாகப் பற்று கொண்டுள்ளார். புதின் இல்லாவிட்டால், 1990களில் இருந்ததைப் போல இங்கே வாழ்க்கை கடினமாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்,” என்கிறார் விக்டோரியா.

மற்றொரு வழிப்போக்கரான அலெக்சாண்டரிடம், அதிபரைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று நான் கேட்டபோது, அவர், “இப்போது எனது கருத்தை வெளிப்படுத்துவது ஆபத்தானது. எதுவும் சொல்ல விரும்பவில்லை,” என்றார்.

நான் பேசிய மக்களில் பெரும்பாலானவர்கள் புதினின் உருவப்படத்தை இப்போது கவனிக்காமல் கடந்து செல்வதாகக் கூறுகிறார்கள். அதற்கு அவர்கள் பழகிவிட்டார்கள்.

ரஷ்யாவை இயக்கும் ஒரு தனிமனிதனுக்கும், ரஷ்ய அரசாங்கத்தில் இனி எந்த உடனடி மாற்றத்திற்கும் வாய்ப்பு இல்லை என்ற நிதர்சனத்துக்கு அவர்கள் பழகிவிட்டதைப் போலவே அவர்கள் புதினின் அந்தப் பெரிய உருவப்படத்துக்கும் பழகிவிட்டார்கள்.