சாம்சனின் சர்ச்சைக்குரிய அவுட், ராஜஸ்தானை வீழ்த்திய டெல்லி – ப்ளே ஆஃப் வாய்ப்புகள் எப்படி?

IPL 2024: Dc vs RR

பட மூலாதாரம், SPORTZPICS

  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்

கிரிக்கெட்டில் எப்போதுமே சந்தேகத்தின் பலன் பேட்டருக்குத்தான் தரப்பட வேண்டும் என்று தார்மீகம். ஏனென்றால், பேட்டருக்கு இருப்பது ஒரு வாய்ப்புதான், ஒரு உயிர்தான் அதில் தவறு நேரும்பட்சத்தில் பேட்டரும் தன்னுடைய விக்கெட்டை இழக்க நேரிடும், அணியின் வெற்றி வாய்ப்பும் தலைகீழாக மாறிவிடும்.

ஆனால், பந்துவீச்சாளருக்கு ஒரு பந்து இல்லாவிட்டால் அடுத்த பந்தில் வாய்ப்பு கிடைக்கும். இதைக் கணக்கிட்டுத்தான் சந்தேகத்தின் பலன் பேட்டருக்கு தரப்பட வேண்டும் என்று தார்மீகமாகக் கூறப்படுகிறது.

அதன்படி, நேற்று நடந்த ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு சந்தேகத்தின் பலனை அளித்திருந்தால், ஆட்டம் வேறுவிதமாகத் திரும்பியிருக்கும். ஆனால், சந்தேகத்தின் பலன் சாம்சனுக்குத் தராமல் அவுட் வழங்கியது ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 56வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 20 ரன்களில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ்.

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 8 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் சேர்த்தது. 222 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் சேர்த்து 20 ரன்களில் தோல்வி அடைந்தது.

ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்?

IPL 2024: Dc vs RR

பட மூலாதாரம், SPORTZPICS

இப்போதுவரை ப்ளே ஆஃப் சுற்றை எந்த அணியும் இறுதி செய்யவில்லை என்பதுதான் ஐபிஎல் தொடரில் இருக்கும் சுவாரஸ்யம்.

டெல்லி கேபிடல்ஸ் அணி 12 ஆட்டங்களில் 6 வெற்றி, 6 தோல்வி என 12 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இருப்பினும் அந்த அணியின் நிகர ரன்ரேட் மைனஸ் 0.316 என்ற கணக்கில்தான் இருக்கிறது. டெல்லி அணிக்கு இன்னும் 2 போட்டிகள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில், அதில் கட்டாய வெற்றி பெற்றால்தான் 16 புள்ளிகளுடன் கடைசி இடத்துக்குப் போராட முடியும். இதில் நிகர ரன் ரேட்டையும் டெல்லி அணி உயர்த்துவது அவசியம். டெல்லி அணிக்கு நெருக்கடி கொடுக்க லக்னெள, சன்ரைசர்ஸ் அணிகள் காத்திருக்கின்றன.

இப்போதைய சூழலில் இந்த 3 அணிகளுக்குள்தான் ப்ளே ஆஃப் சுற்றில் 4வது இடத்தைப் பிடிக்கக் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஒருவேளை சிஎஸ்கே அணி ஒரு போட்டியில் தோற்றாலும் 4வது இடத்துக்கான ரேஸில் சேர்ந்துகொள்ளும். இதில் டெல்லி அணி இன்னும் ஒரு போட்டியில் தோற்றாலும் ப்ளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறும்.

இன்று ஹைதராபாத்தில் நடக்கும் சன்ரைசர்ஸ், லக்னெள அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் கிடைக்கும் முடிவுதான் ப்ளே ஆஃப் சுற்றுக்கு யார் செல்ல முடியும் என்பதில் தெளிவான பார்வையை உருவாக்கும்.

ஒருவேளை சன்ரைசர்ஸ் அணி வென்றால் 14 புள்ளிகளுடன் சிஎஸ்கே அணியைக் கீழே இறக்கிவிட்டு 3வது இடத்தைப் பிடித்துவிடும். லக்னெள அணி ஏற்கெனவே நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.371 என இருக்கும் நிலையில் தோல்வி அடைந்தால் அதன் நிலை இன்னும் மோசமாகும். அடுத்த இரு ஆட்டங்களையும் லக்னெள வென்றாலும் 16 புள்ளிகள்தான் கிடைக்கும், நிக ரன்ரேட்டில் சிக்கிக்கொள்ளும்.

ஒருவேளை சன்ரைசர்ஸ் அடுத்த 3 ஆட்டங்களையும் வென்று லீக் சுற்றை 18 புள்ளிகளுடன் முடித்து, சிஎஸ்கேவும் 18 புள்ளிகளுடன் முடித்தால், நிகர ரன்ரேட்டில் இரு அணிகளுக்குள் போட்டி ஏற்படும். அப்போது 3வது, 4வது இடத்தை இரு அணிகளுமே பகிர்ந்துகொள்ளும். டெல்லி, லக்னெள அணிகள் வெளியேற்றப்படும் சூழல் ஏற்படலாம். இதே கணக்கீடு, லக்னெள அணி வெற்றி பெற்றால் சன்ரைசர்ஸ் அணிக்கும் பொருந்தும். சிஎஸ்கே அணி அடுத்து ஒரு போட்டியில் தோற்றாலும், 16 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட்டில் சிக்கி 4வது இடத்தையே பிடிக்கலாம்.

ராஜஸ்தான் அணியின் நிலை என்ன?

IPL 2024: Dc vs RR

பட மூலாதாரம், SPORTZPICS

ராஜஸ்தான் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இருப்பினும் 16 புள்ளிகளோடு வலுவாக இருப்பதால் 2வது இடத்தில் இருந்து இறங்கவில்லை, நிகர ரன்ரேட்டும் மைனசுக்கு வராமல் 0.476 ஆக இருக்கிறது. இப்போதுள்ள சூழலில் முதலிடத்தைப் பிடிக்க கொல்கத்தா, ராஜஸ்தானுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இரு அணிகளும் அடுத்து வரும் 3 ஆட்டங்களிலும் வென்றால் தலா 22 புள்ளிகள் பெறும், அப்போது நிகர ரன்ரேட் ஒப்பீடு பார்க்கப்படும். எந்த அணி நிகர ரன்ரேட்டில் உயர்வாக இருக்கிறதோ அந்த அணி முதலிடத்தைப் பிடிக்கும். ஏற்கெனவே நிகர ரன்ரேட்டில் கொல்கத்தா உயர்வாக இருப்பது அந்த அணிக்குக் கூடுதல் சாதகம்.

ராஜஸ்தான் முதலிடத்தைப் பிடிக்க வேண்டுமென்றால், அடுத்து வரும் 3 ஆட்டங்களையும் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில், விக்கெட் வித்தியாசத்தில் வென்று நிகர ரன்ரேட்டை உயர்த்தினால், முதலிடம் கிடைக்கும் அல்லது கொல்கத்தா அணி ஒரு ஆட்டத்தில் தோற்க வேண்டும். இல்லாவிட்டால் ராஜஸ்தானுக்கு 2வது இடம்தான்.

ராஜஸ்தான் அணி தனக்கிருக்கும் 3 லீக் ஆட்டங்களில் இன்னும் ஒரு ஆட்டத்தில் வேண்டுமென்றால் தோற்கலாம், மற்ற இரு ஆட்டங்களிலும் வென்றால் 2வது இடத்தைப் பிடித்துவிடும். ஒருவேளை ஒரு ஆட்டத்தில் வென்று 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்தால், ப்ளே ஆஃப் சுற்றில் 2,3,4வது இடங்களுக்கு கடும் போட்டி ஏற்படும்.

டெல்லி அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்கள்தான் காரணம் என்பதைவிட, ராஜஸ்தான் அணியில் வலுவான பேட்டர்கள் நடுவரிசையில் இல்லாததே காரணம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஹெட்மயர், துருவ் ஜூரெல் இருவரும் இல்லாத பலவீனமான நடுவரிசை இருந்ததால்தான் ராஜஸ்தான் 20 ரன்களில் தோல்வி அடைந்தது, ஒருவேளை இவர்கள் இருந்திருந்தால் ஆட்டம் வேறுவிதமாகத் திரும்பியிருக்கும்.

இருப்பினும் குல்தீப் யாதவ் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் திருப்புமுனையாக இருந்தார். 4 ஓவர்கள் வீசிய குல்தீப் 25 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். குல்தீப் வீசிய 18வது ஓவர்தான் ஆட்டத்தை டெல்லி பக்கம் முழுமையாகக் கொண்டு சென்றது.

சாம்சனின் சர்ச்சைக்குரிய அவுட்?

IPL 2024: Dc vs RR

பட மூலாதாரம், SPORTZPICS

ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால்(4), பட்லர்(19), ரியான் பராக்(27) ஆகியோர் ஏமாற்றிய நிலையில் அணியை தோல்வியிலிருந்து கேப்டன் சாம்சன் இழுத்து வந்தார். அரைசதம் அடித்து 85 ரன்களுடன் ஆக்ரோஷமாக சாம்சன் பேட் செய்தார். சாம்சன் இருந்த தீவிரத்துக்கும், ஆவேசத்துக்கும், ஸ்பிரிட்டுக்கும் களத்தில் இருந்திருந்தால் அணியை வெற்றி பெற வைத்திருப்பார். ராஜஸ்தான் வெற்றிக்கு 30 பந்துகளில் 63 ரன்கள்தான் தேவைப்பட்டது.

அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. 16வது ஓவரை முகேஷ் குமார் வீசினார். அந்த ஓவரில் 4வது பந்தை சாம்சன் தூக்கி அடிக்க பவுன்டரி கோடு அருகே பக்கவாட்டில் சாய்ந்தவாறு ஷாய் ஹோப் கேட்ச் பிடித்தார். ஆனால், ஹோப் கேட்ச் பிடித்தபோது அவரின் கால் பவுண்டரி எல்லைக் கோட்டின் மீது லேசாக மிதித்தது போன்று இருந்ததா அல்லது இல்லையா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

எல்லைக் கோட்டின் மீது ஹோப் லேசாக மிதித்தது போன்றும் இருந்தது, மிதிக்காமல் சென்றது போன்றும் இருந்தது. ஆனால், உறுதி செய்ய முடியாத சூழலில் இருந்தது, 3வது நடுவரும் பலமுறை ரீப்ளே செய்து பார்த்தபோதும் இறுதி முடிவை எடுக்க முடியவில்லை.

களத்தில் இருந்த சாம்சனும் வெளியேறவில்லை. ஆனால் ஷாய் ஹோப் கேட்ச் பிடித்துவிட்ட மகிழ்ச்சியில் சகவீரர்களோடு கொண்டாட்டத்தில் இருந்தார். சந்தேகத்தின் பலனை பேட்டருக்கு வழங்காமல் 3வது நடுவர் சாம்சனுக்கு அவுட் வழங்கினார். இதைப் பார்த்த சாம்சன் கள நடுவரிடம் வாக்குவாதம் செய்துவிட்டு மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

சாம்சனின் அவுட் குறித்து முடிவு அறிவிக்கப்படாத நிலையில், அரங்கில் இருந்த டெல்லி கேபிடல்ஸ் அணியின் உரிமையாளர் பர்த் ஜிண்டால் கொண்டாட்டத்தில் இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள், நெட்டிசன்கள் தங்கள் ஆதங்கத்தையும், கோபத்தையும் சமூக ஊடகத்தில் பதிவிட்டனர். சாம்சனுக்கு ஒரு தலைபட்சமாக முடிவு அளிக்கப்பட்டதைக் கண்டித்தும், டெல்லி உரிமையாளரின் செயலையும் கடுமையாகக் கண்டித்து, விமர்சித்து வருகிறார்கள்.

ஒருவேளை சாம்சனுக்கு சந்தேகத்தின் பலனை அளித்து அவுட் இல்லை எனத் தெரிவித்திருந்தால், ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றி உறுதியாகி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சாம்சனும் 46 பந்துளில் 86 ரன்களில் (6 சிக்ஸர், 8 பவுண்டரி) இருந்தவர் சதம் அடித்திருப்பார். இவை அனைத்தும் சர்ச்சைக்குரிய அவுட்டால் நடக்கவில்லை.

ராஜஸ்தான் அணி எங்கு தோற்றது?

IPL 2024: Dc vs RR

பட மூலாதாரம், SPORTZPICS

ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால், பட்லர் விரைவாக ஆட்டமிழந்ததுதான் தோல்விக்கான முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இருவரும் பவர் ப்ளேவில் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருந்தால், அடுத்து வரும் பேட்டர்களின் சுமை குறைந்திருக்கும்.

ஜெய்ஸ்வால் இந்த சீசனில் மீண்டும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். கலீல் அகமது வீசிய முதல் ஓவரின் 2வது பந்திலேயே ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தது, பவர்ப்ளே ஓவருக்குள் பட்லர் ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவாக இருந்தது. இருப்பினும் சாம்சன் களமிறங்கி, பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தி சிக்ஸர், பவுண்டரி என விளாசி 67 ரன்களை சேர்த்தார்.

அடுத்ததாக நடுவரிசையில் களமிறங்கிய ரியான் பராக்(27), ரூ.2.80 கோடிக்கு வாங்கப்பட்ட ஷூபம் துபே(25) இருவரும் சாம்சனுக்கு சரியான பார்ட்னர்ஷிப் அமைக்கத் தவறிவிட்டனர். இருவரும் சாம்சனுக்கு நன்கு ஒத்துழைத்திருந்தால், ரன் சேர்ப்பு இன்னும் வேகமெடுத்திருக்கும். இதில் ஷுபம் துபே மட்டும் சாம்சனுக்கு ஓரளவு ஒத்துழைத்து 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ரியான் பராக், சாம்சன் கூட்டணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தனர்.

கீழ்வரிசையில் ரோவ்மென் பாவெல்(13), பெரேரா(1), அஸ்வின்(2) என அனைத்து பேட்டர்களும் ராஜஸ்தான் அணியைக் கைவிட்டது தோல்விக்குக் காரணமாக அமைந்தது. அதிலும் பவர் ஹிட்டரான பாவெல் கடைசி நேரத்தில் பந்துகளை வீணாக்கியது நெருக்கடியை ஏற்படுத்தியது. தென் ஆப்பிரிக்க வீரரான பெரேராவுக்கு பேட்டர் என நினைத்து வாய்ப்பளித்தும் அவர் ஏமாற்றினார்.

சாம்சன் ஆட்டமிழக்காத வரை ராஜஸ்தான் அணி 162 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்தது. 15வது ஓவர் வரை ஆட்டத்தை சாம்சன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். சாம்சனுக்கு எவ்வாறு பந்துவீசுவது எனத் தெரியாமல் டெல்லி பந்துவீச்சாளர்கள் திணறி வந்தனர். குறிப்பாக கலீல் அகமது பவுண்டரி அடிப்பதைத் தவிர்க்க வேண்டுமே என்பதற்காக 5 வைடு பந்துகளை ஒரே ஓவரில் வீசி சாம்சனை வெறுப்பேற்றினார். இசாந்த் சர்மா, சலாம், முகேஷ், குல்தீப் ஓவர்களையும் சாம்சன் வெளுத்து வாங்கி, 28 பந்துகளில் அரைசதம் அடித்து சிம்மசொப்னமாகத் திகழ்ந்தார்.

முகேஷ் குமார் ஓவரில் சர்ச்சைக்குரிய வகையில் சாம்சன் ஆட்டமிழந்தவுடன், ராஜஸ்தான் சரிவு தொடங்கி, அடுத்த 39 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. பவர் ஹிட்டர்களை வைத்திருக்கும் ராஜஸ்தான் அணி 20 ரன்களில் தோற்றது. பாவெல், பெரேரா இருவரும் சிறிய கேமியோ ஆடி இருந்தாலே ஆட்டத்தின் முடிவு வேறுவிதமாகத் திரும்பியிருக்கும்.

எங்களிடம்தான் ஆட்டம் இருந்தது

IPL 2024: Dc vs RR

பட மூலாதாரம், SPORTZPICS

ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில், “ஆட்டம் எங்கள் கைகளில்தான் இருந்தது, ஓவருக்கு 10 முதல்11 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்குதான், ஐபிஎல் தொடரில் இதுபோன்ற சேஸிங் நடந்துள்ளது. பந்துவீச்சு, பேட்டிங்கில் சிறப்பாகவே செயல்பட்டோம், சூழலுக்கு என்ன தேவையோ அதைச் செய்தோம். 220 ரன்களை நாங்கள் அனுமதித்திருக்கக் கூடாது, 2 பவுண்டரிகள் கொடுத்ததைக் குறைத்திருந்திருந்தால், ஆட்டம் எங்கள் பக்கம்தான்.

டெல்லி அணி சிறப்பாக பேட் செய்தனர், மெக்ருக் இந்த சீசன் முழுவதும் சிறப்பான தொடக்கத்தை அளித்து வருகிறார். மெக்ருக் சந்தித்த இரு ஓவர்களில் அதிக ரன்களை கொடுத்தோம். நாங்கள் 3 ஆட்டங்களையும் வெற்றியின் அருகே வந்து தோற்றுள்ளோம், இருப்பினும் சிறந்த கிரிக்கெட்டை ஆடினோம் என்ற மனநிறைவு இருக்கிறது.

முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் வரட்டும், ஆனால் தொடர்ந்து எங்களை நாங்கள் உற்சாகப்படுத்திக்கொண்டே அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்றோம், சிறிதுகூட ரிலாக்ஸ் ஆக எங்களை நாங்கள் அனுமதிக்கவில்லை.

டெத் ஓவரில் சந்தீப் சர்மா சிறப்பாகப் பந்துவீசக்கூடியவர். அவர் கடைசி நேரத்தில் 3 சிக்ஸர்களை விட்டது பின்னடைவு. எங்கு தவறு நடந்தது என்பதை ஆலோசிப்போம், அடுத்தடுத்த ஆட்டங்களில் முன்னோக்கிச் செல்வோம்,” எனத் தெரிவித்தார்.

மெக்ருக், போரெல், ஸ்டெப்ஸ் அதிரடி பேட்டிங்

டெல்லி அணி 200 ரன்களுக்கு மேல் சேர்த்ததற்கு தொடக்க ஆட்டக்காரர் மெக்ருக், அபிஷேக் போரெல், கடைசியில் டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் ஆகியோரின் அதிரடிதான் காரணம். அதிலும் பிரேசன் மெக்ருக் தொடக்கத்தில் இருந்தே ராஜஸ்தான் பந்துவீச்சை வெளுத்தார். போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே பவுண்டரி, சிக்ஸர் என 15 ரன்களை பிரேசர் விளாசினார்.

IPL 2024: Dc vs RR

பட மூலாதாரம், SPORTZPICS

ஆவேஷ் கான் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி, 6 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி என 28 ரன்களை பிரேசர் விளாசி, 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். பிரேசர் அதிரடியில் 3.5 ஓவர்களில் டெல்லி அணி 50 ரன்களை எட்டியது. அஸ்வின் வீசிய 5வது ஓவரில் பிரேசர் 50 ரன்கள் சேர்த்த நிலையில்(3 சிக்ஸர்,7 பவுண்டரி) விக்கெட்டை இழந்தார், அடுத்துவந்த ஷாய் ஹோப் ரன் அவுட் ஆனார். இதனால் பவர்ப்ளே ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 78 ரன்களை டெல்லி அணி சேர்த்தது.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் போரெல் 28 பந்துகளில் அரைசதம் அடித்து 65(36 பந்து, 3 சிக்ஸர், 7 பவுண்டரி) ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நடுவரிசையில் ரிஷப் பந்த்(15), அக்ஸர் படேல்(15) எனப் பெரிதாக ரன் சேர்க்கவில்லை.

கீழ்வரிசையில் களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடினார். ஸ்டெப்ஸ் தொடக்கத்தில் நிதானமாக பேட் செய்து 11 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே சேர்த்தார். டெல்லி அணியும் 14 முதல் 17வது ஓவர்கள் வரை ரன்ரேட் குறைந்து 22 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

ஆனால் யுஸ்வேந்திர சாஹலின் கடைசி ஓவரை வெளுத்த ஸ்டெப்ஸ் 16 ரன்கள் சேர்த்து 41 ரன்களில் ஆட்டமிழந்தார். குல்புதின் நயீப்(19), ரசிக் சலாம்(9) இருவரும் கடைசி ஓவர்களில் கேமியோ ஆடியதால், டெல்லி அணி 200 ரன்களை கடந்தது. கடைசி 6 ஓவர்களில் மட்டும் டெல்லி அணி 70 ரன்களை சேர்த்ததுதான் 200 ரன்களுக்கு மேல் உயரக் காரணம்.

டெல்லி பந்துவீச்சு சுமார்தான்…

டெல்லி அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சாம்சன் ஒருவரை ஆட்டமிழக்கச் செய்யவே டெல்லி பந்துவீச்சாளர்கள் மிகவும் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

குல்தீப் யாதவ், அக்ஸர் மட்டும்தான் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை சாம்சன், ரியான் பராக், ஷூபம் துபே ஆகிய 3 பேட்டர்களும் துவைத்து எடுத்துவிட்டனர். டெல்லி அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் 4 பேருமே ஓவருக்கு சராசரியாக 11 ரன்களை விட்டுக்கொடுத்தனர். மற்றவகையில் டெல்லியின் பந்துவீச்சு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் விமர்சிக்கப்படுகிறது.