கோவை: அணைகளின் நீர் இருப்பு குறைந்ததால், குடிநீருக்கு பற்றாக்குறை – கள நிலவரம்

கோவை குடிநீர் தட்டுப்பாடு

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், ச.பிரசாந்த்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

கோவை மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமான, சிறுவாணி, பில்லூர் மற்றும் ஆழியாறு அணைகளின் நீர்மட்டம் குறைந்துள்ளது. இது குடிநீர் விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநகராட்சிகளில் கோவையும் ஒன்று. மாநகராட்சியுடன் சேர்த்து கோவை மாவட்டத்தில் மொத்தம் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர்.

கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை, ஆனைகட்டி அருகே கேரள மாநில கட்டுப்பாட்டில் உள்ள சிறுவாணி அணை, மேட்டுப்பாளையம் அடுத்த பில்லூர் அணை மற்றும் ஆழியாறு அணை ஆகியவை தான் மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளன.

மாநகராட்சி தவிர்த்து மாவட்டத்தின் மற்ற பகுதிகளான பொள்ளாச்சி, கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஆழியாறு அணை முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.

கோவையின் குடிநீர் விநியோகம் எப்படி நடக்கிறது?

கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு சிறுவாணி, பில்லூர் 1, 2, 3-வது திட்டங்கள், வடவள்ளி – கவுண்டம்பாளையம் மற்றும் ஆழியாறு கூட்டுக் குடிநீர் திட்டங்களில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இப்படியான நிலையில், கடந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யாதது மற்றும் இந்த ஆண்டு கோடை மழை பெய்யாதது போன்ற காரணங்களால், கோவையின் நீராதாரமாக உள்ள சிறுவாணி, பில்லூர் மற்றும் ஆழியாறு அணைகளின் நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால், அணைகளில் இருந்து பெறப்படும் நீரின் அளவு குறைந்து, மக்களுக்கு வாரம் ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

சிறுவாணி அணையைப் பொறுத்தவரை, மொத்தம் உள்ள 45 அடியில், ஏப்ரல் 30ஆம் தேதி நிலவரப்படி, 12 அடிக்கு மட்டுமே நீர் மட்டம் உள்ளது. பில்லூர் அணையின் மொத்த நீர்மட்டம் 100 அடி. இதில் 55.25 அடிக்கு மட்டுமே நீர்மட்டம் உள்ளது. அதேபோல், ஆழியாறு அணையின் மொத்த கொள்ளளவான 120 அடியில், 58.70 அடி உயரத்திற்கு மட்டுமே நீர் உள்ளது.

கோவை குடிநீர் தட்டுப்பாடு
கோவை குடிநீர் தட்டுப்பாடு

பட மூலாதாரம், Getty Images

‘இந்த ஆண்டு மழை பெய்யாததால் சிக்கல்’

இந்த நிலையில், கோவை மாவட்டத்தின் குடிநீர் பற்றாக்குறை குறித்து, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கைப்படி, சிறுவாணி அணைப் பகுதியில் 2023 ஏப்ரல் மாதம் 95 மில்லிமீட்டர் மழை பதிவானது, பில்லூர் அணைப்பகுதியில் 2189.64 மி.மீ. மழையும், ஆழியாறு அணைப் பகுதியில் 41.80 மி.மீ. மழையும் பதிவானது. ஆனால், இந்த ஆண்டு சிறுவாணி, பில்லூர் மற்றும் ஆழியாறு அணைப் பகுதியில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் மழை பெய்யாததால், அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இதனால், “சிறுவாணி அணையில் இருக்கின்ற நீரை ஜூன் வரை வழங்குவதற்காக, அணையில் இருந்து நாள் ஒன்றுக்கு 104.4 எம்.எல்.டி பெறப்படுவதற்குப் பதிலாக 35 எம்.எல்.டி நீர் பெறப்பட்டு விநியோகம் செய்யப்படும். இதேபோல், பில்லூர் அணையில் இருக்கும் நீரும் ஜூன் வரையில் வழங்க ஏற்பாடு செய்யப்படும். ஆழியாறு அணையில் தற்போது இருக்கும் நீர் கோடையைச் சமாளிக்கப் போதுமானதாக உள்ளது,” என்று மாவட்ட ஆட்சியர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குடிநீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக பொதுமக்களில் சிலர் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

‘வீட்டின் மாதச் செலவு அதிகரித்துள்ளது’

பிபிசி தமிழிடம் பேசிய கோவை கணபதி பகுதியிலுள்ள இல்லத்தரசி ரம்ய பிரியா, ஆண்டுதோறும் கோடைக் காலத்தில் குறிப்பாக மே மாதம் வாரம் ஒருமுறை தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்குவார்கள் என்றும் இந்த ஆண்டு 12 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் கூறுகிறார்.

“தினமும் குடிநீர் அல்லாத பயன்பாட்டுக்கு போர்வெல் நீர் வழங்கி வந்தனர். அதுவும் சரிவரக் கிடைக்காமல் உள்ளது,” என்கிறார் ரம்ய பிரியா.

கோடையால் குடிநீர் தேவை அதிகரித்துள்ளதால், சேமிக்கும் நீர் விரைவில் தீர்ந்துவிடுவதாகக் கூறும் அவர், “650 ரூபாய் செலுத்தி டிராக்டரில் 1000 லிட்டர் நீர் விலைக்கு வாங்கிப் பயன்படுத்துவதுடன், குடிநீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்துகிறோம். இதனால், வீட்டின் மாதச் செலவு அதிகரித்துள்ளது,’’ என்றார்.

‘பயன்பாட்டைக் குறைத்துள்ளோம்’

தங்கள் பகுதிக்கு வாரம் ஒருமுறைதான் குடிநீர் வழங்கப்படுவதாகவும் கிடைக்கும் நீரை குடிக்க, சமைக்க மட்டுமே சிக்கனமாகப் பயன்படுத்துவதாகவும் கூறுகின்றனர் கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ராஜேஸ் கோவிந்தராஜலு, சுஜாதா தம்பதி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர்கள், “குடிநீர் தட்டுப்பாட்டால் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் அல்லாத பயன்பாட்டுக்கான நீருக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பாத்திரங்களின் பயன்பாட்டையும் வெகுவாகக் குறைத்துள்ளோம்,’’ என்றனர்.

இந்த நிலையில், அரசு போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் விட்டதால் தான் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் விவசாயிகள் சங்கத்தினர்.

பிபிசி தமிழிடம் பேசிய கெளசிகா நீர்க்கரங்களின் நிறுவனர் செல்வராஜ், ‘‘சிறுவாணி, பில்லூர் அணைகளில் கடந்த சில ஆண்டுகளாக வண்டல் மண் அதிகரித்து அணையின் நீர் சேமிப்புத் திறன் குறைந்துள்ளது. வண்டல் மண் எடுத்து அணைகளின் நீர்மட்டத்தை உயர்த்த அரசு தவறிவிட்டதால், இன்று நாம் நீரின்றி சிரமத்தைச் சந்திக்கிறோம்,” என்றார்.

கோவை குடிநீர் தட்டுப்பாடு
படக்குறிப்பு, குடிநீர் பற்றாக்குறையுடன் விவசாயமும் பாதிக்கப்படுவதாகக் கூறுகிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட துணைத் தலைவர் பெரியசாமி.

அணைகளைத் தூர்வாரக் கோரிக்கை

நீர்நிலைகளைத் தூர்வாரி ஆழப்படுத்தினால் மட்டுமே இனி வரும் காலங்களை எதிர்கொள்ள முடியும் என்கிறார் செல்வராஜ்.

இதை விளக்கிய செல்வராஜ், ‘‘பருவநிலை மாற்றத்தால் கடந்த சில ஆண்டுகளாக நமக்கு முன்பு பெய்ததைப் போல பருவமழை கிடைப்பதில்லை. திடீரென சில நாட்களில் அதீத கனமழை தான் பொழிகிறது. இத்தகைய சூழலைச் சமாளிக்க தமிழ்நாடு அரசு சிறுவாணி, பில்லூர், ஆழியாறு அணைகளை முறையாகத் தூர்வாரி கரைகளைப் பலப்படுத்த வேண்டும். அணைகளைப் போல குளங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்,’’ எனக் கூறுகிறார்.

வறட்சியால் குடிநீர் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும், அதேபோல் விவசாயமும் பாதிப்புகளைச் சந்திப்பதாக தெரிவிக்கிறார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட துணைத்தலைவர் பெரியசாமி.

பிபிசி தமிழிடம் பேசிய பெரியசாமி, ‘‘அணைகளில் தொடர்ந்து நீர்மட்டம் குறைந்து வருவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாடு ஒரு பக்கம் இருக்க நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போதிய நீர் கிடைக்காமல் விவசாயமும் கடுமையாகப் பாதித்துள்ளது,” என்றார்.

கோவை குடிநீர் தட்டுப்பாடு
படக்குறிப்பு, கோவைக்கு முக்கிய குடிநீர் ஆதாரங்களாக பில்லூர் அணை, சிறுவாணி அணை, ஆழியாறு அணை இருக்கிறது.

அதிகாரிகளின் விளக்கம்

விவசாயிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து, கோவை மண்டல பொதுப் பணித்துறை முதன்மைப் பொறியாளர் சிவலிங்கத்திடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது.

‘‘அணைகள், குளங்களைப் பாதுகாப்பதற்காக சிறப்புத் திட்டங்கள் மூலம், வண்டல் மண் எடுத்து, கரைகளைப் பலப்படுத்தி தூர்வாரும் பணிகளைச் செய்து வருகிறோம். இந்த ஆண்டு மழைக்காலம் துவங்குவதற்கு முன்பு ஆழியாறு அணையில் வண்டல் மண் எடுத்து தூர்வாரத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், குளங்களிலும் வண்டல் மண் எடுக்கப்படும்’’ என்று சிவலிங்கம் கூறினார்.

மேலும், சிறுவாணி அணை கேரள மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அணையைத் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு தெரிவித்துள்ளதாகவும், பில்லூர் அணையையும் தூர்வார அரசுக்கு கோரிக்கை அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.

“கடந்த காலங்களில் இல்லாததைவிட தற்போது வெப்ப அலை அதிகமாக இருப்பதால், அணைகளில் நாள் ஒன்றுக்கு 10- 15 கன அடி நீர் ஆவியாகி வருகிறது. பருவமழை குறைவால் நீர் வரத்தும் இல்லை. ஆழியாறு அணையில் போதிய நீர் இருப்பதால் குடிநீருக்கு பிரச்னை இல்லை. ஆனால், பில்லூர், சிறுவாணியில் நீர் குறைந்து வருவதால் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது,’’ என்றார் சிவலிங்கம்.

கோவை மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய முதன்மைப் பொறியாளர் செல்லமுத்து பேசுகையில், ‘‘அணைகளில் நீர்மட்டம் பெருமளவு குறைந்துள்ளதால், வழக்கமாகப் பெறும் நீரின் அளவு குறைந்துள்ளது. கிடைக்கின்ற நீரை மக்களுக்குப் பகிர்ந்தளித்து வருகிறோம். குடிநீர் அல்லாத பயன்பாட்டிற்கு நிலத்தடி நீர் விநியோகம் செய்யப்படுகிறது. மக்கள் சிக்கனமாகப் பயன்படுத்தினால் மட்டுமே கோடையைச் சமாளிக்க முடியும்,’’ என்றார்.

பிபிசி தமிழிடம் பேசிய கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், ‘‘சிறுவாணி, பில்லூர் அணைகளைத் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசிடம் மாநகராட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவைக்கு வந்த முதன்மைச் செயலாளர்களிடமும் அணைகளில் வண்டல் மண் தேங்கியுள்ளதால் நீர் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் வறட்சி நிலவும் நிலையிலும், அணைகளில் இருக்கின்ற நீரை மாநகராட்சியின் மண்டலம் வாரியாக மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறோம்,’’ என்றார்.