இஸ்ரேலில் அல் ஜசீரா ஒளிபரப்புக்கு தடை; அலுவலகங்களில் சோதனை

இஸ்ரேலில் அல் ஜசீரா ஒளிபரப்புக்கு தடை; அலுவலகங்களில் சோதனை

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, அல் ஜசீராவின் ஜெருசலேம் அலுவலகம் அமைந்துள்ள அம்பாசிடர் ஹோட்டலில் இருந்து ஊடக உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது
  • எழுதியவர், விக்கி வோங்
  • பதவி, பிபிசி நியூஸ்

‘ஹமாஸின் ஊதுகுழல்’ என்று கூறி அல் ஜசீரா தொலைக்காட்சி நெட்வொர்க்கின் செயல்பாடுகளை நிறுத்த இஸ்ரேல் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

காஸாவில் போர் நடந்து கொண்டிருப்பதால் அல் ஜசீரா சேவைகளை நிறுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புக்கொண்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை ஜெருசலேமில் உள்ள அம்பாசிடர் ஹோட்டலில் இஸ்ரேல் காவல்துறை சோதனை நடத்தியது. அதன் பின்னர் அங்கு இயங்கி வந்த அல் ஜசீரா தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அலுவலகத்தை கண்டறிந்து தீவிர சோதனை நடத்தியது.

‘அல் ஜசீரா’ ஒளிபரப்பால் இஸ்ரேலிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக அரசு தரப்பில் சொல்வதை “ஆபத்தான மற்றும் அபத்தமான பொய்.” என்று அல் ஜசீரா கூறியுள்ளது. “எல்லாவிதமான சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கும் எங்களுக்கு உரிமை உள்ளது” என்று மேலும் தெரிவித்துள்ளது.

அல் ஜசீரா அலுவலக அறையில் நடந்த சோதனையில் கேமரா உள்ளிட்ட உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதாக இஸ்ரேலின் தகவல் தொடர்பு அமைச்சர் ஷ்லோமோ கர்ஹி தெரிவித்தார்.

எக்ஸ் தளத்தில் இஸ்ரேலின் தகவல் தொடர்பு அமைச்சர் வெளியிட்ட காணொளியில், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சகத்தின் ஆய்வு அதிகாரிகள், அம்பாசிடர் ஹோட்டல் அறைக்குள் நுழைவது பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிபிசி குழு சம்பவ இடத்துக்கு செய்தி சேகரிக்க சென்றது. ஆனால் புகைப்படம் எடுக்கவோ அல்லது ஹோட்டலுக்குள் செல்லவோ கூடாது என காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், இஸ்ரேலிய செயற்கைக்கோள் சேவை நிறுவனமான யெஸ் (YES) வெளியிட்ட செய்தியை குறிப்பிட்டுள்ளது : “அரசாங்கத்தின் முடிவின்படி, அல் ஜசீரா தொலைக்காட்சி நிலையத்தின் ஒளிபரப்பு சேவை இஸ்ரேலில் நிறுத்தப்பட்டுள்ளது.”

இருப்பினும், இந்தத் தடை பகுதியளவு மட்டுமே எனக் கருத முடிகிறது. ஏனெனில், இஸ்ரேலில் முகநூல் வாயிலாக அல் ஜசீராவின் ஒளிபரப்பு தொடர்ந்து காண முடியும்.

இஸ்ரேலில் அல் ஜசீரா சேவைகள் நிறுத்தப்பட்டதையும், அலுவலகத்தில் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதையும் மனித உரிமைகள் அமைப்புகளும், பத்திரிகை குழுக்களும் விமர்சித்து வருகின்றன.

மேலும் இஸ்ரேலில் உள்ள குடிமை உரிமைகளுக்கான சங்கம் (ஏசிஆர்ஐ) இந்த தடையை ரத்து செய்ய இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

“அல் ஜசீரா ஊடக சேவை, ஹமாஸின் பிரச்சாரக் கருவியாக இருப்பதாகக் கூறுவது “உறுதிசெய்யப்படாதது” என இந்தக் குழு கூறுகிறது.

அல்ஜசீரா மீது, தடை விதிக்கப்பட்ட “நடவடிக்கையின் பின்னணியில் அதிக அரசியல் உந்துதல் இருப்பதாக தெரிகிறது, விமர்சனக் குரல்களை ஒடுக்கவும், அரபு ஊடகங்களைக் குறிவைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலில் அல் ஜசீரா செய்தி ஒளிபரப்பு நிறுத்தம் - அலுவலகங்களில் சோதனை

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, கத்தாரில் அமைந்துள்ள அல் ஜசீராவின் தலைமை அலுவலகம்

இஸ்ரேலிய அரசாங்கம் அதன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வெளிநாட்டு செய்தியாளர் சங்கம் (FPA) வலியுறுத்தி உள்ளது. மேலும், “நாட்டில் அல் ஜசீரா சேவையை நிறுத்துவது பத்திரிகை சுதந்திரத்தை ஆதரிக்கும் அனைவருக்கும் கவலையை ஏற்படுத்தும்” என்றும் கூறியுள்ளது.

FPA அதன் அறிக்கையில் “செய்தி தொலைக்காட்சி சேவைக்கு தடை விதித்தது மூலம் இஸ்ரேல் இப்போது சர்வாதிகார அரசாங்கங்களின் பட்டியலில் இணைந்துள்ளது. அரசுக்கு எதிராக செயல்படுவதாக கருதப்படும் பிற வெளிநாட்டு செய்தி நிலையங்களையும் குறிவைக்கும் அதிகாரம் நெதன்யாகுவுக்கு இருக்கிறது” என்று எச்சரித்துள்ளது.

இதே போன்று, பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழுவின் (CPJ) திட்ட இயக்குநர் கார்லோஸ் மார்டினெஸ் டி லா செர்னாவும் கவலையை வெளிப்படுத்தினார் : “அல் ஜசீராவையும் அனைத்து சர்வதேச ஊடகங்களையும் இஸ்ரேலில் சுதந்திரமாக செயல்பட இஸ்ரேலிய அமைச்சரவை அனுமதிக்க வேண்டும், குறிப்பாக போர்க்காலத்தில் போது ஊடகங்களை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும்.” என்றார்.

செய்தி நிறுவனத்தின் மீதான தடையை திரும்ப பெறுமாறு இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு, ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடையை விலக்க வேண்டும் என்று கோரியுள்ள ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம், தனது எக்ஸ் தள பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது: “வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்வதற்கு ஒரு சுதந்திரமான ஊடகம் அவசியம். தற்போது, காஸாவில் இருந்து செய்தி வெளியிட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன”

வெளிநாட்டு செய்தியாளர்கள் காஸாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அல் ஜசீரா செய்தியாளர்கள் உள்ளிட்ட வெகு சிலர் மட்டுமே களத்தில் இருந்துள்ளனர்.

பல ஆண்டுகளாக, இஸ்ரேலிய அதிகாரிகள், அல் ஜசீரா ஊடகத்தை, இஸ்ரேலுக்கு எதிரான சார்பு நிறுவனம் என குற்றம் சாட்டி வருகின்றனர்.

கடந்த ஆண்டு, அக்டோபர் 7 ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் இருந்து அல் ஜசீரா மீதான இஸ்ரேலின் விமர்சனங்கள் தீவிரமடைந்துள்ளது. இந்தத் தாக்குதலில், சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 250 க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். அவர்களில் 128 பேர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை, குறைந்தது 34 பேர் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, காஸாவில் இஸ்ரேலின் அடுத்தடுத்த ராணுவ தாக்குதல்களில் குறைந்தது 34,683 பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 78,018 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹமாஸுக்கு எதிரான போரின் போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படும் வெளிநாட்டு செய்தி நிறுவனங்களை தற்காலிகமாக மூடுவதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்கும் சட்டத்தை இஸ்ரேலிய பாராளுமன்றம் கடந்த மாதம் நிறைவேற்றியது.

அல் ஜசீராவின் தலைமையகம் கத்தாரில் அமைந்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கிட்டத்தட்ட ஏழு மாத காலமாக நடந்து வரும் மோதலில், இந்த நாடு தலையிட்டு, பேச்சுவார்த்தை நடத்தி, மத்தியஸ்தம் செய்ய முயற்சி செய்து வருகிறது.

இதற்கு முன்னர், கத்தார் மத்தியஸ்தம் செய்து பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம், தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது. நவம்பரில் 105 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

இஸ்ரேல் தனது ஊழியர்களை வேண்டுமென்றே குறிவைத்து நடவடிக்கை எடுப்பதாக அல் ஜசீரா குற்றம் சாட்டியுள்ளது.

அல் ஜசீராவின் காஸா செய்திப்பிரிவு தலைவர் வேல் அல்-தஹ்தூவின் மகன் ஹம்சா அல்-தஹ்தாஹ் உள்ளிட்ட செய்தியாளர்கள் இஸ்ரேலிய தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் செய்தியாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தவில்லை என்று இஸ்ரேல் கூறுகிறது.

தங்கள்மீது விதிக்கப்பட்ட தடைக்கு பதிலளித்த அல் ஜசீரா “பத்திரிக்கையாளர்களை கொல்வது, கைது செய்வதன் மூலம் தனது குற்றங்களை மறைக்க இஸ்ரேல் முயற்சி செய்கிறது. சுதந்திரமான பத்திரிகையாளர்களை தாக்குவது, எங்களை பாதிக்கவில்லை. எங்கள் கடமையைச் செய்வதில் இருந்து ஒருபோதும் தவறமாட்டோம்” என்று கூறியுள்ளது.