காது குத்தி கடுக்கன் பூட்டும் அரசியல் தமிழரைச் சுற்றிவளைக்க வருகிறது! பனங்காட்டான்

by admin

1987ல் ராஜீவும் ஜே.ஆரும் கைச்சாத்திட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தவர் அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. இவருக்கு இணையாக அந்த ஒப்பந்தத்தை எதிர்த்து கொலைக்களத்தில் தாண்டவமாடியவர்கள் அனுரகுமார கட்சியினர். அந்த ஒப்பந்தத்தின் குழந்தையான 13ம் திருத்தத்தை முழுமையாக தாம் நிறைவேற்றப் போவதாக அறிவித்துள்ளார் பிரேமதாசவின் மகனான சஜித் பிரேமதாச. இவர் செய்வாரா? நாம் நம்பலாமா?

ஜனாதிபதி தேர்தல் இந்த வருடம் நிச்சயம் நடைபெறுமென்ற நம்பிக்கை இப்போது பலருக்கும் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் இந்த மாத மே தின விழா உரைகள் தேர்தல் விஞ்ஞாபனங்கள் போன்று அமைந்திருந்தன. 

இலங்கையின் மூத்த சிங்களக் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும், சிறீலங்கா சுதந்திர கட்சியும் மற்றைய கட்சிகளின் கூட்டில் அரசியல் பயணம் செய்ய வேண்டிய அவல நிலையையும் இப்போது பார்க்க முடிகிறது. 

இப்போதுள்ள நிலைமையைப் பார்க்கும்போது ஆகக்குறைந்தது பத்துப் பேர்வரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக்கூடிய சாத்தியம் உள்ளது. ஆனால், போட்டி மூவர்களுக்கிடையிலேயே இருக்கும். ரணில், அனுர, சஜித் ஆகியோர் விட்டுக்கொடுத்து இணைந்து போட்டியிட முடியாத நிலைக்குச் சென்றுள்ளனர். 

ரணிலின் மே தின உரை நேரடியாக எதிர்தரப்பு போட்டியாளர்கள் இருவரையும் தம்முடன் வந்து இணையுமாறு அழைப்பு விடுத்தது. பொருளாதார வீழ்ச்சியை தாரக மந்திரமாக்கி இயங்குபவர் இவர். அதற்கான கடனைப் பெறுவதற்கு அனுரவையும் சஜித்தையும் தம்முடன் இணையுமாறு கேட்கிறார். 

இந்த அழைப்புக்கு எவரும் செவிசாய்க்கப் போவதில்லையென்பது அவருக்கு நன்றாகத் தெரியும். ஆனால், நாட்டின் சுபீட்சத்துக்கு கட்சி அரசியலுக்கு அப்பால் எவருடனும் தாம் இணையத் தயார் என்பதை பொதுவெளியில் படம் காட்டுவதே இவரது அழைப்பின் நோக்கம். 

இவரது பெரியதந்தை முறையான ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜனாதிபதியாக இருந்தபோது ஒருதடவை எந்தப் பேயுடனும் சேருவதற்குத் தாம் தயாராக இருப்பதாகக் கூறி பலருக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்தவர். அவரது தடத்தில் நடைபயிலும் ரணில், பொதுமக்களின் பார்வைக்காக அனுரவையும் சஜித்தையும் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் இது நடைமுறையில் சாத்தியப்படாது. 

இதனை ஒருபக்கம் விட்டு, சஜித் பிரேமதாசவின் மே தின உரையின் பக்கம் பார்வையைத் திருப்பினால் ஆச்சரியம் தரும் விடயம் 13ம் திருத்தம் தொடர்பாக அவர் தெரிவித்திருக்கும் கருத்து. தாம் பதவிக்கு வந்ததும் 13ம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன் என்று துணிச்சலுடன் கூறியுள்ளார். 

13வது திருத்தம் என்பது 1987ல் ராஜீவும் ஜே.ஆரும் செய்து கொண்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஒரு குழந்தை. காணி அதிகாரம், காவற்துறை அதிகாரம் ஆகிய இரண்டுமே இக்குழந்தையின் கண்கள். இந்த ஒப்பந்தத்தில் காலஞ்சென்ற இரு நாட்டுத் தலைவர்களும் கைச்சாத்திட்டு 37 ஆண்டுகளாயினும், இதன் எந்த அம்சமும் இதுவரை அமலாக்கப்படவில்லை. 

இறுதியாக, ரணில் விக்கிரமசிங்க அவர்களால் வடக்கு தமிழரின் பிரச்சனையைத் தீர்க்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் காவற்துறை அதிகாரமில்லாத மாகாண சபை நிர்வாகத்தை மட்டுமே தர முடியுமென குறிப்பிட்டிருந்தார். இவ்வளவு காலம் காத்திருக்க வைத்து 13வது திருத்தத்துக்கு அவர் சைகை காட்டினாராயினும் அது தமிழர் தரப்பின் வரவேற்பைப் பெறவில்லை. மாறாக, ஆத்திரத்தையே உண்டுபண்ணியது. 

ஆனால், கொழும்பிலுள்ள வெளிநாட்டு ராஜதந்திரி ஒருவருடைய பார்வை இவ்விடயத்தில் மாறுபட்டது. முதலில் கிடைக்கப் பெறுவதை பெற்றுக் கொள்வது நல்லது என்று தமிழர் தரப்பினரிடம் அவர் கருத்துத் தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடர்பாக பல நாடுகளின் ராஜதந்திரிகளும் தங்களின் கவனத்தைத் திருப்பியுள்ளனர். 

தமிழர் தாயகத்திலுள்ள பல ஏக்கர் காணிகள் மத வழிபாட்டு நிலங்கள் பறிபோகின்றது. அதனைத் தடுப்பதற்காவது மாகாண சபைகள் காணி அதிகாரங்களைப் பெறுவது இப்போதைக்கு தேவையானது என்று குறிப்பிட்ட அந்த ராஜதந்திரி தம்மைச் சந்தித்த தமிழ் பிரமுகர்களிடம் கூறியிருந்தார். 

மறுபுறத்தில் தமிழர் தரப்பு பல நெருக்கடிகளுக்கு உட்பட்டிருக்கும் இவ்வேளையில் சிதைந்து போயிருக்கும் அதன் கூட்டை பலவீனமடையச் செய்யும் அரும்பணிகள் திரைமறைவில் இடம்பெறுகின்றன. கொழும்பு இறக்குமதிகள் இக்கைங்கரியங்களைச் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. எக்காரணம் கொண்டும் பொதுவேட்பாளர் ஒருவர் தமிழர் தரப்பிலிருந்து போட்டியிடக்கூடாதென்பதில் கொழும்பு இறக்குமதிகளில் ஒருவர் தீவிரமாக உள்ளார். இதற்கு நேர்மாறான நிலையில் தமிழரசு எம்.பி. சிவஞானம் சிறீதரன் செயற்படுகின்றார். 

சிங்களத் தரப்பில் போட்டியிடும் முக்;கியமான மூவர் பற்றி அவர் தெரிவித்துள்ள கருத்து முக்கியமானது. அது பின்வருமாறு: விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த கருணாவை பிரித்து பல துரோகங்களைச் செய்தவர் ரணில் விக்கிரமசிங்க. அரசியலில் ஆளுமையற்றவராகக் காணப்படுகிறார் சஜித் பிரேமதாச. அனுரகுமார தலைமையிலான ஆட்சி இராணுவத்துக்கு பலம் சேர்த்து வடக்கையும் கிழக்கையும் பிரித்து யுத்த வெற்றியைக் கொண்டாடியது என்கிறார் சிறீதரன். 

இதனால் பிரதான சிங்கள வேட்பாளர்கள் மூவருக்கும் தமிழர்கள் வாக்களிக்கக்கூடாது என்பது இவரது நிலைப்பாடாக அமைந்துள்ளது. இது தொடர்பாக வெவ்வேறு தரப்பினர் பல்வேறு சந்திப்புகளையும் ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் தமிழ் பொதுவேட்பாளருக்கான ஆதரவுத் தளம் படிப்படியாக அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. 

வெறுமனே தமிழர் வாக்குகளால் பொதுவேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற முடியாதென்பது விரல் சூப்பும் குழந்தைக்கும் தெரியும். ஆனால், தமிழர் வாக்குகளை ஒன்று திரட்டி பொதுவேட்பாளருக்கு அளிப்பதனூடாக அந்த திரட்சி என்பது தமிழர் தரப்பு எதனை வேண்டி இயங்குகிறது என்பதை சர்வதேசத்துக்கு புலப்படுத்த முடியும். தமிழின ஒற்றுமையை புலப்படுத்த ஒரு தோல்வி பல வெற்றிகளுக்கு நிகராக அமையும். 

இதனை நன்றாக புரிந்து கொண்ட சிங்கள வேட்பாளர்கள் தமிழர் தரப்பை எத்தி வாக்குகளைப் பெறுவதற்கு தம்மைத் தயார் பண்ணுகின்றன. இனப்பிரச்சனைக்கான நேர்மையான தீர்வுத்திட்டம் சிங்கள வேட்பாளர்களிடம் அல்லது அவர்களின் கட்சிகளிடம் அறவே இல்லை. ஆனால், தேர்தல்களுக்கேயுரிய ஏமாற்று சுலோகங்கள் இவர்களிடம் நிரம்ப உண்டு. 

13ம் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்தப் போவதாக சஜித் பிரேமதாச தமது மே தின உரையில் குறிப்பிட்டுள்ளார். இவரது தந்தையான ஆர்.பிரேமதாச 1987ல் ஜே.ஆரின் ஆட்சியில் பிரதமராக இருந்தபோதே இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதனை முழுமையாக எதிர்த்த பிரதமர் பிரேமதாச இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை சந்திப்பதையும் முழுமையாகப் புறக்கணித்தார். 

ராஜிவ் காந்தியை துப்பாக்கி முனையால் தாக்க எத்தனித்த கடற்படைச் சிப்பாயை அடுத்த பொதுத்தேர்தலில் வேட்பாளராக்கி – தமது இலங்கை – இந்திய ஒப்பந்த எதிர்ப்பு மனநிலையை அன்று வெளிப்படுத்தியவர் சஜித்தின் தந்தை. அவ்வேளை 13ம் திருத்தத்தை எதிர்த்து சன்னதம் கொண்டு ஆடி இலங்கையை கொலைக்களமாக்கியது அனுரகுமாரவின் கட்சி. இவ்;விருவரும் நம்பிக்கையற்றவர்கள். இந்த நிலையில் ரணில் இன்னமும் தாம் போட்டியிடப் போவதாக பகிரங்கமாகக் கூறவில்லை. அனேகமாக யூன் மாதத்தில் உலக வங்கியின் கடன் திட்டம் பூர்த்தியான பின்னர் அந்த வெற்றிக் களிப்பு அறிவித்தலுடன் தமது தேர்தல் போட்டியையும் ரணில் அறிவிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆனால், ரணில் போட்டியிட மறுப்பது போலவும், அவரை போட்டியிட அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்துவது போலவும் ஒரு குறுநாடகம் காட்டப்படுகிறது. இதுவும் ஒருவகை உத்தியே. 

தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆகியவற்றின் உறுப்பினராகவிருந்த முக்கிய பிரமுகர் ஒருவர் பொதுத்தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் தாம் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென ஊடகங்களில் வெளிவரச் செய்துவிடுவார். சில நாட்களுக்குள் அவரது தொகுதி மக்கள் பெருந்தொகையானோர் அவரது வீட்டுக்குச் சென்று தேர்தலில் போட்டியிட வேண்டுமென அன்புத்தொல்லை கொடுப்பர். அவர்களின் கோரிக்கைக்காக தாம் போட்டியிடுவதாகக் கூறும் அந்தப் பிரமுகர் பொங்கல் திருநாளன்று மாட்டு வண்டி ஊர்வலத்தில் முதலாவது வண்டிலில் வெறும் மேலுடன் அமர்ந்து காட்சிச் சவாரி செய்து வாக்காளர் மனங்களை வென்று விடுவார். 

இந்த ஒத்திகையையே ரணிலும் இப்போது பின்பற்றுகிறார்போல் தெரிகிறது. பொதுஜன பெரமுனவும் தமது ஐக்கிய தேசிய கட்சியினரும் ஒன்றாக வந்து தம்மைப் போட்டியிடுமாறு கேட்ட பின்னரே, தாம் போட்டியிடப் போவதாக அறிவிக்க இருப்பதே ரணில் போட்டிருக்கும் திட்டம். என்னதான் திட்டமிட்டுச் செய்தாலும் தமிழர் மனங்களை வென்று அவர்கள் வாக்குகளைப் பெறுவது சுலபமானதல்ல என்பது அவருக்குத் தெரியாததல்ல. 

இதற்காக தமது ஆட்சியில் காலநிலை சிரேஷ்ட ஆலோசகராக தம்மால் நியமிக்கப்பட்ட நோர்வே பிரமுகர் எரிக் சொல்கெய்மை இதற்குப் பொருத்தமான ஆளாக தெரிவு செய்துள்ளார். ஜனாதிபதியின் அரசியல் காலநிலையை அவதானிக்கும் பிரதான வாக்குச் சேகரிப்பாளராக எரிக் சொல்செய்மை தமிழர் தாயகத்துக்கு அனுப்பியுள்ளார் ரணில். பணம் வழங்கும் நிதி நிறுவனங்களை சாதுரியமாக கையாண்டு வருகிறார். 

மறுதரப்பில், நல்லாட்சிக் கால ஏமாற்றம் போதாதென்று தமிழருக்கு காது குத்தி கடுக்கன் பூட்டி தலைப்பாகை வைத்து ஏமாற்ற புதிய கூட்டம் ஒன்று களமிறக்கப்படப் போகிறது. இதில் எரிக் சொல்கெய்ம் பிரதான செயற்பாட்டாளராக இடம்பெறப் போகிறார். 

இனியென்ன? ரணில் பதவி இழந்து வீடேகும்வரை எரிக் சொல்கெய்ம் தமிழர் வீட்டு செல்லப்பிள்ளையாக வலம் வருவார். 

தொடர்புடைய செய்திகள்