காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடங்களை முஸ்லிம்களுக்கு வழங்கியதா? மோதி குற்றச்சாட்டு உண்மையா?

முஸ்லிம் இட ஒதுக்கீடு

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், பல்லா சதீஷ்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

மக்களவை தேர்தலுக்கு முன்பாக நாடு முழுவதும் முஸ்லிம் இடஒதுக்கீடு குறித்து விவாதம் நடந்து வருகிறது. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி இடஒதுக்கீட்டில் ஒரு பகுதியை காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோதி குற்றம்சாட்டியுள்ளார். ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதை அவர் உதாரணம் காட்டினார்.

மோதி சொன்னது போல் ஆந்திரா-தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியில் எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு பறிக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டதா? உண்மையில் என்ன நடந்தது?

அண்மையில் ராஜஸ்தானின் டோங்க் சவாய் மாதோபூர் அருகே நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மோதி கலந்து கொண்டார்.

“அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்டபோது, மத ரீதியான இடஒதுக்கீடு எதிர்க்கப்பட்டது. எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. ஆனால், இந்த நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை என்று மன்மோகன் சிங் கூறினார்.

2004 இல் ஆந்திரபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது, எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு குறைக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டது. இது சோதனை ரீதியில் அமல் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் அதை நாடு முழுவதும் வழங்க விரும்பினர். 2004-2010 க்கு இடையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அவர்கள் பல முறை முயற்சித்தனர். ஆனால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் காரணமாக இப்படிச்செய்ய இயலவில்லை. 2011ல் நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் முயற்சித்தது. வாக்கு வங்கி அரசியலுக்காக எஸ்சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை காங்கிரஸ் பறித்தது. அரசியலமைப்பை காங்கிரஸ் மதிக்கவில்லை. அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தெரிந்திருந்தும் காங்கிரஸ் இதைச் செய்தது’’ என்று மோதி தெரிவித்தார்.

மோதியின் கூற்றில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை அறியும் முன், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு எப்போது தொடங்கியது என்று பார்ப்போம்.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு எப்போது வந்தது?

முஸ்லிம் இடஒதுக்கீடு

பட மூலாதாரம், Getty Images

1960களின் முற்பகுதியில், அப்போதைய மைசூர் மாகாண (தற்போது கர்நாடகா) அரசின் நாகண்ணா கெளடா குழு அறிக்கை முஸ்லிம்களை பிசி என்று அடையாளம் கண்டது.

ஆனால் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது மட்டுமின்றி, குழு அறிக்கையை அமல்படுத்துவது குறித்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் 1977 இல் கர்நாடகாவிலேயே தேவராஜ் அர்ஸ் அரசு முஸ்லிம்களுக்கு பிசி என்ற பிரிவின் கீழ் இட ஒதுக்கீடு அளித்தது.

அப்போது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் நீதிமன்றம் இடஒதுக்கீட்டை உறுதி செய்தது.

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு எங்கெல்லாம் கிடைக்கிறது?

மத்திய OBC பட்டியலில் சில முஸ்லிம் பிரிவினர் உள்ளனர். மேலும் பல்வேறு மாநிலங்களில் முஸ்லிம் குழுக்கள் ஓபிசிகளாக உள்ளனர்.

கேரளாவில், எல்லா முஸ்லிம்களுக்கும் இடஒதுக்கீடு உள்ளது. தமிழக முஸ்லிம்களில் 90 சதவிகிதம் பேர் இடஒதுக்கீட்டை அனுபவிக்கின்றனர்.

பிகாரிலும் முஸ்லிம் இடஒதுக்கீடு உள்ளது. கர்நாடகாவில் பிசி கோட்டாவில் முஸ்லிம்களுக்கு 4 சதவிகித துணை ஒதுக்கீடு உள்ளது.

மதரீதியான இடஒதுக்கீடு கொடுக்க முடியுமா?

முஸ்லிம் இடஒதுக்கீடு

பட மூலாதாரம், Getty Images

இருப்பினும், பிற்படுத்தப்பட்டோர் என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படலாம் என்று பல வழக்குகளில் உயர் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியுள்ளன. முஸ்லிம்களுக்கு மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படாவிட்டாலும், அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டால் அது தகுதியற்றதாக கருதப்படாது.

“சிறுபான்மை மதத்தினர் என்ற காரணம் காட்டி பிசி பட்டியலில் இருந்து அவர்கள் நீக்கப்படக் கூடாது” என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. அரசியலமைப்பின் 16(4) பிரிவின் கீழ் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம். ஆனால் இது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது.

எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீடு குறைக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா?

இந்தியாவில், எஸ்சி மற்றும் எஸ்டி ஆகிய இரண்டு பட்டியல்களிலும் சேர்க்கப்பட்டுள்ள சாதிகளுக்கு இடஒதுக்கீடு, ஒரு அரசியலமைப்பு உரிமையாகும். அவர்களின் மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ப அது கொடுக்கப்பட வேண்டும். அதாவது ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும் அவர்களின் மக்கள்தொகை சதவிகிதத்திற்கு ஏற்ப இடஒதுக்கீடு சதவிகிதமும் கூடுகிறது அல்லது குறைகிறது. இதில் மத்திய அரசும், மாநில அரசுகளும் மாற்றம் செய்யவில்லை.

ஆந்திரபிரதேசத்தில் 2004க்குப் பிறகு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு யாருடைய ஒதுக்கீட்டையும் குறைக்காமல் கூடுதல் ஒதுக்கீட்டைச் சேர்த்து வழங்கப்பட்டது. எஸ்சி, எஸ்டி மட்டுமின்றி பிசி பிரிவினருக்கும் இடஒதுக்கீடு குறைக்கப்படவில்லை. அப்போதைய காங்கிரஸ் அரசு முஸ்லிம்களுக்கு ஏற்கனவே இருந்த இடஒதுக்கீட்டில் கூடுதலாக கோட்டா வழங்கியது.

ஆந்திரப்பிரதேசம் மட்டுமின்றி முஸ்லிம் இடஒதுக்கீடு உள்ள எல்லா மாநிலங்களிலும் அவர்கள் பிசி துணை கோட்டாவில் உள்ளனர். ஆனால் நாட்டில் எங்குமே எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டிற்கும் முஸ்லிம் இடஒதுக்கீட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது அரசியலமைப்பு ரீதியாக சாத்தியமில்லை.

“ஆந்திரபிரதேசத்தில் எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு குறைக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்பது பொய். உண்மையில், இதை இப்படிக் குறைக்க முடியாது,” என்று ஐதராபாத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சிகுடு பிரபாகர் பிபிசியிடம் கூறினார்.

அசல் முஸ்லிம் இடஒதுக்கீட்டிற்கு மாற்றாக எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டைக் குறைக்கும் கேள்வியே எழாது என்றார் அவர்.

முஸ்லிம் இடஒதுக்கீடு

பட மூலாதாரம், Getty Images

ஆந்திர உயர்நீதிமன்றம் முஸ்லிம் இட ஒதுக்கீட்டை ஏன் ரத்து செய்தது?

எந்த ஒரு சாதியினருக்கும் பிசி பிரிவில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால் அந்த சாதி குறித்து பிசி கமிஷன் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். இது சில அளவுகோல்களை கொண்டுள்ளது.

அந்த அளவுகோல்களின்படி, ஒரு சாதி சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியதாக நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கும். இது முஸ்லிம்களுக்கும் பொருந்தும்.

ஆனால் அப்போதைய அரசு ஆந்திர பிசி கமிஷனை கலந்தாலோசிக்காமல் முஸ்லிம் இடஒதுக்கீட்டை வழங்கியது.

இது தவிர அப்போதைய சட்டங்களின்படி மொத்த இடஒதுக்கீடு 50 சதவிகிதத்திற்கு மேல் இருக்கக்கூடாது. ஆனால் ஆந்திரபிரதேச மாநிலத்தில் ஏற்கனவே 46 சதவிகித இடஒதுக்கீடு இருந்த நிலையில், முஸ்லிம்களுக்கு 5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கிய பின் மொத்த சதவிகிதம் 51 ஆக ஆனது. இந்த இரண்டு காரணங்களுக்காக ஆந்திர உயர்நீதிமன்றம் முஸ்லிம் இடஒதுக்கீட்டை ரத்து செய்தது. இது 2004 இல் நடந்தது. இது தவிர, பிசி இட ஒதுக்கீட்டில் முக்கியமான கிரீமி லேயர் சேர்க்கப்படவில்லை.

முறையான நடைமுறையை பின்பற்றாமல் 2004 இல் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஜூலையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு, செப்டம்பரில் நீதிமன்றம் அதை ரத்து செய்தது.

எனவே 2005 இல் பிசி கமிஷனை தொடர்பு கொண்டு அவர்களின் அனுமதியுடன் மீண்டும் இடஒதுக்கீடு அளிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

சச்சார் கமிட்டி என்ன சொன்னது?

முஸ்லிம் இடஒதுக்கீடு

பட மூலாதாரம், Getty Images

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நாட்டில் உள்ள முஸ்லிம்களின் நிலையை ஆய்வு செய்ய சச்சார் கமிட்டியை அமைத்தது. இந்த கமிட்டி 2005 இல் அமைக்கப்பட்டு 2006இல் அதன் அறிக்கை வந்தது.

இந்த குழுவின் தலைவராக டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜேந்திர சச்சார் இருந்தார். இந்தக் குழு நாட்டில் உள்ள முஸ்லிம்களின் நிலைமையை முழுமையாக ஆய்வு செய்து விரிவான அறிக்கையை அளித்தது. இதில் முஸ்லிம்களின் வளர்ச்சிக்காகவும் சில ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மேலும் இந்த 425 பக்க அறிக்கை, மக்கள் தொகை போன்ற முஸ்லிம்களுக்கு எதிரான ஏராளமான பிரசாரங்களின் உண்மையான புள்ளிவிவரங்களை வழங்குகிறது.

சச்சார் கமிட்டி நேரடியாக முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க பரிந்துரைக்கவில்லை. ஆனால் இது தொடர்பான வேறு பல பரிந்துரைகளை அளித்தது.

தீண்டத்தகாத சாதிகளில் இருந்து முஸ்லிம்களாக மாறுபவர்களுக்கு எஸ்சி அங்கீகாரம் வழங்குவது சரியானது என்றும் அவ்வாறு செய்யாதது அவர்களுக்கு அநீதி இழைப்பதாகும் என்றும் சச்சர் கமிட்டி கருதியது.

எஸ்சி இல்லை என்றால், குறைந்தபட்சம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதாவது எம்பிசி பட்டியலாவது தயாரித்து அவர்களுக்கு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே சச்சார் கமிட்டியின் கருத்து.

பிரபல மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான கே. பாலகோபால் இது குறித்து விரிவாக ஆய்வு செய்து கட்டுரை எழுதியுள்ளார்.

“உண்மையில் முஸ்லிம்களின் நிலை குறித்து சச்சார் கமிட்டி அம்பலப்படுத்திய உண்மைகளை மனதில் வைத்துப்பார்த்தால் ஒரு சில நவாபி குடும்பங்களை தவிர ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இட ஒதுக்கீட்டிற்கு தகுதியானவர்களாக இருக்க வேண்டும். எல்லா வகையிலும் முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்ட இந்து பிரிவினரை விட பின்தங்கியுள்ளனர்,” என்று பாலகோபால் தெரிவித்தார்.

இடஒதுக்கீடு அல்லது பிற வடிவங்களில் அரசுகள் அளித்த சிறப்பு கவனம் காரணமாக இந்து சமூகத்தின் பிசி, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் உயர்கல்வியில் காலப்போக்கில் தங்கள் நிலையை மேம்படுத்தியுள்ளனர். ஆனால் அரசு எந்த சிறப்பு நடவடிக்கையும் எடுக்காததால் முஸ்லிம்கள் மத்தியில் மேம்பாடு மிகவும் குறைவாகவே உள்ளது,” என்றார் பாலகோபால்.

கர்நாடகாவில் நடந்தது என்ன?

முஸ்லிம் இடஒதுக்கீடு

பட மூலாதாரம், Getty Images

2023 கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் முஸ்லிம் இடஒதுக்கீடு விவகாரம் அதிகம் விவாதிக்கப்பட்டது. கர்நாடகாவில் ஏற்கனவே இருந்த 4 சதவிகித முஸ்லிம் இட ஒதுக்கீட்டை அப்போதைய பாஜக அரசு நீக்கியது.

மேலும் அந்த 4 சதவிகிதம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு 2 சதவிகிதம் லிங்காயத்துகளுக்கும் 2 சதவிகிதம் ஒகாலிகாக்களுக்கும் அளிக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை மீட்டு தருவதாக வாக்குறுதி அளித்தது. அதன்படி 2024 ஏப்ரலில் காங்கிரஸ் அரசு எல்லா முஸ்லிம்களையும் பிற்படுத்தப்பட்டவர்களாக அங்கீகரித்து உத்தரவு பிறப்பித்தது. தற்போது இது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இந்த முடிவு தவறானது என்று குறிப்பிட்டுள்ளது.

பாஜகவின் நிலைப்பாடு என்ன?

பாஜக தலைவர்கள் பல்வேறு மன்றங்களிலும், பல்வேறு கட்சி அறிக்கைகளிலும் கூறியது போல், அக்கட்சி முஸ்லிம் இட ஒதுக்கீட்டை பரவலாக எதிர்க்கிறது.

மத ரீதியான இடஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று அக்கட்சி கூறுகிறது. நீதிமன்றத்தில் இந்த வாதம் எடுபடாது என்றும், முறையான ஆய்வு செய்யப்படாமல் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது என்றும், அம்பேத்கரும் அதை எதிர்த்தார் என்றும் பாஜக கூறுகிறது.

காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?

முஸ்லீம் இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறது.

ஆனால், நாடு முழுவதும் முஸ்லிம் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என அக்கட்சி வாக்குறுதி அளித்தும் அதை நிறைவேற்றவில்லை.

2009 காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் இடஒதுக்கீடு வாக்குறுதி அளிக்கப்பட்டது.

2011 இல் ஓபிசியின் கீழ் முஸ்லிம்களுக்கு 6 சதவிகித இடஒதுக்கீடு வழங்க கட்சி விரும்பியது. பின்னர் அது 4.5 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. ஆனால் அது அமல் செய்யப்படவில்லை.