இந்திய இஸ்லாமியர்கள், முஸ்லிம்கள், பா.ஜ.க, நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, ஆக்ராவில் உள்ள ஒரு பிரபலமான பள்ளியில் படித்துவந்த ஒரு இஸ்லாமியச் சிறுவன் முகம் சிவந்து வீட்டுக்குத் திரும்பி வந்தான்.

அந்த ஒன்பது வயது சிறுவன் தன் தாயிடம், “என்னுடைய வகுப்பு தோழர்கள் இன்று என்னை பாகிஸ்தான் பயங்கரவாதி என்று அழைத்தனர்,” என்றார்.

எழுத்தாளரும் ஆலோசகருமான ரீமா அகமது, அந்த நாளை தெளிவாக நினைவில் வைத்திருக்கிறார்.

“அந்தச் சிறுவன் மிகவும் கலக்கமடைந்திருந்தான். அவனுடைய கைமுஷ்டிகளை மிகவும் இறுக்கமாக பற்றியிருந்தான். அவனுடைய உள்ளங்கையில் அவனது நகங்கள் பதிந்தன. அவன் மிகவும் கோபமாக இருந்தான்,” என்கிறார்.

அந்தச் சிறுவன், அவரது மகன். அவனது வகுப்பு ஆசிரியர் வெளியே சென்றிருந்த போது அவனது வகுப்பு தோழர்கள் சண்டையிடுவது போல விளையாடிக் கொண்டிருந்தனர்.

“அப்போதுதான் ஒரு சிறுவர் குழு அவனைச் சுட்டிக்காட்டி, ‘இவன் ஒரு பாகிஸ்தான் பயங்கரவாதி. அவனைக் கொல்லுங்கள்!` என்று சொன்னது,” என்கிறார் ரீமா.

சில வகுப்பு தோழர்கள் அவனை நலி கா கிடா (சாக்கடைப் புழு) என்றும் அழைத்ததை அந்தச் சிறுவன் சொன்னான்.

இதுபற்றி ரீமா பள்ளியில் புகார் கூறிய போது, அவர் ‘கற்பனை செய்வதாக’ சொல்லப்பட்டது. ‘அப்படி எதுவும் நடக்கவேயில்லை’ என்று சொல்லப்பட்டது.

அதைத்தொடர்ந்து ரீமா அகமது தனது மகனை பள்ளியிலிருந்து வெளியேற்றினார். இன்று, அந்த 16 வயது சிறுவன் வீட்டிலிருந்தே கல்வி கற்கிறான்.

“எனது மகனின் அனுபவங்களின் மூலம் இந்தச் சமூகத்தில் நிகழும் மாற்றத்தை நான் உணர்ந்தேன். என் இளமைப் பருவத்தில் நான் இங்கு வளர்ந்த போது எனக்கு இதுபோல நடந்ததில்லை,” என்று அவர் கூறுகிறார்.

“எங்கள் பொருளாதார வர்க்கத்தின் சலுகைகள் நாங்கள் இஸ்லாமியர்கள் என்பதை எங்களை உணரவிடாமல் பாதுகாத்திருக்கலாம். ஆனால் இப்போது, வர்க்கமும் சலுகையும் உங்களை ஒரு இலக்காக மாற்றுகிறது,” என்கிறார் அவர்.

இந்திய இஸ்லாமியர்கள், முஸ்லிம்கள், பா.ஜ.க, நரேந்திர மோதி

பட மூலாதாரம், Bimal Thankachan

படக்குறிப்பு, ரீமா அகமது

இஸ்லாமியர்கள்மீது நடக்கும் தாக்குதல்கள்

கடந்த 2014-ஆம் ஆண்டு நரேந்திர மோதியின் இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இந்தியாவில் 20 கோடி இஸ்லாமியர்களின் இருப்பு கொந்தளிப்பான ஒன்றாக மாறியிருக்கிறது.

இந்து மதப் பாதுகாவலர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் கும்பல்கள் பசு வியாபாரம் செய்பவர்கள் என்று சந்தேகப்படுபவர்களை அடித்துக் கொன்றிருக்கின்றன. இஸ்லாமிய சிறு வியாபாரிகளின் வணிகங்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளன. மசூதிகளுக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இணைய ட்ரோல்கள் இஸ்லாமியப் பெண்களை ஆன்லைனில் ‘ஏலம்’ விட்டுள்ளன. வலதுசாரி குழுக்கள் மற்றும் வெகுஜன ஊடகங்களின் சில பிரிவுகள் ‘ஜிஹாத்’, ‘லவ் ஜிஹாத்’ போன்ற சொல்லாடல்கள் மூலம் இஸ்லாமிய வெறுப்பை தூண்டிவிட்டன. உதாரணமாக, இஸ்லாமிய ஆண்கள் இந்துப் பெண்களைத் திருமணம் செய்து மத மாற்றம் செய்வதாக பொய்க்குற்றம் சாட்டப்பட்டது.

இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் அதிகரித்துள்ளன. இவற்றில் முக்கால்வாசி சம்பவங்கள் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பதிவாகியுள்ளன.

“இஸ்லாமியர்கள் இரண்டாம் தர குடிமக்களாக மாறிவிட்டனர். அவர்களின் சொந்த நாட்டில் கண்ணுக்குப் புலப்படாத சிறுபான்மையினர் ஆகிவிட்டனர்,” என்கிறார் `இந்து இந்தியாவில் முஸ்லீமாக இருத்தல்` என்ற புதிய புத்தகத்தின் ஆசிரியரான ஜியா உஸ் சலாம்.

ஆனால், இந்தியாவில் சிறுபான்மையினர் மோசமாக நடத்தப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டை பா.ஜ.க-வும், மோதியும் மறுக்கின்றனர்.

“இவை சிலரின் வழக்கமான வாதங்கள். அவர்கள் தங்கள் சிறு குழுக்களுக்கு வெளியே சென்று மக்களைச் சந்திக்கத் தயங்குகிறார்கள். இந்தியாவின் சிறுபான்மையினர் கூட இந்த கதையை இப்போதெல்லாம் நம்புவதில்லை,” என்று நியூஸ்வீக் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் மோதி கூறினார்.

ரீமா அகமதுவின் குடும்பம் பல தசாப்தங்களாக ஆக்ராவில் வசித்துவருகிறது. அந்நகரில் அவர்களுக்கு பல இந்து நண்பர்கள் உள்ளனர். ஆனாலும் இப்போது அவர் ஒரு மாற்றத்தை உணர்கிறார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு, ரீமா அகமது ஒரு பள்ளி வாட்ஸ்அப் குழுவிலிருந்து வெளியேறினார். அதில் இருந்த இரண்டே இஸ்லாமியர்களில் அவர் ஒருவர்.

பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா வான்வழித் தாக்குதல் நடத்திய செய்தி அக்குழுவில் பகிரப்ட்டது.

‘அவர்கள் நம்மை ஏவுகணைகளால் தாக்கினால், நாம் அவர்கள் வீடு புகுந்து அவர்களைக் கொல்வோம்,’ என்று அந்தக் குழுவில் உள்ள ஒருவர் பதிவிட்டிருந்தார். அது பயங்கரவாதிகளையும் இந்தியாவின் எதிரிகளையும் அவர்களின் வீடுபுகுந்து கொல்வது பற்றி மோதியின் ஒரு கூற்றை எதிரொலித்தது.

“நான் என் பொறுமையை இழந்தேன். அக்குழுவில் இருந்தவர்களிடம், பொதுமக்களையும் குழந்தைகளையுகம் கொல்வதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? என்று கேட்டேன்,” என்கிறார் ரீமா. அவர் அமைதியை விரும்பினார்.

ஆனால், அதற்கான எதிர்வினை வேகமாக வந்தது.

“ஒருவர் கேட்டார்: ‘நீங்கள் முஸ்லீம் என்பதால் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கிறீர்களா?’ அவர்கள் என்னை தேச விரோதி என்று குற்றம் சாட்டினார்கள்,” என்று அவர் கூறினார்.

“திடீரென்று அகிம்சைக்கு ஆதரவாகப் பேசுவது தேசவிரோதம் ஆனது. என் நாட்டை ஆதரிக்க நான் வன்முறையில் ஈடுபட வேண்டியதில்லை என்று பதிவிட்டுவிட்டு அக்குழுவிலிருந்து வெளியேறினேன்,” என்கிறார் ரீமா.

இந்திய இஸ்லாமியர்கள், முஸ்லிம்கள், பா.ஜ.க, நரேந்திர மோதி

பட மூலாதாரம், Bimal Thankachan

படக்குறிப்பு, கலீம் அகமது குரேஷி

மாறிவரும் சூழல்

மாறிவரும் இந்தச் சூழல் வேறு வழிகளிலும் உணரப்படுகிறது. நீண்ட காலமாக, ரீமாவின் விசாலமான வீட்டில் அவரது மகனின் வகுப்புத் தோழர்கள் கூடுவார்கள். பாலினம், மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அவர்கள் வருவார்கள். ஆனால் இப்போது `லவ் ஜிகாத்` என்ற பயத்தில், அவரது வீட்டுக்கு வரும் இந்து பெண்களின் பெற்றோர்கள் தங்கள் மகள்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் வீடு திரும்புமாறும், அச்சிறுவனின் அறையில் தங்காமல் இருக்குமாறும் அறிவுறுத்துகிறார்கள்.

“நானும் என் தந்தையும் என் மகனிடம், ‘சூழ்நிலை சரியில்லை நீ உன் நட்புகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். கவனமாக இருக்க வேண்டும். அதிக நேரம் வெளியில் இருக்கக் கூடாது. எந்த விஷயம் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ‘லவ் ஜிஹாத்’ ஆக மாறும்’,” என்றோம்.

ஐந்தாவது தலைமுறையாக ஆக்ராவில் வசிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர் எரம், உள்ளூர் பள்ளிகளில் பணிபுரிந்தவர். நகரத்தின் குழந்தைகளிடையே உரையாடல்களில் மாற்றம் ஏற்பட்டதை அவர் கவனித்துள்ளார்.

“என்னுடன் பேசாதே, நீ என்னுடன் பேசக் கூடாது என்று என் அம்மா சொல்லிவிட்டார்,” என்று ஒரு குழந்தை தன் இஸ்லாமிய வகுப்புத் தோழரிடம் சொல்வதை அவர் கேட்டிருக்கிறார்.

இந்திய இஸ்லாமியர்கள், முஸ்லிம்கள், பா.ஜ.க, நரேந்திர மோதி

பட மூலாதாரம், Bimal Thankachan

படக்குறிப்பு, எரம்

‘அரசியல் விஷம் கலந்துவிட்டது’

“இது உண்மையாகவே நடக்கிறதா என்று நான் யோசித்தேன். இது அவர்கள் [இஸ்லாமியர்கள்] மீது ஆழமாக வேரூன்றியிருக்கும் பயத்தை பிரதிபலிக்கிறது. இது நம்மால் எளிதில் குணப்படுத்த முடியாத ஒன்றாக வளரும்,” என்கிறார் எரம்.

ஆனால் எரமுக்கு நிறைய இந்து நண்பர்கள் இருக்கிறார்கள். ஒரு இஸ்லாமியப் பெண்ணாக இருப்பதை அவர் பாதுகாப்பற்றதாக உணர்ந்ததில்லை.

இது குழந்தைகளைப் பற்றியது மட்டுமல்ல.

ஆக்ராவைச் சேர்ந்த பத்திரிகையாளரும் சர்வமத அமைப்பாளருமான சிராஜ் குரேஷி, இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் இருந்த பழைய சகோதரத்துவம் சிதிலமடைந்து வருவதைப் பற்றிக் கவலையுடன் பேசுகிறார்.

ஆக்ராவில் ஆட்டிறைச்சி விநியோகம் செய்த ஒருவரை இந்து வலதுசாரிக் குழு உறுப்பினர்கள் தடுத்து, போலீசில் ஒப்படைத்து சிறையில் அடைத்த சமீபத்திய சம்பவத்தை அவர் நினைவு கூர்ந்தார். “அவரிடம் முறையான உரிமம் இருந்தது. ஆனாலும் போலீசார் அவரைக் கைது செய்தனர். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்,” என்று குரேஷி கூறுகிறார்.

மாட்டிறைச்சியை எடுத்துச் சென்றதாகக் கூறி இஸ்லாமிய பயணிகள் தாக்கப்பட்ட சம்பவங்களால் ரயிலில் பயணிக்கும் இஸ்லாமியர்களின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சமூகத்தில் பலர் குறிப்பிடுகின்றனர். “இப்போது, நாங்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கிறோம். பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும்போது அசைவ உணவைத் தவிர்க்கிறோம். எங்களால் முடிந்தால் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவதையே முற்றிலும் தவிர்க்கிறோம்,” என்கிறார் ரீமா அகமது.

கலீம் அகமது குரேஷி, மென்பொருள் பொறியாளராக இருந்து இப்போது நகை வடிவமைப்பாளர் மற்றும் இசைக்கலைஞர் ஆனவர். ஆக்ராவில் ஏழாவது தலைமுறையாகக் குடியிருக்கிறார்.

ஆப்கானிஸ்தானின் பாரம்பரியமான, வீணை போன்ற இசைக்கருவியான `ரூபாப்`பை எடுத்துக்கொண்டு, சமீபத்தில் டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு ஒரு இந்து சக பயணியுடன் ஷேர் டாக்ஸியில் சென்றார். “அவர் அந்த இசைக்கருவியின் பெட்டியைப் பார்த்தபோது, அது துப்பாக்கி என்று பயந்து, அதைத் திறந்து காட்டச் சொன்னார். அவரது பயம் என் பெயரால் உருவானதை நான் உணர்ந்தேன்,” என்று குரேஷி கூறுகிறார்.

“ஒரு பதற்றத்துடனேதான் வாழ்கிறோம். நான் இப்போது பயணம் செய்யும் போது, நான் எங்கே இருக்கிறேன், நான் என்ன சொல்கிறேன், என்ன செய்கிறேன் என்று நான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ரயிலில் டிக்கெட் பரிசோதகரிடம் என் பெயரை சொல்வதற்குக் கூட நான் சங்கடமாக உணர்கிறேன்,” என்கிறார் அவர்.

இதற்கு குரேஷி ஒரு தெளிவான காரணத்தைக் கூறுகிறார்: “அரசியல் சமூகங்களுக்கு இடையிலான உறவில் விஷத்தைக் கலந்துவிட்டது.”

இந்திய இஸ்லாமியர்கள், முஸ்லிம்கள், பா.ஜ.க, நரேந்திர மோதி

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் அதிகரித்துள்ளன

பா.ஜ.க-வின் பதில் என்ன?

ஆனால், பா.ஜ.க இதனை மறுக்கிறது.

டெல்லியில் வசிக்கும் பா.ஜ.க-வின் தேசியச் செய்தித் தொடர்பாளர் சையத் ஜாபர் இஸ்லாம், “இஸ்லாமியர்கள் கவலைப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை,” என்று கூறுகிறார். அதிகரித்து வரும் இஸ்லாமிய வெறுப்புக்கு ‘பொறுப்பற்ற ஊடக நிறுவனங்கள்’ தான் காரணம் என்று அவர் கூறுகிறார்.

“எங்காவது நடக்கும் ஒரு சிறிய சம்பவத்தை ஊடகங்கள் அதை முன் எப்போதும் நடக்காதது போலப் பெரிதாக்குகின்றன. 140 கோடி மக்கள் வசிக்கும் நாட்டில், சமூகங்களுக்கு இடையில் அல்லது சமூகங்களுக்குள் இதுபோன்ற பல சம்பவங்கள் நடக்கக் கூடும்,” என்று அவர் கூறுகிறார்.

இதுபோன்ற ஒன்று அல்லது இரண்டு சம்பவங்களைப் பொதுமைப்படுத்தி ஆளும் கட்சி இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று சொல்ல முடியாது, என்கிறார் அவர். “யாராவது அதை இஸ்லாமியர்களுக்கு எதிராகக் குறிவைத்து நடத்தப்படுவதுபோலச் சித்தரித்தால், அது தவறு,” என்கிறார் அவர்.

அவரது குழந்தைகள் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்து, தங்கள் வகுப்புத் தோழர்கள் தங்களை `பாகிஸ்தான் பயங்கரவாதி` என்று முத்திரை குத்தினார்கள் என்று சொன்னால், அவர் எப்படி எதிர்வினை ஆற்றுவார் என்று நான் அவரிடம் கேட்டேன்.

ஜாபர் இஸ்லாம் 2014-இல் பா.ஜ.க-வில் இணைந்தவர். முன்னாள் வங்கிப் பணியாளர். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதில் ஒருவர் பள்ளியில் படிக்கிறார்.

“அப்படி நடந்தால், எந்தவொரு பெற்றோரையும் போல, எனக்கும் வருத்தமாக இருக்கும். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வது அந்தந்தப் பள்ளியின் பொறுப்பு. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் இதுபோன்ற விஷயங்களைச் சொல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.

79% இந்துக்கள் இருக்கும் நாட்டில் பா.ஜ.க இந்து தேசத்தை நிறுவுவது பற்றிப் பேசுவது ஏன் என்று அவரிடம் கேட்டேன்.

“இது வெறும் சொல்லாட்சி என்று மக்களுக்குத் தெரியும். நமது அரசாங்கமோ அல்லது கட்சியோ இதுபோன்ற விஷயங்களைச் சொல்லியிருக்கின்றனவா? இப்படியெல்லாம் பேசுபவர்களுக்கு ஊடகங்கள் ஏன் இவ்வளவு இடம் கொடுக்கின்றன? ஊடகங்கள் அப்படிப்பட்டவர்களுக்கு இடம் கொடுக்கும் போது நாங்கள் வருத்தப்படுகிறோம்,” என்று ஜாபர் இஸ்லாம் கூறினார்.

ஆனால், நாடாளுமன்றத்தில் இஸ்லாமியப் பிரதிநிதித்துவம் இல்லாதது ஏன்?

பா.ஜ.க-வுக்கு இஸ்லாமிய அமைச்சர்கள் இல்லை. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எம்.பி-க்கள் இல்லை. மேலும் நாடு முழுவதும் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களில் ஒரேயொரு இஸ்லாமிய எம்.எல்.ஏ மட்டுமே உள்ளார்.

முன்னாள் பா.ஜ.க எம்பியான ஜாபர் இஸ்லாம், இது வேண்டுமென்றே செய்யப்பட்டதில்லை என்று கூறினார்.

“பா.ஜ.க-வை தோற்கடிக்கும் தங்கள் செயல் திட்டத்திற்கு காங்கிரசும் மற்ற எதிர்க்கட்சிகளும் இஸ்லாமியர்களைப் பயன்படுத்துகின்றன. ஒரு கட்சி தேர்தலில் நிறுத்தும் ஓர் இஸ்லாமிய வேட்பாளருக்கு இஸ்லாமிய மக்கள் வாக்களிக்கவில்லை என்றால், அவரை அக்கட்சி எப்படி தேர்தலில் நிறுத்தும்?” என்கிறார் அவர்.

இந்திய இஸ்லாமியர்கள், முஸ்லிம்கள், பா.ஜ.க, நரேந்திர மோதி

பட மூலாதாரம், Anshul Verma

படக்குறிப்பு, அர்ஸூ

தேர்தலில் இஸ்லாமியர்களின் பங்கு

கடந்த 2019-இல் இந்திய இஸ்லாமியர்களில் 8% பேர் மட்டுமே பா.ஜ.க-வுக்கு வாக்களித்தனர் என்பதும், இஸ்லாமியர்கள் பா.ஜ.க-வுக்கு எதிரான அணியாக வாக்களிப்பதும் உண்மைதான். கடந்த 2020-ஆம் ஆண்டு பீகார் மாநிலத் தேர்தலில், 77% பேர் பா.ஜ.க-வுக்கு எதிரான கூட்டணியை ஆதரித்தனர், 2021-ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலில் 75% பேர் திரிணாமுல் காங்கிரஸை ஆதரித்தனர். கடந்த 2022-இல், உத்தரபிரதேசத்தில் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சிக்கு 79% ஆதரவளித்தனர்.

ஆனால், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் இஸ்லாமியர்கள் தங்களுக்கு விசுவாசமாக இருப்பதை உறுதி செய்வதற்காக அவர்களிடையே ‘பயத்தையும் பதற்றத்தையும்’ ஏற்படுத்தியதாக ஜாபர் இஸ்லாம் கூறுகிறார். மறுபுறம், மோதி அரசாங்கம் ‘சமூகங்களுக்கிடையில் வேறுபாடு காட்டுவதில்லை’ என்கிறார்.

“நலத்திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடைகின்றன. சில திட்டங்களால் அதிகப் பயனடைபவர்கள் இஸ்லாமியர்கள்தான். கடந்த 10 ஆண்டுகளில் பெரிய கலவரங்கள் எதுவும் நடக்கவில்லை,” என்கிறார் ஜாபர் இஸ்லாம். உண்மையில் 2020-இல் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய மக்கள் போராட்டம் நடத்தியபோது, டெல்லியில் நடந்த கலவரத்தில் 50-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். அவர்களில் பெரும்பாலோர் இஸ்லாமியர்கள்.

ஜாபர் இஸ்லாம், இஸ்லாமிய சமூகம் தன்னைத் தானே மைய நீரோட்டத்தில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்வதாகக் குற்றம் சாட்டுகிறார்.

“இஸ்லாமியர்கள் சுய பரிசோதனை செய்ய வேண்டும், அவர்கள் வெறும் ஒரு வாக்கு வங்கியாக கருதப்படுவதை நிராகரிக்க வேண்டும். மதத் தலைவர்களால் பாதிக்கப்படக் கூடாது,” என்கிறார்.

“மோதி சமூகத்தை ஒன்றிணைக்க கடுமையாக முயற்சி செய்கிறார், இதனால் மக்கள் மகிழ்ச்சியுடன் இணைந்து வாழ்வார்கள், தவறாக வழிநடத்தப்பட மாட்டார்கள்,” என்கிறார்.

மோதியின் தலைமையில் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களின் எதிர்காலத்தை அவர் எப்படிப் பார்க்கிறார் என்று நான் அவரிடம் கேட்டேன்.

“மிகவும் நன்றாக இருக்கும். மனநிலைகள் மெதுவாக மாறுகின்றன. அதிகமான முஸ்லிம்கள் பா.ஜ.க-வில் இணைவார்கள். விஷயங்கள் முன்னேறிக் கொண்டிருக்கின்றன,” என்றார்.

சூழ்நிலை முன்னேறுகிறதா இல்லையா என்று சொல்வது கடினம்.

இந்தக் கொந்தளிப்பான காலங்களில், தங்கள் சமூகம் சீர்திருத்த செயல்முறைக்கு உட்பட்டு வருவதாகக் பல இஸ்லாமியர்கள் கூறுகின்றனர்.

“முஸ்லிம்கள் சுயபரிசோதனை செய்து, கற்றுக்கொள்கிறார்கள். தகுதியுடைய, ஏழைச் சமுதாய மாணவர்கள் கல்வி கற்க உதவுவதற்கு இஸ்லாமிய கல்வியாளர்கள் மற்றும் அறிவுலகவாதிகள் ஒருங்கிணைந்து முயற்சி செய்கிறார்கள். முன்னேற்றத்திற்கான அவர்கள் சொந்த முயற்சி பாராட்டத்தக்கது. ஆனால் அது அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகிறது,” என்கிறார் ஜியா உஸ் இஸ்லாம்.

தன்னார்வ அமைப்புகளின் சமூகப் பணிகள்

இந்தியாவின் ஏழ்மையான மாநிலமான பீகாரில் வறுமையிலிருந்து மீள்வதற்கான வழியாகக் கல்வியைப் பார்ப்பவர்களில் அர்ஸூ பர்வீனும் ஒருவர்.

ரீமா அகமதுவின் மகனுக்கு நடந்தது போல, அர்ஸூ சந்தித்த பிரச்னை மதப் பதற்றம் அல்ல, `மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ` என்று பயந்த அவரது சொந்த தந்தை.

“வீட்டில் பணப் பிரச்சனை இருக்கிறது, என்று என் தந்தை சொன்னார். நீ வளர்ந்த பெண். ஊரார் பேசுவார்கள், என்றார். நான், இப்படி வாழ முடியாது என்று சொன்னேன். பெண்கள் முன்னேறுகிறார்கள், என்றேன். எதிர்காலத்தை நிறுத்திவைக்க முடியாது என்றேன்,” என்கிறார்.

உள்ளூர் மருத்துவமனையில் அவரது தாயார் இறந்ததைக் கண்ட அர்ஸூ, தான் மருத்துவராக வேண்டும் என்று கனவு கண்டார். பெண்கள் பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும் ஆன கதைகளை கிராமத்து ஆசிரியர்கள் சொல்லி அவரை உத்வேகப்படுத்தினர்.

“என்னால் ஏன் முடியாது?” என்று அவர் நினைத்தார். ஒரு அவரது குடும்பத்தில் வருடத்திற்குள் உயர்கல்வியைத் தொடர்ந்த முதல் பெண் ஆனார்.

அவர் அரசு பள்ளி வழியாகப் படித்து முன்னேறவில்லை. கடந்த 2008-இல் ஒரு முன்னாள் இஸ்லாமிய அரசியல்வாதியும் கல்வியாளருமான மௌலானா வாலி ரஹ்மானியால் நிறுவப்பட்ட பின்தங்கிய முஸ்லிம் மாணவர்களுக்கான இலவச பயிற்சிப் பள்ளியான `ரஹ்மானி30` என்ற அமைப்பில் படித்து முன்னேறினார்.

‘ரஹ்மானி30’ இப்போது பீகாரின் தலைநகரான பாட்னா உட்பட மூன்று நகரங்களில் 850 மாணவர்களுக்கு – பெண்கள் மற்றும் சிறுவர்கள் – வழிகாட்டியாக உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பள்ளியின் கட்டிடங்களில் வசிக்கிறார்கள். பொறியியல், மருத்துவம் மற்றும் பட்டயக் கணக்கியல் ஆகியவற்றில் தேசிய நுழைவுத் தேர்வுகளுக்காகப் பயில்கிறார்கள். அவர்களில் பலர் முதல் தலைமுறை மாணவர்கள் – பழ வியாபாரிகளின், பண்ணை தொழிலாளர்கள், மற்றும் கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள்.

ரஹ்மானி30-இன் சுமார் 600 பழைய மாணவர்கள் ஏற்கனவே மென்பொருள் பொறியாளர்கள், பட்டயக் கணக்காளர்கள் மற்றும் பிற தொழில்களில் பணிபுரிகின்றனர். ஆறு பேர் மருத்துவர்களாகியிருக்கின்றனர்.

அடுத்த ஆண்டு, அர்ஸூவும் மருத்துவ நுழைவுத்தேர்வினை எதிர்கொள்வார்.

இந்திய இஸ்லாமியர்கள், முஸ்லிம்கள், பா.ஜ.க, நரேந்திர மோதி

பட மூலாதாரம், Anshul Verma

படக்குறிப்பு, ‘ரஹ்மானி30’ இப்போது பீகாரின் தலைநகரான பாட்னா உட்பட மூன்று நகரங்களில் 850 மாணவர்களுக்கு – பெண்கள் மற்றும் சிறுவர்கள் – வழிகாட்டியாக உள்ளது

எதிர்காலக் கனவுகள்

“நான் சவாலுக்கு தயாராக இருக்கிறேன். நான் ஒரு மகளிர் சிறப்பு மருத்துவராக ஆக விரும்புகிறேன்,” என்று அவர் கூறுகிறார்.

முகமது ஷகிர், ரஹ்மானி30-இல் கல்வி கற்பதை ஒரு சிறந்த வாழ்க்கைக்கான தனது கடவுச்சீட்டாகப் பார்க்கிறார். இது அவரது வறிய குடும்பத்தை கவனித்துக் கொள்ள அனுமதிக்கிறது.

கடந்த ஏப்ரலில், இதற்காக 15 வயதான அவரும் அவரது நண்பரும் பாட்னாவிற்கு மேற்கொண்டனர். ரஹ்மானி30-க்கான நுழைவுத் தேர்வை எழுதி அதில் தேர்வாயினர்.

“என் பெற்றோர் மிகவும் பயந்தார்கள். போக வேண்டாம் என்று சொன்னார்கள். நான் அவர்களிடம், `இப்போது நான் போகவைல்லை என்றால், எனது எதிர்காலம் என்னவாகும் என்று எனக்குத் தெரியாது,` என்று சொன்னேன்,” என்றார் ஷகிர்.

கணினி விஞ்ஞானியாக வேண்டும் என்று கனவு காணும் இந்த வாலிபருக்கு, மதப் பதற்றம் குறித்த பயம் மிகக் குறைவு.

“நான் பரீட்சை முடிந்து திரும்புவேன்னு அம்மாவிடம் சென்னேன். எனக்கு ஒண்ணும் ஆகாது. என் கிராமத்தில் இந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள்,” என்கிறார் அவர்.

இந்திய முஸ்லிம்களின் எதிர்காலம் என்ன?

ஜியா உஸ் சலாம் `நீடித்த பயம்` பற்றிப் பேசுகிறார்.

“இஸ்லாமியச் சமூகத்தில் வேலையின்மை மற்றும் பணவீக்கம் பற்றி மக்கள் பேசுகிறார்கள். ஆனால் பணவீக்கம் மற்றும் வேலையின்மை மட்டுமல்ல பிரச்னை. வாழ்வதற்கான உரிமை பற்றியது,” என்கிறார்.

இளம் இஸ்லாமியர்களின் சமீபத்திய நினைவுக்குறிப்பு நூல்கள் இதே போன்ற அச்சங்களைப் பற்றிப் பேசுகின்றன.

“இந்தியாவின் அனைத்து இஸ்லாமியர்களும், தவிர்க்க முடியாதது ஒன்று நடக்கும் போது தப்பி ஓடுவதற்கு ஒரு நாட்டைத் தேர்ந்தெடுத்து வைத்துள்ளனர். சிலர் கனடா, அமெரிக்கா, துருக்கி, அல்லது இங்கிலாந்து ஆகிய நாடுகளில் குடியேறிய உறவினர்களை தொடர்பு கொண்டுள்ளனர் – தங்களுக்கு எப்போதாவது புகலிடம் தேவைப்படும் பட்சத்தில். வகுப்புவாத வன்முறையின் சமயங்களில் கூட என்னைப் போன்ற ஒருவர் கூட, பாதுகாப்பாக உணர்ந்த நானும், இப்போது எனது தாயகத்தில் எனது குடும்பத்தின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறேன்,” என்கிறார் ஜெயத் மஸ்ரூர் கான். இவர் சமீபத்தில் `City on Fire: A Boyhood in Aligarh` என்ற நினைவுக்குறிப்பு நூலில் எழுதுகிறார்.

ஆக்ராவில், ரீமா அகமது எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற தன்மையை உணர்கிறார்.

“ஆரம்பத்தில் இது இஸ்லாமியர்களைச் சீண்டிப் பார்க்கும் போக்கு என்று நான் நினைத்தேன். அது கடந்துவிடும் என்று நினைத்தேன். 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது நிரந்தரமாக இழந்துவிட்டதாகவும் சேதமடைந்ததாக உணர்கிறேன்,” என்கிறார்.