இந்திய பயணத்தை ஒத்திவைத்து விட்டு சீனா சென்ற ஈலோன் மஸ்க் – பின்னணி என்ன?

ஈலோன் மஸ்க் சீனா பயணம்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், ஐடோ வோக்
  • பதவி, பிபிசி நியூஸ்

பிரபல தொழிலதிபர் ஈலோன் மஸ்க் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சீனாவில் டெஸ்லாவின் தானியங்கி கார்களை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசிப்பதே இந்த சுற்றுப்பயணத்தின் நோக்கம் என்கிறது ஊடக செய்திகள்.

ஈலோன் மஸ்க் சீனாவில் முழு தானியங்கி டிரைவிங் (Full Self Driving) முறையை செயல்படுத்த விரும்புகிறார். மேலும் அவரது அல்காரிதம்களைப் (algorithms) பயிற்றுவிப்பதற்காக நாட்டில் சேகரிக்கப்பட்ட தரவுகளை வெளிநாடுகளுக்கு மாற்றுவதே அவரின் நோக்கம்.

ஏற்கனவே, முழு தானியங்கி டிரைவிங் பயன்முறை அமெரிக்காவில் செயல்பாட்டில் உள்ளது. ஆனால் இன்னும் சீனாவுக்குக் கொண்டு வரப்படவில்லை.

சமீபத்தில் அமெரிக்காவில் டெஸ்லாவின் தானியங்கி கார்கள் 13 விபத்துகளை ஏற்படுத்தியதாகவும், அதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்த சமயத்தில் சீனாவில் தானியங்கி கார்களை செயல்பாட்டுக்குக் கொண்டு வரும் முயற்சிகள் நடப்பது குறிப்பிடத்தக்கது.

சீன ஊடகங்களின் படி, சீனப் பிரதமர் லீ கியாங் உடனான சந்திப்பின் போது, ”சீனாவுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்த விரும்புகிறேன், அவ்வாறு செய்வது இரு நாடுகளுக்கும் ’சிறந்த முடிவுகளை’ கொண்டு வரும்” என்று மஸ்க் கூறியுள்ளார். மஸ்க்கின் கோரிக்கைக்கு, “சீன சந்தை எப்போதும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் திறக்கப்பட்டிருக்கும்” என்று லி பதிலளித்துள்ளார்.

டெஸ்லாவுக்காக தான் சீனா சென்றாரா மஸ்க் ?

இந்திய பயணத்தை ஒத்திவைத்துவிட்டு சீனா சென்ற ஈலோன் மஸ்க் -  பின்னணி என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெஸ்லாவின் இரண்டாவது மிகப்பெரிய சந்தையாக சீனா உள்ளது.

சீனா டெஸ்லாவின் இரண்டாவது பெரிய சந்தையாகும். சீனாவில், குவாங்சோவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் எக்ஸ்பெங் போன்ற பிற கார் தயாரிப்பாளர்களுக்கும் டெஸ்லாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அந்நிறுவனங்கள் தங்கள் கார்களில் டெஸ்லாவை போலவே தானியங்கி செயல்பாடுகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, சீன கார் நிறுவனங்களை பற்றிப் பேசுகையில் ‘உலகின் மிகவும் செயல் திறன் மிக்க கார் நிறுவனங்கள்’ என்று மஸ்க் விவரித்தார்.

நாட்டில் தானியங்கி டிரைவிங் கார்களை அறிமுகப்படுத்தப்படுவது பாதுகாப்பானது என்று சீன அதிகாரிகளுக்கு உறுதியளிக்க டெஸ்லா நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்ளூர் சட்டங்களுக்கு இணங்க சீன நுகர்வோர் பற்றிய தகவல்களை செயலாக்கம் செய்ய ஷாங்காயில் தரவு மையத்தை அமைப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் (NHTSA) டெஸ்லாவின் தானியங்கி கார்களில் ஓட்டுநர் உதவி அமைப்பின் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்பட்டதா என்பதை ஆராய்வதாகக் கூறியிருந்தனர். இந்த அறிக்கை வெளியாகி, சில நாட்களிலேயே மஸ்க் சீனா பயணித்துள்ளார்.

இந்திய பயணத்தை ஒத்திவைத்துவிட்டு சீனா சென்ற ஈலோன் மஸ்க் -  பின்னணி என்ன?

பட மூலாதாரம், Getty Images

NHTSA அறிக்கையில், ”ஒரு வாகனம் தானியங்கி டிரைவிங் பயன்முறையில் இருந்தால், ஓட்டுநர்கள் சாலையில் கவனம் செலுத்த வேண்டும், ஆனால் விபத்துக்குள்ளான அனைத்து கார்களிலும், ஓட்டுநர்கள் ’போதுமான கவனம் செலுத்தவில்லை’ என்று கண்டறியப்பட்டது. ஓட்டுநர் வாகனம் ஓட்டுவதிலும் சாலையில் கவனம் செலுத்துவதையும் உறுதி செய்வது டெஸ்லா மென்பொருளின் பொறுப்பு. நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டும் போது தானியங்கி டிரைவிங் முறையை பயன்படுத்தலாம். ஆனால் பொருத்தமற்ற சூழ்நிலைகளில் தானியங்கி முறையை பயன்படுத்தக் கூடாது” என குறிப்பிட்டிருந்தனர்.

இதனிடையே டெஸ்லா ஒரு “ரோபோ டாக்ஸி” போன்று செயல்படும் என்று மஸ்க் உறுதியளித்தார்.

2015 ஆம் ஆண்டு, “டெஸ்லா கார்களில் 2018 ஆம் ஆண்டிற்குள் முழு தானியங்கி அமைப்பு பயன்பாட்டுக்கு வரும்” என்று மஸ்க் கூறியிருந்தார். மேலும் 2019 ஆம் ஆண்டில் ”அடுத்த ஆண்டுக்குள் ரோபோ டாக்சி மூலம் நிறுவனம் செயல்படும்” என்றார்.

இந்த மாத துவக்கத்தில், ”வரும் ஆகஸ்ட் மாதம் நிறுவனத்தின் ரோபோட்டிக்ஸ் வெளியிடப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

சிக்கலில் டெஸ்லா

இந்திய பயணத்தை ஒத்திவைத்துவிட்டு சீனா சென்ற ஈலோன் மஸ்க் -  பின்னணி என்ன?

பட மூலாதாரம், Getty Images

சர்வதேச அளவில் மின்சார வாகனங்களுக்கான தேவை வீழ்ச்சியடைந்ததன் காரணமாக டெஸ்லாவின் பங்கு விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது. மலிவு விலை தயாரிப்புகளை வழங்கும் சீன கார் நிறுவனங்களும் டெஸ்லாவுக்கு கடும் போட்டியாக முன் நிற்கின்றன. இதனிடையே, நிறுவனத்தின் பங்கு விலையை உயர்த்த, மஸ்க் முழு தானியங்கி கார்களின் பயன்பாட்டை தொடர்ந்து ஊக்குவிப்பதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த விமர்சனத்தை மஸ்க் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். டெஸ்லா தனது கார்களின் தேவையை அதிகரிக்க சீனா மற்றும் பிற சந்தைகளில் கார்களின் விலையை குறைத்து வருகிறது. மஸ்க் சமீபத்தில் தனது X தளத்தில், “டெஸ்லா தயாரிப்புகளின் விலை, உற்பத்தி மற்றும் தேவைக்கு ஏற்றவாறு அடிக்கடி மாற்றப்பட வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த ஆண்டின் மூன்று மாதங்களில் டெஸ்லாவின் வாகன விற்பனை 13% குறைந்துள்ளது. விற்பனை மதிப்பு 17.3 பில்லியன் டாலரில் இருந்து 13.7 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. டெஸ்லாவின் ஒட்டுமொத்த விற்பனையை பொறுத்தவரையில் 9% சரிவடைந்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் டெஸ்லாவின் பங்கின் விலை 32% குறைந்துள்ளது.

மஸ்க்கின் இந்திய பயணம் ஒத்தி வைக்கப்பட என்ன காரணம்?

இந்திய பயணத்தை ஒத்திவைத்துவிட்டு சீனா சென்ற ஈலோன் மஸ்க் -  பின்னணி என்ன?

பட மூலாதாரம், Getty Images

ஈலோன் மஸ்க் ஏப்ரல் மாதம் இந்தியா வருகிறார் என்றும், இங்கு மின்சார வாகன (EV) உற்பத்தித் துறையில் முதலீட்டை அறிவிக்கக் கூடும் என்றும் செய்திகள் வெளியானது.

இதுகுறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளில், “சீனாவில் உள்ளூர் நிறுவனங்கள் டெஸ்லாவை பின்னுக்குத் தள்ளிவிட்டன. இதனால் மஸ்க் அழுத்தத்தை எதிர்கொள்கிறார். அங்கு டெஸ்லா கார்களின் தேவையும் குறைந்துவிட்டது. இத்தகைய சூழ்நிலையில் டெஸ்லா, இந்தியாவில் கால் பதிக்கும் சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறது.

இந்தியாவுக்கு மின்சார வாகனங்கள் எவ்வளவு முக்கியமோ அதேபோன்று டெஸ்லா நிறுவனத்திற்கும் இந்திய சந்தை முக்கியம். எனவே, இந்தியா தன் நிறுவனத்தை இருகரம் நீட்டி வரவேற்கும் என மஸ்க் நம்புகிறார்” இவ்வாறு செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏப்ரல் 20 ஆம் தேதி மஸ்க் தன் எக்ஸ் தளத்தில், தன் இந்திய சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்படுவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், இதுகுறித்த ஒரு ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக, “துரதிர்ஷ்டவசமாக, பல முக்கியமான கடமைகள் காரணமாக இந்தியா வருவது கொஞ்சம் தாமதமாகும். இந்த ஆண்டின் பிற்பகுதியில் வர வாய்ப்புகள் அதிகம்” என்றார்.