உத்தரபிரதேசத்தில் ஓபிசி, எஸ்சி பிரிவினரை பாஜக சாதி ரீதியாக அணி திரட்டியது எப்படி? பிபிசி கள ஆய்வு

பாஜக

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், தீபக் மண்டல்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிலவரம் மற்றும் பிரசாரங்களுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோதியின் பரப்புரை தொடர்ந்து தலைப்புச் செய்திகளாக இடம் பிடித்து வருகின்றன. ஆரம்பத்தில், தனது தேர்தல் பொதுக்கூட்டங்களில் மோதி பாஜக அரசின் வளர்ச்சிப் பணிகளை மேற்கோள் காட்டி வாக்கு சேகரித்தார். ஆனால் சிறிது நாட்களில் அவரது பேச்சு முற்றிலுமாகத் திசை திரும்பியது.

முதல்கட்டத் தேர்தலுக்குப் பின்னர் அவர் ஆற்றிய பிரசார உரைகளில், வகுப்புவாத தொணி மேலோங்கியது. அதேநேரம் முதல் கட்டத் தேர்தலின்போது சாதிரீதியான அணி திரட்டலுக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தார்.

ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு முன்பு நடந்த மற்ற எல்லா தேர்தல் பரப்புரைகளிலும், அவர் பாஜக-வை பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் தலித்துகளின் மிகப்பெரிய `பாதுகாவலர் கட்சி’ என்று குறிப்பிட்டு பிரசாரம் செய்தார். இந்த ஆண்டு பிப்ரவரியில், மோதி, தான் ஒரு ஓபிசி என்பதை நாடாளுமன்றத்தில் பதிவு செய்வதில் கவனம் செலுத்தினார்.

பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வெளியான பிறகு, பாஜக கட்சிக்குள் ஓபிசியினரின் பிரதிநிதித்துவம் மற்றும் முக்கியத்துவம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியபோது, அதற்கு அமித் ஷா பதிலளித்தார்.

”இரவு பகலாக ஓபிசிகளுக்காக கோஷம் எழுப்பும் கட்சிகளில்கூட பாஜக அளவுக்கு ஓபிசி பிரதிநிதித்துவத்தைக் கையாளவில்லை. பாஜக மற்றும் என்டிஏ அரசு செயல்பாடுகளில் ஓபிசிகளின் பிரதிநிதித்துவம் அதிகம்” என்று குறிப்பிட்ட அமித் ஷா, ஓபிசி மற்றும் தலித் தலைவர்களுக்கு பாஜக எவ்வளவு முக்கியத்துவம் அளித்துள்ளது என்பதை புள்ளி விவரங்கள் மூலம் சுட்டிக் காட்டினார்.

ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு அமித் ஷா நம்பகமான தரவுகளை மேற்கோளிட்டுப் பதிலளித்தார். கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில், ஓபிசி மற்றும் தலித் வாக்காளர்களிடம் இருந்து பாஜக பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது என்பதை நிரூபிக்கும் தேர்தல் கருத்துக் கணிப்புகளை அவர் குறிப்பிட்டார்.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் சமூகத்தினர் பாஜக-வுக்கு எந்தளவுக்கு ஆதரவு அளிக்கின்றனர்?

சமூக நீதி கட்சிகளின் தலித், பிற்படுத்தப்பட்ட வாக்காளர்களை பாஜக பறித்துக் கொண்டதா? - கள ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

சமீபத்தில், பிபிசி உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவிற்கு சென்று தேர்தலில் பாஜக மேற்கொண்ட உத்தி மற்றும் அடிப்படை வேலைகளை ஆய்வு செய்தது. பொதுவாக `உயர் சாதியினரின் கட்சி’ என்று அழைக்கப்படும், பாஜக, கடந்த பத்து ஆண்டுகளில் ஓபிசி மற்றும் தலித் சமூகத்தினரிடம் நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்த என்ன செய்தது என்பது குறித்தும் களத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்தப் பயணம், 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் பாஜகவின் மகத்தான வெற்றியில் ஓபிசி மற்றும் தலித் சமூகத்தினரின் பங்கைப் புரிந்து கொள்ளும் ஒரு முயற்சியாகும்.

இந்த ஆய்வில், உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவை நாங்கள் தேர்ந்தெடுக்கக் காரணம், மக்களவைத் தொகுதிகளின் அடிப்படையில் பார்த்தால் இரண்டுமே பெரிய மாநிலங்கள். உ.பி.யில் 80 மக்களவை இடங்களும், மகாராஷ்டிராவில் 48 இடங்களும் உள்ளன.

‘சமூக நீதி’ கட்சிகள் என்று அழைப்படும் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஜனதா தளம் (யுனைடெட்) மற்றும் என்சிபி போன்றவற்றின் உறுப்பினர்களை பாஜக தட்டிப் பறித்ததா என்பதுதான் நமக்கு முன்னிருந்த கேள்வி.

இந்தக் கட்சிகளின் மிகப் பெரிய ஆதரவாளர்களான பிற்படுத்தப்பட்ட சாதியினர் தற்போது பாஜகவில் இணைந்துவிட்டார்களா? அப்படி நடந்திருந்தால் அதற்கான காரணம் என்ன? இதே உத்தி எதிர்காலத்தில் ஓபிசி-தலித் வாக்காளர்களை பாஜகவுடன் இணைக்க உதவுமா?

முதலில் உத்தரபிரதேசத்தில் கள நிலவரத்தை ஆராய்வோம்.

சமூக நீதி கட்சிகளின் தலித், பிற்படுத்தப்பட்ட வாக்காளர்களை பாஜக பறித்துக் கொண்டதா? - கள ஆய்வு

அமித் ஷாவின் வியூகம்

சமூக நீதி கட்சிகளின் தலித், பிற்படுத்தப்பட்ட வாக்காளர்களை பாஜக பறித்துக் கொண்டதா? - கள ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

கடந்த 2014 மக்களவை தேர்தலுக்கு 11 மாதங்களுக்கு முன்பு, உத்தர பிரதேசத்தில் பாஜக அதிகபட்ச தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்று கூறி, அந்தப் பொறுப்பை அமித்ஷாவிடம் பாஜக ஒப்படைத்தது. அமித் ஷா உத்தர பிரதேசத்தில் சாதி சமன்பாடுகளை மறு ஆய்வு செய்து 2014 மக்களவைத் தேர்தலில் 25 ஓபிசி மற்றும் 17 தலித் வேட்பாளர்களை நிறுத்தினார்.

சக்திவாய்ந்த விவசாய குர்மி கட்சியான ‘அப்னா தளத்திற்கு’ (சோனேலால்) இரண்டு இடங்களை வழங்கினார். அவ்வளவுதான்… அதன் பிறகான சம்பவங்கள் வரலாறானது. உ.பி.யில் மொத்தம் உள்ள 80 இடங்களில் 73 இடங்களை பாஜக கைப்பற்றியது.

உத்தர பிரதேசத்தில் 2014இல் பாஜக பெற்ற இந்த மாபெரும் வெற்றி ‘மோதி அலை’யின் தாக்கம் என்று கூறப்படுகிறது. ஆனால் அரசியல் ஆய்வாளர்கள் இது யாதவ் அல்லாத ஓபிசி சமூகத்தின் கட்சிகளுடன் வைத்த கூட்டணியின் விளைவு என்று நம்புகிறார்கள்.

உத்தர பிரதேசத்தில் இந்தக் கூட்டணியின் தாக்கத்தைக் காண வாரணாசியில் இருந்து எங்கள் பயணத்தைத் துவங்கியபோது, வழியில் பிரதமர் நரேந்திர மோதியின் பிரமாண்ட போர்டுகள் தென்பட்டன. இதில் அவரது அரசு எடுத்த முடிவுகள் பற்றிய அறிவிப்புகள் அச்சிடப்பட்டிருந்தன. நகரில் புதிய சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் காணப்பட்டன. குறைந்தபட்சம் வாரணாசியின் புறநகர் பகுதிகள் சுத்தமாக இருந்தன. பாபத்பூர் விமான நிலையத்தை முக்கிய நகரத்துடன் இணைக்கும் சாலைகளில் பல இடங்களில் சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.

நகரத்திலிருந்து ஜான்பூர் மற்றும் பூர்வாஞ்சலின் பிற பகுதிகளுக்குச் செல்லும் சாலைகளும் மிகவும் அகலமாக இருந்தன. பிரதமர் நரேந்திர மோதியின் மக்களவைத் தொகுதி என்பதால், காவல்துறை நிர்வாகம் சுறுசுறுப்பாக இருந்தது.

பெரும்பாலான இடங்களில் காவிக் கொடிகள் பறந்தன. இருப்பினும், இந்தக் கொடிகள் பாஜக-வுக்கு சொந்தமானவை அல்ல, வெவ்வேறு இந்து அமைப்புகளின் கொடிகள். பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சிகளின் போஸ்டர்களும் போர்டுகளும் இருந்தன, ஆனால் இவை குறைவாகவே இருந்தன. ஆம், சில கடைகளில் பிஎஸ்பி கொடிகள் மற்றும் பேனர்கள் விற்கப்பட்டதையும் காண முடிந்தது.

சமூக நீதி கட்சிகளின் தலித், பிற்படுத்தப்பட்ட வாக்காளர்களை பாஜக பறித்துக் கொண்டதா? - கள ஆய்வு

பட மூலாதாரம், DEEPAK MANDAL/BBC

ஒன்றரை நூற்றாண்டு காலம் முகலாயர்களின் ஆட்சியின் கீழ் இருந்த ஜான்பூரில் இஸ்லாமிய கலாசாரத்தின் ஒரு பிரதிபலிப்பு தெளிவாகத் தெரிகிறது. ராட்சத முள்ளங்கி மற்றும் இமார்த்திக்கு பெயர் பெற்ற ஜான்பூரில் முஸ்லிம்கள், தாகூர்கள் மற்றும் யாதவர்கள் அதிக அளவில் உள்ளனர்.

இங்கு தாகூர் சகோதரத்துவ தலைவர் கிருபாசங்கர் சிங் பாஜக வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார். ஒரு காலத்தில் மாயாவதிக்கு மிக நெருக்கமானவராகக் கருதப்பட்ட பாபு சிங் குஷ்வாஹா சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர். ஆனால் சக்தி வாய்ந்த தலைவர் தனஞ்சய் சிங்கின் மனைவி ஸ்ரீகலா ரெட்டியை வேட்பாளராக நிறுத்தி போட்டியை சுவாரஸ்யமாக்கியுள்ளது பகுஜன் சமாஜ் கட்சி.

இந்தப் பயணத்தின்போது, ஜான்பூரில் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள ஒரு தாபாவில் ராம் ஷிரோமணி பிரஜாபதியை சந்தித்தோம். செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த பிரஜாபதி, தேர்தல் செய்திகளை கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

பிரஜாபதி கல்லூரியில் விரிவுரையாளராக இருந்து தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். முதலில் அவர் பேசத் தயங்கினார், ஆனால் பூர்வாஞ்சல் மற்றும் முழு உத்தர பிரதேசத்தின் தேர்தல் சமன்பாடுகளைப் பற்றி நாங்கள் பேசத் தொடங்கியதும், அவர் வெளிப்படையாகப் பேசத் தொடங்கினார்.

உ.பி.யில் பாஜக வெற்றி பெற்றதற்கு, யாதவ் அல்லாத ஓபிசி, வாக்காளர்களைத் திரட்டியதே முக்கியக் காரணம் என்றார். யாதவ் அல்லாத ஓபிசி தலைவர்களைச் சேர்க்க அமித் ஷாவே இந்த உத்தியை உருவாக்கினார்.

பிரஜாபதியின் கூற்றுப்படி, யாதவ் சாதியினர் ஆதிக்கம் செலுத்தும் சமாஜ்வாதி கட்சியில் இருந்தும், ஜாதவ்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் பிஎஸ்பியில் இருந்தும் ஆவாத் மற்றும் பூர்வாஞ்சல் பகுதிகளில் உள்ள யாதவ் அல்லாத ஓபிசி தலைவர்களை ஈர்க்கும் வியூகத்தை அமித் ஷா வகுத்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் 2014 மக்களவைத் தேர்தலில் யாதவர் அல்லாத ஓபிசி வேட்பாளர்கள் 25 பேரும், 2019 மக்களவைத் தேர்தலில் யாதவர்கள் அல்லாத ஓபிசி வேட்பாளர்கள் 24 பேரையும் பாஜக நிறுத்தியதால் பிரஜாபதி சொன்னது சரியாக இருப்பதாகத் தெரிகிறது.

யாதவ் அல்லாத ஒபிசி சமூகத்தினர் மற்றும் அவர்களின் தேர்தல் முக்கியத்துவம்

சமூக நீதி கட்சிகளின் தலித், பிற்படுத்தப்பட்ட வாக்காளர்களை பாஜக பறித்துக் கொண்டதா? - கள ஆய்வு

பட மூலாதாரம், ANI

உத்தர பிரதேசத்தில் உள்ள அவத் மற்றும் பூர்வாஞ்சல் பகுதிகளில் யாதவ் அல்லாத ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த ராஜ்பர், குர்மி, மவுரியா, பாசி, நிஷாத், சௌகான், நோனியா போன்ற வாக்காளர்களின் எண்ணிக்கையால் அவர்கள் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் தீர்க்கமான வெற்றி கிடைக்கும்.

கோரக்பூர், தியோரியா, பல்லியா, மௌ, காஜிபூர், சண்டௌலி, மிர்சாபூர், பதோஹி, கௌஷாம்பி, பிரயாக்ராஜ் மற்றும் பிரதாப்கர் முதல் பஸ்தி, சித்தார்த்நகர், அசம்கர், ஜான்பூர், வாரணாசி மற்றும் மோகன்லால் கஞ்ச்-403இல் உள்ள மொத்த ஆவாத் மற்றும் பூர்வாஞ்சல் பகுதிகளில் உள்ள 171 இடங்கள் ஆட்சி அமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஓம்பிரகாஷ் ராஜ்பரின் சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, ராஜ்பார் சாதியினரால் ஆதிக்கம் செலுத்துவதால், 12 மக்களவைத் தொகுதிகளில் வெற்றிபெற முடியும் என்று கடந்த ஆண்டு பாஜகவே ஒப்புக்கொண்டது.

அதேநேரம், சுஹேல்தேவ் பாரதிய சமாஜ், அதன் உள் கணிப்பை மேற்கோள் காட்டி, 32 மக்களவைத் தொகுதிகளில் திறம்படச் செயல்பட முடியும் என்று கூறியுள்ளது.

சமூக நீதி கட்சிகளின் தலித், பிற்படுத்தப்பட்ட வாக்காளர்களை பாஜக பறித்துக் கொண்டதா? - கள ஆய்வு

உத்தர பிரதேசத்தில் ராஜ்பார் வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் நான்கு சதவீதம். ஆனால், பூர்வாஞ்சலின் பத்து முதல் பன்னிரெண்டு தொகுதிகளில் எந்தக் கட்சியின் வெற்றியிலும் அது தீர்க்கமான பங்கை வகிக்க முடியும்.

இத்தகைய யாதவ் அல்லாத ஒபிசி கட்சிகளுடன் ஒருங்கிணைப்பதன் மூலம், 2017 மற்றும் 2022 சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. அதனால்தான் மீண்டும் மீண்டும் தனது ‘வெற்றி சூத்திரத்தை’ முயல்கின்றனர்.

எஸ்பி-பிஎஸ்பி செய்த ‘தவறுகள்’ மற்றும் பாஜகவின் வளர்ச்சி

சமூக நீதி கட்சிகளின் தலித், பிற்படுத்தப்பட்ட வாக்காளர்களை பாஜக பறித்துக் கொண்டதா? - கள ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

இந்த முறை மக்களவைத் தேர்தலிலும், சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, அப்னா தளம் (சோனேலால்), நிஷாத் கட்சி போன்ற முக்கியமான யாதவ் அல்லாத ஓபிசி கட்சிகள் அதனுடன் உள்ளன. இந்தக் கட்சிகள் யாதவ் அல்லாத ஓபிசி மற்றும் ஜாதவ் அல்லாத தலித் வாக்காளர்கள் மத்தியில் ஊடுருவ உதவுகின்றன.

டாக்டர். அரவிந்த் குமார் லண்டன் ராயல் ஹோலோவே பல்கலைக் கழகத்தில் சமூகவியல் கற்பிக்கிறார், தற்போது அம்பேத்கர் நகரில் உள்ள அவரது வீட்டில் வசிக்கிறார்.

இந்தப் பயணத்தின்போது நடந்த உரையாடலில், “சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் முஸ்லிம் வாக்காளர்களின் அடிப்படையில் ஆட்சிக்கு வந்தன. ஆனால், இந்தக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, அவற்றின் கொள்கைகள் பெரிதாக எதையும் வழங்கவில்லை. மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் தலித்துகளுக்கு நன்மை செய்யவில்லை.

முலாயம் சிங் யாதவின் சகோதரர் ஷிவ்பால் சிங் யாதவ் சமாஜ்வாதி கட்சி அரசாங்கத்தில் போலீஸ் ஆட்சேர்ப்புக்கான ‘பட்டியல்’ பற்றி அவர் குறிப்பிட்டார்.

அவர் பேசுகையில், “அந்தக் காலத்தில் யாதவர் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞர்கள் காவலர் பணித் தேர்வு எழுதிவிட்டு திரும்பும்போது, அவர்கள் எழுதியதாகச் சொல்வார்கள். ஆனால், இடையில் ஷிவ்பாலின் ‘பட்டியல்’ வெளியாகும். அவர்கள் தேர்ச்சி பெற்றிருக்க மாட்டார்கள். இதுபோன்ற சம்பவங்களால் யாதவ் அல்லாத ஓபிசி பிரிவு வாக்காளர்கள் சமாஜ்வாதி கட்சி மீது ஏமாற்றம் அடையத் தொடங்கினர் என்கிறார் அரவிந்த் குமார்.

யாதவர் அல்லாத பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் சமாஜ்வாதி கட்சி இப்போது ஒரே ஒரு சமூகத்தின் (யாதவர்கள்) கட்சியாக மாறிவிட்டது என்று எண்ணினர்.

கடந்த 2007இல் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி முதலமைச்சராகப் பதவியேற்றபோது, உயர் சாதியினரால், குறிப்பாக பிராமண வாக்காளர்களால் இந்த வெற்றி கிடைத்ததாக அவர் உணர்ந்தார்.

ஆனால், அப்போது 30 சதவீத பிராமணர் வாக்குகள் மட்டுமே பகுஜன் சமாஜ் கட்சியை நோக்கிச் சென்றன. இந்தத் தவறான புரிதலால், கட்சியின் முக்கிய வாக்காளர்களில் மிகவும் பின்தங்கிய மக்கள் புறக்கணிக்கப்படத் தொடங்கினர்.

யாதவ் அல்லாத, ஜாதவ் அல்லாத, முஸ்லிம் வாக்காளர்கள் மற்றும் பாஜக

சமூக நீதி கட்சிகளின் தலித், பிற்படுத்தப்பட்ட வாக்காளர்களை பாஜக பறித்துக் கொண்டதா? - கள ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

அரசியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, மௌரியா, குஷ்வாஹா, ஷக்யா, சைனி, நிஷாத் போன்ற யாதவ் அல்லாத ஓபிசி சாதிகள் பிஎஸ்பியின் முக்கிய ஆதரவு சாதிகளாக இருந்தன. ஆனால் சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை முறையே யாதவர்கள் மற்றும் ஜாதவ்கள் மீது அதிக கவனம் செலுத்தி, மற்ற பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சாதியினரை ஏமாற்றத் தொடங்கின.

பகுஜன் சமாஜ் கட்சியின் பல குஷ்வாஹா தலைவர்கள் தங்கள் சமூகத்தின் நலன்களைப் புறக்கணித்ததால் கட்சியை விட்டு வெளியேறினர். உ.பி.யில் உள்ள முஸ்லிம் வாக்காளர்கள் காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுடன் உள்ளனர், ஆனால் இப்போது இந்தக் கட்சிகள் அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளன.

ஜான்பூரிலிருந்து அசம்கர் நோக்கிச் செல்லும்போது, ஜாஃப்ராபாத் கிராமத்தில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிலரைச் சந்தித்தோம். அவர்களில் ஒருவர், பெயர் வெளியிட விரும்பாத நிலையில், “பாஜக ஆட்சியில் முஸ்லிம்கள் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர். ஆனால், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியை ஆதரிக்கும் இந்த முஸ்லிம்களுக்கு ஆதரவாக இந்தக் கட்சிகளும் வெளிப்படையாக முன்வருவதில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.

ரமலான் பண்டிகையின் இரண்டாவது நாளில் இந்த கிராமத்திற்கு வந்து மக்களுக்கு இனிப்பு ஊட்டிக் கொண்டிருக்கும்போது, ஒரு பெண்மணி, “மோதி அரசு முத்தலாக் சட்டத்தைக் கொண்டு வந்து எங்கள் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுகிறது. இது சரியல்ல. ஆனால், எங்கள் சமூகத்தைச் சேர்ந்த சிலர் தற்போது பாஜகவுக்கு ஆதரவளிக்கத் தொடங்கியுள்ளனர்.” என்று கூறினார்.

இந்தக் கூற்றுக்கு ஆதாரம் கிடைத்தது. ஜான்பூரை சேர்ந்த தஞ்சிலா பர்வீன், இப்போது லக்னௌவில் உள்ள அரசு மருத்துவமனையில் தலைமை செவிலியராகப் பணிபுரிகிறார், ”முத்தலாக் சட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் முஸ்லிம் பெண்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர். அவருக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டது. அவர்கள் சுரண்டப்பட்டனர்,” என்றார்.

அதே கிராமத்தைச் சேர்ந்த இம்ரான் கூறுகையில், ஜான்பூரில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர், ஆனால் இங்கு தாக்குர் அல்லது யாதவ் வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். யாதவர்களை ஆதரிப்பதால் முஸ்லிம் சமூகத்திற்குப் பெரிய பலன் இல்லை.

பாஜக-வின் எதிர்கட்சிகளின் வாதங்கள்

சமூக நீதி கட்சிகளின் தலித், பிற்படுத்தப்பட்ட வாக்காளர்களை பாஜக பறித்துக் கொண்டதா? - கள ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜ்குமார் பாடி மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஜாதவ் அல்லாத தலித் வாக்காளர்களில் ஒரு பகுதியினர் பாஜகவுக்கு சென்றுவிட்டதாக நம்புகிறார். ஆனால் பாஜகவின் பொய்ப் பிரசாரத்தால் இது நடந்துள்ளது என்று அவர் நம்புகிறார்.

பிபிசியிடம் பேசிய அவர், “சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் 86 யாதவ் எஸ்டிஎம்களில் 56 பேர் சேர்க்கப்பட்டதாக பாஜக பொய்ப் பிரசாரம் செய்தது. சமாஜ்வாதி கட்சி யாதவர்களுக்காக மட்டுமே செயல்படுகிறது என்றும் மாயாவதியின் அரசு ஜாதவ்களுக்காக செயல்படுகிறது என்றும் பாஜக பொய்ப் பிரசாரம் செய்து வருகிறது.

இரண்டு சமூகங்கள் தங்களுக்குள் சண்டை போட வைப்பது பாஜகவின் அரசியல் பாணி. பாஜக ஒவ்வொரு மாநிலத்திலும் இரண்டு சமூகங்களுக்கு இடையே சண்டை மூட்டி வருகிறது. இது ராஜஸ்தானில் குர்ஜருக்கும் மீனாவுக்கும், ஹரியாணாவில் ஜாட் மற்றும் பிறருக்கு எதிராகவும், மகாராஷ்டிராவில் மராத்தா மற்றும் ஓபிசிக்கும், மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தேய் சமூகத்தினருக்கும் இடையே சண்டை மூட்டிவிட்டது.

“இருப்பினும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் பாஜகவின் இந்த தந்திரத்தைப் புரிந்து கொண்டுள்ளனர். இப்போது இந்த சமூகங்களின் வாக்காளர்கள் எஸ்பி-பிஎஸ்பி பக்கம் திரும்பி வருகிறார்கள்” என்று அவர் கூறுகிறார்.

ரோகினி கமிஷனின் பங்கு

சமூக நீதி கட்சிகளின் தலித், பிற்படுத்தப்பட்ட வாக்காளர்களை பாஜக பறித்துக் கொண்டதா? - கள ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

சமீப காலங்களில், உத்தர பிரதேசத்தில் யாதவ் அல்லாத ஓபிசி- கள் மற்றும் மிகவும் பின்தங்கிய மக்கள் பாஜக பக்கம் சாய்வது ஓரளவிற்கு செல்வாக்கு பெற்றுள்ளது. நீதிபதி ஜி. ரோகினி கமிஷனின் உருவாக்கமும் இதில் பங்காற்றியது. ஓபிசி சாதியினரிடையே இட ஒதுக்கீட்டின் பலன்களை ‘சமமாக’ பகிர்ந்தளிப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய மோதி அரசின் இந்த ஆணையம் உருவாக்கப்பட்டது.

ரோகினி கமிஷன் தனது அறிக்கையை 2023இல் சமர்ப்பித்தது. ஆனால் அதன் பரிந்துரைகள் இன்னும் பகிரங்கப்படுத்தப்பட வில்லை. சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் அருண் ராஜ்பர் கூறுகையில், ”ரோகினி கமிஷன் மிகவும் பின்தங்கிய சாதிகளுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை பார் மற்றும் ராஜ்பார் சமூகத்தினரிடம் ஏற்படுத்தியுள்ளது,” என்றார்.

பிபிசியிடம் பேசிய அவர், 2017இல் இந்த ஆணையம் அமைக்கப்பட்டபோது, மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் இருந்தது. அத்தகைய சூழ்நிலையில், சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, தனது சமூகத்தின் நலன்களுக்காக பாஜகவுடன் கைகோர்க்க இதுவே சரியான வாய்ப்பு என்று கருதியது. பாஜகவில் இணைந்த பிறகு, எங்கள் சமூகத்தினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து விசாரணைகள் நடக்கத் தொடங்கின, எங்கள் சமூகத்திற்கு எதிரான குற்றங்கள் செய்தவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யத் தொடங்கின, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

சமாஜ்வாதி ஆட்சியின்போது, ஆதிக்க யாதவர் சமூகத்தின் செல்வாக்கு கணிசமாக அதிகரித்தது. எங்கள் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. மக்கள் அச்சுறுத்தப்பட்டனர். இதனால் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அச்சமடையத் தொடங்கினர். இந்த பயத்தில் அவர்கள் பாஜகவை ஆதரிக்கத் தொடங்கினர்.

உத்தர பிரதேசத்தின் மச்சிலிஷாஹர் மக்களவைத் தொகுதியில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த வாக்காளர்களிடம் பிபிசி பேசியது.

இந்த உரையாடலில், சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்தபோது, யாதவர் சாதியின் அரசியல் பலம் வாய்ந்த மக்களுக்கு பாதுகாப்பு கிடைத்து வந்தது. குற்றச்செயல்களில் ஈடுபடும் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் போலீசார் தயங்கினர்.

உ.பி.,யில் மிகவும் பின்தங்கிய மக்கள் மற்றும் தலித்துகளை ஒன்றிணைக்கும் வகையில், அமைச்சரவையில், இந்த சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களுக்கு அதிக இடம் அளிக்கும் பார்முலாவை, பாஜக கடை பிடித்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டில் யோகி ஆதித்யநாத் அமைச்சரவை முதல் முறையாக அமைக்கப்பட்டபோது, அதன் 52 அமைச்சர்களில் 20 பேர் ஓபிசி மற்றும் 9 பேர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த ஆண்டு மார்ச் மாதம் யோகி அமைச்சரவை விரிவாக்கப்பட்ட போது, நான்கு புதிய அமைச்சர்களில், யாதவ் அல்லாத OBC (ஓம்பிரகாஷ் ராஜ்பர் மற்றும் தாரா சிங் சவுகான்) மற்றும் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் (RLD இன் அனில் குமார்) சேர்க்கப்பட்டனர்.

சமூக நீதி கட்சிகளின் தலித், பிற்படுத்தப்பட்ட வாக்காளர்களை பாஜக பறித்துக் கொண்டதா? - கள ஆய்வு

பட மூலாதாரம், DEEPAK MANDAL/BBC

தலித்-பிற்படுத்தப்பட்ட சமூக மாவீரர்களின் பிறந்தநாள் நிகழ்வு மற்றும் சிலை நிறுவல்

உத்தர பிரதேசத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகங்களின் வாக்காளர்களைத் தங்கள் வசப்படுத்த பாஜக அந்தக் கட்சி சார்ந்த மாவீரர்கள் மற்றும் பெரிய தலைவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடத் தொடங்கியது. அவர்களது சிலைகளை நிறுவும் பணி பல இடங்களில் தொடங்கியது. இந்த மாவீரர்களையும், மாமனிதர்களையும் இந்துத்துவாவின் நாயகர்களாகக் காட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

உதாரணமாக, முகமது கஸ்னவியின் தளபதியை போரில் தோற்கடித்த ராஜ்பார் மன்னர் சுஹேல்தேவ், இந்துக்களின் பாதுகாவலராக விவரிக்கப்பட்டது. அவரது பிறந்தநாள் விழாவை பாஜக பல இடங்களில் நடத்தி சிலைகளை நிறுவியது. பாசி மன்னர்கள் பல்தேவ் மற்றும் டால்தேவ் ஆகியோரின் பிறந்தநாள், அவர்களை தேசிய ஹீரோக்களாக அறிவித்துக் கொண்டாடப்பட்டது. அதேநேரம் பால் தேவ் மற்றும் டால்தேவ் ஆகியோரை உயர் சாதியினர் என்று அழைக்கப்படுபவர்களின் சுரண்டலுக்கு எதிராக நிற்கும் ஹீரோக்களாக பிஎஸ்பி காட்டி வருகிறது. அதேபோல் ஜாதவ் சமூகத்தைச் சேர்ந்த மகரிஷி வால்மீகி மற்றும் சுபச் ரிஷி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இரண்டு சகோதரர்கள் தினா மற்றும் பத்ரி, முசாஹர் சமூகத்தில் வழிபடுகிறார்கள், மற்றும் அஹிர் ஹீரோ லோரிக் தேவ் தேசிய மற்றும் இந்து ஹீரோக்கள் என்று விவரிக்கத் தொடங்கினார். குர்மி (படேல்) சமூகத்தை ஆதரிப்பதற்காக அப்னா தளம் நிறுவனர் சோனெலால் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவும் ஏற்பாடு செய்தது.

நேரு அரசால் சர்தார் வல்லபாய் படேலின் உரிமைகள் பறிக்கப்பட்டதாக குர்மிகள் மத்தியில் பிரசாரம் செய்யப்பட்டது. அம்பேத்கர் நகரில் பரசுராம் படேல் உருவம் பார்க்க முடிகிறது. நேருவைவிட பட்டேல் திறமையானவர் என்கின்றனர். அவர் இருந்திருந்தால் காஷ்மீர் பிரச்னை இவ்வளவு இழுத்தடிக்கப்பட்டு இருக்காது. படேல் சமூகத்தினர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆதரித்தனர். சோனேலால் படேல் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். ஆனால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை விட்டு வெளியேறி ‘அப்னா தளம்’ என்ற கட்சியை உருவாக்கினார்.

சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றில் இருந்து படேல்களின் (குர்மிகள் கட்சி) விலகல் பற்றி அவர் கூறுகையில், “பாஜக அப்னா தளத்தின் (சோனேலால்) அனுப்ரியா படேலை தன் வசம் வைத்திருக்கிறது, எங்களால் எங்கள் கட்சியை (கேமராவாடி) கட்டுப்படுத்த முடியவில்லை,” என்றார்..

யாதவ் அல்லாத ஓபிசி கட்சிகளைச் சேர்க்கும் பாஜகவின் வியூகம் குறித்து மூத்த பத்திரிகையாளர் சுனிதா ஆரோனின் கூற்றுப்படி, “யாதவ் அல்லாத மற்றும் ஜாதவ் அல்லாத வாக்காளர்களைத் தன்னுடன் கொண்டு வர பாஜக முயல்கிறது. இதன் மூலம் பாஜக தங்களுக்கு அங்கீகாரத்தையும் மரியாதையையும் தருகிறது என்பதை இந்தச் சமூகத்தின் மக்கள் கருதுகிறார்கள்.”

சமூக நீதி கட்சிகளின் தலித், பிற்படுத்தப்பட்ட வாக்காளர்களை பாஜக பறித்துக் கொண்டதா? - கள ஆய்வு

பட மூலாதாரம், DEEPAK MANDAL/BBC

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளை பயனடையச் செய்யும் திட்டங்கள் மற்றும் அணிதிரட்டல்

உ.பி.யில் இந்துத்துவா, ராம ஜென்மபூமி, முத்தலாக் விவகாரத்தையும் பாஜக விட்டு வைக்கவில்லை என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் தன்னுடன் சாதி அடிப்படையிலான கட்சிகளை எப்படி சேர்த்துக் கொள்வது என்று ஒரு வியூகத்தையும் அமித் ஷா வகுத்தார். 2013இல் உத்தர பிரதேசத்தின் பொறுப்பை அமித் ஷாவுக்கு வழங்கியபோது பாஜக இந்த வியூகத்தைச் செயல்படுத்தத் தொடங்கியது என்று மூத்த பத்திரிகையாளர் சுனிதா ஆரோன் கூறுகிறார்.

கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பாடம் நடத்தும் மகேந்திர சிங், இக்கட்சி 2017இல் மற்றொரு உத்தியைக் கடைப்பிடித்ததாகத் கூறுகிறார்.

பிபிசி உடனான உரையாடலில் இதைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், “பயனாளிகள் திட்டங்களின் சரியான மற்றும் சமமான விநியோகத்தை பாஜக உறுதி செய்தது. இதில் அரசாங்கத்தால் எந்தப் பாகுபாடும் காட்டப்படவில்லை. மேல்மட்ட மக்களிடையே திட்டங்களின் பயனாளிகள் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டனர். கிராமங்களில் உள்ள சாதிகள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் பழங்குடி சமூகங்கள் சமமாக நடத்தப்பட்டனர்.

இலவச உணவு தானியங்கள், கேஸ் சிலிண்டர்கள், முதியோர் ஓய்வூதியம், பெண் குழந்தைகளுக்கான ஊக்கத்தொகை போன்ற திட்டங்களின் பலன்கள் அனைத்துப் பிரிவினரையும் சென்றடையத் தொடங்கியபோது, பாஜகவை ஆதரிக்காத வாக்காளர்கள் மத்தியிலும் அதன் மீதான நாட்டம் அதிகரித்தது.

வாரணாசி, ஜான்பூர் மற்றும் மச்சிலிஷாஹர் ஆகிய இடங்களுக்கு நாங்கள் சென்றிருந்தபோது, பயனாளிகள் திட்டத்தின் சமமான விநியோகத்தைப் பற்றி பலர் எங்களிடம் தெரிவித்தனர். இதன் மூலம் பெண்கள் அதிக வசதிகளைப் பெற்று வருகின்றனர். இருப்பினும், பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் உறுதியாகக் கூறினார்.

ஜான்பூரில் உள்ள டிவி சேனலில் பணிபுரியும் பத்திரிக்கையாளர் சுதாகர் கூறுகையில், பயனாளிகளுக்கான திட்டங்கள் சிறப்பாக வழங்கப்படுவதால், பிற்படுத்தப்பட்ட சமூக வாக்காளர்கள் மத்தியில் பாஜகவின் நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது.

தற்போது அவர்கள் நேரடியாக பாஜகவில் இணைந்துள்ளனர். இதனால், இச்சமூக தலைவர்களும் பாஜகவில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக ஜான்பூரில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பல தலைவர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

சமூக நீதி கட்சிகளின் தலித், பிற்படுத்தப்பட்ட வாக்காளர்களை பாஜக பறித்துக் கொண்டதா? - கள ஆய்வு

பட மூலாதாரம், DEEPAK MANDAL/BBC

இருப்பினும், உத்திர பிரதேசத்தில், பிபிசி செய்தியாளரிடம் வேலையின்மை ஒரு பெரிய பிரச்னை என்று மக்கள் தெரிவித்தனர். குறிப்பாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் இல்லை என்றனர்.

மாநிலத்தில் 2024இல் வேலைவாய்ப்பை அதிகரிப்பதில் பாஜக கவனம் செலுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் யாதவர் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தலித்துகளை சேர்த்து ஆட்சியைப் பிடிக்கும் உத்தி தோல்வி அடையலாம் என்றும் இளைஞர்கள் கூறுகின்றனர்.

யாதவர் அல்லாத பிற்படுத்தப்பட்ட மக்களில் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் திறன் சார்ந்த வேலைகளை நம்பியிருப்பதாக அவர் கூறுகிறார். தச்சர், கொத்தனார், பெயிண்டர், வெல்டர் மற்றும் கைவினைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் தொழில்கள் வளரவில்லை.

கைவினைஞர் சாதியினருக்கு நிதி உதவி வழங்கும் திட்டம்

சமூக நீதி கட்சிகளின் தலித், பிற்படுத்தப்பட்ட வாக்காளர்களை பாஜக பறித்துக் கொண்டதா? - கள ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

கடந்த சில ஆண்டுகளாக, உத்தர பிரதேசத்தில் பல்வேறு திட்டங்கள் மூலம் மாநிலத்தின் திறமையான சாதிகளை இணைக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. இந்த சாதியினர் உற்பத்தியில் ஈடுபட்டு தங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்கு சந்தையை நம்பியிருக்கிறார்கள்.

கடந்த 2022ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன், இதுபோன்ற வேலைகளில் ஈடுபடும் சாதி மக்களின் வசதிக்காக பாஜக, மிட்டி கலா வாரியம், கேஷ் கலா வாரியம் மற்றும் விஸ்வகர்மா வாரியம் ஆகியவற்றை உருவாக்கியது. இந்த சாதிகளைச் சேர்ந்தவர்கள் இத்தகைய வாரியங்களின் தலைவர்களாக ஆக்கப்பட்டனர்.

மார்ச் 2024க்குள், இரண்டு லட்சத்திற்கும் அதிகமான கைவினைஞர்கள் மற்றும் திறமையான தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் பிரதான் மந்திரி விஸ்வகர்மா திட்டத்தின் பலன்களைப் பெற்றுள்ளனர். அவர்களுக்குப் புதிய மற்றும் நவீன கருவிகள் வாங்க ரூ.15,000 மதிப்பிலான இ-வௌச்சர்கள் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், தையல்காரர்கள், கொல்லர்கள், பொற்கொல்லர்கள், செருப்பு பழுதுபார்ப்பவர்கள், கொத்தனார்கள், படகு தயாரிப்பாளர்கள், சுத்தியல் மற்றும் கருவிப் பெட்டி தயாரிப்பாளர்கள், பூட்டுத் தொழிலாளிகள் மற்றும் கல் செதுக்குபவர்கள் போன்ற திறமையான வேலைகளில் ஈடுபடும் சாதியைச் சேர்ந்தவர்கள் முதலில் உத்தரவாதம் இல்லாமல் ரூ.1 லட்சம் கடன் கொடுக்கப்பட்டு, திருப்பிச் செலுத்திய பிறகு ரூ.2 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.

உத்தர பிரதேசத்தில் இந்தத் திட்டங்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சஞ்சய் சோனி தங்க நகைகள் வடிவமைப்பதில் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் கடன் வாங்கி தனது பணியைச் செய்து வருகிறார். இந்த மாதிரி நிதி உதவியால் பெரிய நகைக்கடைகளில் வேலைகளை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்கிறார்கள்.

பாஜக பக்கம் சாயும் ஜாதவ் அல்லாத தலித்துகள்

சமூக நீதி கட்சிகளின் தலித், பிற்படுத்தப்பட்ட வாக்காளர்களை பாஜக பறித்துக் கொண்டதா? - கள ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுதா பாய் மற்றும் அவரது சகா சஜ்ஜன் குமார் ஆகியோர் தங்களது ‘மாயா, மோதி அவுர் ஆசாத்’ (Maya, Modi aur Azad) என்ற புத்தகத்தில், ஜாதவ் அல்லாத தலித்துகளைத் தவிர, பிற தலித் சாதியினரும் யாதவ் சாதியினரின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு பாஜக ஆதரவைப் பெற்றதாக, தங்கள் களப்பணி மற்றும் மக்களுடனான உரையாடல்களின் அடிப்படையில் கூறியுள்ளனர். அம்மக்கள் தங்கள் பாதுகாப்புக்காக பாஜக பக்கம் சென்றுள்ளனர்.

தொண்ணூறுகள் மற்றும் 2000களில் சமாஜ்வாதி கட்சியின் ஆதிக்கம் இந்த தலித்துகளுக்குப் பிரச்னைகளை உருவாக்கியது. கிராமப்புறங்களின் சமூக வாழ்வில், அவர்கள் முன்னேறிய சாதிகள் என்று அழைக்கப்படுபவர்களுடன் யாதவ் சமூகத்தினரின் ஆதிக்கத்தை எதிர்கொண்டனர்.

இரண்டாவது முக்கியக் காரணம் தலித் வகுப்பினரின் வளர்ச்சிக்கான விருப்பம். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆட்சியில் இல்லாததால், அவர்கள் தங்கள் முன்னேற்றத்திற்கான பாதைகள் மூடப்பட்டதாக நினைத்தனர். இது ஜாதவ் அல்லாத தலித்துகளை பாஜக பக்கம் திரும்பத் தூண்டியது.

இதுகுறித்து, அம்பேத்கர் நகருக்குச் சென்று, பாசி சமூகத்தைச் சேர்ந்த ஒருவரிடம் நான் பேசியபோது, ​​’பெஹன்ஜி’ (மாயாவதி) அரசியல் ரீதியாக பலவீனமடைந்ததால், பாஜகவை நோக்கிச் செல்வதை, அச்சமூகத்தினர் பாதுகாப்பானதாகக் கருதுகின்றனர்” என்றார்.

மகாராஷ்டிரா: மராத்தாக்களைவிட ஓபிசி மற்றும் தலித்துகள் மீது அதிக நம்பிக்கை

சமூக நீதி கட்சிகளின் தலித், பிற்படுத்தப்பட்ட வாக்காளர்களை பாஜக பறித்துக் கொண்டதா? - கள ஆய்வு

பட மூலாதாரம், VISHAL MAHAKALKAR/LOKMAT SAMACHAR

உத்தர பிரதேசத்தில் யாதவ் அல்லாத ஓபிசி சாதியினரையும் தலித்துகளையும் ஒருங்கிணைக்கும் பாஜகவின் உத்தியைப் புரிந்துகொண்ட பிறகு, நாங்கள் மகாராஷ்டிரா பக்கம் திரும்பினோம்.

ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நாக்பூரை அடைந்தபோது, ​​ஓபிசி, தலித்துகள் மற்றும் பழங்குடியினரின் குறிப்பிடத்தக்க மக்கள்தொகையைக் கொண்ட கிழக்கு விதர்பாவின் மற்ற மக்களவைத் தொகுதிகளில் பிரதமர் நரேந்திர மோதி தொடர்ந்து பேரணிகளை நடத்திக் கொண்டிருந்தார்.

நாக்பூரில் பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் தலைமையகம் உள்ளது. மகாராஷ்டிராவின் இரண்டாவது தலைநகரம் என்றும் இது அழைக்கப்படுகிறது.

பாஜக முன்னாள் தலைவரும், மோதி அரசில் அமைச்சருமான நிதின் கட்கரி, நாக்பூர் மக்களவைத் தொகுதியில் எம்.பி.யாக இருந்து, மூன்றாவது முறையாக இங்கிருந்து தேர்தலில் போட்டியிடுகிறார்.

சிறந்த மெட்ரோ இணைப்பு, நல்ல சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் அமைத்ததற்கான பெருமை இங்கு கட்கரிக்கு வழங்கப்படுகிறது.

நாக்பூரின் சிதாபுல்டி மெட்ரோ ரயில் நிலையம் முன்பு எங்களைச் சந்தித்த அபிஷேக் மேஷ்ராம், நாக்பூரில் தெலி சாதி (ஓபிசி), தலித் மற்றும் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம், ஆனால் மக்கள் சாதி வேறுபாடின்றி கட்கரிக்கு வாக்களிக்கிறார்கள் என்று கூறுகிறார்.

மேஷ்ராம் கூறுகையில், “கட்கரி இங்கு சாலைகள், பாலங்கள் மற்றும் மெட்ரோ தொடர்பான பல பணிகளைச் செய்துள்ளார். அவரது பணியால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிஸியாக இருந்தாலும் இங்குள்ளவர்களிடம் மிகவும் நட்பாகப் பழகுகிறார்,” என்றார்.

ஆனால், அருகில் நின்ற வைபவ் சக்லே கூறுகையில், “இந்த முறை நாக்பூர் மற்றும் முழு விதர்பாவில் உள்ள ஓபிசி வாக்காளர்கள் பாஜக மீது கோபத்தில் உள்ளனர். நாக்பூரில்கூட கட்கரி எளிதில் வெற்றி பெற மாட்டார்,” என்றார்.

ஷிண்டே அரசு மராத்தியர்களுக்கு குன்பி சான்றிதழை அளித்து இட ஒதுக்கீடு வழங்குவதாக உறுதியளித்ததில் இருந்து ஓபிசிக்கள் கோபமடைந்துள்ளனர் என்று அவர் கூறுகிறார். தங்களுக்கு இட ஒதுக்கீடு குறையும் என்று அவர்கள் நினைக்கின்றனர்.

சமூக நீதி கட்சிகளின் தலித், பிற்படுத்தப்பட்ட வாக்காளர்களை பாஜக பறித்துக் கொண்டதா? - கள ஆய்வு

பட மூலாதாரம், DEEPAK/BBC

ஏப்ரல் இரண்டாவது வாரத்தில், பிரதமர் நரேந்திர மோதி சந்திராபூர், நாக்பூரை ஒட்டியுள்ள ராம்டெக் மற்றும் நாக்பூரில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று பேரணிகளை நடத்தினார்.

இந்த மூன்று பேரணிகளிலும், பிரதமர் மோதி தனது உரையின் பெரும்பகுதியை ஓபிசி மற்றும் தலித்துகளுக்காக பாஜக அரசு செய்துள்ள பணிகளைப் பட்டியலிட்டார்.

நாக்பூரை ஒட்டியுள்ள சந்திராபூர், வர்தா, ராம்டெக், கோண்டியா-பண்டாரா மற்றும் கர்-சிரோலி போன்ற மக்களவைத் தொகுதிகளில் ஓபிசி மற்றும் தலித் ஆதிக்கம் செலுத்துகின்றன.

நாக்பூரில் சிறந்த உள்கட்டமைப்பு உள்ளது. ஆனால் நாம் சந்திராபூர் மற்றும் வர்தாவை நோக்கி நகரும்போது அது மறைந்து போகிறது. வர்தா மகாத்மா காந்தி பிறந்த இடம். ஆனால், சேவாகிராமத்தைச் சுற்றியுள்ள சாலைகளின் நிலை நன்றாக இல்லை.

கிழக்கு விதர்பா பகுதி, விவசாயிகள் தற்கொலை மற்றும் நக்சலைட் பிரச்னைக்காக இப்பகுதிகள் செய்திகளில் இடம்பிடித்துள்ளன. இப்பகுதியில் பருத்தி, சோயாபீன் மற்றும் ஆரஞ்சு பயிரிடப்படுகிறது. நாட்டின் மொத்த ஆரஞ்சுகளில் 30 சதவீதம் இங்குதான் உற்பத்தி செய்யப்படுகிறது.

விவசாயத்தை நம்பியிருக்கும் இந்தப் பகுதி முழுவதும் குன்பி (பின்தங்கிய விவசாய சாதி) மற்றும் தெலி சாதி மக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

குன்பி மக்கள் பாஜக மீது கோபம் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அவர்களைப் பொறுத்தவரை, விவசாயத்தில் தங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை எனக் கருதுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேல், மராத்தாக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற வாக்குறுதி அவர்களின் வேலைவாய்ப்பைக் குறைக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளதாக நினைக்கின்றனர்.

வர்தா செல்லும் வழியில் நாங்கள் சந்தித்த ஜெயேஷ் உபாசே, “ஓபிசி பங்கிலிருந்து மராத்தாக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டிய அவசியம் என்ன? குன்பி சாதியினரைவிட தெலி சமூக மக்களின் நிலை சிறப்பாக உள்ளது. அவர்களுக்கு வியாபாரமும் நல்ல பொருளாதார நிலையும் இருக்கிறது. அவர்களும் ஓபிசி பிரிவினர்தான். ஆனால், இட ஒதுக்கீட்டைக் குறைப்பதால் அவர்களுக்குப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. நாங்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம்,” என்றார்.

‘மாதவ் ஃபார்முலா’

சமூக நீதி கட்சிகளின் தலித், பிற்படுத்தப்பட்ட வாக்காளர்களை பாஜக பறித்துக் கொண்டதா? - கள ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

கடந்த பத்து ஆண்டுகளில் இப்பகுதியில் காங்கிரசின் ஆதிக்கத்தை உடைத்தெறிந்த பாஜக, பிற்படுத்தப்பட்ட வாக்காளர்களை தன் பக்கம் ஈர்த்தது. ஆனால், உபாசே போன்ற வாக்காளர்களின் கருத்து, பாஜக மீதான பிற்படுத்தப்பட்ட சாதியினரின் வெறுப்பைக் காட்டுகிறது.

கடந்த 2019 தேர்தலில் விதர்பாவில் பத்து இடங்களில் ஐந்தில் பாஜக வெற்றி பெற்றது. இங்குள்ள 62 சட்டமன்ற தொகுதிகளில், 29 தொகுதிகள் பாஜக கணக்கில் சென்றது. ஓபிசி வாக்காளர்களின் அதிருப்தியைக் கணித்த பாஜக, தெலி சாதியைச் சேர்ந்த (ஓபிசி) சந்திரசேகர் பவான்குலேவை மாநிலத் தலைவராக்கியுள்ளது.

பவான்குலேவை குடியரசு தலைவராக்குவது விதர்பாவில் அவரது பிடியைப் பலப்படுத்தும். ஏனெனில், இங்கு தெலி மற்றும் பிற ஓபிசி சாதியினர் அதிக அளவில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஆனால் தோராயமான மதிப்பீட்டின்படி, இங்கு மராத்தா சாதியினர் 32 சதவீதம் மற்றும் ஓபிசி சமூகத்தினர் 39 சதவீதம் உள்ளனர்.

எர்வாடாவில் உள்ள டாக்டர் அம்பேத்கர் கலை மற்றும் வணிகக் கல்லூரியில் பேராசிரியராக இருந்த நிதின் பிர்மல் கூறுகையில், “1980களில், சிவசேனா நவ இந்து மதத்தின் கீழ் ஓபிசி சாதிகளை ‘மாதவ்’ அதாவது மாலி, தங்கட் மற்றும் வஞ்சரி (MADHAV) சமன்பாடு மூலம் ஒழுங்கமைக்கத் தொடங்கியது.

இதன் மூலம் பயனடைந்த சிவசேனா, பாஜகவுடன் இணைந்து, 1995இல் மகாராஷ்டிராவில் முதல்முறையாக ஆட்சி அமைப்பதில் வெற்றி பெற்றது. பாஜக அதன் தலைவர் வசந்த் ராவ் பகவத்தின் ஆலோசனையின் பேரில், 1990களில் இருந்து ‘மாதவ்’ சமன்பாட்டில் விடாமுயற்சியுடன் செயல்படத் தொடங்கியது.”

சமூக நீதி கட்சிகளின் தலித், பிற்படுத்தப்பட்ட வாக்காளர்களை பாஜக பறித்துக் கொண்டதா? - கள ஆய்வு

பட மூலாதாரம், VIKAS MAHAKALKAR/LOKMAT SAMACHAR

“மண்டல் ஆணையத்தின் அறிக்கைப்படி, ‘மாதவ்’வின் கீழ் உள்ள சாதிகள் மகாராஷ்டிராவில் மிகப்பெரிய ஓபிசி சாதிகள்.

பின்னர், அன்னா டாங்கே, பாண்டுரங் ஃபண்ட்கர் போன்ற தலைவர்களின் உதவியுடன் பாஜக தனது ஓபிசி வாக்கு வங்கியை மேலும் விரிவுபடுத்தியது. பின்னர் ஒரு கட்டத்தில் கோபிநாத் முண்டே, ஏக்நாத் காட்சே போன்ற பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த தலைவர்களை இணைத்து, ஓபிசி வாக்கு வங்கியை பாஜக விரிவுபடுத்தியது.

லோக்மத் மராத்தியின் ஆசிரியர் ஸ்ரீமந்த் மானே கூறுகையில், மகாராஷ்டிராவில் உள்ளாட்சி அமைப்புகள் முதல் சட்டமன்றம், மக்களவை வரை மராத்தியர்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.

மகாராஷ்டிராவின் முதல் முதலமைச்சர் யஷ்வந்த் ராவ் சவானில் இருந்து இதுவரை பெரும்பாலான முதலமைச்சர்கள் மராத்தியர்களே என்று அவர் கூறுகிறார். இது ஓபிசி சமூகத்தில் அரசியல் பாதுகாப்பற்ற உணர்வை உருவாக்கியது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, இந்த சாதியினரிடையே பாஜக தனது ஊடுருவலை அதிகப்படுத்தியது.

மானே கூறுகையில், “முன்னதாக ஓபிசிக்கள் பாஜகவை முழுவதுமாக ஆதரித்தனர். மாதவ் ஃபார்முலாவின் கீழ், மாலி, தங்கட் மற்றும் வஞ்சரி ஆகிய சமூகத்தினர் ஒன்றாக பாஜகவுக்கு வாக்களித்தனர். ஓபிசிக்களில் கூட, தங்கட் மற்றும் வஞ்சரி சமூகங்களுக்குத் தனி இட ஒதுக்கீடு உள்ளது. அதன் விளைவுதான் ஒன்றாகப் போராடுவதற்குப் பதிலாக, ஓபிசிக்கள் தனித்தனியாகப் போராடத் தொடங்கினர். தங்கட் சாதியினர் பட்டியல் சாதி அந்தஸ்துக்காக போராடுகின்றனர்,” என்றார்.

சமூக நீதி கட்சிகளின் தலித், பிற்படுத்தப்பட்ட வாக்காளர்களை பாஜக பறித்துக் கொண்டதா? - கள ஆய்வு

பட மூலாதாரம், DEEPAK MANDAL/BBC

மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தலில் ஓபிசியினர் இடஒதுக்கீடு கோரி வருகின்றனர். ஆனால் அதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இது பாஜகவின் ஓபிசி வாக்கு வங்கியையும் பாதித்துள்ளது. இந்த முடிவுக்குப் பிறகு, விதர்பாவின் பல குன்பி (விவசாயம் செய்யும் ஓபிசி சாதி) தலைவர்கள் பாஜகவில் இருந்து பிரிந்தனர். ஆனால், தற்போது பாஜக அவர்களை மீண்டும் தன்னிடம் கொண்டு வர முயல்கிறது.

மானே கூறுகையில், “கடந்த 10-15 ஆண்டுகளாக, பாஜக ஓபிசி-களின் வாக்குகளைப் பெற்று வருகிறது. ஆனால், இப்போது ஓபிசியில் சேர்க்கப்பட்டுள்ள ஒவ்வொரு சாதியும் தனித்தனியாக நிபந்தனைகளை அமைத்துக் கொள்கின்றன. எனவே, ஒவ்வொரு ஓபிசி சாதியினரையும் பூர்த்தி செய்வது பாஜகவுக்குக் கடினமாகி வருகிறது,” என்றார்.

“பாஜக இதைச் செய்ய முயல்கிறது. ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல. குறிப்பாக மராத்தியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது,” என்றார் அவர்.

தலித் வாக்காளர்களின் நிலை என்ன?

சமூக நீதி கட்சிகளின் தலித், பிற்படுத்தப்பட்ட வாக்காளர்களை பாஜக பறித்துக் கொண்டதா? - கள ஆய்வு

பட மூலாதாரம், DEEPAK MANDAL/BBC

“சமீபத்திய ஆண்டுகளில், மகாராஷ்டிராவில் தலித் வாக்காளர்களும் பாஜகவில் இணைந்துள்ளனர்.” இந்தக் கூற்று எந்தளவு உண்மை?

இந்தக் கேள்விக்குப் பதிலளித்த மானே, “மகாராஷ்டிராவில் தலித் மக்களிடையே அரசியல் பிளவு ஏற்பட்டுள்ளது. பௌத்த தலித்துகளில் பெரும்பாலானவர்கள் மஹர் பிரிவைச் சேர்ந்தவர்கள், அவர்கள் பாஜக ஆதரவாளர்கள் அல்ல. ஆனால், சம்பர் மாங் மற்றும் மாதங் போன்ற இந்து தலித்துகள் பாஜகவுக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள். தலித் அல்லாத இந்து சமூகங்கள்கூட பௌத்த தலித்துகளுக்கு வாக்களிப்பதில்லை. அதனால் சட்டமன்றம் மற்றும் மக்களவையில் அவர்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது” என்றார்.

மானே கூறுகையில், “பாஜகவை ஆதரிக்கும் தலித் அல்லாத இந்து தலைமைகளும் இந்து தலித்துகள் தன்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றன. இதன் காரணமாக இந்து தலித்துகள் மத்தியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது,” என்கிறார் அவர்.

இந்து தலித்துகள் பாஜகவில் இணைவதற்கு நிதின் பிர்மல் மற்றொரு காரணத்தைக் கூறுகிறார்.

இந்து தலித்துகள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் வசிப்பதாகவும், கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறுகிறார். அதேநேரம், பௌத்த தலித்துகளுக்கு இடையே நடுத்தர வர்க்கம் உருவாகியுள்ளது.

பிர்மல் கூறும்போது, ​​“கிராமப்புறங்களில் வசிக்கும் இந்து தலித்துகள் மோதி அரசின் திட்டங்களின் பலன்களைப் பெறுகிறார்கள். அதனால்தான் அவர்கள் பாஜகவை ஆதரிக்கிறார்கள்,” என்றார்.