சுட்டெரிக்கும் வெயிலில் காருக்குள் ஏறியதும் ஏசி போடலாமா? கார், பைக் டயரில் காற்று எவ்வளவு இருக்கலாம்?

கோடை காலத்தில் உங்கள் கார், பைக்கை பாதுகாத்துக்கொள்ள சில டிப்ஸ்

பட மூலாதாரம், Getty Images

இந்தியா முழுவதுமே கோடை வெயில் சுட்டெரிக்கிறது. தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கத்தரி வெயில் தொடங்கும் முன்பே பல நகரங்களிலும் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிவிடுகிறது. இந்த கோடையில், நம் உடலைப் போன்றே, நம் வாகனங்களுக்கும் சிறப்பு கவனம் அவசியமாகிறது. கார், இருசக்கர வாகனங்களில் இந்த கோடை காலத்தில் சில விஷயங்களில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். அது நம் வாகனங்களை காப்பதோடு, நம் உயிருக்கும் ஆபத்து ஏற்படாமல் தவிர்க்கிறது.

அப்படி, கார்களில் என்னென்ன பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார், கார் வணிகத்தில் ஈடுபட்டுவரும் சென்னையை சேர்ந்த குஹா.

ஏசி பயன்பாடு

கோடைக்காலத்தில் காருக்குள் அமர்ந்ததுமே முதலில் நாம் ஏசியைத்தான் இயக்குவோம். ஆனால், நாம் காரை நிறுத்தும்போது ஜன்னல் உள்ளிட்டவற்றை மூடிவிட்டு சென்றிருப்போம். அப்போது காரின் சீட், டேஷ்போர்டு உள்ளிட்டவை சூடாகியிருக்கும். அவையெல்லாமே பாலியூரிதினால் (பிளாஸ்டிக்) தயாரிக்கப்பட்டவைதான். எனவே, பாலியூரிதினால் செய்யப்பட்ட அனைத்தும் குறிப்பிட்ட வெப்பநிலையில் புகையை வெளியேற்றும். ஆனால், அது நம் கண்ணுக்குத் தெரியாது. இதனால் தீ விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மேலும், அந்த புகையை நாம் சுவாசிப்பதும் உடல்நலத்திற்கு நல்லதல்ல. எனவே, காருக்குள் அமர்ந்ததும் ஏசியை இயக்கக் கூடாது.

ஏசியிலிருந்து காற்று வரும் ‘ஃபேன் ப்ளோயர்’ (Fan blower) பிளாஸ்டிக்கால் ஆனதுதான். ஏசியிலிருந்து காற்று வரும் வழியும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டதுதான். எனவே, அதன் வழியாக வரும் காற்றை சுவாசித்தால், நாம் புகையைத்தான் சுவாசிப்பதாக அர்த்தம். அதனால் தான் பலருக்கும் காரில் அமர்ந்தவுடன் ஏசியை இயக்கினால் சிலருக்கு வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் ஏற்படுகிறது. எனவே, காரில் ஏறுவதற்கு முன்பே ஜன்னல்களை இரு நிமிடம் இறக்கிவிட்டு, பின்னர் தான் நாம் உள்ளே அமர வேண்டும்.

மேலும், வெயில் காலம் என்பதால் ஏசியை இயக்கிவிட்டு காருக்குள்ளேயே அதிக நேரம் பெரும்பாலானோர் இருப்பர். அதுவும் ஆபத்தானது. காரை இயக்கும்போது முழுவதும் இயக்குவது பிரச்னையில்லை. ஆனால், கார் நின்றுகொண்டிருக்கும்போது அவ்வாறு செய்யக்கூடாது.

ஏசி எரிவாயுவை 5 ஆண்டுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்

கார் ஏசியின் எரிவாயுவை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு உபயோகிக்கக் கூடாது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அதனை மாற்றி, புதிதாக எரிவாயுவை நிரப்ப வேண்டும். ஏனென்றால், இந்த எரிவாயு ஒரு குழாய் மூலம் எடுத்துச் செல்லப்படுவதன் மூலமே கார் ஏசியிலிருந்து நமக்குக் காற்று வருகிறது. இந்த செயலின்போது, அக்குழாய் அதிகளவில் உறைநிலைக்குச் செல்லும். உறைநிலையில் உள்ள குழாயில் காற்று பட்டு நமக்குக் குளிர்ச்சியான காற்று கிடைக்கிறது. எனவே, குறிப்பிட்ட இடைவெளியில் எரிவாயுவை புதிதாக நிரப்ப வேண்டும். ஏசி ஃபில்டர்களை (Filters) ஒவ்வொரு 2-3 மாதங்களுக்கும் சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.

கூலண்ட்

கோடை காலத்தில் உங்கள் கார், பைக்கை பாதுகாத்துக்கொள்ள சில டிப்ஸ்

பட மூலாதாரம், Getty Images

கார் இன்ஜினில் உண்டாகும் வெப்பத்தை குளிர்விக்கவும் அதனை நிலையாக வைத்திருக்கவும் கூலண்ட் (Coolant) என்ற ஒன்று காரில் உள்ளது. அதனை அதிகபட்சம் ஒவ்வொரு 30,000 கி.மீக்கும் நிச்சயம் புதிதாக மாற்ற வேண்டும். இதுவே, கோடைக் காலங்களில் 20,000 கி.மீட்டரிலேயே மாற்ற வேண்டும். இந்த கூலண்ட், காரின் இன்ஜின் வழியிலேயே செயல்படும் ஒன்று. கூலண்ட் சரியாக வேலை செய்யவில்லை என்றால், இன்ஜினுக்குள் இருக்கும் பொருட்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு இன்ஜின் வேலை செய்யாமல் போகும். இதுவே, வெளியில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் சமயத்தில் இந்த பிரச்னை விரைவிலேயே ஏற்படும். குளிர்காலத்தில் அதுவே சற்று அதிக காலம் பிடிக்கும்.

இதனால், இன்ஜினில் செயல்படும் ரப்பர் குழாயில் விரிசல்கள் ஏற்படும். அதனால் கூலண்ட்-ஐ சரிவர கவனித்துக்கொள்ள வேண்டும். மேலும், கூலண்ட்டில் வடிநீரைத்தான் பயன்படுத்த வேண்டும். கூலண்ட்டில் உள்ள எண்ணெய் செறிவூட்டப்பட்டது. அதில் வடிநீரை நிச்சயமாக கலக்க வேண்டும்.

இதனால், கூலண்ட் மூலமாக இன்ஜினின் வெப்பம் சீக்கிரமாக தணியும். இன்ஜின் பாகங்கள் பெரும்பாலும் அலுமினியத்தில்தான் செய்யப்படுகின்றன. அலுமினியத்தை மற்ற தண்ணீர் எல்லாம் அரித்துவிடும். ஆனால், வடிநீர் பயன்படுத்தினால் அப்படி இருக்காது. அதனால், கூலண்ட்-ஐ மாற்றும்போதே இதை செய்யும்போது பிரேக்-டவுன் ஏற்படாது.

கோடை காலத்தில் உங்கள் கார், பைக்கை பாதுகாத்துக்கொள்ள சில டிப்ஸ்

பட மூலாதாரம், Getty Images

வைப்பர்கள்

கோடைக்காலங்களில் வைப்பர்களை புதிதாக மாற்றுவதற்கான அவசியம் இல்லை. குளிர் காலங்களில் தான் மாற்றுவதற்கான தேவை ஏற்படும். காரை வெயிலில் நிறுத்துகிறோம் என்றால், வைப்பரை தூக்கிவிட வேண்டும். கார் கண்ணாடியில் வைப்பர் படுமாறு இருக்கக் கூடாது.

ஏனெனில், வெயிலில் கார் கண்ணாடி முழுவதும் சூடாகிவிடும். அந்த சூட்டில் வைப்பர் பழுதாகிவிடும். கண்ணாடியும் பாதித்துவிடும். வைப்பர் ரப்பரில் ஆனதால் அது உருகுவதற்கான வாய்ப்பு அதிகம்.

சன் ஷேட் (Sun shades)

சாலை போக்குவரத்து விதிகளின்படி சன் ஷேட் மிகவும் அடர்த்தியாக போடக் கூடாது. ஆனால், லைட்டான ஷேட்களை பயன்படுத்தலாம். ஜன்னலில் ஒட்டுவது போன்றல்லாமல், உள்ளுக்குள்ளேயே ஃபிரேமில் இருப்பது போன்று வருகிறது. அதை பயன்படுத்தலாம்.

சர்வீஸ் செய்வது அவசியம்

கோடைக்காலங்களில் நிச்சயம் கார்களை ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் சர்வீஸ் செய்ய வேண்டும். பலரும் கோடைக்காலங்களில் தான் தங்களிடம் உள்ள கார்களை பயன்படுத்துவர். எனவே, காரின் ஆயில், ஏசி உள்ளிட்டவற்றை ‘சர்வீஸ்’ செய்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

டயரில் எந்த அளவுக்கு அழுத்தம் உள்ளது, போதுமான அளவுக்கு உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். மற்றபடி, இன்ஜின் ஆயில், பெல்ட், ரப்பர் பாகங்கள் உள்ளிட்டவற்றை தேவை ஏற்படின் புதிதாக மாற்றிக்கொள்ளலாம்.

இனிவரும் டிப்ஸ்கள் இருசக்கர வாகனங்களுக்கும் பொருந்தும்.

பெட்ரோல் டேங்க்

கோடை காலத்தில் பைக் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களிலும் கார்களிலும் பெட்ரோல் டேங்க்-ஐ முழுவதும் நிரப்பக் கூடாது. உதாரணத்திற்கு இருசக்கர வாகனத்தில் டேங்க்கின் கொள்ளளவு 5 லிட்டர் என்றால், அதிகபட்சமாக 4 லிட்டர் மட்டுமே நிரப்ப வேண்டும். கார் என்றால், 4-5 லிட்டர் குறைவாக இருந்தாலே போதும்.

பெட்ரோலுக்கு வெப்பம் அதிகரிக்கும்போது விரிவடையும் தன்மை உண்டு. அப்போது பெட்ரோலில் இருந்து வாயு உருவாகும். அப்போது முழு அழுத்தத்தில் பெட்ரோல் டேங்க் இருக்கும்போது, வெயில் அதிகமாக இருக்கும் சமயங்களில் வாகனத்தை வெளியில் நிறுத்தும்போது, டேங்க் வெடிப்பதற்கான வாய்ப்புண்டு. அதனால், டேங்க்-ஐ முழுமையாக நிரப்பக் கூடாது. 75% நிரப்பினாலே போதும்.

கோடை காலத்தில் உங்கள் கார், பைக்கை பாதுகாத்துக்கொள்ள சில டிப்ஸ்

பட மூலாதாரம், Getty Images

வெயிலில் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்

வாகனங்களை வெயிலில் நிறுத்துவதை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும். வாகனத்தை இயக்கும்போது ஏற்கனவே அதன் பாகங்கள் சூடாகியிருக்கும். எனவே, வாகனத்தில் உள்ள சூடு குறைய வேண்டும். இப்போது வெளியில் இருக்கும் வெப்பநிலைக்கு, அந்த சூடு அப்படியே இருக்கும் அல்லது அதிகரிக்கும். அப்படி அதிகமாகும் போது வயரிங் அல்லது ஏதாவது பாகங்களில் பழுது இருந்தால் திடீரென தீப்பற்ற வாய்ப்புண்டு.

கார்களை பொறுத்தவரை வயரிங் உள்ளிட்டவை வாகனத்திற்கு அடியில் தான் இருக்கும். ஆனால், இருசக்கர வாகனங்களில் வெளியே தெரியும் வகையிலேயே இருக்கும். எனவே, நிச்சயம் இருசக்கர வாகனங்களை நிழலில் தான் நிறுத்த வேண்டும். கார்களை எல்லா இடங்களிலும் நிழலான இடத்தில் நிறுத்துவதற்கு வாய்ப்பில்லை. முடிந்தவரை நிழலில் நிறுத்தலாம்.

கோடை கால வாகன பராமரிப்பு

பட மூலாதாரம், Getty Images

டயரின் அழுத்தம்

இருசக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவற்றில் டயர் வெடிப்பது கோடை காலங்களில் அடிக்கடி நிகழும். ஏற்கனவே வாகனத்தை ஓட்டும்போது நாம் பிரேக் பிடிக்கும்போதும் சாலையின் உராய்வுக்கும் ஏற்ப டயர் சூடாகியிருக்கும். வெப்பநிலை இயல்பாக இருந்தால் டயரின் தாங்குதிறனால் அது மடங்கி விரியும். டயரின் உள்ளே இருக்கும் காற்று, உராய்வை தாங்கிக்கொள்ளும். ஆனால், கோடை காலங்களில் டயர் வெடித்துவிடும். எனவே, சூடாக இருக்கும்போது வெடிப்பதற்கான வாய்ப்பு அதிகம். எனவே, இதனையும் கவனித்தில் கொண்டு டயருக்குள் காற்று மிதமான அழுத்தத்தில் காற்று இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவைதவிர, குறிப்பிட்ட கால இடைவெளியில் இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்து கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.