48 ஆயிரம் பாடல்களை பாடியுள்ள எஸ்.ஜானகியின் முதல் தமிழ்த் திரைப்பட பாடல் எது தெரியுமா?

எஸ் ஜானகி

பட மூலாதாரம், S JANAKI / X

  • எழுதியவர், டாக்டர். ரொம்பிசர்லா பார்கவி
  • பதவி, பிபிசிக்காக

நீல வானில், அலைகளில் மிதந்து வரும் காற்றில் அவரது குரல் தாங்கி வரும் பாடலை கேட்கும் போது எனது கவலைகள் மறந்து இதயம் பஞ்சாய் மாறிவிடுகிறது.

அவர் குரலில் பாடிய ‘மேகமா தேகமா’ என்ற பாடலை கேட்கும் போதெல்லாம், உடலுக்குள் மென்சோகம் பரவி மனம் கனக்கிறது.

‘சிங்கார வேலனே தேவா’ என்ற பாடலை பாடுகையில், நாதஸ்வரத்தின் இசையோடு, அவரது குரல் போட்டி போடுகிறது.

இப்படி அவர் பாடியுள்ள ஆயிரக்கணக்கான பாடல்களில் சில சிறந்த பாடல்களை தேர்ந்தெடுப்பதே சிக்கலான பணி.

அப்படி இசை உலகையே மிரள வைத்த பாடகர் வேறு யாருமில்லை.. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உட்பட 17 மொழிகளில் 48,000 பாடல்களை பாடியுள்ள தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்றழைக்கப்படும் எஸ்.ஜானகிதான்.

இத்தனை பாடல்களும் வெற்றிபெற அவர் மட்டுமேவா காரணம்? அதற்கு பின்னால் இசையமைப்பாளர், பாடலாசிரியர் என எத்தனையோ பேர் இல்லையா? இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் கொடுத்த இசையையும், வரிகளையும் பாடலாக கோர்த்து தனது குரல் மூலம் நமது காதுகளில் தேன் வார்த்தவர் எஸ்.ஜானகி.

அதனால்தான் இளையராஜா போன்ற பெரும் இசையமைப்பாளர்களே பல முறை தனது பாடல்களை பாட எஸ். ஜானகியை பயன்படுத்தியிருக்கிறார்கள். இதை ஜானகியே பல நேர்காணல்களில் கூறியிருக்கிறார்.

பொதுவாகவே பாடகர்களுக்கு திரையில் தோன்றும் நடிகர்களை போல பின்பற்றி பாடும் திறன் இருக்கும். இதில் பாடகர் பாலசுப்ரமணியம் நடிகர்களை அப்படியே பிரதிபலிப்பது போல பாடுவார். அதே போல் ஜானகியும் திரையில் தோன்றும் நடிகர்களுக்கு ஏற்றவாறே சிறப்பாக பாடுவார். அதனால்தான் தனிப்பாடல், இருவர் பாடல், குழு பாடல், தாலாட்டு என எதுவாக இருந்தாலும் அவரால் சிறப்பாக பாட முடிகிறது.

இதுவே அவருக்கு 2 வயது குழந்தையை போலவும், 20 வயது இளம்பெண்ணை போலவும், 60 வயது முதியவரை போலவும் பாட உதவுகிறது.

எஸ் ஜானகி

பட மூலாதாரம், WIKIPEDIA

படக்குறிப்பு, இளம்வயதிலேயே 1979 ஆம் ஆண்டில் வெளியான உதிரிப்பூக்கள் படத்தில் ‘போடா போடா பொக்கை’ என்ற பாடலை முதியோர் குரலிலும் பாடியிருப்பார் எஸ். ஜானகி.

அப்படி அவர் பாடிய பாடல்களுக்கு எத்தனையோ உதாரணம் கூறலாம்.

இரண்டு வயது குழந்தை போல் பாடும் பாடலுக்கு உதாரணமாய், ‘கண்ணா நீ எங்கே, வா வா நீ இங்கே’ என்ற பாடலை கூறலாம்.

இளம்பெண்ணை போல் ‘காதலின் தீபம் ஒன்று’ பாடலை பாடியிருப்பார்.

தனது இளம் வயதிலேயே 1979 ஆம் ஆண்டில் வெளியான உதிரிப்பூக்கள் படத்தில் ‘போடா போடா பொக்கை’ என்ற பாடலை முதியவர் குரலிலும் பாடியிருப்பார் எஸ். ஜானகி.

இப்படி தனது வசீகர குரலால் அவர் 48000த்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளதாக மதிப்பிடப்படுகிறது.

அதுமட்டுமின்றி சிறந்த பாடகிக்கான தேசிய விருதை இதுவரை நான்கு முறை வென்றுள்ளார்.

  • 1977 – செந்தூரப் பூவே என்ற தமிழ் பாடல்
  • 1981 – எட்டுமானூரம்பலத்தில் என்ற மலையாளப் பாடல்
  • 1984 – வெண்ணெல்லோ கோதாரி அந்தம் என்ற தெலுங்குப் பாடல்
  • 1992 – இஞ்சி இடுப்பழகா என்ற தமிழ் பாடல்

தமிழக அரசு இவருக்கு கலைமாமணி பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. தமிழ்நாடு , கேரளா , ஆந்திரா மற்றும் ஒடிசா உள்ளிட்ட அரசுகளிடமிருந்து இதுவரை 32 விருதுகளை வாங்கியுள்ளார் இவர்.

மைசூர் பல்கலைக் கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2013ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் விருது அறிவித்தது. ஆனால், ஜானகி தன்னுடைய ரசிகர்கள் கொடுத்த அங்கீகாரமே போதும் என்று கூறி அதை நிராகரித்து விட்டார்.

எஸ் ஜானகி

பட மூலாதாரம், S JANAKI / FACEBOOK

படக்குறிப்பு, 2013ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் விருது அறிவித்தது. ஆனால், ஜானகி தன்னுடைய ரசிகர்கள் கொடுத்த அங்கீகாரமே போதும் என்று கூறி அதை நிராகரித்து விட்டார்.

ஜானகியின் பயணம் எப்படி தொடங்கியது?

கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் தனது இசை மூலம் இடம்பிடித்த எஸ்.ஜானகியின் இசை வாழ்க்கை எப்படி தொடங்கியது என்பதை நாம் தெரிந்து கொண்டாலே அவரின் உழைப்பு என்ன என்பது புரிந்து விடும்.

ஜானகியின் முழு பெயர் சிஷ்டலா ஸ்ரீராமமூர்த்தி ஜானகி. அவரது தந்தை சிஷ்டலா ஸ்ரீராமமூர்த்தி மற்றும் தாய் சத்யவதி. குண்டூர் மாவட்டத்தில் உள்ள பல்லபட்லா என்ற கிராமத்தில் தான் 1938ஆம் ஆண்டில் ஜானகி பிறந்தார்.

அவர் சிறு வயதில் இருந்து எந்த விதமான பாடலையும் பாடும் திறன் கொண்டவராக இருந்துள்ளார். அவர் இயல்பிலேயே எந்த ஒரு விஷயத்தையும் ‘போலச் செய்தல்’ திறன் கொண்டவர்.

தனது தந்தையின் ஆசிரியர் வேலை காரணமாக கரீம்நகர் அருகே உள்ள சிரிசில்லாவில் தனது குழந்தைப் பருவத்தைக் கழித்தார் ஜானகி. அப்போதே இவர் சிறப்பாக சினிமா பாடல்களை பாடியதால், பலரும் இவரை பாட சொல்லிக் கேட்பார்களாம். குறிப்பாக இவரது சகோதரிகளும் நன்றாக பாடக் கூடியவர்கள்.

எஸ் ஜானகி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாதஸ்வர வித்வான் கடவல்லி பைடிசுவாமியின் நிர்ப்பந்தத்தின் பேரில் ஜானகி ஒரு வருடம் இசை பயின்றார்.

இசை பயிற்சி

இவர்களது குடும்பம் ராஜமுந்திரியில் இருந்தபோது, நாதஸ்வர வித்வான் கடவல்லி பைடிசுவாமியின் நிர்ப்பந்தத்தின் பேரில் ஜானகி ஒரு ஆண்டு இசை பயின்றார்.

அவர் நேரடியாக இவருக்கு தியாகராஜ கீர்த்தனையை கற்றுக் கொடுத்துள்ளார்.

ஒரு வருட இசைப்பயிற்சிக்கு பிறகு ஜானகி அந்த வகுப்புக்கு செல்லவில்லை. தனக்கு கர்நாடக இசையின் மீது ஆர்வம் இல்லை என்று கூறிய ஜானகி, இந்தி மற்றும் தெலுங்கு பாடல்களை சிறப்பாக பாடுவார்.

லதா மங்கேஷ்கர் தான் இந்தி இசையில் தனக்கு குரு என்று ஜானகி கூறியுள்ளார். லதா பாடும் பாணி தன்னை கவர்ந்ததாகவும், அவரது பாடலான ராசிக் பல்மா பாடலை தொடர்ந்து பாடிக்கொண்டே இருப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கண்டசாலா, லீலா, சுசீலா ஆகியோரின் பாடல்களையும் அவர் விரும்பி பாடுவாராம்.

எஸ் ஜானகி
படக்குறிப்பு, ஜானகி முதன்முதலில் 1957 ஆம் ஆண்டில் “விதியுடன் விளையாட்டு” என்ற தமிழ் திரைப்படத்திற்காக பாடினார்.

முதல் பாடல்

தனது தந்தை இறந்த பிறகு ஜானகி தன்னுடைய சகோதரர்களுடன் ஹைதராபாத்திற்கு சென்றுவிட்டார்.

இவரது மைத்துனரான கரிமெல்லா நரசிம்ம ராவ் ஒரு சிறந்த இசைக்கலைஞர். அவரது மகன் கரிமெல்லா பாலகிருஷ்ண பிரசாத்தும் குறிப்பிடத்தகுந்த இசைக்கலைஞர் ஆவார்.

தன் மைத்துனருடன் சேர்ந்து இசைக் கச்சேரிகளில் பங்கேற்று வந்த ஜானகியின் திறமை டாக்டர் சந்திரசேகரின் கவனத்தை ஈர்த்தது. இவர் ஒரு மிமிக்ரி கலைஞர். இவர்தான் ஜானகிக்கு ஏவிஎம் செல்ல சொல்லி சிபாரிசுக் கடிதம் வழங்கியது.

அங்கு சென்று ஜானகி தனது குரல் வளமையை காட்டிய உடனேயே அவரை பாடகராக பணியமர்த்திக் கொண்டனர்.

அப்படி ஜானகி முதன்முதலில் 1957 ஆம் ஆண்டில் “விதியுடன் விளையாட்டு” என்ற தமிழ் திரைப்படத்திற்காக பாடினார். டி சலபதி ராவ் இயக்கத்தில் பாடிய இந்தப் பாடல், படம் வெளியாகாததால் வெளியே வரவில்லை.

அதன்பிறகு, அதே ஆண்டில் திலக் இயக்கிய “எம்.எல்.ஏ” என்ற தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்பு ஜானகிக்கு கிடைத்தது. இதில் பெண்டியாலாவின் இயக்கத்தில், கண்டசாலாவுடன் இணைந்து ஒரு பாடலை பாடினார் இவர்.

எஸ் ஜானகி

பட மூலாதாரம், KS CHITHRA

படக்குறிப்பு, 1957 முதல் 2016 வரை பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள எஸ் ஜானகி, 2016 முதல் தான் பாடுவதை நிறுத்துவதாக அறிவித்து விட்டார்.

பெயர் வாங்கிக் கொடுத்த பாடல்

அதையடுத்து இவரை பிரபலமாக்கிய பாடல் எஸ்.எம்.சுப்பையா நாயுடு இயக்கிய சிங்கார வேலனே தேவா படத்தில் ‘சிங்கார வேலனே தேவா’ என்ற பாடல்.

அதில் நாதஸ்வரம் வாசித்த காரைக்குருறிச்சி அருணாச்சலம் தனக்கு போட்டியாக பாடல் பாட யாராவது இருக்கிறார்களா என்று சவால் விட்டார். இதனால் இந்த பாடலுக்காக லதா மங்கேஷ்கரையும் கூட அணுகியுள்ளார்கள்.

ஆனால் இறுதியில் இந்த பாடலை ஜானகிதான் பாடினார். இந்த பாடலில் அவர் பாடுகையில் அவரது குரலும், நாதஸ்வரத்தின் இசையும் ஒன்றுபோல் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு தெலுங்கிலும் “நீலிலா படேடா தேவா” என்று இதே பாடலை அவரே பாடினார்.

அப்போதிருந்து இசை உலகில் அவரது பயணம் உச்சத்திற்கு சென்றது. 1957 முதல் 2016 வரை பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள எஸ் ஜானகி, 2016 முதல் தான் பாடுவதை நிறுத்துவதாக அறிவித்து விட்டார்.

ஜானகியின் தனிப்பட்ட வாழ்க்கை

பாடகி ஜானகி ​​டாக்டர் சந்திரசேகரின் மகன் வி.ராமபிரசாத்தை திருமணம் செய்து கொண்டார். அவர் 1990 ஆம் ஆண்டில் இறந்துவிட்டார். இவர்களுக்கு முரளிகிருஷ்ணா என்ற ஒரு மகன் உள்ளார்.

அவருடைய அனைத்து நேர்காணல்களும் வெகு இயல்பாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் இருக்கும். அவரே, “வார்த்தைகள் அப்படியே எனது வாயிலிருந்து வெளியே வந்து விழுகிறது, அது எங்கிருந்து வருகிறது என்று எனக்கு தெரியாது” என கூறியிருப்பார்.

அவர் சொல்வது போலவே உண்மையில் அவர் பேசுவது அவ்வளவு நேர்மையானதாகவும், சுத்தமானதாகவும் இருக்கும்.