குழந்தைகள் உணவின் தரத்திலும் இந்தியா – ஐரோப்பா இடையே பாரபட்சம்: நெஸ்லே கூறுவது என்ன?

குழந்தைகளின் உணவில் அதிக அளவு சர்க்கரை சேர்க்கும் நெஸ்லே - அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
  • எழுதியவர், அனகா பதக்
  • பதவி, பிபிசி

‘வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு பங்களித்தல்’ என்பது நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தின் பயோ குறிப்பு. ஆனால் ஏப்ரல் 18 அன்று, சுவிஸ் சுயாதீன ஆய்வு நிறுவனமான ‘பப்ளிக் ஐ’ மற்றும் சர்வதேச குழந்தைகள் உணவு நடவடிக்கை நெட்வொர்க் `IBFAN’ வெளியிட்ட அறிக்கை ஒன்று நெஸ்லே நிறுவனம் குறிப்பிட்டுள்ள அதன் கொள்கைக்கு முரணாக உள்ளது.

ஏழை நாடுகளில் விற்கப்படும் நெஸ்லேயின் செரலாக் மற்றும் நிடோவில் (பால் பவுடர்) கூடுதல் சர்க்கரை சேர்க்க படுவதாகவும், சில சமயங்களில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அதன் குழந்தை உணவுப் பொருட்களிலும், நெஸ்லே 2.7 கிராம் சர்க்கரை சேர்ப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், ஐரோப்பிய சந்தையில் விற்பனை செய்யப்படும் நெஸ்லே 12-36 மாத குழந்தைகளுக்கான குழந்தை உணவுப் பொருட்களில் சர்க்கரை சேர்க்கப்படவில்லை. ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான சில உணவுகளில் சர்க்கரை சேர்க்கப்பட்டாலும், ஆறு மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கான உணவுகளில் சர்க்கரை இல்லை.

இந்த அறிக்கை இந்தியாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்தியாவில் உள்ள உணவு ஒழுங்குமுறை ஆணையமான ‘இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI)’ இந்த விஷயத்தை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளது என ஊடக செய்திகள் குறிப்பிட்டன.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) நெஸ்லே-யின் குழந்தை உணவுப் பொருட்களில் சர்க்கரை இருப்பதாக வெளியான தகவல் குறித்து ஆய்வு நடத்துமாறு FSSAI-க்கு வேண்டுகோள் விடுத்தது.

இதற்கிடையில், நெஸ்லே இந்தியா அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் “கடந்த ஐந்து ஆண்டுகளில், உணவுப் பொருளை பொறுத்து சர்க்கரையின் அளவை ஏற்கெனவே 30 சதவீதம் வரை குறைத்துள்ளோம். நாங்கள் எங்கள் நிறுவன கொள்கைகளை தவறாமல் மதிப்பாய்வு செய்கிறோம். ஊட்டச்சத்து, தரம், பாதுகாப்பு மற்றும் சுவை ஆகியவற்றில் சமரசம் செய்யாமல், எங்கள் தயாரிப்புகளில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்கிறோம். அதன் விளைவாக எங்கள் தயாரிப்புகளை புதுப்பித்து மேம்படுத்துகிறோம்.”

“இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எங்களின் தயாரிப்புகள் கோடெக்ஸ் தரநிலைகளுடன் (WHO மற்றும் FAO ஆகியவற்றால் நிறுவப்பட்ட ஆணையங்கள்) முழுமையாக, கண்டிப்பாக ஒத்துப் போவதை நாங்கள் உறுதி செய்கிறோம். மேலும், உள்ளூர் விவரக் குறிப்புகளையும் மனதில் வைத்து உணவுப் பொருட்களை தயார் செய்கிறோம்” என்று நெஸ்லே அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போது உலகளாவிய குழந்தை உணவு சந்தையில் நெஸ்லேயின் பங்கு சுமார் 20 சதவீதம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நெஸ்லேயின் மதிப்பு சுமார் 70 பில்லியன் டாலர்கள் ஆகும். அதேசமயம், 2022ல், இந்திய சந்தையில், நெஸ்லே குழந்தைகள் உணவான செர்லாக், 25 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகளின் உணவில் அதிக அளவு சர்க்கரை சேர்க்கும் நெஸ்லே - அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டிருப்பது என்ன?

’பப்ளிக் ஐ’ மற்றும் IBFAN வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவின் முக்கிய சந்தைகளில் விற்கப்படும் 115 நெஸ்லே தயாரிப்புகள் ஆய்வு செய்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

அவர்களின் ஆய்வு அறிக்கையில், ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவின் முக்கிய சந்தைகளில் விற்கப்படும் 115 நெஸ்லே தயாரிப்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் குறைந்தது 108 தயாரிப்புகளில் (94 சதவீதம்) சர்க்கரை சேர்த்திருப்பது கண்டறியப்பட்டது.

நெஸ்லே தயாரிப்புகளில் ஒவ்வொரு பரிமாறலுக்கும் (per serving) சராசரியாக 4 கிராம் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பிலிப்பைன்ஸில் விற்கப்படும் நெஸ்லே பொருட்களில் ஒரு பரிமாறலுக்கு 7.3 கிராம் என்ற அளவில் அதிக சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு ஆறு மாத குழந்தைகளுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

நெஸ்லே பொருட்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக காணப்பட்ட பிற நாடுகள்-

நைஜீரியா – ஒரு பரிமாறலுக்கு 6.8 கிராம்

செனகல் – 5.9 கிராம்/serving

வியட்நாம் – 5.5 கிராம் /serving

எத்தியோப்பியா – 5.2 கிராம் /serving

தென்னாப்பிரிக்கா – 4.2 கிராம் /serving

இந்தியாவை பொறுத்தவரையில் தயாரிப்புகளில் சேர்க்கப்பட்டுள்ள சர்க்கரையின் அளவு பேக்கேஜிங்கில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் பல ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் சர்க்கரை அளவு பற்றி எந்த தகவலும் கொடுக்கப்படவில்லை என்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இதில் முரணான விஷயம் என்னவென்றால், நெஸ்லே நிறுவனம் தனது இணையதளத்தில் ‘சர்க்கரையை தவிர்க்கவும்’ என அறிவுரை கூறியுள்ளது.

நெஸ்லே பேபி & மீ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ‘உங்கள் பச்சிளம் குழந்தைகளின் உணவில் புதிய சுவைகளை அறிமுகப்படுத்த 10 வழிகள்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், “உங்கள் குழந்தைக்கு உணவு தயாரிக்கும் போது சர்க்கரை சேர்ப்பது பரிந்துரைக்கப்படவில்லை. எனவே சேர்க்காதீர்கள். அவர்களுக்கு இனிப்பு பானங்கள் கொடுப்பதும் நல்லதல்ல.’ என்கிறது.

குழந்தைகளின் உணவில் அதிக அளவு சர்க்கரை சேர்க்கும் நெஸ்லே - அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நெஸ்லேவின் உற்பத்தி ஆலை

நிறுவனத்தின் இருவேறு தரநிலைகள்

உலகளவில் பார்க்கும்போது, நெஸ்லே தனது அனைத்து தயாரிப்புகளிலும் சர்க்கரை சேர்க்கவில்லை. குறிப்பிட்ட நாடுகளில் விற்பனையாகும் பொருட்களில் மட்டுமே சர்க்கரை சேர்த்துள்ளது என ஆய்வு அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளில் விற்கப்படும் தயாரிப்புகளில் சர்க்கரை சேர்க்கப்படவில்லை, ஆனால் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட கண்டங்களில் உள்ள ஏழை நாடுகளில், அதிக அளவு சர்க்கரை கொண்ட பொருட்களை விற்பனை செய்கிறது.

எனவே, நெஸ்லே ஏன் இரட்டைத் தரத்தைக் கடைப்பிடிக்கிறது, ஏன் ஏழை நாடுகளை வித்தியாசமாக நடத்துகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

FSSAI இன் முன்னாள் உறுப்பினர் மற்றும் உணவுக் கொள்கை சிக்கல்களில் நிபுணர் பெஜோன் மிஸ்ரா, “உணவுப் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியாவில் கடுமையான விதிகள் இல்லை” என்று கூறுகிறார்.

“நெஸ்லே பணக்கார நாடுகளையும் ஏழை நாடுகளையும் வித்தியாசமாக நடத்துகிறது என்பது உண்மைதான், ஆனால் அவ்வாறு செய்ய அனுமதிப்பது நாம் தான். அரசு ஒழுங்குமுறை அமைப்புகள் கடுமையாக நடந்து கொள்ள தவறுகின்றன” என்றும் அவர் கூறுகிறார்.

”நிறுவனங்களின் தயாரிப்புகளை சோதனை செய்ய உணவு மாதிரிகளைத் தோராயமாக தேர்வு செய்கிறார்கள். ஆய்வு முடிவுகள் குறித்து வெளிப்படைத்தன்மை இல்லை. பிரச்னை என்னவென்றால், உணவுப் பொருட்களில் எவ்வளவு சர்க்கரை சேர்க்கலாம் என்பது பற்றிய விதிகள் உள்ளன, ஆனால் அவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட சர்க்கரை அளவுகள் மிக அதிகம். இதன் மூலம் இந்த நிறுவனங்கள் அதிக அளவுக்கு சர்க்கரையை சேர்க்க முடியும். இது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.” என்கிறார் பெஜோன் மிஸ்ரா.

மேலும் அவர் பேசுகையில், “இந்திய உணவு ஒழுங்குமுறை ஆணையம் ஏன் மூன்றாம் தரப்பு ஆராய்ச்சியைச் சார்ந்திருக்கிறது?” என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.

“இது போன்ற ஆய்வை அரசு தான் நடத்த வேண்டும். FSSAI இன் வேலை, நாட்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான தரநிலைகளை அமைப்பதாகும். இவ்வாறு உருவாக்கப்பட்ட விதிகளை நடைமுறைப்படுத்துவதே மிகப்பெரிய பிரச்னை. முதலில் இந்த தயாரிப்பு பொருட்கள் சந்தைக்கு வந்தது எப்படி? ஒரு தயாரிப்பு தடையின்றி சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது என்றால், கண்டிப்பாக அரசு சோதனை செய்த பிறகே அங்கீகரித்திருக்க கூடும் என்பது பெற்றோர்களின் மனநிலை. எனவே பயமின்றி குழந்தை உணவுப் பொருட்களை வாங்குகிறார்கள். ” என்றும் கூறினார்.

‘பப்ளிக் ஐ’ யில் வெளியிடப்பட்ட அறிக்கையின் மதிப்பாய்வுகளை FSSAI விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த விவகாரத்தில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்தின் (FSSAI) நிலைப்பாட்டை தெரிந்து கொள்ள பிபிசி அவர்களை தொடர்பு கொண்டது. ஆனால் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை குறித்து பதிலளித்ததும் கட்டுரையில் சேர்க்கப்படும்.

குழந்தைகளின் உணவில் அதிக அளவு சர்க்கரை சேர்க்கும் நெஸ்லே - அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சர்க்கரை ஏற்படுத்தும் தாக்கம்

மருத்துவர் ராஜீவ் கோவில் மும்பையில் நீரிழிவு சிகிச்சை மையத்தை நடத்தி வருகிறார்.

குழந்தைகள் ஆரோக்கியத்தில் சர்க்கரை ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அவர் பேசுகையில் “குழந்தைகளுக்கு இயற்கையாகவே சுவை உணர்வு இருக்காது. தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக குழந்தைகளுக்கு உணவு அறிமுகப்படுத்தும் ஆரம்ப காலகட்டத்தில் சர்க்கரை அறிமுகப்படுத்தப்பட்டால், அவர்கள் வளரும் போது சர்க்கரையின் மீதான ஆசை அதிகரிக்கும். இது குழந்தையை சர்க்கரைக்கு அடிமையாக்கும். இதனால் அவர்களுக்கு சாதம் அல்லது காய்கறிகள் சாப்பிட பிடிக்காமல் போகும். எனவே, பல சமயங்களில் மற்ற உணவுப் பொருட்களை சாப்பிட குழந்தைகள் மறுக்கிறார்கள். ”

”மேலும் பெற்றோர்கள் பலர், என் குழந்தை வீட்டில் சமைக்கும் சாதாரண உணவுகளை சாப்பிடுவதில்லை, மில்க் ஷேக், சாக்லேட் அல்லது குளிர்பானம் மட்டுமே கேட்கின்றனர் என்று புலம்புவதை பார்க்க முடிகிறது. அதிகப்படியான சர்க்கரை நுகர்வு சிறிய குழந்தைகளை ஆக்ரோஷமாக மாற்றும். எப்போதும் எரிச்சல் உணர்வோடு இருக்கும் மன நிலையை ஏற்படுத்தும். அதனால்தான் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உணவில் சர்க்கரை சேர்க்க வேண்டாம் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம்” என்று மருத்துவர் கோவில் கூறுகிறார்.

உணவில் அதிகப்படியான சர்க்கரை சேர்ப்பது, குழந்தைகளை அந்த சுவைக்கு அடிமையாக்கும். இது எதிர்காலத்தில் அவரது உடல்நிலையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

அப்பல்லோ மருத்துவமனையில் நீரிழிவு நோய் நிபுணர் மருத்துவர் அபிஷேக் பிம்ப்ரலேகர் பேசுகையில், “உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கான சர்வதேசத் தலைநகராக இந்தியா மாறி வருகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பல இளைஞர்களுக்கு நான் சிகிச்சை அளித்து வருகிறேன். சிறு வயதில் அவர்கள் பின்பற்றிய உணவு பழக்கவழக்கங்கள் தான் நோய்க்கான மூலக் காரணமாக உள்ளது” என்றார்.

“குழந்தைப் பருவ உடல் பருமனுக்கு அதிகப்படியான சர்க்கரை நுகர்வு முக்கிய காரணி” என்று குறிப்பிடும் மருத்துவர் கோவில், “குழந்தைப் பருவ உடல் பருமன் பிரச்னையை எதிர்கொள்ளும் உலகின் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்” என்பதையும் சுட்டி காட்டுகிறார்.

மேலும் பேசிய அவர் “அரிசி, கோதுமை மற்றும் பழங்களில் இயற்கையாகவே குறிப்பிடும் அளவு சர்க்கரை காணப்படுகிறது. அதை தாண்டி நமக்கு சர்க்கரை உட்கொள்ள வேண்டிய அவசியமில்லை. உணவுப் பொருட்களின் லேபிள்களை பெற்றோர்கள் விழிப்புடன் படிக்க வேண்டும்” என்று அறிவுறுத்துகிறார்.

பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு அல்லது குழந்தைகள் உணவு தயாரிப்புகளில், சர்க்கரை சேர்க்கப்பட்டதாக லேபிளில் குறிப்பிட்டிருந்தால் அந்த உணவுப் பொருளை வாங்காமல் தவிர்க்க வேண்டும். மேலும், பிரக்டோஸ், சோளம், அதிக மாவுச்சத்து போன்ற பிற வகை சர்க்கரைகளும் உள்ளன, அவற்றை உணவு தயாரிப்பு நிறுவனங்கள் சர்க்கரை என்று குறிப்பிடாமல் வெவ்வேறு வழிகளில் குறிப்பிடப்படுகின்றன. ஆனால் இவை அனைத்திலுமே தனித்தனியாக சர்க்கரை கலந்திருக்கும் என்பதுதான் உண்மை.

எனவே, உணவு லேபிள்கள் தொடர்பான விதிகள் அறிமுகப்படுத்த வேண்டும். மேலும் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு என்ன கொடுக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள ஏதுவாக நிறங்களின் அடிப்படையில் ஒரு லேபிளிங் முறையை அரசாங்கம் கொண்டு வர வேண்டும்.’’ என்று மருத்துவர் கோவில் வலியுறுத்துகிறார்.

மறுபுறம், ப்ரீமிக்ஸ், பதப்படுத்தி, பேக் செய்யப்பட்ட உணவு அல்லது சாப்பிடத் தயாராக இருக்கும் இன்ஸ்டண்ட் உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது என்று மருத்துவர் பிம்ப்ரலேகர் எச்சரிக்கிறார்.

“சில நேரங்களில், உணவுப் பொருள் லேபிளில் சர்க்கரை பற்றிய தகவல்கள் மறைக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, நீரிழிவுக்கு நோயாளிகளுக்கு உகந்த பிஸ்கட்டுகள் என்று விளம்பரப்படுத்தப்படும் பிஸ்கட்களை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சர்க்கரை சேர்க்கப்பட்டு, பாக்கெட்டின் ஒரு ஓரத்தில் அது பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ’’ என்கிறார்.

குழந்தைகளின் உணவில் அதிக அளவு சர்க்கரை சேர்க்கும் நெஸ்லே - அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

சர்க்கரை உட்கொள்வதற்கான WHO வழிகாட்டுதல்கள்

பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் மொத்த ஆற்றல் உட்கொள்ளலில் 10 சதவீதத்திற்கு குறைவாக தினசரி சர்க்கரை உட்கொள்ளலை கட்டுப்படுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. மேலும் சர்க்கரை உட்கொள்ளல் அளவை 5 சதவீதமாக குறைத்தால், (அதாவது ஒரு நாளைக்கு சுமார் 6 டேபிள்ஸ்பூன் அளவுக்கு குறைக்கப்பட்டால்), அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறுகிறது.

இதை எளிதாக புரிந்து கொள்ள சில உதாரணங்கள் : 1 டீஸ்பூன் கெட்ச்அப்பில் சுமார் 4 கிராம் (சுமார் 1 டீஸ்பூன்) சர்க்கரை உள்ளது. ஒரு கேன் இனிப்பு சோடாவில் சுமார் 40 கிராம் (சுமார் 10 டீஸ்பூன்) சர்க்கரை உள்ளது.

உலக சுகாதார அமைப்பின் ஆய்வுகள்- சர்க்கரை நிறைந்த உணவுகளை குறைவாக உட்கொள்ளும் குழந்தைகளை விட அதிக சர்க்கரை-இனிப்பு பானங்களை உட்கொள்ளும் குழந்தைகளுக்கு உடல் பருமனாக இருக்கும் என்று சுட்டிக்காட்டுகிறது.

இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான மக்கள், அதாவது நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 11.4 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக லான்செட்டில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சுகாதார அமைச்சகம் நடத்திய ஆய்வில், 13 கோடியே 60 லட்சம் பேர் ஆரம்பகட்ட நீரிழிவு நோய் பாதிப்புடன் வாழ்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

குழந்தைப் பருவ உடல் பருமன் இந்தியா எதிர்கொள்ளும் மற்றுமொரு முக்கிய பிரச்னை. சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (NFHS-5) படி, 23 சதவீத ஆண்களும் 24 சதவீத பெண்களும் 25 அல்லது அதற்கு

மேற்பட்ட உடல் நிறை குறியீட்டு எண் (பிஎம்ஐ) கொண்டுள்ளனர். 2015-16 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், இது நான்கு சதவீதம் அதிகம்.

மேலும், இந்த புள்ளிவிவரங்களின்படி ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 3.4 சதவீதம் பேர் அதிக எடையுடன் இருப்பதாகவும், 2015-16 இல் இந்த எண்ணிக்கை 2.1 சதவீதமாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறது.

மருத்துவர் பிம்ப்ரலேகர், “குழந்தைகளின் உடல் பருமன் பிரச்னை நீரிழிவு நோய் முதல் மனச்சோர்வு வரை பல உடல்நல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். பதின்பருவ பெண்களுக்கு பாலிசிஸ்டிக் கருப்பை கோளாறு (PCOD) ஏற்பட வழிவகுக்கும். அல்லது அவர்களுக்கு பருவமடைதல் தாமதமாக நிகழும் அபாயம் உள்ளது. நம் சந்ததி உடல் பருமன் என்னும் மிகப்பெரிய பிரச்னையை எதிர் கொள்கிறது. எனவே பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களில் சேர்க்கப்படும் சர்க்கரை இந்த பிரச்னைக்கு முக்கிய காரணியாக இருக்கும்.” என்றார்.