ஆர்.சி.பி. வெல்வது எப்போது?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், பரத் சர்மா
  • பதவி, பிபிசி செய்தியாளர்

பெங்களூரு நகரில் கடும் வறட்சி நிலவுகிறது என்று யார் சொன்னது, ஆர்சிபி ரசிகர்களின் கண்களை பாருங்கள், கண்ணீர் குளமாக தேங்கி நிற்கிறது.

ஆர்சிபி அணி, பெங்களூருவின் தண்ணீர் நெருக்கடியை தீர்க்க தீவிரமாக முயற்சி செய்கிறது. ஆம், அங்கு ஒவ்வொரு வீட்டிலும் அதன் ரசிகர்கள் ஓயாமல் அழுகிறார்கள், அதன் விளைவாக நகரத்தில் நீர் மட்டம் அதிகரிக்கிறது. ஆர்சிபி சிந்தனை அற்புதமானது….

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட இதுபோன்ற கேலி, கிண்டல் வாக்கியங்கள் நகைப்பை ஏற்படுத்தும், ஆனால் நீங்கள் பெங்களூருவாசி என்றாலோ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் ரசிகர் என்றாலோ இந்த கிண்டல் வாக்கியங்கள் உங்கள் இதயத்தை புண்படுத்தும்.

இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகரம், டெக் சிட்டி என்ற பட்டங்களை பெற்ற பெங்களூரு, சமீபத்தில் குழாய்கள் வறண்டு, தாகத்தால் வாடும் மக்களின் கண்ணீரை எதிர்கொள்ளும் காலகட்டத்தைக் கண்டது. ஒரு சிறிய வீடு கட்ட கோடிக்கணக்கில் செலவாகும் அந்த நகரத்தில் தண்ணீர் கூட கிடைக்கவில்லை என்பது முரண்.

அண்மையில், நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் கூட, ‘டெக் சிட்டி’ யை டேங்கர் சிட்டியாக மாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. தண்ணீரை முன்வைத்து தேர்தல் பிரசாரங்கள் நடத்தப்பட்டன.

தண்ணீர் போன்ற மற்றொரு முக்கியமான விஷயத்துக்கும் பெங்களூரு நீண்ட காலமாக ஏங்கிக் கொண்டிருக்கிறது. அது `மாபெரும் வெற்றி’. ஐபிஎல் வெற்றி. இந்தியன் பிரீமியர் லீக்கின் வலிமையான பிராண்டுகளில் ஒன்றாக கருதப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஏன் ஐபிஎல்லில் சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை.

இது மிகப்பெரிய கேள்வி. இந்த கேள்விக்கான விடை சற்று சிக்கலானது. அதை பற்றி விரிவாக பேசுவோமா..

ஆர்.சி.பி. வெல்வது எப்போது?

பட மூலாதாரம், Getty Images

ஆர்சிபி நிர்வாகம், பாரம்பரியம் எப்படி?

இந்த அணியின் பாரம்பரியம், ராகுல் டிராவிட், கெவின் பீட்டர்சன், அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, ஷேன் வாட்சன் போன்ற பெரிய பெயர்களுடன் தொடர்புடையது. ஒரு காலத்தில் விராட் கோலி-கிறிஸ் கெய்ல்-ஏபி டி வில்லியர்ஸ் ஆகிய மூவரின் கூட்டணிக்காக பிரபலமானது. டு பிளெசிஸ் – கோலி – கிளென் மேக்ஸ்வெல் ஆகியோருக்காகவும் அறியப்பட்டது. மூவரின் செயல்பாடு மீது நம்பிக்கை அதிகரித்தது. ஆனால் அது நடக்கவில்லை.

தற்போதைய சூழலை தள்ளி வைத்துவிட்டு, இந்தக் கதை எங்கிருந்து தொடங்கியது என்பதைப் பற்றி பேசுவோம்..

2007 ஆம் ஆண்டு உலகின் பல பகுதிகளில் 20-20 ஓவர்களில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினர். அப்போது கிரிக்கெட் மைதானத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டிருந்தது. அதே ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில், இந்தியாவிலும் இதுபோன்ற ஒன்று நடந்தது.

பிசிசிஐ இந்தியன் பிரீமியர் லீக் அமைப்பதாக அறிவித்தது. மதுபானம் முதல் விமான நிறுவனங்கள் வரை அனைத்து தொழிலும் ஆர்வம் கொண்டிருந்த விஜய் மல்லையா, பெங்களூரு அணியை சுமார் 120 மில்லியன் டாலர்களுக்கு வாங்கினார்.

தற்போது ஆர்சிபி அணி டியாஜியோ குழுமத்தின் நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (யுஎஸ்எல்) நிறுவனத்தின் அணி என்பது குறிப்பிடத்தக்கது.

யுஎஸ்எல் மதுபான தொழில் பிரிவில் சர்வதேச அளவில் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்பிரிட்ஸ், பீர் மற்றும் ஒயின் வகைகளில் பல பிராண்டுகளை கொண்டுள்ளது. ஸ்காட்ச் விஸ்கி, IMFL விஸ்கி, பிராந்தி, ரம், வோட்கா, ஜின் மற்றும் ஒயின் போன்ற 12 கோடி கேஸ்களை விற்பனை செய்வதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜானி வாக்கர், வாட் 69, பிளாக் அண்ட் ஒயிட், ஸ்மிர்னாப் போன்ற டியாஜியோவின் முன்னணி பிராண்டுகளை இது இறக்குமதி செய்து, தயாரித்து விற்பனை செய்கிறது.

இந்நிறுவனம் அதன் போர்ட்ஃபோலியோவில் 18 பிராண்டுகளை கொண்டுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான கேஸ்களை விற்கிறது. அதன் நான்கு பிராண்டுகள் ஆண்டுதோறும் ஒரு கோடிக்கும் அதிகமான கேஸ்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகியின் பெயர் பிரதமேஷ் மிஸ்ரா.

ஆர்.சி.பி. வெல்வது எப்போது?

பட மூலாதாரம், ANI

அணியின் உரிமையாளரை பற்றி விவரித்தாயிற்று. இனி அணியைப் பற்றி பார்க்கலாம். ஆர்சிபி-யின் கேப்டன் தென்னாப்பிரிக்காவின் ஃபாஃப் டு பிளெசிஸ், அதன் தலைமை பயிற்சியாளர் ஜிம்பாப்வேயை சேர்ந்த ஆண்டி ஃப்ளவர். பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்பு ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கிரிஃபித் கையில் உள்ளது. அதே நேரத்தில் ஸ்ரீதரன் ஸ்ரீராம் பேட்டிங் மற்றும் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக உள்ளார்.

உரிமையாளர் மற்றும் அணியின் ஜாதகம் முடிந்தாயிற்று, இனி கிரிக்கெட் களத்தில் ஆர்சிபி அணியின் செயல்திறன் பற்றி பேசலாம்.

இந்த அணி 2009, 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் இறுதிப்போட்டி வரை எட்டியது, ஆனால் வெற்றியாளராக முடியவில்லை. இந்த மூன்று சீசனிலும் ஓரளவிற்கு சிறந்த அணியாக கருதப்பட்டது, ஆனால் மீதமுள்ள ஆண்டுகள் ஆர்சிபி-க்கு மிகவும் மோசமாக மாறியது. குறிப்பாக 2008, 2012, 2013, 2014, 2017, 2018, 2019, 2023 போன்ற ஆண்டுகளில், நட்சத்திர ஆட்டக்காரர்கள் நிறைந்த அணி, லீக் நிலையிலேயே வீழ்த்தப்பட்டது.

ஆர்சிபி அணி 2008 இல் தனது முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடியது. 16 ஆண்டுகள் கடந்தும், இன்று வரை ஆர்சிபிக்கு கோப்பையை முத்தமிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 17 ஆண்டுகள் கடந்தும் இந்த அணி வெற்றியை விட தோல்வியை அதிகமாக சந்திக்கிறது. புள்ளிப்பட்டியலில் அடிமட்டத்தை தொட்டு வருகிறது. எட்டு போட்டிகளில் ஏழில் தோல்வியடைந்து இரண்டு புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.

ஆர்.சி.பி. வெல்வது எப்போது?

பட மூலாதாரம், Getty Images

ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி ஏன் வெற்றி பெறவில்லை?

எளிமையான ஆனால் சற்றே கடுமையான பதில் இது: ஏனென்றால் அவர்கள் தங்களின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இந்த அணி பேட்ஸ்மேன் அடிப்படையில் மட்டுமே வெற்றி பெற விரும்புகிறது, அது சாத்தியமில்லை. இதுதான் ஆர்சிபி செய்யும் மிகப்பெரிய தவறு என்கின்றனர் நிபுணர்கள்.

பிரபல கிரிக்கெட் நிபுணரும் எழுத்தாளருமான அயாஸ் மேமன் கூறுகையில், ”வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்த்தால், இந்த அணியில் எப்போதும் நட்சத்திர ஆட்டக்காரர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் சில காரணங்களால் அவர்களால் பட்டத்தை வெல்ல முடியவில்லை. ப்ளேஆஃப் சுற்றுக்கு கூட மிகக் குறைந்த முறைதான் முன்னேறியது. அணியால் சரியான பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முடியவில்லை, ஒவ்வொரு சீசனிலும் இதேபோன்ற கதையே தொடர்கிறது.

ஆர்சிபியிடம் இந்த ஆண்டு சரியான கூட்டணி அமைப்பு இல்லை, ஏனெனில் அவர்களிடம் வலுவான சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை. அவர்களிடத்தில் சுழற்பந்து வீச்சு பலவீனமாக உள்ளது” என்று மேமன் பிபிசியிடம் கூறினார்.

இந்திய ஆடுகளங்களை பொறுத்தவரை, மெதுவான பந்துவீச்சு கூட போட்டிகளை வெல்ல உதவும் என்பது ஆச்சரியமான விஷயம். அப்படி இருந்தும் கூட, ஆர்சிபி அணி, இலங்கை பந்துவீச்சாளர் ஹசரங்கா மற்றும் இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரை அணியில் இருந்து விலக்கியது.

2024 ஏலத்தில் ஆர்சிபி ரூ. 20 கோடிக்கு மேல் செலவழித்தது, ஆனால் ஒரு சுழற்பந்து வீச்சாளரையும் வாங்கவில்லை. ஆறு வீரர்களை விலைக்கு வாங்கினர். அவர்களில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு ஆல்ரவுண்டர்கள் மற்றும் ஒரு பேட்ஸ்மேன் இருந்தனர்.

நாட்டின் பிரபல கிரிக்கெட் நிபுணரும் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான விஜய் லோக்பாலியும் இந்தக் குறையை சுட்டிக் காட்டினார்.

ஒரு போட்டியை வெல்ல, பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் சரியான கலவையை கிரிக்கெட் அணி கொண்டிருக்க வேண்டும். ஆர்சிபி-யிடம் பேட்ஸ்மேன் மட்டுமே இருக்கின்றனர். இவர்களால் ஏல நேரத்தில் சரியான விகிதத்தில் வீரர்களை தேர்வு செய்ய முடியவில்லை. போட்டியில் வெற்றி பெறுவதற்கு பந்து வீச்சாளர்கள் தேவை. 300 ரன் அடித்தாலும், பந்து வீச்சாளர்களால் 300 ரன்களை எடுக்க விடாமல் தடுக்க முடியவில்லை எனில் என்ன பலன்? “ என்றார்.

ஆர்சிபி அதன் மற்ற குறைபாடுகளைப் பார்க்க வேண்டுமானால், தரவுகள் மட்டுமே அதற்கு உதவும். ஐபிஎல் வரலாற்றில், ஆர்சிபியின் 6 பேட்ஸ்மேன்கள் மட்டுமே ஆயிரம் ரன்களை கடந்து உள்ளனர், இதில் இந்திய வீரர் விராட் கோலி மட்டுமே இந்தியர். இவரைத் தவிர ஏபி டி வில்லியர்ஸ், க்ளென் மேக்ஸ்வெல், கிறிஸ் கெய்ல், ஜாக் காலிஸ், ஃபாஃப் டுபிளெசிஸ் ஆகியோர் இந்த இலக்கத்தை தொட்டவர்கள்.

மறுபுறம், ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸில், இதுவரை 12 வீரர்கள் ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர், அதில் ஏழு பேர் இந்தியர்கள். அதேபோல், மும்பை இந்தியன்ஸில் பத்து வீரர்கள் இந்த எண்ணிக்கையை தொட்டனர். அவர்களில் ஏழு பேர் இந்தியர்கள். சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகியவற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவும், உள்நாட்டு திறமைகளை ஆட்டத்தில் பயன்படுத்தவும் நிபுணர்கள் ஆர்சிபி- க்கு அறிவுறுத்துகின்றனர்.

அயாஸ் மேமன் கூறுகையில், “மேலாண்மை, கலாசாரம் என்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் இந்த விஷயத்தில் சிஎஸ்கே சற்று வித்தியாசமாக தெரிகிறது. அந்த அணிக்கென்று சொந்த கலாசாரம் உள்ளது.

அதேபோல் மும்பை அணி பெரிய திறமைசாலிகளை குறி வைக்கிறது. பெரிய நட்சத்திர ஆட்டக்காரராக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் திறமை இருந்தால் போதும். மும்பை இந்தியன்ஸ் புதிய வீரர்களுக்கு விலை கொடுக்கிறது, ராஜஸ்தான் ராயல்ஸும் அதையே ஓரளவுக்கு செய்கிறது.

ஆர்.சி.பி. வெல்வது எப்போது?

பட மூலாதாரம், Getty Images

மிகப்பெரிய முதலீட்டுத் தவறை ஆர்சிபி செய்கிறதா?

மிகப்பெரிய முதலீட்டுத் தவறை ஆர்சிபி செய்கிறதா? அனைத்து விலையுயர்ந்த முட்டைகளையும் ஒரே கூடையில் வைப்பதா?

ஆர்சிபி வெற்றி பெறாததற்கு இந்த அணி தேர்ந்தெடுத்த சில நட்சத்திர ஆட்டக்காரர்களை மட்டுமே நம்பியிருப்பது முக்கிய காரணம். போட்டியில் முக்கியமான தருணங்கள் வரும்போது இந்த நட்சத்திர வீரர்கள் அழுத்தத்தின் காரணமாக சிறப்பாக செயல்பட முடிவதில்லை” என்று மூத்த பத்திரிகையாளர் தர்மேந்திர பந்த் கூறுகிறார்.

இரண்டாவது காரணம் சமநிலை இல்லாமை. அவர்களிடம் நல்ல ஸ்பின்னர் இல்லை. சாஹல் ஏன் நீக்கப்பட்டார் என்பது எனக்குப் புரியவில்லை.

பந்த் பேசுகையில், “ஆர்சிபி டாப் ஆர்டரில் நல்ல பேட்ஸ்மேன்கள் உள்ளனர், ஆனால் அவர்கள் விளையாடாதபோது, மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள் அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அழுத்தமான சூழ்நிலைகளில், டெத் ஓவர்கள் அல்லது சேஸ் நடக்கிறது. எனவே டு ப்ளெஸ்ஸிஸ், கோலி, மேக்ஸ்வெல் ஆகியோர் பெவிலியனில் அமர்வது வழக்கம், தினேஷ் கார்த்திக் முடிந்த அளவு முயற்சி செய்கிறார், ஆனால் அவர் மட்டும் தனியாக சிறப்பாக எதுவும் சாதிக்க முடியாது.

ஆர்சிபிக்கு சில துரதிர்ஷ்டம் உள்ளதாகவே சொல்லத் தோன்றுகிறது. ஐபிஎல்-க்கு முன்பு நடந்த உலகக் கோப்பையில் மிகவும் சவாலான இன்னிங்ஸ்களை விளையாடி பாராட்டுகளைப் பெற்றுக் கொண்டிருந்த கிளென் மேக்ஸ்வெல், ஐபிஎல்-லில் திணறி வருகிறார்.

விஜய் லோக்பாலி கூறுகையில் “மேக்ஸ்வெல் மீண்டும் அதே இன்னிங்ஸை போல அற்புதமாக ஆடுவது அரிது. இது மிகப்பெரிய பிரச்னை. எந்த ஒரு பேட்ஸ்மேனும் நிலைத்தன்மையுடன் சிறப்பாக விளையாடுவது எளிதானது அல்ல. அவர் ஸ்டிரைக் ரேட் 200 இல் இருப்பார் என்று நீங்கள் கருதலாம். ஒவ்வொரு போட்டியிலும் அவர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினால், இது நடக்காது. மேக்ஸ்வெல்லைப் போல் கோலியும் தனது பேட்டின் பலத்தால் மட்டும் ஆர்சிபியை வெல்ல முடியாது, இதை ஆர்சிபி நிர்வாகம் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும்.

அயாஸ் மேமனின் கூற்றுப்படி, நிச்சயமாக கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன், ஆனால் இது ஒரு குழு விளையாட்டு. அணியால் ரன் குவிக்க முடியவில்லை என்பதே யதார்த்தம்.

சராசரியாக 220-230 ரன்கள் குவிக்க கூடிய பிட்சுகளில், ஆர்சிபி அணி 180 ரன்கள் எடுத்துள்ளது, அதில் கோலி 70-80 ரன்கள் எடுத்துள்ளார், ஆனால் இது உதவாது. அணியில் பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்படவில்லை. ரன்கள் எடுக்கப்படவில்லை. ரன்கள் எடுத்தாலும் கூட எதிரணி ரன் எடுப்பதை தடுக்கும் பந்துவீச்சு இல்லை.

கோலியின் நிலைமையை லோக்பாலி நன்றாக விளக்குகிறார். “ஆர்சிபிக்கு கோலி எப்போதும் முக்கியமானவர், அவர் ரன்கள் குவித்துள்ளார். ஆனால் இந்திய கிரிக்கெட் அணியில் கோலியின் பங்கு வேறு, ஆர்சிபியில் அது வேறு. இந்திய கிரிக்கெட் அணியில் கோலி சீக்கிரமே அவுட் ஆகிவிட்டால், அவருக்கு முன்னும் பின்னும் வரும் மற்ற பேட்ஸ்மேன்கள் இன்னிங்ஸை பார்த்துக் கொள்வார்கள். ஆனால் ஆர்சிபியில் அப்படி தெரியவில்லை. கோலி அவுட்டாகி பெவிலியன் திரும்பும் போது, அந்த அணியால் இப்போட்டியில் வெற்றி பெற முடியாது என்றே கிட்டத்தட்ட கருதப்படுகிறது.

ஆர்.சி.பி. வெல்வது எப்போது?

பட மூலாதாரம், Getty Images

வலுவான பிராண்ட், பலவீனமான அணி?

ஆர்சிபி அணியில் உள்ள வெளிநாட்டு வீரர்களாலும் சிறப்பாக எதையும் செய்ய முடியவில்லை. ஃபாஃப் டு பிளெசிஸ் அவர்களின் கேப்டன், அவர் சில நல்ல இன்னிங்ஸ்களை விளையாடினார், ஆனால் கடந்த சீசனைப் போல் இல்லை.

உலகின் சிறந்த இளம் வீரர்களில் ஒருவராக கருதப்படும் கேமரூன் கிரீன், மும்பையில் இருந்து இங்கு வந்துள்ளார். அவராலும் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலுமே சிறப்பாக எதையும் செய்ய முடியவில்லை.

பந்துவீச்சில் கூட, முகமது சிராஜ் அல்லது பெர்குசன் மந்தமாக தெரிகிறார்கள். கிரிக்கெட்டை விட மற்ற இடங்களில் அணி அதிக கவனம் செலுத்துவதால் தானோ?

பெங்களூரு அணி புகழில் யாருக்கும் குறைந்ததில்லை. பிராண்ட் மதிப்பில் அணி அதிக கவனம் செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஏலத்தின் போது பல முறை, புகழ்பெற்ற வீரர்கள் மீது பந்தயம் வைக்கப்பட்டது. மீதமுள்ள பணத்தை மீதமுள்ள இடத்தை எவ்வாறு நிரப்புவது என்பது சரியாக அவர்களுக்குத் தெரிந்திருந்தால் இந்த உத்தி நன்றாக இருக்கும். ஆனால் இது குறித்து ஆர்சிபி தற்போது கவலை அடைந்துள்ளதாக தெரிகிறது.

ஆர்.சி.பி. வெல்வது எப்போது?

பட மூலாதாரம், ANI

ஆர்சிபி தனது பிராண்டின் மீது ஏன் அதிக கவனம் செலுத்துகிறது?

மூத்த பிராண்ட் நிபுணரும் பெங்களூரைச் சேர்ந்தவருமான ஹரிஷ் பிஜூர் இது குறித்து சற்று வித்தியாசமான கருத்தைக் கொண்டுள்ளார். ஐபிஎல் என்பது கிரிக்கெட் அல்ல, அது பொழுதுபோக்கு என்று அவர் கூறுகிறார்.

“ஐ.பி.எல்., கிரிக்கெட்டை மையப்படுத்தாத போது, முழு கவனமும் எதற்கு.. இதில் பாதி கவனம் கிரிக்கெட்டிலும் பாதி பொழுதுபோக்கிலும் இருக்கும். எப்போதாவது அணி கண்டிப்பாக ஜெயிக்கும், ஆனால் பிராண்ட் பொறுத்தவரை வெற்றி மட்டுமே மதிப்பை அதிகரிக்காது. பொழுதுபோக்கு மூலம் கூடுதல் வெற்றி கிடைக்கும் என்றால், ஐபிஎல்லில் அதை துளியும் தவிர்க்க முடியாது. ஐபிஎல்லில் முற்றிலுமான கிரிக்கெட்டோ அல்லது சலிப்பூட்டும் கிரிக்கெட்டோ இல்லை” என்று கூறியுள்ளார்.

உண்மையில், பிராண்ட் மதிப்பின் அடிப்படையில் ஐபிஎல் என்பது ஒரு வலுவான பெயர். 2024 ஆம் ஆண்டில், அதன் பிராண்ட் மதிப்பு 28 சதவீதம் அதிகரித்து 10.7 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. பிராண்ட் ஃபைனான்ஸ் அறிக்கையின்படி, மும்பை இந்தியன்ஸ் 87 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் முதலிடத்தில் உள்ளது, சிஎஸ்கே, கேகேஆர்-ஐ தொடர்ந்து ஆர்சிபி நான்காவது இடத்தில் உள்ளது மற்றும் அதன் மதிப்பு 70 மில்லியன் டாலர் ஆகும். கோப்பையை வென்ற அணிகள் உட்பட ஆறு அணிகள் இதைவிட குறைந்த மதிப்பீட்டில் பின்னால் உள்ளன.

ஐபிஎல்லின் முதல் ஆறு வருடங்களில் ஆர்சிபி அணி மீட்டிங், இன்-ஸ்டேடியா மீட்டிங் மற்றும் ஈவினிங் பார்ட்டிகளில் தான் கலந்து கொண்டதாக பிஜூர் கூறுகிறார். ஆரம்பத்தில் ஆட்டத்தில் கவனம் செலுத்தினாலும் பணம் வரவே வியாபாரத்தில் கவனம் அதிகரித்தது. மேலும் ஐபிஎல் என்பது வணிகத்தின் பெயர்.

அணி வெற்றி பெறாத போது, எப்படி சம்பாதிக்கிறது?

ஆர்.சி.பி. வெல்வது எப்போது?

பட மூலாதாரம், ANI

இதற்கு பிஜூர் பதிலளிக்கையில், “ஆர்சிபி ஐபால் ( iBall), ஸ்டேடியம், டிவி, இன்டர்நெட் மூலம் சம்பாதிக்கிறது. உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் அதைப் பார்க்கிறார்கள். இரண்டாவதாக, அவர்கள் மற்றவர்களை விட அதிக பணம் பெறுகிறார்கள். மூன்றாவதாக, ஒரு அணியாக பார்க்கும் போது, அவர்களின் மார்க்கெட் கொல்கத்தா அல்லது வங்காளமாகத்தான் இருக்கும். ஆனால் அவர்கள் மும்பை இந்தியன்ஸ் மீது கவனம் செலுத்தும் போது அது முக்கியமாக மும்பையாக தான் இருக்கும். ஆர்சிபியில் யாராவது பந்தயம் கட்டினால், அவர் உலகம் முழுவதையும் அணுகலாம், ஏனென்றால் 20 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் பெங்களூருவில் வசிக்கிறார்கள், மேலும் அவர்கள் அனைவரும் தங்கள் விண்ணப்பத்தில் ஏதாவது ஒன்றை விரும்புகிறார்கள்.” என்கிறார்.

ஆனால் கிரிக்கெட் வல்லுநர்கள் ’வலுவான பிராண்ட்’ என்ற கருத்தை ஏற்கவில்லை.

விஜய் லோக்பாலி இதுகுறித்து கேள்வி எழுப்புகிறார், “அப்படி என்ன பிராண்ட்? ஐபிஎல்-இல் வெல்லவில்லை என்றால் எதற்கு பிராண்ட் மதிப்பு? பிராண்ட் சிஎஸ்கே, பிராண்ட் மும்பை இந்தியன்ஸ் ஆகியோர் தலா ஐந்து பட்டங்களை வென்றுள்ளனர். நீங்கள் ஏன் ஆர்சிபியை வணங்க வேண்டும்? அவர்கள் இரண்டு முறை மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கூட கோப்பையை வென்றது, இவர்களுக்கு கிரிக்கெட் பின்னணி இல்லை என்று முன்பு கூறப்பட்டது. ஆனால் அவர்கள் தற்போது நன்றாக விளையாடி வருகிறார்கள்.

லோக்பாலியின் கூற்றுப்படி, நீங்கள் சிஎஸ்கேவைப் பார்த்தால், அவர்கள் தங்களுக்குப் பொருத்தமான சிறந்த வீரர்களை தேர்ந்தெடுத்ததாக வரலாறு கூறுகிறது. அவர்களுக்கென தனி பாணி உண்டு. அவர்கள் தன் பலத்தை பார்க்கிறார்கள். அவர்கள் சொந்த மைதானத்தில் விளையாட கூட கடுமையாக பயிற்சி செய்கிறார்கள். ஆனால், ஆர்சிபி தங்கள் சொந்த மைதானத்தில் கூட தோல்வியைத் தொடர்கிறது.

ஆர்.சி.பி. வெல்வது எப்போது?

பட மூலாதாரம், Getty Images

மகளிர் அணி ஏமாற்றமளிக்கவில்லை

எப்படி இருப்பினும், இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற WPL போட்டியின் இறுதிப் போட்டியில், பெங்களூரு மகளிர் அணி டெல்லி மகளிர் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி லீக் போட்டியில் ஆட்டமிழந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தது. ஆனால் ஸ்மிருதி மந்தனா அணி ஏமாற்றமளிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.

முதலில், எலிமினேட்டரில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது, இறுதிப் போட்டியில், அனைத்து கிரிக்கெட் விமர்சகர்களையும் தவறென்று நிரூபித்து ஆட்டத்தை கைப்பற்றியது.