← முகப்பு செய்திகள்

ஹோர்மூஸில் இரானின் ‘கொசுப் படை’ படகுகள் அமெரிக்காவுக்கு சவால் விடுப்பது எப்படி?

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 30 பார்வைகள்
ஹோர்மூஸில் இரானின் ‘கொசுப் படை’ படகுகள் அமெரிக்காவுக்கு சவால் விடுப்பது எப்படி?

பட மூலாதாரம், NurPhoto via Getty Images

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் இரானின் கடற்படையை "முற்றிலும் அழித்துவிட்டதாகவும்", அதனிடம் தற்போது "இயந்திரத் துப்பாக்கி பொருத்தப்பட்ட சிறிய படகுகளாக மட்டுமே உள்ளது" என்றும் கூறினார்.

இருப்பினும், சில மேற்கத்திய ஆய்வாளர்களால் "கொசுப் படை" என்று அழைக்கப்படும் இந்த "சிறிய படகுகள்" கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

உலகப் பொருளாதாரத்தைப் பாதித்து, இரான் உடனான மோதலைக் கைவிடுமாறு அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக, உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான ஹோர்மூஸ் நீரிணையில் கடுமையான இடையூறுகளை ஏற்படுத்த, இரானிய ஆட்சிக்கு இந்தப் படகுகள் பல மாதங்களாக உதவி வருகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த 'கொசுப் படை' என்பது என்ன?

பாரம்பரியக் கடற்படைப் போருக்காக இந்தப் படை வடிவமைக்கப்படவில்லை.

பட மூலாதாரம், NurPhoto via Getty Images

'தொந்தரவு செய், சூழ்ந்துகொள், குழப்பம் ஏற்படுத்து மற்றும் சீர்குலை'

சிறிய மற்றும் வேகமாக தாக்கும் திறன் உள்ள படகுகளைக் கொண்ட இந்தப் படை, 1980-களில் இரான் – இராக் போரின் போது இரானிய ஆட்சியால் உருவாக்கப்பட்டது.

இரான் இராக்குடன் போரில் ஈடுபட்டிருந்தாலும், 1980-களின் "டேங்கர் போர்"காலத்தில் மோதல் பாரசீக வளைகுடா வரை பரவியது. எண்ணெய் போக்குவரத்தைப் பாதுகாக்க இதில் அமெரிக்காவும் ஈடுபட்டது.

அமெரிக்கக் கடற்படையுடனான மோதல்களில், இரானின் வழக்கமான கடற்படை பெரும் இழப்புகளைச் சந்தித்தது.

இதன் பின்னர், சிறிய வேகமான படகுகள் கொண்ட இந்தக் படை, சக்திவாய்ந்த கடற்படைகளை எதிர்கொள்ளும் புதிய போர் உத்தியின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது.

இரானின் பரந்த உத்தியில் படகுகள் மட்டுமல்லாமல் ஏவுகணைகள், டிரோன்கள், கடல் கண்ணிவெடிகள், கடற்கரை ஏவுதளங்கள் மற்றும் அண்டை நாடுகளில் உள்ள ஆதரவு அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தாக்குதல்களும் அடங்கும்.

இரானின் சக்திவாய்ந்த இஸ்லாமிய புரட்சிகர காவல்படையால் (ஐஆர்ஜிசி) இயக்கப்படும் இந்தப் படை, பாரம்பரியக் கடற்படைப் போருக்காக வடிவமைக்கப்படவில்லை. மாறாக கப்பல் போக்குவரத்தை "தொந்தரவு செய்யவும், முற்றுகையிடவும், குழப்பவும், சீர்குலைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று டென்னசி பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரும், அணுசக்தி இரானுக்கு எதிராக ஒன்றிணைப்பு என்ற அமைப்பின் மூத்த ஆலோசகருமான சயீத் கோல்கர் தெரிவித்தார்.

மேலும், "வழக்கமான கடற்படைப் போரில் அமெரிக்காவைத் தோற்கடிக்க முடியாது என்பதை ஐஆர்ஜிசி நன்கு அறியும்" என்று அவர் கூறுகிறார்.

அதற்குப் பதிலாக, வணிகக் கப்பல்களைக் குறிவைப்பதன் மூலமும், ஹோர்மூஸ் நீரிணையை ஒரு அபாயகரமான இடமாக மாற்றுவதன் மூலமும், வளைகுடா வழியாகச் செல்லும் கப்பல் நிறுவனங்களுக்கான செலவுகளையும் அபாயங்களையும் அதிகரிப்பதையே இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

வணிகக் கப்பல்களுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்துவது, கடலில் கண்ணிவெடிகளை வைப்பது மற்றும் பல திசைகளிலிருந்து அதிவேகமாகப் படகுகளை அனுப்புவது போன்றவை இந்தப் படையின் தந்திரங்களில் அடங்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதிவேகத் தாக்குதல் படகுகளில் பெரும்பாலும் இயந்திரத் துப்பாக்கிகள், ராக்கெட்டுகள் அல்லது ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருக்கும்.

இவற்றில் பல படகுகள் இரான் அரசால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டவை என்றாலும், மற்றவை முன்பு மீன்பிடிக்க பயன்படுத்தப்பட்ட மீன்பிடி படகுகள் உள்ளிட்ட பொது பயன்பாட்டிலிருந்து மாற்றியமைக்கப்பட்டவை ஆகும்.

இந்தப் படகுகள் மலிவானவை மற்றும் எளிதில் மாற்றப்படக்கூடியவை என்று வாஷிங்டனில் உள்ள ஹட்சன் இன்ஸ்டிடியூட் அமைப்பின் மூத்த ஆய்வாளர் கான் கசாபோக்லு ஒரு சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

"குறைந்த செலவில் எதிரியின் மதிப்புமிக்க சொத்துக்களுக்கும் உலகளாவிய கடல்சார் பொருளாதாரத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் அதே வேளையில், வணிக மற்றும் ராணுவக் கப்பல்களை அச்சுறுத்த இரானுக்கு இது உதவுகிறது'' என்று கசாபோக்லு கூறுகிறார்.

அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுத்து, இரான் உடனான போரைக் கைவிடச் செய்வதும், எதிர்காலத் தாக்குதல்களைத் தடுப்பதுமே இதன் ஒட்டுமொத்த குறிக்கோள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தப் படகுகளை ரேடார் மூலம் கண்டறிவது கடினம். மேலும் இவற்றைத் தொடர்ந்து கண்காணிக்க ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள் அல்லது ரோந்து விமானங்கள் தேவைப்படுகின்றன.

இந்தப் படையின் சரியான எண்ணிக்கை என்னவென்று தெரியவில்லை, ஏனெனில் பல படகுகள் இரானின் தெற்கு கடற்கரையோரத்தில் உள்ள குகைகள் மற்றும் நிலத்தடி சுரங்கங்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்தப் படகுகளின் எண்ணிக்கை 500 முதல் ஆயிரத்திற்கும் மேல் இருக்கலாம் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இரான் அரசு இந்த 'கொசுப் படை'யைக் கொண்டு வழக்கமான கடற்படைப் பயிற்சிகளை நடத்தி வருகிறது.

ஹோர்மூஸ் நீரிணையில் அமெரிக்க கடற்படைக்கு சவால் விடுக்கும் இரானின் ‘கொசுப் படை’

பட மூலாதாரம், Getty Images

'கடல்சார் கொரில்லா போர்'

ஆய்வாளர்கள் பெரும்பாலும் இரானின் இந்த அணுகுமுறையை 'கடலில் நடத்தப்படும் கொரில்லா போர்முறை' என்று விவரிக்கின்றனர்.

திறந்தவெளி கடற்பகுதியில் இரானின் அதிவேகப் படகுகள் சிக்கினால், அமெரிக்கக் கடற்படையால் அவற்றை எளிதாக அழிக்க முடியும்.

ஆனால் ஐஆர்ஜிசி நேரடி மோதல்களைத் தவிர்ப்பதில் மிகவும் கவனமாக இருப்பதாக கோல்கர் கூறுகிறார்.

"நேரடி மோதலைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக மின்னல் வேகத் தாக்குதல்கள், முற்றுகையிடுதல், கண்ணிவெடிகள், ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் சிறிய படகுகளைப் பயன்படுத்தி அமெரிக்கா மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கான செலவுகளை அதிகரிக்க ஐஆர்ஜிசி முயல்கிறது" என்கிறார் கோல்கர்.

இரான் படகுகளை இழந்தால், படகுகளை விரைவாகவும் மலிவாகவும் மாற்ற முடியும்.

இதற்கு நேர்மாறாக, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் வணிகப் போக்குவரத்தைப் பாதுகாக்க விலையுயர்ந்த கப்பல்களையும் விமானங்களையும் பயன்படுத்த வேண்டியுள்ளது.

கப்பல்களை அழிப்பதை விட, அங்கு கடுமையான ஆபத்து இருப்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்குவது கூட காப்பீட்டுச் செலவுகளை அதிகரிக்கும் மற்றும் நிறுவனங்களை அந்தப் பாதையைத் தவிர்க்கச் செய்யும் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

கடலில் கண்ணிவெடிகள் இருப்பதாக விடுக்கப்படும் அச்சுறுத்தல் கூட போக்குவரத்தை மெதுவாக்கலாம் அல்லது நிறுத்தலாம்.

கப்பல்களை அழிப்பதை விட, அங்கு கடுமையான ஆபத்து இருப்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்குவது கூட காப்பீட்டுச் செலவுகளை அதிகரிக்கும் மற்றும் நிறுவனங்களை அந்தப் பாதையைத் தவிர்க்கச் செய்யும் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

பட மூலாதாரம், NurPhoto via Getty Images

இரானின் வியூகம் பலனளிக்கிறதா?

ஹோர்மூஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து, போருக்கு முந்தைய அளவை விட சரிந்துள்ளது.

தற்போது இந்தப் பாதை வழியாக ஒரு நாளைக்கு சுமார் 10 கப்பல்கள் மட்டுமே கடந்து செல்வதாக 'ஹோர்மூஸ் நீரிணை மானிட்டர்' என்ற நிகழ்நேரக் கண்காணிப்புத் தளம் காட்டுகிறது.

இது வழக்கமான ஒரு நாளைக்கு சராசரியாகச் செல்லும் 60 கப்பல்களில் சுமார் 8% மட்டுமே ஆகும்.

இந்தப் பிராந்தியத்தைக் கண்காணிக்கும் பிரிட்டன் ராயல் கடற்படைக் குழுவின் கூற்றுப்படி, ஒட்டுமொத்தப் போக்குவரத்து போருக்கு முந்தைய நிலையை விட 90%-க்கும் குறைவாகவே உள்ளது.

ஏப்ரல் 8 அன்று அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையே போர்நிறுத்த உடன்பாடு ஏற்பட்டபோது, கப்பல் போக்குவரத்தில் ஒரு சிறிய முன்னேற்றம் ஏற்பட்டது.

ஆனால் சில நாட்களுக்குப் பிறகு, இரானுக்கு உள்ளே வரும் மற்றும் வெளியே செல்லும் கப்பல்கள் அமெரிக்க தடுத்தபோது அந்த முன்னேற்றம் தலைகீழாக மாறியது

மேலும், ஹோர்மூஸ் நீரிணையில் தாக்குதல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கடந்த வாரம், சர்வதேச கப்பல் போக்குவரத்தை கண்காணிக்கும் பிரிட்டனின் கடல்சார் வர்த்தகச் செயல்பாட்டு மையம், கத்தாரின் தோஹாவிற்கு வடகிழக்கே சுமார் 23 கடல் மைல் (43 கி.மீ) தொலைவில் சரக்குக் கப்பல் ஒன்று "அடையாளம் தெரியாத ஏவுகணையால் தாக்கப்பட்டதாக" தெரிவித்தது.

இதனால் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது, ஆனால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தது.

அந்தக் கப்பல் அமெரிக்கக் கொடியின் கீழ் பயணம் செய்ததாகவும், அது அமெரிக்காவிற்குச் சொந்தமானது என்றும் இரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் பின்னர் தெரிவித்தது.

இந்தத் தடையால் சுமார் 1,500 கப்பல்களும், 20,000 மாலுமிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சர்வதேச கடல்சார் அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

பிபிசிதமிழ்

மேலும் செய்திகள்
செய்திகள்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுகவின் ஒன்றியம், நகரம் என
06 Jun 2026
செய்திகள்
அதிமுக நிர்வாகிகள் பலர் தவெகவில் தொடர்ந்து இணைந்து வருகிறார்கள். இதே போல பாஜக நிர்வாகிகளும் அக்கட்சியிலிருந்த
06 Jun 2026
செய்திகள்
IND vs AFG Test Day 1: Shubman Gill and KL Rahul smash
06 Jun 2026
செய்திகள்
IND vs AFG Test: KL Rahul sparks internet debates after using calm
06 Jun 2026
செய்திகள்
திமுகவின் பொதுச் செயலாளராக உள்ள துரைமுருகன், தனது பதவியை துறக்கவிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் அரசியல் வட்
06 Jun 2026
செய்திகள்
இந்திய பெண்ணுக்கு எதிராக சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் ரவி மோகனின்
06 Jun 2026
முக்கிய செய்திகள்
1
அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்ய எடுத்த முடிவு குறித்து தான் கவல
தமிழ் · 06 Jun 2026
2
“இதைப் பதிவு செய்து உங்களிடம் வைத்துக் கொள்ளுங்கள். 2029 இல் நாமல
தமிழ் · 06 Jun 2026
3
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள
4
Weekly Horoscope: இங்கு 2026 ஜூன் 07 ஆம் தேதி முதல் 2026 ஜூன் 13
5
அதிமுக நிர்வாகிகள் பலர் தவெகவில் தொடர்ந்து இணைந்து வருகிறார்கள்.
6
முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) இயக்குநரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜ
தமிழ் · 06 Jun 2026
7
புதிதாக உருவாக்கப்படும் அரசியல் கூட்டணிகளால் எந்த மாற்றமும் ஏற்பட
தமிழ் · 06 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net