← முகப்பு செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவிற்குச் சொந்தமானது எனக் கருதப்பட்டு, தற்போ

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 56 பார்வைகள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவிற்குச் சொந்தமானது எனக் கருதப்பட்டு, தற்போ
பசிலின் மல்வானை மாளிகையை முற்றுகையிட்ட பல்கலைக்கழக மாணவர்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவிற்குச் சொந்தமானது எனக் கருதப்பட்டு, தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ள மல்வானை காணி மற்றும் சொகுசு இல்லத்தை உடனடியாகப் பல்கலைக்கழகங்களின் பயன்பாட்டிற்கு அல்லது பொதுமக்களின் நலத்திட்டங்களுக்கு வழங்கக் கோரி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் (IUSF) இன்று அதிரடியான முற்றுகைப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

கம்பஹா – மல்வானை பகுதியில் 16 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்டமான சொகுசு இல்லம் மற்றும் காணி, கடந்த காலங்களில் பசில் ராஜபக்சவின் நிதியில் நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறி நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

எனினும், நீதிமன்ற விசாரணைகளின்போது குறித்த காணி மற்றும் கட்டிடத்திற்குத் தாம் உரிமையாளர் அல்லவென பசில் ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினர் தெரிவித்திருந்த நிலையில், இந்தச் சொத்து நீண்டகாலமாக “உரிமையாளர் அற்றது” என வர்ணிக்கப்பட்டு வந்தது.

இந்தச் சட்ட ரீதியான இடைவெளியைப் பயன்படுத்தி, குறித்த பெறுமதியான சொத்தை அரசாங்கம் முறையாகப் பொறுப்பேற்று மக்கள் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதே மாணவர்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது.

இன்று காலை குறித்த பகுதிக்கு பேரணியாகச் சென்ற மாணவர்கள், பொலிஸாரின் வீதித்தடைகளையும் மீறி காணிக்குள் நுழைந்து அதனை ஆக்கிரமிக்கும் “நேரடிப் போராட்டத்தை” ஆரம்பித்தனர்.

நாட்டின் பல்கலைக்கழகங்கள் தங்குமிட வசதி, இடப்பற்றாக்குறை மற்றும் ஆய்வுக்கூட வசதிகள் இன்றி பாரிய நெருக்கடிகளைச் சந்தித்து வரும் நிலையில், ஊழல் மூலம் ஈட்டப்பட்டதாகக் கருதப்படும் இவ்வாறான பிரம்மாண்டமான சொத்துக்கள் வீணாகக் கைவிடப்பட்டிருப்பதை ஏற்க முடியாது என மாணவர் பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

குறிப்பாக, ஊழல் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்களை மீட்டு மக்களிடம் ஒப்படைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இதுவரை அத்தகைய சொத்துக்கள் தொடர்பில் எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என மாணவர்கள் குற்றம் சுமத்தினர்.

இந்த மாளிகையை ஒரு கல்வி நிறுவனமாகவோ அல்லது மாணவர் விடுதியாகவோ மாற்றுவதன் மூலம் பல்கலைக்கழக உட்கட்டமைப்பு வசதிக் குறைபாடுகளுக்கு ஒரு தீர்வைப் பெற முடியும் என அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net