← முகப்பு செய்திகள்

ரங்க நிஷாந்தவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையை ஏற்க முடியாது

🕐 05 May 2026 📂 செய்திகள் 24 பார்வைகள்
ரங்க நிஷாந்தவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையை ஏற்க முடியாது

நிதி அமைச்சின் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்தவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையை நாம் நிராகரிக்கின்றோம். இது தொடர்பில் சுயாதீனமான இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும். நச்சுயியல் மற்றும் கைரேகை பரிசோதனை அறிக்கைகள் வெளிவருவதற்கு முன்னரே இது தற்கொலை எனத் தீர்மானிப்பது பாரிய சந்தேகங்களைத் தோற்றுவிப்பதாக பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இந்த மரணம் தொடர்பில் அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டுகள் நிலவும் சூழலில், ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவின் அறிக்கையை ஏற்க முடியாது எனவும், நாட்டின் சிரேஷ்ட சட்ட மருத்துவ அதிகாரிகளைக் கொண்டு புதிய விசாரணைக் குழு நியமிக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

கொழும்பில் திங்கட்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அதிர்ச்சியூட்டும் வகையில் உயிரிழந்த நிதி அமைச்சின் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்தவின் பிரேத பரிசோதனையை இளங்கரத்ன பண்டா, அஜித் ஜயசேன, சம்பத் சேனைதுங்க மற்றும் காமிணி திசாநாயக்க ஆகிய சட்ட மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினர் மேற்கொண்டனர்.

உடலில் ஏற்பட்ட பல வெட்டுக்காயங்கள் காரணமாக அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டு மரணம் சம்பவித்ததாகவும், இது தற்கொலையாக இருக்கலாம் என்றும் இக்குழு முடிவு செய்துள்ளது.

இது கொலையா அல்லது தற்கொலையா என்ற விவாதம் சமூகத்தில் நிலவி வரும் நிலையில், முழுமையான பிரேத பரிசோதனையை மேற்கொள்ளாமல் இக்குழு ஏன் இத்தகைய முடிவுக்கு வந்தது என்று நாம் கேட்க வேண்டியுள்ளது.

குறிப்பாக, இந்த மரணம் தொடர்பான சந்தேகம் அரசாங்கத்தின் பக்கம் திரும்பியுள்ள பின்னணியிலும், பிரேத பரிசோதனைக்கு முன்னரே இது தற்கொலை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்த பின்னணியிலும், மருத்துவக் குழு ஒரு முழுமையான பரிசோதனையைச் செய்திருக்க வேண்டும்.

ரங்க நிஷாந்தவே கணினி மோசடியைக் கண்டுபிடித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்தவர். ஒரு பொலிஸ் விசாரணையில் ஆரம்ப முறைப்பாடு மிக முக்கியமானது. அவ்வாறிருக்கையில், முறைப்பாட்டாளர் மர்மமான முறையில் உயிரிழப்பது விசாரணையைத் தடுக்கும் செயலாகும். இத்தகைய சூழலில் யார் ஒருவருக்கும் சந்தேகம் ஏற்படுவது இயல்பானது.

நோயியல் அல்லது நச்சியல் அறிக்கைகள் வெளிவருவதற்கு முன்பே, இது தற்கொலை என்று மருத்துவக் குழு கூறியுள்ளது. இரத்த மற்றும் சிறுநீர் மாதிரிகளைப் பரிசோதிக்க நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

ஒருவருக்கு விஷம் கொடுத்து மயக்கமடையச் செய்து, பின்னர் காயங்களை ஏற்படுத்தி தற்கொலை போல சித்தரிக்க முடியுமா என்பதை உறுதிப்படுத்த அந்த அறிக்கைகள் அவசியம்.

அவை வரும் வரை எவராலும் இது தற்கொலை என்று உறுதிபடக் கூற முடியாது. அதனால்தான் மருத்துவக் குழுவும் தற்கொலையாக இருக்கலாம் என்று மேலோட்டமாகக் கூறியுள்ளது.

கத்தியில் உள்ள கைரேகைகள் யாருடையது? ரங்க நிஷாந்தவைத் தவிர வேறு ஒருவருடைய கைரேகைகள் அங்கு இருந்ததா என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இரசாயன பகுப்பாய்வு அறிக்கை வருவதற்கு முன்னரே முடிவுகளை அறிவித்தது ஏன்? ஏதேனும் ஒரு பலமான சக்தியின் அழுத்தம் இதற்கு இருந்ததா என்ற சந்தேகம் எழுகிறது. ஆடைகளில் இருந்த இரத்தக் கறைகள் அவருடையது மட்டும்தானா அல்லது வேறு ஒருவருடையதும் இருந்ததா என்பதும் ஆராயப்பட வேண்டும்.

இந்த மருத்துவர்கள் வெளிநாடுகளில் பயிற்சி பெற்றவர்கள். அமெரிக்காவிலும் அவுஸ்திரேலியாவிலும் சாட்சியங்கள் இன்றி அவசரமாக முடிவுகளை எடுப்பதையா கற்றுக் கொடுத்தார்கள் என்று கேட்க விரும்புகிறோம்.

உலகில் தற்கொலைக்கு பல பொதுவான வழிகள் இருக்கும்போது, மூன்று முக்கிய நரம்புகளைத் துண்டித்து தற்கொலை செய்வது என்பது அரிதானது.

ஒரு நரம்பை வெட்டும்போது ஏற்படும் கடுமையான வலி மற்றும் இரத்தப்போக்கின் போது, மற்ற நரம்புகளையும் வெட்டிக்கொள்ளும் மன உறுதி ஒருவருக்கு இருக்குமா என்பது சந்தேகத்திற்குரியது.

மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி முறைப்பாடு செய்துள்ளார். நீதவானும் சுகாதாரப் பணிப்பாளரும் கூட இது குறித்துக் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில், முழுமையான விசாரணை இன்றி முடிவெடுத்தது ஏன்? இந்தக் குழுவில் உள்ள இருவர் பல்கலைக்கழகக் காலத்தில் ஜே.வி.பி அமைப்பின் தீவிர செயற்பாட்டாளர்களாக இருந்தவர்கள்.

ஒரு மருத்துவர் தற்போதைய சபாநாயகரின் நெருங்கிய நண்பர். அரசாங்கத்தின் மீது சந்தேகம் இருக்கும்போது, பக்கச்சார்பற்ற குழுவை நியமிக்காமல் தமக்கு நெருக்கமானவர்களை நியமித்தது ஏன்?

மனைவியின் முறைப்பாடு, மரணத்தில் உள்ள மர்மம், முழுமையான பிரேத பரிசோதனை செய்யாமை போன்ற காரணங்களால் இந்த அறிக்கையை நாங்கள் நிராகரிக்கிறோம்.

அரசாங்கம் உண்மையை வெளிப்படுத்த விரும்பினால், இலங்கையின் சிரேஷ்ட சட்ட மருத்துவ அதிகாரிகளைக் கொண்ட ஒரு சுயாதீன குழுவின் மூலம் இரண்டாவது பிரேத பரிசோதனையை நடத்த வேண்டும். இல்லையெனில், அரசாங்கத்தின் மீதான சந்தேகம் ஒருபோதும் நீங்காது என்றார்.

மேலும் செய்திகள்
செய்திகள்
KS Bharat has officially retired from international cricket at the age of
46 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக காங்கிரஸ்
3 மணி நேரம் முன்னர்
செய்திகள்
ஜூன் 8-ம் நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவித்துள்ளதால், திமுக கூட்டணியில்
3 மணி நேரம் முன்னர்
செய்திகள்
வடகொரிய அதிபரின் மகளான இளவரசி ஜூஏ, அந்நாட்டு Gen-Z இளைஞர்கள் மத்தியில் ஸ்டைல் ஐகானாக மாறியுள்ளார்.
3 மணி நேரம் முன்னர்
செய்திகள்
IND vs AFG Test: Why Rishabh Pant Lost Test Vice-Captaincy? Assistant coach
3 மணி நேரம் முன்னர்
செய்திகள்
மின்வாரிய அலுவலகத்தில் Hard Disk-கள் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை கொண்டு வர
4 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
Rare Planetary Transit On 11 June 2026 After 100 Years: ஜூன் 11
2
உலக அரங்கில் எப்போதுமே கணிக்க முடியாத அதிரடி அரசியல் ஆட்டங்களை ஆட
தலையங்கம் · 13 நிமிடங்கள் முன்னர்
3
அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட எல்.என்.எஸ் சம
தமிழ் · 13 நிமிடங்கள் முன்னர்
4
இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்
தமிழ் · 27 நிமிடங்கள் முன்னர்
5
காஸா மீது நேற்று நள்ளிரவில் இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழித் தாக
தமிழ் · 39 நிமிடங்கள் முன்னர்
6
KS Bharat has officially retired from international cricket at th
செய்திகள் · 46 நிமிடங்கள் முன்னர்
7
சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்
தமிழ் · 58 நிமிடங்கள் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net