யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் முகாமைத்துவப் பணிகளை மேற்கொள்வதற்கு ‘நம்பிக்கை பொறுப்பு நிதியமொன்றை’ தாபிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையின் கலாச்சாரச் செயற்பாடுகளின் மையமாகவும் யாழ்ப்பாணத்தின் கலாச்சார மரபுரிமைகளை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் மற்றும் போற்றிப் பேணுவதற்குமான இருதரப்பு ஒத்துழைப்புக்களை விரிவுபடுத்தும் நோக்கில், இந்திய அரசின் நிதியுதவியுடன் 11 மாடிகளைக் கொண்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
2022.02.21 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்தின் பிரகாரம் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தைப் பேணிச் செல்வதற்காகக் கையொப்பமிடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்ததத்தின்படி, குறித்த கலாச்சார மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பாக தீர்மானமெடுப்பதற்கு ஒருங்கிணைந்த முகாமைத்துவக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இவ் ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளுக்கமைய கருத்திட்டம் நிர்மாணம் பூர்த்தியடைந்த பின்னர், இக்கலாச்சார மத்திய நிலையம் இலங்கை அரசாங்கத்தின் ஊடாக யாழ் மாநகர சபைக்குப் பாரப்படுத்தல் வேண்டும். அவ்வாறு பாரப்படுத்தப்பட்ட பின்னர், முகாமைத்துவப் பணிகளை மேற்கொள்வதற்காக நம்பிக்கைப் பொறுப்பு நிதியமொன்றை தாபிப்பதற்கு குறித்த தரப்பினர்கள் உடன்பாடு தெரிவித்துள்ளனர்.
அதற்காக தயாரிக்கப்பட்டுள்ள நம்பிக்கைப் பொறுப்புறுதி வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கமைய, யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் முகாமைத்துவ செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொண்டு செல்வதற்கான நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தைத் தாபிப்பதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.