மத்திய கிழக்குப்பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்கனவே எட்டப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் தவிடுபொடியாகி, மீண்டும் முழு அளவிலான போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் படைகள் ஈரானிய ராணுவ நிலைகள் மீது தொடர்ந்து இரண்டாவது நாளாக வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ள சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராக ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஈரானின் மிக முக்கியப் பொருளாதார ஆதாரமாகத் திகழும் ‘கார்க் தீவு’ (Kharg Island) உள்ளிட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்புகளைத் தங்களின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
அதிபர் டிரம்பின் இந்த அதிரடி மிரட்டலுக்கு ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்புக் குழுத் தலைவர் மிகக் கடுமையான வார்த்தைகளில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். அமெரிக்கா தங்களின் இறையாண்மை மீது கை வைக்க நினைத்தால், டொனால்ட் டிரம்ப் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மிகவும் “வலுவான மற்றும் வலிக்க வலிக்கப் புண்படுத்தும் பதிலடியை” (Stronger and more painful response) அமெரிக்கா எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் எச்சரித்துள்ளார். ஈரானின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்ற நினைக்கும் அமெரிக்காவின் கனவு ஒருபோதும் பலிக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மறுபுறம், “இன்று இரவு ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதலை அமெரிக்கா தொடுக்கும்” என்று சமூக வலைதளப் பதிவின் மூலம் டிரம்ப் மீண்டும் போர்ப் பதற்றத்தை ஏற்றியுள்ளார். ஈரானின் கடற்படை, விமானப்படை மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ள அவர், ஈரான் உடனடியாக அமைதி ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று பிரகடனப்படுத்தியுள்ளார் . இந்தத் தொடர் மோதல்களால் ஓமன் கடல் மற்றும் ஹார்முஸ் நீரிணைப் பகுதிகளில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்து, உலகளாவிய எரிபொருள் சந்தையில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த இரு வல்லரசு நாடுகளுக்கு இடையே முற்றியுள்ள மோதல் போக்கு சர்வதேச நாடுகளைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. சீனா, ரஷ்யா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் உடனடியாக ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, இருதரப்பும் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. தற்போதைய சூழலில் இந்தத் தாக்குதல்கள் நீடித்தால் அது உலகப் பொருளாதாரத்தில் பெரும் மந்தநிலையை உருவாக்குவதோடு, உலக நாடுகளின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியை 2.5 சதவீதமாகக் குறைத்துவிடும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.