கல்கமுவ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (3) போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்ட கைதிகள் இருவர் பொலிஸாரிடமிருந்து தப்பியோட முயன்ற நிலையில், அவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த கைதி ஒருவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
கல்கமுவ பகுதியில் கடந்த சனிக்கிழமை (2) போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். குறித்த இரு சந்தேக நபர்களையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்கமுவ நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பொலிஸ் நிலையத்திலிருந்து பொலிஸ் ஜீப் வண்டியில் அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர்.
இதன்போது, கைவிலங்கிடப்பட்டிருந்த இரு சந்தேக நபர்களும் திடீரென ஜீப் வண்டியிலிருந்து குதித்து தப்பியோட முயற்சித்துள்ளனர். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற பொலிஸ் அதிகாரிகள், சந்தேக நபர்களை மடக்கிப் பிடிக்கும் நோக்கில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 32 வயதுடைய கல்கமுவ பகுதியை சேர்ந்த சந்தேக நபர் ஒருவரின் முழங்காலுக்குக் கீழ் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த நபர் உடனடியாக கல்கமுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
சம்பவம் இடம்பெற்ற போது இரு சந்தேக நபர்களினதும் கைகள் இணைக்கப்பட்டு கைவிலங்கிடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்கமுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.