← முகப்பு செய்திகள்

‘பிரச்சினை வேண்டாம் என ஒதுங்கி போனால் நாம் பயந்தவர்கள் என்று நினைப்பது தவறு’ – மலையக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் ராஜாராம்

🕐 04 May 2026 📂 செய்திகள் 14 பார்வைகள்
‘பிரச்சினை வேண்டாம் என ஒதுங்கி போனால் நாம்  பயந்தவர்கள் என்று நினைப்பது தவறு’ – மலையக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் ராஜாராம்

இந்த நாட்டில் மலையகத் தமிழர்களை ஒரு கூட்டத்தினர் கேவலமாக பேசுகின்றனர், இன்னுமொரு கூட்டத்தினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். எத்தனை காலம் நாம் அடி வாங்கிக்கொண்டிருப்பது? திருப்பி அடிப்பதற்கு எவ்வளவு நேரம் செல்லும்? ஆனால் அமைதியாக இருந்தால் மலையக சமூகத்தினர் பயந்தவர்கள் என்று நினைப்பது தவறு. ஆகவே நாம் எமது உரிமைகளுக்காக ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மலையக மக்களுக்காக அனைத்துத் தரப்பினரும் ஒன்று சேர்ந்து உரிமைகளுக்காக போராடுவோம் எனத் தெரிவித்தார் மலையக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் இராதாகிருஷ்ணன் இராஜாராம். இரத்தினபுரி கஹவத்தை நீலகாமம் தோட்டப்பிரில் தொழிலாளர் குடும்பமொன்று அமைத்த குடியிருப்பை தோட்ட நிர்வாகியின் பாதுகாப்பு படை எனக் கூறப்படும் குண்டர் கும்பலோன்று கடந்த ஏப்ரல் மாதம் சேதபடுத்தியது மாத்திரமின்றி குறித்த குடியிருப்பாளரையும் தாக்கி காயப்படுத்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக ‘ நாம் நீலகாமம்’ எனும் இயக்கம் உருவாக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமையன்று அட்டன் மணிக்கூட்டு கோபுரத்தின் அருகில் மக்கள் கவனஈர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், மலையக தொழிற்சங்க அமைப்புகளை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்கள். இரத்தினபுரி மாவட்ட அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதற்கு தலைமை தாங்கி தொடர்ந்து உரையாற்றிய ராஜாராம், தொழிலாளர் குடியிருப்பு தாக்கப்பட்ட சம்பவம் இரத்தினபுரி மாவட்டத்தில் தானே நடந்தது என எவரும் இங்கு அமைதியாக இருக்க முடியாது.அப்படி இருப்பவர்கள் மலையக மக்களாக இருக்க முடியாது. ஆகையால் தான் இந்த நாட்டில் நாம் எங்கே வாழ்ந்தாலும் உணர்வுள்ளவர்களாக இருக்க வேண்டும் என நீலகாமம் சம்பவத்துக்கு அட்டனில் நீதி கேட்கிறோம். இந்த போராட்டம் தொடர்ந்து எல்லா இடங்களிலும் நடக்கும். நீலகாமம் மக்கள் நாதியற்றவர்கள் கிடையாது. நாம் இருக்கின்றோம். இன்று இங்கு நடக்கும் இந்த போராட்டம் அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கும். மலையக மக்களை யாராவது சீண்டினால் அது பெருந்தோட்டம் முழுக்க உணர்வுகளை தட்டியெழுப்பும் என்பதை உரியோர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நாம் உழைப்பதற்கு மாத்திரம் இங்கு வரவில்லை. போராட்டம் செய்து உரிமைகளைப் பெற்றவர்கள். நாம் எமது போராட்டத்துக்கு என்ன ஆயுதத்தை கையிலெடுக்க வேண்டும் என்பதை தோட்ட நிர்வாகிகளே தீர்மானிக்க வேண்டும். நாம் எதற்கும் தயார். நீலகாமம் தோட்டத்தில் தொழிலாளி குடும்பம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு குடியிருப்பு சேதப்படுத்தப்பட்டதற்கு காரணகர்த்தாக்கள் இருபதுக்கும் மேற்பட்ட குண்டர்கள். ஆனால் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் நாம் இதை இலகுவில் விடப்போவதில்லை. எமது சமூகத்துக்கு எங்கு பிரச்சினையென்றாலும் அங்கு முன்னிற்போம் என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net