பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷவினர் சிறைச்சாலைக்குச் சென்று பிள்ளையான் போன்ற நபர்களுடன் இரகசியமாகப் பேசிய விடயங்கள் என்ன என்பதை அவர்கள் உடனடியாக நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் வியாழக்கிழமை (21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் நீதிமன்றத்தில் வெளிவந்த தகவல்களுக்குப் பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தின் ஊடாகப் பல்வேறு பதில்களை வழங்கி வருகின்றார். சிறைச்சாலைகளுக்குச் சென்று, தேவாலயங்கள் மீதான குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடைய பிள்ளையான் போன்ற நபர்களை நாமல் ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நேரில் சந்தித்து இரகசியமாகக் கலந்துரையாடிய விடயங்கள் என்ன என்பதை அவர்கள் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது.
நீதிமன்றத்தில் இந்தத் தகவல்கள் உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கப்படும் வரை, இவ்வாறானதொரு விடயம் பொதுவெளிக்கு வராமல் மறைந்திருந்தது. தற்போது நீதிமன்றத்தின் ஊடாக இந்த உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளதால், குற்றவாளிகளின் உண்மையான நடத்தை எத்தகையது என்பதை நாட்டின் மக்கள் மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளனர்.
நாட்டில் சட்டத்தின் ஆட்சி தற்பொழுது மிகச் சரியான முறையில் நிலைநாட்டப்பட்டு வருகின்றது. இதன் காரணமாகவே அரசியல் பின்புலத்தைக் கொண்ட குற்றவாளிகள் அனைவரும் தற்போது பெரும் அதிர்ச்சியடைந்து கலக்கமடைந்துள்ளனர். இவ்வாறான பாரிய குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உடனடியாகத் தண்டிக்கப்பட வேண்டும். அதை விடுத்து, நாமல் ராஜபக்ஷ போன்றவர்கள் சமூக வலைத்தளங்களில் வெறும் பதிவுகளை இடுவதால் மாத்திரம் இதிலிருந்து தப்பித்துவிட முடியாது.
பிள்ளையானுக்கு மிகவும் நெருக்கமாகச் செயற்பட்ட அசாத் மௌலானா வழங்கிய சாட்சியங்களின் பின்னரே இந்த விவகாரங்கள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. எமது நாட்டின் நீதித்துறையும் புலனாய்வுப் பிரிவினரும் மிகவும் அர்ப்பணிப்புடன் இந்த விசாரணைகளைச் சுதந்திரமாக முன்னெடுத்து வருகின்றனர். எனவே, நாட்டு மக்களுக்கு வழங்கிய ஆணையின்படி, எத்தகைய அரசியல் தசாப்தங்களைக் கொண்ட குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்களுக்குரிய சட்டப்படியான தண்டனைகள் நிச்சயம் பெற்றுக்கொடுக்கப்படும் என்றார்.