← முகப்பு செய்திகள்

காக்ரோச் ஜனதா கட்சி ஒரு வலிமையான அரசியல் இயக்கமாக உருவெடுக்குமா?

🕐 1 மணி நேரம் முன்னர் 📂 செய்திகள் 4 பார்வைகள்
காக்ரோச் ஜனதா கட்சி ஒரு வலிமையான அரசியல் இயக்கமாக உருவெடுக்குமா?

பட மூலாதாரம், ANI

கடந்த ஜூன் 6ஆம் தேதி, டெல்லி ஜந்தர் மந்தரில் 'காக்ரோச் ஜனதா கட்சி' ஒரு போராட்டத்தை நடத்தியது.

'காக்ரோச் இஸ் பேக்' (Cockroach is Back) என்ற சமூக ஊடகக் கணக்கில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று ஏராளமான மக்கள் இந்தப் போராட்டத்தில் இணைந்தனர். மிகக் குறுகிய காலத்தில் இரண்டு கோடிக்கும் அதிகமான ஃபாலோயர்களை இந்த சமூக ஊடக கணக்கு பெற்றிருப்பது, அது பொது மக்களின் கவனத்தை எவ்வளவு தூரம் ஈர்த்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

போராட்டக்காரர்கள் தங்கள் முக்கிய கோரிக்கையில் உறுதியாக இருந்தனர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இந்தக் கோரிக்கையுடன், ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அரசுக்கு காக்ரோச் ஜனதா கட்சி கெடு விதித்துள்ளது.

பொது மக்களிடையே அதிகரிக்கும் ஆதரவு காரணமாகப் பலரும் இப்போது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகின்றனர்: காக்ரோச் ஜனதா கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?

சில அரசியல் நிபுணர்கள், இந்த இயக்கம் இன்னும் முதிர்ச்சியடையவில்லை என்றும், தெளிவான திசையின்றி இருப்பதாகவும் கருதுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை, அனுபவம் வாய்ந்த தலைவரோ அல்லது நன்கு அறியப்பட்ட அரசியல் பிரமுகரோ இந்த இயக்கத்தை வழிநடத்தாததுதான் இதன் மிகப்பெரிய பலவீனங்களில் ஒன்று.

இருப்பினும், அனைவரும் இந்தக் கருத்தை ஏற்கவில்லை. சி.ஜே.பி. எழுப்பிய பிரச்னைகளுக்குக் கிடைத்த வலுவான மக்கள் ஆதரவு, இந்த இயக்கத்திற்கு நல்ல எதிர்காலம் இருப்பதையும், அது காலப்போக்கில் அதிக செல்வாக்கு மிக்கதாக மாறக்கூடும் என்பதையும் உணர்த்துவதாக சில அரசியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

இந்தக் குழுவின் திட்டங்களைப் புரிந்துகொள்ள, பிபிசி ஹிந்தி சேவையின் செய்தியாளர் தில்நவாஸ் பாஷா, சி.ஜே.பி.யின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸிடம் பேசினார்.

காக்ரோச் ஜனதா கட்சி, தங்கள் முக்கியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பிறகு என்ன செய்யவுள்ளது என்று அவரிடம் கேட்டபோது, "எதிர்கால நடவடிக்கைகளை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து முடிவு செய்வோம். இது இன்னல்களுக்கு ஆளாகும் அனைத்து இளைஞர்களுக்குமான ஒரு தளம்," என்று பதிலளித்தார்.

சிரமங்களை எதிர்கொள்ளும் இளைஞர்கள் ஒன்றிணைந்து தங்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்கக்கூடிய ஒரு கூட்டுத் தளமாகவே இந்த இயக்கம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதாக சௌரவ் தாஸ் விளக்கினார்.

மேலும் பேசிய அவர், "எதிர்காலத்தை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து முடிவு செய்வோம். தற்போதைய எதிர்காலம் என்பது இன்றைய எதிர்காலமே. தர்மேந்திர பிரதான் தானாகவே பதவி விலக வேண்டும் அல்லது பிரதமர் மோதி அவரைப் பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்பதே இன்று நாங்கள் முன்வைக்கும் கோரிக்கை" என்று தெரிவித்தார்.

சி.ஜே.பி ஆதரவாளர் ஒருவர் போராட்டத்தின்போது 'நான் ஒரு கரப்பான் பூச்சி' என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தியுள்ளார்

பட மூலாதாரம், MANAN VATSYAYANA/AFP via Getty Images

ஜூன் 6 போராட்டம் மக்களின் ஆதரவை உணர்த்தியுள்ளதா?

காக்ரோச் ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், இந்தப் போராட்டத்தில் திரண்ட பெருந்திரளான மக்கள், தங்கள் இயக்கத்திற்கு வலுவான ஆதரவையும் அங்கீகாரத்தையும் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

அவரது கூற்றுப்படி, டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த இந்தப் போராட்டத்திற்குப் பெரும் கூட்டம் வரும் என்று ஏற்பாட்டாளர்கள் ஏற்கெனவே எதிர்பார்த்திருந்தனர்.

அதை அவர், "இங்கு இவ்வளவு திரளான மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. வேறு நகரங்களில் இருந்ததால் சிலரால் வர முடியவில்லை. ஆனால், இந்த இயக்கம் சரியான பாதையில் நகர்கிறது என்பதற்கான உறுதிப்படுத்தலை இதன் மூலம் பெற்றுள்ளோம்," என்று விவரித்தார்.

இருப்பினும், இந்தப் போராட்டத்தில் சரியாக எத்தனை பேர் பங்கேற்றனர் என்பது குறித்து சமூக ஊடகங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.

அங்கு நேரில் இருந்த பிபிசி செய்தியாளரின் தகவலின்படி, சனிக்கிழமையன்று கூடியிருந்த கூட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் இருந்தனர்.

ஆனால், மற்றொரு காக்ரோச் ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளரான அபிஷேக் ரன்கா, ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது அதைவிட அதிகமான எண்ணிக்கையைக் குறிப்பிட்டார்.

அதுகுறித்துப் பேசியபோது, "மக்கள் முறையாக எண்ணப்படவில்லை. ஆனால் அந்த எண்ணிக்கை நிச்சயமாக ஆயிரக்கணக்கில் இருக்கும்," என்றார் அவர்.

மறுபுறம், மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான சரத் குப்தா, இந்தக் கூட்டமே ஒரு முக்கியமான அரசியல் செய்தியை வெளிப்படுத்துவதாகக் கூறுகிறார்.

சரத் குப்தாவின் கருத்துப்படி, "சனிக்கிழமை ஜந்தர் மந்தரில் மக்கள் கூடிய விதம், தற்போதைய கட்டமைப்பின் மீது மக்களிடையே அதிருப்தியும் கோபமும் நிலவுவதைக் காட்டுகிறது."

நிர்பயா வழக்கின்போது நீதி கோரி ஏராளமான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடியபோது காணப்பட்ட பொது மக்களின் எதிர்வினையுடன் இந்தப் போராட்டத்தை குப்தா ஒப்பிட்டார்.

அந்தக் காலகட்டத்தைப் போலவே, வானிலை நிலவரத்தைப் பொருட்படுத்தாமல் மக்கள் ஒன்றுகூடிப் போராடத் தயாராக இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளையில், தற்போதைய அரசியல் அமைப்புக்குச் சாதகமான சில அம்சங்கள் இன்னும் இருப்பதாகவும் அவர் கருதுகிறார்.

"பாஜக இளைஞர்களை அனைத்து இடங்களிலும் தங்களுடன் இணைத்து வைத்துள்ளது. பிரதமர் மோதியே பல சந்தர்ப்பங்களில் இளைஞர்களிடம் உரையாற்றுகிறார், தேர்வுகள் குறித்து கலந்துரையாடுகிறார்" என்று அவர் தெரிவித்தார்.

கல்வி, தேர்வுகள் போன்ற விவகாரங்கள் குறித்த உரைகள், பொது நிகழ்ச்சிகள், கலந்துரையாடல்கள் மூலம் பாஜகவும் பிரதமர் நரேந்திர மோதியும் இளைஞர்களுடன் நேரடித் தொடர்பைத் தொடர்ந்து பேணி வருகின்றனர் என்பதே குப்தாவின் கருத்தாக உள்ளது.

இதன் காரணமாக, வி.பி.சிங், ஜெயப்பிரகாஷ் நாராயண் அல்லது அன்னா ஹசாரே போன்ற ஆளுமைகளின் தலைமையில் உருவானதைப் போன்றதொரு நாடு தழுவிய மக்கள் இயக்கமாக மாறுவதற்கு, காக்ரோச் ஜனதா கட்சி தற்போது போதுமான வலிமையுடன் இருப்பதாக சரத் குப்தா கருதவில்லை.

மறுபுறம், மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான ஸ்மிதா குப்தா, இந்த இயக்கம் அரசியல் ரீதியாக ஒரு முக்கியமான தருணத்தில் உருவெடுத்து இருப்பதாகக் கருதுகிறார்.

அதுகுறித்துப் பேசிய அவர், "மேற்கு ஆசியாவில் நடந்து வரும் போருடன் தொடர்புபடுத்திப் பார்த்தாலும் சரி அல்லது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு பார்த்தாலும் சரி, மக்கள் இப்போது இத்தகைய சூழ்நிலைகளால் சோர்வும் அதிருப்தியும் அடையத் தொடங்கியுள்ளனர்," என்றார்.

மோதி அரசின் 'ஆரம்பக்கால நற்பெயர் காலம்' முடிவுக்கு வந்துவிட்ட ஒரு கட்டத்தில் இந்த இயக்கம் உருவெடுத்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கரப்பான் பூச்சி வடிவ முகமூடிகளை அணிந்த பலர் போராட்டத்தில் பங்கேற்றனர்

பட மூலாதாரம், Arun SANKAR / AFP via Getty Images

காக்ரோச் ஜனதா கட்சி ஒரு அரசியல் இயக்கமாக உருவெடுக்குமா?

தற்போது எழுப்பப்படும் ஒரு முக்கியமான கேள்வி: 'காக்ரோச் ஜனதா கட்சி' தனது முக்கியக் கோரிக்கையைச் சாத்தியப்படுத்தினால், அந்த இயக்கம் முடிவுக்கு வந்துவிடுமா அல்லது புதிய வடிவம் பெற்று மேலும் தொடருமா?

பிபிசி ஹிந்தி சேவை இந்தக் கேள்வியை சி.ஜே.பி.யின் செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரன்காவிடம் கேட்டபோது, இயக்கம் ஒரு குறிப்பிட்ட பிரச்னையைத் தாண்டிப் பரந்துபட்ட நோக்கங்களைக் கொண்டது என்று குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர், "இது வெறும் ஆரம்பம்தான். இளைஞர்கள் பலவிதமான பிரச்னைகளையும் சவால்களையும் எதிர்கொள்கிறார்கள். அந்தப் பிரச்னைகளை எழுப்ப முயலும்போதெல்லாம், அவை மதம் அல்லது சாதி சார்ந்த மோதல்களுக்குள் சிக்கிக் கொள்கின்றனர். இத்தனை பிரச்னைகளுக்கு மத்தியிலும், தற்போது மிக முக்கியமான விஷயமாக இருப்பது, தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதுதான்," என்று அவர் விளக்கினார்.

இருப்பினும், மூத்த பத்திரிகையாளர் சரத் குப்தா, இந்த இயக்கத்தின் எதிர்காலம் குறித்து மிகுந்த சந்தேகம் கொண்டுள்ளார்.

ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டம், தற்போதைய அமைப்பின் மீதான மக்களின் கோபத்தையும் அதிருப்தியையும் பிரதிபலிப்பதாகக் கூறிய அவர், ஆனால் இதுவொரு பெரிய அரசியல் இயக்கமாக வளரும் என்று தான் கருதவில்லை என்றார்.

அவரைப் பொறுத்தவரை, இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்பவர்களிடம் இன்னும் தெளிவான நீண்டகாலத் திட்டம் எதுவும் இல்லை.

இளைஞர்களிடம் ஏற்கெனவே உள்ள விரக்தியையும் கோபத்தையும் அவர்கள் தற்போது வெளிப்படுத்துகிறார்கள் என்றாலும், தெளிவான திட்டமோ அல்லது திசையோ இல்லாவிட்டால், இந்த இயக்கம் தன்னைத் தக்கவைத்துக் கொள்வதில் சிரமப்படக்கூடும் என்றும் அவர் வாதிடுகிறார்.

இதுகுறித்து விரிவாகப் பேசிய சர்த் குப்தா, "இளைஞர்களின் இந்தக் கோபம் தற்போது தர்மேந்திர பிரதானுக்கு எதிராக உள்ளது. ஆனால் நாளை அது வேறொருவர் மீது திரும்பக்கூடும். மக்களின் கோபம் ஒரு தனிநபரில் இருந்தோ அல்லது ஒரு பிரச்னையில் இருந்தோ வேறு திசைக்கு எளிதாக மாறக்கூடும். இந்த இயக்கம் பரந்த தொலைநோக்குப் பார்வையையும் தெளிவான நோக்கங்களையும் உருவாக்காத பட்சத்தில், காலப்போக்கில் அது தன் மீதான கவனத்தை இழக்கக்கூடும்" என்று குறிப்பிட்டார்.

காக்ரோச் ஜனதா கட்சி: பெரும் அரசியல் இயக்கமாக மாறும் வலிமையை கொண்டிருக்கிறதா?

பட மூலாதாரம், Getty Images

இவரைப் போலவே, சி.ஜே.பி-யை ஒரு பெரிய அரசியல் இயக்கம் என்று குறிப்பிடுவதில் இருந்து மிகவும் ஆரம்பக்கட்டத்தில் இருப்பதாகவே கருதுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா குப்தாவும் கருதுகிறார்.

அதேவேளையில், "இதுவொரு அரசியல் இயக்கமாக மாறுமா இல்லையா என்பதை இப்போதே சொல்ல முடியாது. ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன," என்கிறார் அவர்.

அவரது பார்வையில், "காக்ரோச் ஜனதா கட்சியின் எதிர்காலம் நிச்சயமற்றதாக இருந்தாலும், எளிய மக்களை நேரடியாகப் பாதிக்கும் பிரச்னைகளைக் கையாள்வதால் அதற்குப் பெரும் சாத்தியக்கூறுகள் இருக்கிறது."

இதற்கு முன்பும், பல இயக்கங்கள் பெரிய மற்றும் கோட்பாடு சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தியதாக ஸ்மிதா குப்தா விளக்கினார். "அந்தப் பிரச்னைகள் முக்கியமானவையாக இருந்தபோதிலும், அவை பெரும்பாலான குடிமக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்துடன் எப்போதும் நேரடியாகத் தொடர்புடையதாக இருக்கவில்லை."

இதற்கு மாறாக, சி.ஜே.பி எழுப்பும் பிரச்னைகள் பல குடும்பங்களுக்கு மிகவும் தனிப்பட்ட, உடனடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களாக உள்ளதாக அவர் கருதுகிறார்.

தனது கருத்தை விளக்குவதற்கு, கன்னையா குமார், உமர் காலித், ஷீலா ரஷீத் போன்றோர் முன்னின்று நடத்திய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் இயக்கத்தை அவர் உதாரணமாகக் குறிப்பிட்டார்.

"இது ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் போன்ற பெரிய விஷயங்களை அடிப்படையாகக் கொண்ட ஓர் இயக்கமாக இருந்தது. அந்த இயக்கத்தின் முகங்களாகத் திகழ்ந்தோருக்கு என்ன நேர்ந்தது என்பது அனைவருக்கும் தெரியும்."

அவரைப் பொறுத்தவரை, ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் போன்றவை நாட்டிற்கு மிகவும் முக்கியமானவை. இருப்பினும், "அன்றாட வாழ்வில் அவற்றின் நேரடித் தாக்கத்தைப் பல எளிய மக்களால் உணர முடியாமல் போகலாம்."

இதுகுறித்து மேலும் விளக்கிய அவர், "இத்தகைய கோட்பாடு சார்ந்த பிரச்னைகள் நாட்டிற்கு முக்கியமானவைதான் என்றாலும், அவை சாமானிய மக்களை நேரடியாகப் பாதிப்பதில்லை. ஆனால், சி.ஜே.பி.யின் பிரச்னை, சம்பந்தப்பட்ட இளைஞர்களின் பெற்றோரை ஏதோவொரு வகையில் உள்ளடக்கியதாக இருக்கும். அதேநேரம், பெரிய கருத்துகளை முன்வைக்கும் இயக்கங்கள் ஒரு குறிப்பிட்ட குழுவுக்கு உள்ளேயே முடங்கிவிடுகின்றன," என்றார்.

அதேநேரம், குறிப்பிடத்தக்க தாக்கத்தைக் கொண்டிருந்ததாக அவர் கருதும் ஒரு கோட்பாடு சார்ந்த இயக்கத்தையும் உதாரணமாக ஸ்மிதா குப்தா சுட்டிக்காட்டினார்.

ஷாஹீன் பாக் பகுதியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டங்களை அவர் குறிப்பிட்டார்.

அவரது கருத்துப்படி, "குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான ஷாஹீன் பாக் இயக்கமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் கோவிட் பெருந்தொற்று காரணமாக அது பாதியிலேயே நிறுத்தப்பட்டது."

ஷாஹீன் பாக் பகுதியுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்ததால், அந்த இயக்கம் பெரும்பாலும் முஸ்லிம்களின் இயக்கம் மட்டுமே என்று சித்தரிக்கப்பட்டதாகவும் அவர் வாதிடுகிறார். இருப்பினும், "அந்தச் சித்தரிப்பு சரியானதல்ல, அது போராட்டங்களின் தன்மையை முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை" என்று அவர் கருதுகிறார்.

இதற்கிடையில், சமீபத்திய காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டங்களை, 2012இல் டெல்லியில் நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிரான போராட்டங்களுடன் (பொதுவாக 'நிர்பயா இயக்கம்' என்று அழைக்கப்படுகிறது) சில ஆய்வாளர்கள் ஒப்பிட்டுப் பேசியுள்ளனர். வானிலை நிலவரத்தைப் பொருட்படுத்தாமல் நிர்பயா போராட்டங்களின்போது மக்கள் வீதிகளில் இறங்கி வந்தது போலவே, டெல்லியின் கடும் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் சி.ஜே.பி. போராட்டத்திலும் ஏராளமானோர் பங்கேற்றனர் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பிரபல அரசியல் ஆய்வாளர் யோகேந்திர யாதவ், தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து வெளியிட்ட கருத்தில், "இதை (சி.ஜே.பி) புறக்கணிப்பதோ அல்லது வழக்கமான அரசியலின் அளவுகோல்களைக் கொண்டு இதை மதிப்பிடுவதோ தவறானதாக இருக்கும்," என்று தெரிவித்தார்.

இந்த இயக்கத்தை, அசாதாரணமான மக்கள் ஆற்றல் மற்றும் உற்சாகத்தின் ஓர் எடுத்துக்காட்டாக அவர் விவரித்தார்.

மேலும் அவர், "காக்ரோச் ஜனதா கட்சி என்பது ஓர் அரசியல் கட்சியல்ல. அது அதைவிடக் கூடுதலானதோ அல்லது குறைவானதோ அல்ல. அது வெறும் சாதாரண மக்கள்தான். இதுவொரு இயக்கமல்ல. இதுவொரு தருணம். அதனால்தான் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகிறது," என்றும் கூறியுள்ளார்.

இத்தகைய சாதகமான கருத்துகள் ஒருபுறம் இருந்தபோதிலும், அனுபவம் வாய்ந்த தலைமை இல்லாதது ஒரு முக்கிய பலவீனமாக அதற்கு இருப்பதாகச் சில ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சரத் குப்தா இந்தச் சிக்கலை நேரடியாகச் சுட்டிக்காட்டினார். "அரசியல் அனுபவம் இல்லாததால், இந்தக் குழுவால் ஒரு பெரிய இயக்கமாக உருவெடுக்க முடியாமல் போகலாம். காக்ரோஜ் ஜனதா கட்சியின் மூன்று செய்தித் தொடர்பாளர்களில் யாருக்குமே அரசியல் அனுபவம் இல்லை."

சரத் குப்தாவின் கருத்துப்படி, மக்களின் ஆதரவு மட்டுமே போதுமானதாக இருக்காது. "ஒரு பெரிய, நீண்டகால அரசியல் இயக்கத்தைக் கட்டமைக்க, அனுபவம் வாய்ந்த தலைமை, திட்டமிடல் திறன், அமைப்பு ரீதியான திறன்கள், சிக்கலான அரசியல் சவால்களைக் கையாளும் திறன் ஆகியவை அவசியம்" என்று அவர் வாதிடுகிறார். அவரது பார்வையில், "சி.ஜே.பி.யின் தலைமைக்கு அரசியல் அனுபவம் இல்லாதது, அந்தக் குழு ஒரு பெரிய இயக்கமாக வளர முயலும்போது பெரும் தடையாக அமையக்கூடும்."

காக்ரோச் ஜனதா கட்சி: பெரும் அரசியல் இயக்கமாக மாறும் வலிமையை கொண்டிருக்கிறதா?

பட மூலாதாரம், Getty Images

சி.ஜே.பி. தேர்தல் அரசியலை நோக்கி நகருமா?

காக்ரோச் ஜனதா கட்சியின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மற்றுமொரு முக்கியமான கேள்வியும் எழுப்பப்படுகிறது: இந்த இயக்கம் இறுதியில் தீவிர அரசியலில் ஈடுபடுமா?

பிபிசி ஹிந்தி சேவைக்கு அளித்த பேட்டியின்போது, "நீங்களும் உங்கள் குழுவினரும் அரசியலில் ஈடுபடத் திட்டமிட்டு உள்ளீர்களா" என்று சி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரன்காவிடம் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், "அன்றாட வாழ்வின் கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களையும் அரசியல் பாதிக்கிறது" என்று குறிப்பிட்டார்.

மேலும், "இங்கு அனைத்துமே அரசியல் சார்ந்தவைதான். நாம் சுவாசிக்கும் காற்று, குடிநீர், படிக்கும் பள்ளிகள் என அனைத்துமே அரசியலுடன் தொடர்புடையவை. அப்படியிருக்கும் போது, எது அரசியல் சார்ந்தது, எது அரசியல் சாராதது?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மூத்த பத்திரிகையாளர் சரத் குப்தா, சி.ஜே.பி. இறுதியில் தேர்தல் அரசியலில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகளை முற்றிலுமாக நிராகரிப்பது புத்திசாலித்தனமான அணுகுமுறையாக இருக்காது என்று கருதுகிறார்.

அதற்கு உதாரணமாக அவர், அரவிந்த் கேஜ்ரிவாலின் அனுபவத்தை சுட்டிக்காட்டினார்.

"அரவிந்த் கேஜ்ரிவால் தனது இயக்கத்தைத் தொடங்கியபோது, அழுத்தம் கொடுப்பது ஒரு விஷயம், ஆனால் அரசியலில் ஈடுபட்டுத் தேர்தலில் போட்டியிடுவது வேறு என்று கூறப்பட்டது. ஆனால் பின்னர் அவர் தேர்தலில் போட்டியிட்டு அதைச் செய்து காட்டினார்."

கேஜ்ரிவால் பொதுநலச் செயல்பாடுகள், ஊழலுக்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபட்டிருந்த காலத்தை சரத் குப்தா குறிப்பிட்டார்.

"அக்காலத்தில், போராட்டங்களை ஒருங்கிணைப்பதும் பொதுக் கருத்தை உருவாக்குவதும், தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி செய்வதில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை என்று பலர் வாதிட்டனர். இருப்பினும், கேஜ்ரிவால் பின்னர் அரசியலில் நுழைந்து, ஓர் அரசியல் கட்சியை உருவாக்கி, தேர்தலில் போட்டியிட்டார்."

அந்த உதாரணத்தின் அடிப்படையில், சி.ஜே.பி.யும் அதே போன்றதொரு பாதையில் செல்வதற்கான வாய்ப்பு இருப்பதை நிராகரிக்க முடியாது என்று சரத் குப்தா கருதுகிறார்.

அவரது கருத்துப்படி, "இந்தக் குழுவும் அதே வழியில் முன்னேறிச் செல்ல வாய்ப்புள்ளது. அரவிந்த் கேஜ்ரிவாலைவிட இந்தக் குழு அதிக வரவேற்பைப் பெறுவதற்கும் வாய்ப்புள்ளது. ஆனால் தற்போதைய நிலையில், இந்த இளைஞர்களிடம் அனுபவம் மிகக் குறைவாகவே இருப்பதாகத் தெரிகிறது."

இருப்பினும், ஒரு முக்கியமான வரம்பையும் அவர் வலியுறுத்துகிறார். அவரது பார்வையில், "சி.ஜே.பி-யின் தற்போதைய தலைவர்கள் மற்றும் செய்தித் தொடர்பாளர்கள் இன்னும் போதிய அனுபவம் இல்லாதவர்களாகவே உள்ளனர். மக்களிடையே ஆர்வமும் ஆதரவும் இருந்தாலும், ஒரு போராட்ட இயக்கத்தை வெற்றிகரமான அரசியல் அமைப்பாக மாற்றுவதற்குத் தலைமைத்துவ அனுபவம், நீண்டகாலத் திட்டமிடல், அமைப்புரீதியான திறன்கள், நடைமுறையில் அரசியல் எவ்வாறு செயல்படுகிறது என்பவை குறித்த புரிதல் அவசியம்."

எனவே, சரத் குப்தாவின் கருத்துப்படி, சி.ஜே.பி.யின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது. மேலும், "அதுவொரு போராட்ட இயக்கமாகவே நீடிக்கலாம் அல்லது பரந்த அளவிலான சமூக இயக்கமாக உருவெடுக்கலாம். இரண்டுமே அல்லாமல் இறுதியில் அரசியலில்கூட ஈடுபடலாம். ஆனால் தற்போதைய நிலையில், அந்த அமைப்புக்கு அரசியல் அனுபவம் இல்லாததே அதன் மிகப்பெரிய சவால்களில் ஒன்று," என்று அவர் கருதுகிறார்.

போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்துத் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்

பட மூலாதாரம், ANI

காக்ரோச் ஜனதா கட்சியின் சுயபார்வை எப்படி இருக்கிறது?

டெல்லி ஜந்தர் மந்தரில் செய்தியாளர்களிடம் பேசிய காக்ரோச் ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரன்கா, தங்கள் அமைப்பை "இளைஞர்கள், கல்வி, இந்திய அரசியலமைப்பு, இந்தியா ஆகியவற்றுக்கு ஆதரவான ஓர் அமைப்பு" என்று விவரித்தார்.

இந்த நிகழ்வின்போது, பிபிசி ஹிந்தி சேவையின் செய்தியாளர் ஒருவர் ரன்காவிடம் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டார். அந்தக் கேள்வி: "முன்னதாக சி.ஜே.பி. தன்னை ஒரு 'சமூகப் பிரசாரம்' என்று அழைத்து வந்தது, ஆனால் இப்போது அதன் தலைவர்கள் அதை ஓர் 'இயக்கம்' என்று குறிப்பிடுகின்றனர். இந்த மாற்றம் ஏற்பட்டது ஏன்?"

அதற்குப் பதிலளித்த ரன்கா, "நீங்கள் எங்களுக்கு எந்தப் பெயரை வேண்டுமானாலும் சூட்டலாம். இது இளைஞர்களின் ஒரு கூட்டு முயற்சி, இளைஞர்களின் இயக்கம்," என்றார்.

இந்தக் கூற்றின் மூலம், அமைப்புக்கு எந்தப் பெயர் சூட்டப்படுகிறது என்பது முக்கியமல்ல என்பதை அவர் உணர்த்தினார். மக்கள் இதை ஒரு பிரசாரமாகவோ, இயக்கமாகவோ அல்லது வேறு விதமாகவோ அழைத்தாலும், அடிப்படையில் இது இளைஞர்கள் தங்கள் கருத்துகளை முன்வைக்க ஒன்றிணைந்த ஒரு தளம் என்பதே அவரது கருத்தாக உள்ளது.

எதிர்காலத்தில் காக்ரோச் ஜனதா கட்சி என்ற பெயரை மாற்றப் போகிறார்களா அல்லது அதே பெயரைத் தொடர்ந்து பயன்படுத்தப் போகிறார்களா என்று ரன்காவிடம் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், "பெயரிலிருந்து அதன் பின்னணியைப் பிரிக்க முடியாது. முப்பது நாட்களுக்கு முன்பு இதுவொரு நையாண்டித்தனமான முயற்சியாகத் தொடங்கியது. அதனுடன் பொது மக்களும் கட்சியும் இணைந்தன. அதைப் பற்றி நீங்கள் பேசலாம், ஆனால் அதன் பின்னணியை நீக்க முடியாது" என்றார்.

காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனரும் ஒருங்கிணைப்பாளருமான அபிஜித் தீப்கே, முன்னதாக பிபிசி மராத்தி சேவையுடனான நேர்காணலில் இந்த அமைப்பு உருவான விதம் குறித்து விளக்கியிருந்தார்.

இந்திய தலைமை நீதிபதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட கருத்துகளைத் தொடர்ந்து கவனித்த பின்னரே இந்த இயக்கத்திற்கான யோசனை தனக்குத் தோன்றியதாக தீப்கே கூறினார்.

அவரது கூற்றுப்படி, "நாட்டின் அமைப்பை விமர்சித்ததற்காகவும், கருத்துகளைத் தெரிவித்தமைக்காகவும், நாட்டின் இளைஞர்களை 'கரப்பான் பூச்சிகள்' மற்றும் 'ஒட்டுண்ணிகள்' என்று இந்திய தலைமை நீதிபதி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டதை நான் கவனித்தேன். இது எனக்கு கோபத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. எனவே, இதுகுறித்த எனது கருத்தை நானும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டேன்."

மேலும், "அனைத்து 'கரப்பான் பூச்சிகளும்' ஒன்றிணைந்தால் என்ன நடக்கும் என்று நான் கேட்டேன். ஜென் Z தலைமுறையினர் மற்றும் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களிடம் இருந்து அற்புதமான பதில்கள் கிடைத்தன. நாமெல்லாம் ஒன்றிணைந்து ஒரு தளத்தை உருவாக்க வேண்டுமென அவர்கள் கூறினர்," என்று தீப்கே தெரிவித்தார்.

இந்தச் செயல்பாடுதான் இறுதியில் 'காக்ரோச் ஜனதா கட்சி' (Cockroach Janata Party – CJP) உருவாக்கத்திற்கு வழிவகுத்தது என்று தீப்கே கூறினார்.

கடந்த சனிக்கிழமை ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தைப் பற்றிப் பேசுகையில், அன்னா ஹசாரே இயக்கத்தில் ஒரு காலத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த பிரபல அரசியல் ஆய்வாளர் யோகேந்திர யாதவ், "இது ஒரு இயக்கம் அல்ல, ஒரு தருணம். அதனால்தான் இது முக்கியமானது" என்று அங்கு நடந்த நிகழ்வுகள் குறித்த தனது மதிப்பீட்டை முன்வைத்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

பிபிசிதமிழ்

மேலும் செய்திகள்
முக்கிய செய்திகள்
1
IND vs AFG Test: Afghanistan head coach Richard Pybus admits that
2
கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் கடமையாற்றிய வனவளத் திணைக்கள அதிகாரி
3
செலவுகள் அதிகரித்தமை மற்றும் கட்டணத் திருத்தங்கள் தாமதமானமை காரணம
4
சுக்கிரன் கடக ராசிக்கு பெயர்ச்சி செய்வதால் குருவுடன் இணைந்து கஜலட
5
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 08 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
6
இஸ்ரேல் மீது இரான் திடீரென ஏவுகணைகளை வீசி தாக்குதல் – இஸ்ரே
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
7
தமிழக அரசியல் களத்தில் அண்மைக் காலமாகவே மிகப்பெரிய அலையை ஏற்படுத்
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net