பல்வேறு குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் இருவரை கிளிநொச்சி பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் மற்றும் கிளிநொச்சி பொலிஸ் நிலைய அதிகாரிகள் இணைந்து கைது செய்துள்ளனர்.
பகல் வேளையில் வீடுகளை உடைத்து தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இந்த இரு சந்தேக நபர்களும் நேற்று புதன்கிழமை (13) கிளிநொச்சி நகரில் வைத்து பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 25 வயதுடைய இளைஞர்கள் ஆவர்.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பதிவாகியிருந்த, பகல் நேரத்தில் வீடுகளை உடைத்து சொத்துக்கள் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்த சுமார் 10 குற்றச் செயல்களுடன் சந்தேகநபர்களுக்கு நேரடித் தொடர்பு இருப்பது விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.
சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸாரால் பெருமளவிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 75 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் டிபொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களால் பல்வேறு அடகு மையங்கள் மற்றும் வங்கிகளில் அடகு வைக்கப்பட்டிருந்த சுமார் 49 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை வழக்குப் பொருட்களாக மீட்டெடுப்பதற்காக நீதிமன்ற உத்தரவைப் பெற பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.