நாட்டின் அந்நிய செலாவணி நெருக்கடிக்குத் தீர்வுகளைக் காண்பது மற்றும் தற்போதுள்ள வெளிநாட்டு கையிருப்புக்களைப் பாதுகாப்பது குறித்து தீவிர கவனம் செலுத்தப்படவேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் அவசர அமைச்சரவைக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி இதனை வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய சூழ்நிலையில் வெளிநாட்டு நாணயப் பயன்பாடானது மிகவும் பொறுப்புணர்வுடனும், முறையான நிர்வாகத்துடனும் கையாளப்படவேண்டும். இலங்கை போன்ற இறக்குமதிகளில் பெரிதும் தங்கியுள்ள ஒரு நாட்டுக்கு, அந்நிய செலாவணியை பாதுகாப்பது மிகவும் கடினமான மற்றும் சவாலான காரியம்.
இதன் காரணமாக, அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், எவற்றை அத்தியாவசியமற்றவை என வகைப்படுத்துவது என்பதில் அவதானம் தேவை.
ஒருவருக்கு அத்தியாவசியமற்றதாகத் தோன்றும் ஒரு பொருள், மற்றுமொருவருக்கு அத்தியாவசியமானதாக இருக்கக்கூடும். எனவே, இது குறித்து மிகவும் நிதானமாகச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
நாட்டின் ஒட்டுமொத்த டொலர் கையிருப்பில் பெரும்பகுதி எரிபொருள் மற்றும் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கே செலவிடப்படுகின்றது.
எரிபொருள் இறக்குமதியை எந்த வகையிலும் நிறுத்த முடியாது என்பதால், மாற்று நடவடிக்கையாக வாகன இறக்குமதியைத் தற்காலிகமாக நிறுத்தவேண்டிய நிலை உள்ளது.
எனினும், வாகன இறக்குமதியை முழுமையாகத் தடை செய்தால், தற்பொழுது கடுமையான முயற்சிகளுக்கு மத்தியில் மீண்டும் புத்துயிர் பெற்று வரும் உள்நாட்டு வாகனச் சந்தை முற்றிலும் வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளது.
வாகனச் சந்தை வீழ்ச்சியடைவதைத் தடுத்து, அதேவேளை டொலர் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரு மாற்று மற்றும் நியாயமான தீர்வை அமைச்சரவை எட்டியுள்ளது.
அதன்படி, வாகன இறக்குமதியைத் தற்காலிகமாகத் தளர்த்துவதைத் தடுத்து, அதனை ஊக்கமிழக்கச் செய்யும் நோக்கில் விசேட கூடுதல் வரி ஒன்றை விதிப்பதற்கும், இந்த விசேட வரி விதிப்பு நடைமுறையை அடுத்த 3 மாத காலத்துக்கு அமுல்படுத்துவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.