எல்.ஐ.சி (LIC – Life Insurance Corporation of India) என்பது இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய அரசு ஆயுள் காப்பீட்டு நிறுவனமாகும். இது இந்திய அரசால் 1956-ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, முழுமையாக மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இது காப்பீடு மற்றும் முதலீடு சார்ந்த பல சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. மறுபக்கம் பல்வேறு நிறுவனங்களிலும் முதலீடு செய்து வருகிறது எல்.ஐ.சி. அதன்படி, ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் 10.80% பங்குகளை எல் ஐ சி தன்வசம் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ராஜேஷ் எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் (REL) நிதி முறைகேடுகள், நிதிப் பரிமாற்ற முறைகேடுகள் மற்றும் ஒத்துழையாமை ஆகியவை அரங்கேறியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதன்காரணமாக, ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் (REL) மற்றும் அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் மேத்தாவுக்கு எதிராக செபி ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு நிதியாண்டும், REL நிறுவனம் சுமார் ரூ. 15.15 லட்சம் கோடி மதிப்பிலான ஒருங்கிணைந்த வருவாயைத் தவறாகக் காட்டியுள்ளதாகவும், இது மொத்த ஒருங்கிணைந்த வருவாயில் 99.80 சதவீதமாகும் என்றும் செபி குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுமட்டுமல்ல, கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் தங்கள் பங்குகளைக் குறைத்துள்ளதால், அதன்காரணமாக FII உரிமை 14.26% ஆகக் குறைந்துள்ளது.
LIC-ஐ பொறுத்தவரை அதன் பங்கு முதலீட்டு மதிப்பு 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ரூ.637 கோடியாக இருந்த நிலையில், தற்போதைய மதிப்பு ரூ. 347 கோடியாக உள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை சுமார் 40 சதவீதம் சரிந்த போதும், எல்.ஐ.சி தனது 10 சதவீத பங்கு முதலீட்டை வைத்துள்ளது. ஜூன் 4ம் தேதி இப்பங்கின் வர்த்தகம் சுமார் 5 சதவீதம் சரிந்து, ரூ. 103 என்ற விலையில் தொடங்கியதுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, எல்.ஐ.சியின் 10.8 சதவிகித பங்கு என்பது ஆபத்தில் இருப்பதால், அதன் பணமும் ஆபத்தில் இருக்கிறது. இதனால், தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு வந்துவிடுமோ என்று எல்.ஐ.சி பயனர்கள் அச்சமடைந்துள்ளனர்.