← முகப்பு செய்திகள்

திறைசேரி மோசடி: நிதி செயலாளர் பதவி விலக வேண்டும் – ஜீ.எல். பீரிஸ்

🕐 04 May 2026 📂 செய்திகள் 18 பார்வைகள்
திறைசேரி மோசடி: நிதி செயலாளர் பதவி விலக வேண்டும் – ஜீ.எல். பீரிஸ்

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மோசடி தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் தலைமையில் இடம்பெற்றுவரும் உள்ளக விசாரணையில் எந்த நம்பிக்கையும் இல்லை. விசாரணைகள் முடியும் வரை நிதி அமைச்சின் செயலாளர் அந்தப் பதவியிலிருந்து விலக வேண்டும் அல்லது அவர் நீக்கப்பட வேண்டும். அதிகாரிகள் மீது பொறுப்புக்களை சுமத்தி, இந்த மோசடிகளில் இருந்து தப்பித்துக்கொள்ள அவரால் ஒருபோதும் முடியாது என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி திங்கட்கிழமை (4) சிறிலங்கா சுதந்தர கட்சி காரியாலயத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

திறைசேரியின் பாரிய கொள்ளையை மறைப்பதற்காக அரசாங்கம் செய்யாத காரியங்கள் எதுவுமில்லை. இதுதொடர்பாக தற்போது மேற்கொள்ளப்படும் விசாரணை முழுமையாகக் கண்கட்டு வித்தை போன்ற ஒரு செயற்பாடாகும். நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூர்யப்பெரும தலைமையிலேயே விசாரணை நடைபெறுகிறது.

அவரது தலைமையின் கீழ் இதனை வழிநடத்த திறைசேரியின் இரண்டு பிரதிச் செயலாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். முதலில் ஒருவர், பின்னர் மற்றுமொருவர் அதில் சேர்க்கப்படுகிறார். அதன் பின்னர், வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் நான்கு அதிகாரிகளின் சேவை இடைநிறுத்தப்படுகிறது. ஒரு அதிகாரி இன்று உயிரோடு இல்லை. இந்தக் கண்கட்டு வித்தைகளால் எவரும் ஏமாறப்போவதில்லை என்பதை திறைசேரி செயலாளருக்கு நான் மிகத் தெளிவாகக் கூறுகிறேன். இதனை ஒருவரின் மீது சுமத்திவிட்டு தப்பிக்கலாம் என நினைக்க வேண்டாம். எமது சட்டம் மற்றும் அரசியலமைப்பின் கீழ் திறைசேரி செயலாளர் தனது பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது.

இந்நாட்டில் நடைமுறையிலுள்ள 2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க நிதி முகாமைத்துவச் சட்டத்தை வாசித்துப் பார்க்குமாறு நிதி அமைச்சின் செயலாளரை கேட்டுக்கொள்கிறேன். அது மிகவும் எளிமையான மொழியில் தயாரிக்கப்பட்ட ஒரு சட்டமாகும். அதேபோல், இலங்கை அரசியலமைப்பின் 52 ஆவது உறுப்புரையின் 2 ஆவது உட்பிரிவையும் வாசித்துப் பார்க்குமாறு அவருக்குக் கூறுகிறேன்.இதன்படி, பட்டப்பகலில் நடந்த இந்தக் கொள்ளை தொடர்பான முழுப் பொறுப்பும் திறைசேரி செயலாளருக்கே சேரும்., வேறு எவருக்கும் அல்ல. அப்படியிருக்கையில், அவர் அந்தப் பதவியில் இருக்கும் வரை, இது குறித்து ஒரு பக்கச்சார்பற்ற விசாரணை நடைபெறும் என்று யாரால் நம்ப முடியும்? இது முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு வேலைத்திட்டம். எனவே, இந்த விசாரணைகள் முடியும் வரை நிதி அமைச்சின் செயலாளர் அந்தப் பதவியிலிருந்து விலக வேண்டும் அல்லது அவர் நீக்கப்பட வேண்டும்.

அதேநேரம் இந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் சில முன்னாயத்தங்கள் காணப்படுகின்றன. சில நாட்களுக்கு முன்னர் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஒரு எச்சரிக்கையை விடுத்தார். அதாவது,அமைச்சர்களுக்கு எதிராக முறைப்பாடுகளைச் செய்வதாக இருந்தால் அவதானமாக இருக்குமாறும், சட்டம் மிகக் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

அந்தச் சட்டத்தை உருவாக்கியவர் என்ற ரீதியில், 1994 ஆம் ஆண்டில் லஞ்ச ஊழல் ஆணைக்குழு தொடர்பான அந்தச் சட்டத்தைத் தயாரித்த அன்றைய அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக நான் மிகத் தெளிவாகக் கூறுகிறேன், தனக்குத் தெரிந்த விடயங்களை நன்னோக்கத்துடன் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முன்வைக்கும் எந்தவொரு நபருக்கும் எமது சட்டத்தின் கீழ் சிறு அளவிலான பாதிப்பும் ஏற்படாது. அவ்வாறானவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும்.

உண்மையைக் கூறுவதாக இருந்தால் எதற்கும் பயப்படத் தேவையில்லை. இந்தப் பாரிய கொள்ளைகள் குறித்த உண்மை கண்டறியப்பட வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து சூரையாடப்பட்ட மக்களின் பணத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும். அச்சுறுத்தல்களுக்கு பணிய வேண்டிய அவசியம் கிடையாது.

அப்படியானால் இந்த உள்ளக விசாரணைகள் மற்றும் சட்டத்தின் கீழ் பொறுப்பேற்க வேண்டிய நபரின் அனுசரணையுடன் நடத்தப்படும் விசாரணைகள் மீது எமக்கு எந்த நம்பிக்கையும் இல்லை.

இது தொடர்பான விசாரணை பாராளுமன்றத்தின் அனுசரணை மற்றும் தலைமையின் கீழ் நடைபெற வேண்டும். இந்நாட்டின் நிதி முகாமைத்துவம் தொடர்பான முழுமையான பொறுப்பு இலங்கை பாராளுமன்றத்துக்கே உரித்தானது. அங்குதான் இந்த விசாரணை நடத்தப்பட வேண்டும். அது பகிரங்கமான விசாரணையாக இருக்க வேண்டும். வெளிப்படைத்தன்மை மிகவும் முக்கியமானது. விசாரணையின்போது ஊடகங்களுக்கு முழுமையான அனுமதி இருக்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்
செய்திகள்
KS Bharat has officially retired from international cricket at the age of
04 Jun 2026
செய்திகள்
சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக காங்கிரஸ்
04 Jun 2026
செய்திகள்
ஜூன் 8-ம் நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவித்துள்ளதால், திமுக கூட்டணியில்
04 Jun 2026
செய்திகள்
வடகொரிய அதிபரின் மகளான இளவரசி ஜூஏ, அந்நாட்டு Gen-Z இளைஞர்கள் மத்தியில் ஸ்டைல் ஐகானாக மாறியுள்ளார்.
1 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
IND vs AFG Test: Why Rishabh Pant Lost Test Vice-Captaincy? Assistant coach
7 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
மின்வாரிய அலுவலகத்தில் Hard Disk-கள் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை கொண்டு வர
14 நிமிடங்கள் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net