தாய்லாந்திலிருந்து 112 கிலோ கிராம் போதைப்பொருட்களைக் கடத்தி வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகளையும் எதிர்வரும் மே மாதம் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதிவான் சுபாணி அபேசேகர செவ்வாய்க்கிழமை (12) உத்தரவிட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி தாய்லாந்திலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த 22 பிக்குகளைச் சோதனையிட்ட போது, அவர்களின் பயணப் பொதிகளில் இருந்து 112 கிலோகிராம் எடையுடைய குஷ் மற்றும் ஹேஷ் ரக போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது, அமிதானந்த எனும் பிக்குவே இந்த போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தியமை தெரியவந்தது. அதற்கமைய, உடனடியாகச் செயற்பட்ட பொலிஸ் குழுவினர் கம்பஹா பகுதியிலுள்ள விகாரையொன்றில் ஒளிந்திருந்த அமிதானந்த எனும் சந்தேகநபரையும் கைது செய்தனர்.
இக்கடத்தல் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் மஹமூத் மொஹமட் எனும் நபர் கடந்த 8 ஆம் திகதி கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்டார். குறித்த நபர் கடந்த 9 ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீர்கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
14 நாட்கள் விளக்கமறியல் காலம் நிறைவடைந்த நிலையில், பிரதான சந்தேகநபரான அமிதானந்த தேரர் உள்ளிட்ட 23 பிக்குகளும் செவ்வாய்க்கிழமை (12) நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபர்கள் அனைவரையும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்