தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு தனது வாழ்த்துக்களை இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
இன்று (05) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில்,
வரலாற்று சாதனைப் படைத்து வெற்றிப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு உயரிய சபை ( பாராளுமன்றம்) ஊடாக வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஈழத் தமிழர் தொடர்பான பிரச்சினைகளில் இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் தமிழக சட்டசபைத் தேர்தலில் வரலாற்று சாதனைப் படைத்து வெற்றிப்பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு பாராளுமன்றத்தின் ஊடாக வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய அரசுடனும், தமிழக அரசுடனும் ஒன்றிணைந்து செயற்பட தயாராகவுள்ளோம்.
த பினான்ஸ் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் இதுவரையில் மூன்று தடவைகள் கேள்விகளை முன்வைத்துள்ளேன். 2008 ஆம் ஆண்டு முதல் இந்த பிரச்சினை தொடர்கிறது. சிறந்த முறையில் இருந்த நிறுவனம் வங்குரோதது நிலைக்கு தள்ளும் நடவடிக்கை 2008 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படும் என்று அறிந்தும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய முதலீட்டாளர்களுக்கான பகிரங்க விண்ணப்பம் கோரப்பட்டது. புதிய வைப்பாளர்களின் வைப்புக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னரே இந்த நிறுவனம் மூடப்பட்டது.
பாதிக்கப்பட்டுள்ள வைப்பாளர்களுக்கு நிவாரணமளிக்க அரசாங்கம் தலையிட வேண்டும். இந்த முறைகேடு பற்றி ஒரு குழுவை அமைத்தாவது விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.