← முகப்பு செய்திகள்

தமிழக அமைச்சரவையில் தொடர்ந்து கோலோச்சும் மேற்கு மண்டலம்: 3 ஆட்சிகளிலும் முன்னுரிமை!

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 28 பார்வைகள்
தமிழக அமைச்சரவையில் தொடர்ந்து கோலோச்சும் மேற்கு மண்டலம்: 3 ஆட்சிகளிலும் முன்னுரிமை!

பட மூலாதாரம், TNDIPR

2011-ஆம் ஆண்டு பதவியேற்ற ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக்காலத்திலிருந்து தற்போது பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவை வரையிலும் மேற்கு மண்டலத்திற்கு அதிகளவு பிரதிநிதித்துவம் கிடைத்து வருகிறது. அதிலும் அதிமுக ஆட்சியைப் போலவே இப்போதும் முக்கியத் துறைகள் பலவும் இப்பகுதியைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

மேற்கு மண்டலத்தில் அதிமுக மற்றும் திமுக ஆட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் நிறைவேற்றி, புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டுமென்று தொழில் அமைப்பினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

கரூருக்கு அமைச்சரவையில் இடமில்லை!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், 108 தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றது.

தவெக அமைச்சரவையில் முதல்வர் விஜய் உட்பட தவெக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 31 பேரும், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் சார்பில் மொத்தம் 4 பேருமாக மொத்தம் 35 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தவெக சார்பில் அமைச்சர்கள் ஆகியுள்ள 31 பேரும், 18 மாவட்டங்களில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

தவெக வெற்றி பெறாத 8 மாவட்டங்கள் மற்றும் தவெக வென்ற 12 மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத நிலை இருந்தது.

தமிழ்நாடு அமைச்சரவை, மேற்கு மாவட்டங்கள்

பட மூலாதாரம், TNDIPR

தவெக வெற்றி பெறாத விழுப்புரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து முறையே, கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள விசிக சார்பில் வன்னி அரசுவும், காங்கிரஸ் சார்பில் ராஜேஷ்குமாரும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தற்போதுள்ள நிலையில் இன்னும் 18 மாவட்டங்களுக்கு விஜய் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லை.

சென்னையில் இருந்து முதல்வர் விஜய் உட்பட 7 பேர் அமைச்சரவையில் உள்ளனர். சட்டப்பேரவைத் தலைவர் வாய்ப்பும் சென்னைக்கே தரப்பட்டுள்ளது.

அடுத்ததாக நாமக்கல் மாவட்டத்திற்கு 3 அமைச்சர்கள் தரப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம், தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு தலா 2 அமைச்சர்கள் கிடைத்துள்ளனர்.

திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், பெரம்பலூர் மற்றும் கரூர் ஆகிய 12 மாவட்டங்களில் தவெகவுக்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருந்தும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.

தமிழ்நாடு அமைச்சரவை, மேற்கு மாவட்டங்கள்

பட மூலாதாரம், Getty Images

மேற்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் கூடுதலாக பிரதிநிதித்துவம் தரப்பட்டுள்ளதுடன், முக்கியமான துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில் வெற்றி பெற்ற அருண்ராஜ் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும், ராசிபுரம் (தனி) தொகுதியில் வென்ற லோகேஷ் தமிழ்ச் செல்வன் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். லோகேஷ் தமிழ்ச்செல்வன், அதிமுக ஆட்சியில் பேரவைத் தலைவராக இருந்த தனபாலின் மகன் ஆவார். நாமக்கல் மாவட்டத்தின் குமாரபாளையம் தொகுதியில் வென்ற விஜயலட்சுமி, பால்வளத்துறை அமைச்சர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் வென்றுள்ள கே.ஏ.செங்கோட்டையனுக்கு வருவாய்த்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் வென்றுள்ள விஜய் பாலாஜிக்கு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை தரப்பட்டுள்ளது.

சேலம் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆகியுள்ள விஜய் தமிழன் பார்த்திபனுக்கு போக்குவரத்துத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவினாசி (தனி) தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை தோற்கடித்த கமலிக்கு கால்நடை வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வசமிருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதியில் வென்ற விக்னேஷ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கோவை வடக்கு தொகுதியில் பாஜகவின் வானதி சீனிவாசனை தோற்கடித்த சம்பத்குமாருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும் வழங்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா முதல் விஜய் வரை: கோலோச்சும் கோவை மண்டலம்!

தமிழ்நாடு அமைச்சரவை, மேற்கு மாவட்டங்கள்

பட மூலாதாரம், BBC World Service

கோவையை மையப்படுத்திய மேற்கு மண்டலத்தில் மட்டும் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 9 சட்டப்பேரவை உறுப்பினர்கள், தவெக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை, போக்குவரத்துத்துறை, வருவாய்த்துறை, வணிகவரித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, பால்வளத்துறை என முக்கியமான துறைகளே ஒதுக்கப்பட்டுள்ளன.

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி மேற்கு மண்டலம் எனப்படுகிறது.

இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி தவிர்த்த பிற மாவட்டங்கள் அரசியல்ரீதியாக கொங்கு மண்டலம் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த மண்டலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுகவே அதிக தொகுதிகளில் வென்றுள்ளது.

அதனால் மேற்கு மண்டலம் அதிமுக கோட்டை என்று அந்தக் கட்சியினர் தொடர்ந்து பேசிவந்தனர். அதற்கேற்ப கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளையும், சேலம் மாவட்டத்திலுள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி வென்றிருந்தது. இந்த மண்டலத்தில் உள்ள 46 தொகுதிகளில் 2021 தேர்தலில் 33 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றியிருந்தது.

தமிழ்நாடு அமைச்சரவை, மேற்கு மாவட்டங்கள்

பட மூலாதாரம், ADMK

ஆனால் இந்தத் தேர்தலில் கோவையில் 10 தொகுதிகளில் 4, சேலத்தில் 11 தொகுதிகளில் 4, திருப்பூரில் 8 தொகுதிகளில் 4, ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 5, நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 5 என 22 தொகுதிகளை தவெக கைப்பற்றியுள்ளது. இதன் மூலமாக அதிமுக கோட்டை என்பதை உடைத்திருப்பதாக சேலம் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் பார்த்திபன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவும் தமிழக அமைச்சரவையில் மேற்கு மண்டலத்துக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு இருப்பதாக கருதப்படுகிறது. தற்போது இந்த மண்டலத்திலிருந்து அமைச்சர்களாகியுள்ள 9 பேர்களில், கே.ஏ.செங்கோட்டையன் தவிர மற்ற 8 பேரும் முதல் முறையாக சட்டப்பேரவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலமாக முந்தைய அரசுகளைப் போலவே, இந்த ஆட்சியிலும் மேற்கு மண்டலம் ஆட்சி அதிகாரத்தில் முக்கிய பங்கை அடைந்துள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று, ஜெயலலிதா முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றபோது, கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்தான் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், எம்ஆர் விஜயபாஸ்கர், கே.சி. கருப்பண்ணன், உடுமலை ராதாகிருஷ்ணன், எஸ்.தாமோதரன், கே.வி.ராமலிங்கம், செந்தில் பாலாஜி, பி.பழனியப்பன் என பலரும் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றனர். அவர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்துத்துறை, நகர ஊரமைப்புத்துறை, நகராட்சி நிர்வாகம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை என அரசின் முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டன.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு, தமிழக அரசியலில் மேற்கு மண்டலத்தின் ஆதிக்கம் இன்னும் அதிகமானது. எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், விஜயபாஸ்கர் போன்றோர், தமிழக அரசின் மிக முக்கியமான துறைகளின் அமைச்சர்களாகவும். கட்சியை வழி நடத்துபவர்களாகவும் வலம் வந்தனர். அந்தக் காலகட்டத்தில் இந்த மாவட்டங்களில் கட்டமைப்பு, வளர்ச்சிப்பணிகளும் அதிகம் நடந்தன.

முக்கியமாக கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் ஏராளமான மேம்பாலங்கள், புதிய ஆட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், புதிய அரசு கலைக்கல்லுாரிகள், மருத்துவக் கல்லுாரிகள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புப் பணிகளும், வளர்ச்சிப் பணிகளும் நடந்தன.

தமிழ்நாடு அமைச்சரவை, மேற்கு மாவட்டங்கள்

பட மூலாதாரம், Facebook/MKStalin

இதுவும் கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணமானது. திமுக இந்த மண்டலத்தில் அதிக வெற்றிகளைப் பெற முடியாத நிலை ஏற்பட்டது.

இருப்பினும் திமுக ஆட்சியிலும் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த செந்தில் பாலாஜி, முத்துசாமி, மதிவேந்தன், இளித்துரை ராமச்சந்திரன், சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் என பலருக்கும் தமிழக அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது. இருப்பினும் செந்தில் பாலாஜி, முத்துசாமியைத் தவிர, வேறு யாருக்கும் முக்கிய அரசுத் துறைகள் ஒதுக்கப்படவில்லை.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த மாவட்டங்களில் திமுக பெரிய அளவில் வெற்றி பெறமுடியவில்லை என்றாலும், 2022 ஆம் ஆண்டில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்த பகுதிகளில் திமுக கூட்டணி அமோகமாக வென்றது. இந்த மாவட்டங்களில் பல்வேறு கட்டமைப்பு, வளர்ச்சித் திட்டங்களையும் திமுக செயல்படுத்தியது. குறிப்பாக கோவையில் விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலமெடுத்தது, மேற்கு புறவழிச்சாலைத் திட்டம், செம்மொழிப் பூங்கா, அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்ட தமிழகத்தின் மிக நீளமான பாலம், பெரியார் அறிவுலகம் போன்ற பல திட்டங்களை செய்து முடித்தது. இந்த முறை கோவையில் 3 தொகுதிகளையும் திமுக வென்றது.

இந்நிலையில்தான் தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக கூட்டணி அமைச்சரவையிலும், மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். அவர்களுக்கும் மிக முக்கியமான துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதனால் முந்தைய அதிமுக மற்றும் திமுக ஆட்சிகளில் நடந்தது போன்று, இந்த ஆட்சியிலும் மேற்கு மண்டலப்பகுதிகளில் தொழில் வளர்ச்சிக்கும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் இந்த அமைச்சர்கள் கூட்டு முயற்சி எடுக்க வேண்டுமென்பது தொழில் அமைப்புகளின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

தொழில் வளர்ச்சி பெற்ற மேற்கு மண்டலத்தின் தேவைகள்!

தமிழ்நாடு அமைச்சரவை, மேற்கு மாவட்டங்கள்

பட மூலாதாரம், Nandha kumar

மேற்கு மண்டலத்திலுள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்கள் தொழில் வளர்ச்சி பெற்ற பகுதிகளாக உள்ளன. அங்குள்ள தொழில் அமைப்புகளை ஒருங்கிணைத்து, கொங்கு குளோபல் ஃபோரம் என்ற அமைப்பு இயங்கி வருகிறது.

இந்த அமைப்பு, மேற்கு மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கும், பிற கட்டமைப்பு வசதிகளுக்கும் தேவையான கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

பிபிசியிடம் பேசிய கொங்கு குளோபல் ஃபோரம் இயக்குநர் நந்தகுமார், ''கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக, திமுக இரு ஆட்சிகளிலும் கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் நிறைய கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டன. பல பணிகள் நடந்து வருகின்றன. அந்தப் பணிகளைத் தொடர்வதுடன், புதிய கட்டமைப்பு வசதிக்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்பதே எங்கள் எதிர்பார்ப்பு. அவற்றைப் பட்டியலிட்டு ஏற்கெனவே அனைத்துக் கட்சிகளிடமும் தேர்தலுக்கு முன்பாகவே வலியுறுத்தியிருக்கிறோம்.'' என்றார்.

தொழில் அமைப்புகள் வலியுறுத்தும் முக்கிய கோரிக்கைகள்:

இவை உள்ளிட்ட இன்னும் பல கோரிக்கைகளை கொங்கு குளோபல் ஃபோரம் மற்றும் பல்வேறு தொழில் அமைப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக விளக்கினார் கொங்கு குளோபல் ஃபோரம் இயக்குநர் நந்தகுமார். இதே கருத்தையே கோவை நெக்ஸ்ட் உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்பினரும் தெரிவித்தனர்.

இந்தக் கோரிக்கைகள் மற்றும் மேற்கு மண்டலத்தின் பிற தேவைகள் குறித்து, புதிய அரசின் திட்டங்கள் மற்றும் உறுதிகள் என்னவாயிருக்கும் என்பதை அறிவதற்காக, தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்ராஜ், லோகேஷ் தமிழ்ச்செல்வன், விஜய் தமிழன் பார்த்திபன், கமலி, சம்பத்குமார், விக்னேஷ் ஆகியோரிடம் தொடர்பு கொண்டபோது, யாரிடமிருந்தும் பதில் பெற முடியவில்லை.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

பிபிசிதமிழ்

மேலும் செய்திகள்
செய்திகள்
கார் பந்தயங்களில் தன்னால் எவ்வளவு காலம் ஈடுபட முடியுமோ, அவ்வளவு காலம் தொடர்ந்து பங்கேற்க விரும்புவதாக
08 Jun 2026
செய்திகள்
Vaibhav Suryavanshi should not be overburdened, says Soruav Ganguly after his India
08 Jun 2026
செய்திகள்
Former spinner Harbhajan Singh slams the national selection committee for excluding Rajat
08 Jun 2026
செய்திகள்
திரையரங்குகளில் வெளியாகிப் பெரும் வசூல் சாதனை படைத்த நடிகர் சூர்யாவின் 'கருப்பு' திரைப்படத்தின் ஓடிட
08 Jun 2026
செய்திகள்
இந்தியாவின் மிகப்பெரிய இன்ஷூரன்ஸ் நிறுவனமான எல் ஐ சி நிறுவனத்தின் பணம் ஆபத்தில் இருப்பதாக வெளியாகி
08 Jun 2026
செய்திகள்
தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் நாற்காலி மாற்றப்பட்டு, அதற்கு பதிலாக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அதி நவீன
08 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net