← முகப்பு செய்திகள்

டாப் 2 இடங்களுக்குள் நுழையப்போவது யார்? ; ராஜஸ்தான் – குஜராத் மோதல்

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 18 பார்வைகள்
டாப் 2 இடங்களுக்குள் நுழையப்போவது யார்? ; ராஜஸ்தான் – குஜராத் மோதல்

பட மூலாதாரம், ANI

ஐபிஎல் 2026 தொடரின் 52வது லீக் சுற்றுப் போட்டியில் இன்று (மே 9) ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

இந்த இரண்டு அணிகளுமே இதுவரை தலா 10 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகள் பெற்றிருக்கின்றன. நெட் ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் ராயல்ஸ் நான்காவது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் ஐந்தாவது இடத்திலும் இருக்கின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, புள்ளிப் பட்டியலில் டாப் 2 இடங்களுக்குள் நுழையலாம்.

இந்த இரு அணிகளும் இதற்கு முன்பு விளையாடிய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அஹமதாபாத்தில் நடந்த அந்தப் போட்டியில், ஒரு 26 பந்துகள் இடைவெளியில் ஆட்டத்தில் தங்கள் பிடியை இழந்திருந்தது குஜராத் டைட்டன்ஸ்.

காயம் காரணமாக இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் ஆடவில்லை. அதற்குப் பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அந்த அணியின் கேப்டனாக முதல் முறையாக செயல்படவுள்ளார். ஷிம்ரன் ஹிட்மெயர் மற்றும் யஷ் ராஜ் புஞ்சா அந்த அணியின் பிளேயிங் லெவனுக்குத் திரும்பியதாக ஜெய்ஸ்வால் கூறினார். டைட்டன்ஸ் அணியில் மானவ் சூதர் நீக்கப்பட்டு பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டதாக கில் கூறினார்.

கேப்டன்கள் டாஸில் சொன்னது என்ன?

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த ராயல்ஸ் அணியின் கேப்டன் ஜெய்ஸ்வால், “ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. அதனால் நாங்கள் முதலில் பந்துவீச விரும்புகிறோம். ராயல்ஸ் அணியை வழிநடத்த நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். கடந்த போட்டியின்போது பராக்-கிற்கு பின்தொடை தசை நாரில் பிரச்னை ஏற்பட்டது. அவர் விரைவில் அணிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்.

டைட்டன்ஸ் கேப்டன் ஷுப்மன் கில், “உண்மையைச் சொல்லப்போனால், நாங்களும் முதலில் பந்துவீச்சைத்தான் தேர்ந்தெடுத்திருப்போம். ஒரு பேட்டிங் குழுவாகவோ அல்லது பந்துவீச்சு குழுவாகவோ நம்முடைய பலம் என்ன என்பதைத் திரும்பிப் பார்ப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். ஒரு அணியாக நமக்கு இவ்வளவு வெற்றிகளைத் தேடித்தந்த விஷயங்கள் எவை என்பதை தோடிக்கவேண்டும். எனவே, நாங்கள் சில விஷயங்களை மீண்டும் ஒருமுறை ஆலோசித்துப் பார்த்தோம். நாங்கள் விளையாடிய பெரும்பாலான போட்டிகள் மிகவும் நெருக்கமாகவே இருந்தன. எனவே, அதற்காகக் கூடுதல் முயற்சி எடுப்பதும், ஒரு விஷயம் நமக்குச் சாதகமாக நடக்கும்போது, அதைச் சரியாகச் செய்து முடிப்பதற்கான நம்பிக்கையை வைத்திருப்பதுமே முக்கியம்.” என்று கூறினார்.

பிளேயிங் லெவனில் யார்?

ராஜஸ்தான் ராயல்ஸ்

இந்தப் போட்டிக்கான ராயல்ஸ் பிளேயிங் லெவனுக்கு யஷ் ராஜ் புஞ்சா, தசுன் ஷனகா மற்றும் ஷிம்ரன் ஹிட்மெயர் ஆகியோர் திரும்பினர். கேப்டன் பராக் காயம் காரணமாக விளையாடவில்லை. நாந்த்ரே பர்கர் பிளேயிங் லெவனில் தன் இடத்தை இழந்தார்.

பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் (கேப்டன்), துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), ஷிம்ரன் ஹிட்மெயர், ஷுபம் துபே, டானவன் ஃபெரீரா, தசுன் ஷனகா, ரவீந்திர ஜடேஜா, ஜோஃப்ரா ஆர்ச்சர், பிரிஜேஷ் ஷர்மா, துஷார் தேஷ்பாண்டே, யஷ் ராஜ் புஞ்சா.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ஆடம் மில்ன், ரவி பிஷ்னாய், ரவி சிங், சுஷாந்த் மிஷ்ரா, வைபவ் சூர்யவன்ஷி.

குஜராத் டைட்டன்ஸ்

இந்தப் போட்டிக்கான டைட்டன்ஸ் அணியில் 1 மாற்றம் செய்யப்பட்டது. மானவ் சூதர் பதிலாக பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டார். சப்ஸ்டிட்யூட் பட்டியலில் சேர்க்கப்பட்ட அவர், இம்பேக்ட் வீரராகப் பயன்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிளேயிங் லெவன்: சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில் (கேப்டன்), ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), நிஷாந்த் சிந்து, வாஷிங்டன் சுந்தர், ஜேசன் ஹோல்டர், ராகுல் திவேதியா, ரஷீத் கான், ககிஸோ ரபாடா, அர்ஷத் கான், மொஹம்மது சிராஜ்.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: பிரசித் கிருஷ்ணா, கிளென் ஃபிலிப்ஸ், ஆர்.சாய் கிஷோர், அனுஜ் ராவத், குமார் குஷாக்ரா.

பிபிசிதமிழ்

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net