கேரள மாநிலத்தின் புதிய முதல்வராக வி.டி. சதீசன் இன்று (14) நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற நிலையில், முதல்வர் பதவிக்கு கட்சிக்குள் கடும் போட்டி நிலவியது.
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி. சதீசன் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது.
சட்டப்பேரவைக்கு தேர்வான காங்கிரஸ் உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோரிடம் கருத்துக் கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய காங்கிரஸ் பார்வையாளர்கள் அஜய் மாக்கன் மற்றும் முகுல் வாஸ்னிக் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.
இவர்களின் அறிக்கை கட்சித் தலைமையிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், கே.சி. வேணுகோபால், வி.டி. சதீசன் மற்றும் ரமேஷ் சென்னிதலா ஆகியோரிடம் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி தனித்தனியாக ஆலோசனை நடத்தினர்.
சுமார் 10 நாள்களுக்கு மேல் கேரள முதல்வரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் காங்கிரஸ் தலைமை திணறியது.
இந்த நிலையில், வி.டி. சதீசனை கேரள முதல்வராகவும் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவராகவும் தேர்ந்தெடுத்துள்ளதாக காங்கிரஸ் தலைமை இன்று அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, விரைவில் முதல்வர் மற்றும் அமைச்சரவை பதவியேற்புக்கான திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.