← முகப்பு செய்திகள்

குழந்தை பிறப்பு விகிதத்தைக் குறைக்கும் ஸ்மார்ட்போன்கள்; அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் சொல்வது என்ன?

🕐 2 மணி நேரம் முன்னர் 📂 செய்திகள் 2 பார்வைகள்
குழந்தை பிறப்பு விகிதத்தைக் குறைக்கும் ஸ்மார்ட்போன்கள்; அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் சொல்வது என்ன?

இன்றைக்கு ஸ்மார்ட் போன்கள் இல்லாத நபர்களே கிடையாது. அதோடு இரவு 12 மணிக்குப் பிறகும் உறங்காமல் அதிகமானோர் ஸ்மார்ட் போன்களை நோண்டிக்கொண்டிருக்கின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு போனில் கேம் விளையாட எதிர்ப்பு தெரிவித்த தந்தை மற்றும் சகோதரியை 18 வயது வாலிபர் ஒருவர் கர்நாடகாவில் குத்திக்கொலை செய்துள்ளார்.

அந்த அளவுக்கு ஸ்மார்ட் போன்கள் இளம் தலைமுறையிடம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மற்றொருபுறம் உலகம் முழுவதும் குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாகச் சரியத்தொடங்கி இருக்கிறது.

இந்தியாவிலும் மக்கள் தொகை தென்னிந்தியாவில் கணிசமாகக் குறைய தொடங்கிவிட்டது. ஆனால் இந்த மக்கள் தொகை குறைவு மற்றும் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவதற்கு முக்கிய காரணம் யார் என்று இப்போது தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2007ம் ஆண்டில் இருந்து குழந்தைகள் பிறப்பு விகிதம் 22 சதவீதம் அளவுக்குக் குறைந்துவிட்டது.

ஸ்மார்ட் போன்

2008ம் ஆண்டு உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அமெரிக்க மக்கள் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் மக்கள் குழந்தைகள் பிறப்பதைக் குறைத்துக்கொண்டதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டாலும், பொருளாதாரம் சரியான பிறகு குழந்தைகள் பிறப்பு விகிதம் மட்டும் அதிகரிக்கவே இல்லை.

இது குறித்து அமெரிக்காவின் தேசிய பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவதற்கு பொருளாதரம் ஒரு காரணம் அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டில்தான் ஸ்மார்ட் போன்களின் வேகம் பெரிய அளவில் உலகம் முழுக்க பரவ ஆரம்பித்தது. அவ்வாறு பரவிய ஐபோன்கள்தான் இப்போது அமெரிக்க மக்கள் தொகை அதிகரிக்க தடையாக இருக்கும் ஒரு கருவியாக மாறி இருக்கின்றன.

ஐபோன்கள், ஸ்மார்ட்போன்களை மக்கள் அதிக அளவில் பயன்படுத்துவதால் இரவு நேரத்தில் அதிகமானோருக்குப் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கான விருப்பம் இல்லாமல் போய்விடுகிறது.

பாலியல் விருப்பங்களை ஸ்மார்ட்போன்கள் அழித்து விடுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐபோன் பயன்படுத்துவதால் அமெரிக்காவில் 15-19 வயதில் 4.5-8.0 சதவிகிதம் மற்றும் 20-24 வயதில் 3.2-6.6 சதவிகிதம் பேர் குழந்தை பிறப்பைக் குறைத்துக்கொண்டுள்ளனர்.

நவீன ஸ்மார்ட்போன்கள் பரவியதால், நண்பர்களுடன் நேரில் செலவிடும் நேரம் மற்றும் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவது குறைந்துவிட்டன. ஸ்மார்ட் போன்கள் மூலம் அதிகமானோர் ஆபாச வீடியோக்களைப் பார்ப்பதால் தங்களது பார்ட்னருடன் உறவு வைத்துக்கொள்வதைக் குறைத்துக்கொண்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சின்சினாட்டி பல்கலைக்கழகத்தின் பொருளாதார வல்லுநர்கள் நாதன் ஹட்சன் மற்றும் ஹெர்னான் மொஸ்கோசோ போடோ ஆகியோரால் மே மாதம் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வில், 2007 ஆம் ஆண்டு முதல் இதேபோன்ற போக்குகள் மற்றும் உலகளாவிய அளவில் இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ஸ்மார்ட்போன்கள் பரவலாகக் கிடைத்தவுடன் பிறப்பு விகிதங்களின் சரிவு அதிகரித்ததை அவர்கள் கண்டறிந்தனர்.

அவர்கள் 128 நாடுகளில் ஸ்மார்ட்போன் ஊடுருவல் மற்றும் இளம்வயதினர் கருவுறுதல் விகிதங்களை அளவிட உலக வங்கி தரவையும் ஆய்வு செய்தனர். இது உலகம் முழுக்க பொதுவாக இருக்கும் ஒரு பிரச்னை என்றும் தெரிவித்துள்ளனர்.

பணக்கார மற்றும் ஏழ்மையான நாடுகள் இரண்டிலும் பிறப்பு விகிதங்கள் குறைந்து வருகின்றன. இது எதிர்காலத்தில் பணியாளர் பற்றாக்குறை, சமூக பாதுகாப்பு அமைப்புகளில் நெருக்கடி மற்றும் பொருளாதார வளர்ச்சி மற்றும் உற்பத்தித்திறனைக் குறைக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சீனா பல தசாப்தங்களாகப் பின்பற்றி வந்த ஒரு குழந்தை கொள்கையை 2016 இல் கைவிட்டது, அதே நேரத்தில் ஜப்பானும் தென் கொரியாவும் குழந்தை பிறப்பை அதிகரிக்க அதிக முதலீடு செய்து வருகின்றன.

நடுத்தர வருமானம் கொண்ட இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்து வருகிறது.

மூன்றாவது குழந்தையும் முப்பதாயிரமும்! – மக்கள் தொகை மாற்றத்தின் எதார்த்தம்

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net