கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் (TASMAC) மதுபானக் கொள்முதல் மற்றும் டெண்டர் நடைமுறைகளில் சுமார் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு மிகப்பெரிய முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அமலாக்கத்துறை (ED) தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில், கடந்த ஆட்சியில் மிகுந்த செல்வாக்குடன் வலம் வந்த பவர்புல் நபராகக் கருதப்படும் தொழிலதிபர் ரத்தீஷ் வேலுவின் பின்னணி மற்றும் அவரது சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகள் தற்போது மத்திய, மாநில விசாரணை முகமைகளின் முதன்மை வளையத்திற்குள் வந்துள்ளன.
அமலாக்கத்துறை அதிகாரிகள் அண்மையில் சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள ரத்தீஷ் வேலுவின் இல்லத்திற்குச் சென்று அதிரடிச் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் முடிவில் அவரது வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்ததுடன், அங்கிருந்து டிஜிட்டல் ஆதாரங்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் வாட்ஸ்அப் உரையாடல் பிரதிகளையும் கைப்பற்றியுள்ளனர். திமுக ஆட்சியில் டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விவேகான் மற்றும் சில முன்னணி சினிமா தயாரிப்பாளர்களுடன் ரத்தீஷ் வேலு நெருங்கிய தொடர்பில் இருந்ததும், அதன் மூலம் கோடிக்கணக்கில் நிதி கைமாறியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மத்திய முகமையான அமலாக்கத்துறை ஒருபுறம் ரத்தீஷ் வேலுவை நெருக்கி வரும் நிலையில், மறுபுறம் மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத்துறையும் (DVAC) இந்த விவகாரத்தில் களமிறங்கியுள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த அதிரடி அதிகாரி அருண் ஐபிஎஸ் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அருண் ஐபிஎஸ், இந்த மெகா ஊழல் வழக்கைத் தன் கைகளில் எடுத்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராகப் பொறுப்பேற்றதுமே தனது டிரேட் மார்க் பாணியில் ஆக்ஷனைத் தொடங்கியுள்ளார் அருண் ஐபிஎஸ். கடந்த திமுக ஆட்சியில் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி வலம் வந்த ரத்தீஷ் வேலுவின் முழுக் குடுமியும் இப்போது இ.டி மற்றும் டி.வி.ஏ.சி ஆகிய இருமுனை வளையத்திற்குள் சிக்கியுள்ளது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அடுத்தகட்டமாகக் கைது உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அருண் ஐபிஎஸ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புப் படை தீவிரமாகத் தயாராகி வருவதால் தமிழக அரசியல் மற்றும் தொழில் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.