கடந்த காலங்களில் நாட்டைச் சூறையாடி, மக்கள் சொத்துக்களைக் கொள்ளையடித்த ஊழல்வாதிகள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு எத்தனிக்கின்றனர். ஆனால் ஜனாதிபதியின் பொறுமைக்கும் எல்லை உண்டு என ராஜங்கனயே சத்தாரதன தேரர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் திங்கட்கிழமை (4) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செயலாளராக இருந்தவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், மக்கள் முன்னிலையில் தோன்றுவதற்குப் பயந்து தலைமறைவாகியிருந்தனர். அமைச்சுக்களின் செயலாளர்கள் மீது மக்கள் கடும் கோபத்தில் இருந்ததை நாம் மறக்க முடியாது. அன்று வீதியில் இறங்க அஞ்சியவர்கள், இன்று ஜனாதிபதியின் நற்பண்பையும் நிதானத்தையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு மீண்டும் ஆட்டம் போடத் தொடங்கியுள்ளனர்.
ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பிரயோகிக்கத் தெரியாமல் அமைதியாக இருக்கவில்லை. அவர் மக்கள் மீது கொண்டுள்ள கருணையினால் பொறுமை காக்கின்றார். ஆனால், சுகீஸ்வர பண்டார, நாமல் ராஜபக்ச போன்றவர்கள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிப்பது வேடிக்கையாக உள்ளது. நாட்டை வங்குரோத்தாக்கிவிட்டு, மக்கள் சொத்துக்களில் சுகபோகம் அனுபவித்த இந்தத் திருடர்களுக்கு மீண்டும் ஒருமுறை மக்கள் ஆணை வழங்கத் தயாராக இல்லை. இவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வர முற்பட்டால், பழைய போராட்டக் காலத்தைப் போன்றதொரு மக்கள் எழுச்சி உருவாவதைத் தடுக்க முடியாது.
தற்போதைய ஜனாதிபதியுடன் இந்நாட்டு மக்கள் கைகோர்த்துள்ளனர் என்பதை எதிர்த்தரப்பினர் புரிந்துகொள்ள வேண்டும். ஜனாதிபதியை விரட்டுவதற்கு ஒரு இலட்சம் பேரை நீங்கள் திரட்டினால், உங்களை விரட்டியடிக்க நாங்கள் இரண்டு இலட்சம் பேரைத் திரட்டுவோம். மக்கள் சக்தியைச் சீண்டிப்பார்க்க வேண்டாம் என எச்சரிக்கின்றோம்.
அதேவேளை, தற்போதைய அரசாங்கத்திலும் சில முறைகேடுகள் நடப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 2.5 மில்லியன் டொலர்கள் அல்லது 75 கோடி ரூபாய் நிதி மோசடி மற்றும் 600 இலட்சம் டொலர்கள் மாயமானதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்து வெளியிட்டுள்ளார். நாம் அரசாங்கத்தைப் பாதுகாக்கின்றோம் என்பதற்காக இவ்வாறான தவறுகளை நியாயப்படுத்தப் போவதில்லை. அரசாங்கமோ அல்லது ஜனாதிபதியோ தவறிழைக்கும் பட்சத்தில் அதனைச் சுட்டிக்காட்ட நாம் தயங்கமாட்டோம்.
ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, மீண்டும் மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்க எவராவது முற்படுவார்களாயின், அவர்கள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இழந்த மக்கள் பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும். தகுதியற்றவர்களைப் பதவிகளில் அமர்த்துவதைத் தவிர்த்து, நாட்டை நேசிக்கும் ஊழலற்ற அதிகாரிகளைக் கொண்டு நிர்வாகத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியைக் கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டை அழித்த பாதாள உலகக் கும்பல்கள், கள்ளு வியாபாரிகள் மற்றும் முறைகேடான வர்த்தகர்களிடம் இருந்து இந்த நாடு மிகவும் சிரமத்திற்கு மத்தியில் மீட்கப்பட்டுள்ளது. மீண்டும் அத்தகையதொரு இருண்ட யுகத்திற்கு நாடு செல்வதை அனுமதிக்க முடியாது. எனவே, தற்போதைய குறைபாடுகளை நிவர்த்தி செய்து, நேர்மையான பாதையில் அரசாங்கம் பயணிக்க வேண்டும். இல்லையெனில், 225 மக்கள் பிரதிநிதிகளையும் விரட்டியடிக்கும் மற்றுமொரு மக்கள் போராட்டம் வெடிப்பதைத் தவிர்க்க முடியாது என்றார்.