இலங்கைக்கு அரச பயணம் மேற்கொண்டுள்ள மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மாலைதீவு ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வைத் தொடர்ந்து, இந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.
இங்கு மாலைதீவு ஜனாதிபதியை மிகவும் அமோகமாக வரவேற்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தனது அழைப்பை ஏற்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமைக்காகத் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இலங்கை மற்றும் மாலைதீவுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 61 ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில் இடம்பெறும் முகமது முய்சுவின் இந்த இலங்கை விஜயமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பங்களிப்பு, நம்பிக்கை மற்றும் நட்புறவைப் பிரதிபலிக்கிறது எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல் எட்டப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
இரு நாட்டு மக்களுக்கும் பரஸ்பர நன்மைகள் கிடைக்கும் வகையில் பொருளாதார, கலாசார மற்றும் சமூக உறவுகள் உள்ளிட்ட பன்முகக் கூட்டாண்மையை மேலும் வளர்ப்பது மற்றும் பன்முகப்படுத்துவதற்கான வழிகள் குறித்து தலைவர்கள் இங்கு விரிவாகக் கலந்துரையாடினர்.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரும், மாலைதீவு அரசாங்கத்தின் சார்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் இர்திஷாம் ஆதம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி, வெளிநாட்டு உறவுகள் தொடர்பான ஜனாதிபதியின் முதன்மைச் செயலாளர் முகமது நசீர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டன