← முகப்பு செய்திகள்

இரானில் அமெரிக்காவின் புதிய தாக்குதல் அலை – ஹோர்மூஸ் நீரிணையில் கப்பல்களைத் தாக்கியதாக இரான் அறிவிப்பு

🕐 2 மணி நேரம் முன்னர் 📂 செய்திகள் 2 பார்வைகள்
இரானில் அமெரிக்காவின் புதிய தாக்குதல் அலை – ஹோர்மூஸ் நீரிணையில் கப்பல்களைத் தாக்கியதாக இரான் அறிவிப்பு

பட மூலாதாரம், Getty Images

இரான் மீது அமெரிக்க ராணுவம் ஒரு புதிய அலை தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, ஹோர்மூஸ் நீரிணையில் உள்ள கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.

இரான் "கடுமையாக" தாக்கப்படும் என்றும், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான "ஒப்பந்தத்தைச் செய்ய டெஹ்ரான் மிக நீண்ட காலம் எடுத்துக்கொண்டுள்ளது" என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து இந்த சமீபத்திய அமெரிக்கத் தாக்குதல் நடந்துள்ளது.

"இரானின் தேவையற்ற மற்றும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்கு பதிலடியாக" புதன்கிழமையன்று "தற்காப்புத் தாக்குதல்களைத்" தொடங்கியதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (சென்ட்காம்) தெரிவித்துள்ளது.

ஹோர்மூஸ் நீரிணையில் தாக்குதல்

ஹோர்மூஸ்

பட மூலாதாரம், Hwawon Ceci Lee/Anadolu via Getty Images

இதனைத் தொடர்ந்து, ஹோர்மூஸ் நீரிணையில் உள்ள இரண்டு கப்பல்களை ஐஆர்ஜிசி (IRGC) தாக்கியதாக இரான் நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு பலவீனமான போர்நிறுத்தத்தைச் சோதிக்கும் வகையில், பழிக்குப்பழி வாங்கும் தாக்குதல்களின் தீவிரமாக, இரானும் அமெரிக்காவும் சமீபத்திய நாட்களில் ராணுவ மற்றும் கண்காணிப்புத் தளங்களை இலக்காகக் கொண்டுள்ளன.

வளைகுடாவில் உள்ள கெஷ்ம் தீவிலும், பண்டார் அப்பாஸ் மற்றும் சிரிக் உள்ளிட்ட பல நகரங்களிலும் வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளன.

அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஹோர்மூஸ் நீரிணை "அனைத்து வகையான கப்பல்களுக்கும் முற்றிலும் மூடப்பட்டுள்ளது" என்று இரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும், சென்ட்காம், "வணிகக் கப்பல்கள் தொடர்ந்து ஹோர்மூஸ் நீரிணைக்கு உள்ளேயும் வெளியேயும் பயணித்து வருகின்றன" என்று கூறியுள்ளது.

சமீபத்திய அமெரிக்கத் தாக்குதல் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, டொனால்ட் டிரம்ப்: "நேற்று நாம் அவர்களைக் கடுமையாகத் தாக்கினோம், இன்றும் அவர்களைக் கடுமையாகத் தாக்கப் போகிறோம்" என்று எச்சரித்திருந்தார்.

இரானியத் தலைவர்கள் "ஒரு ஒப்பந்தத்தைப் பேச்சுவார்த்தை மூலம் முடிக்க மிக நீண்ட காலம் எடுத்துக் கொள்கிறார்கள்" என்று டொனால்ட் டிரம்ப் ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் எழுதியுள்ளார், அதே நேரத்தில் இரான் வெளியுறவு அமைச்சகம் அமெரிக்கா "அனுப்பும் முரண்பாடான செய்திகளின் மூலம் தூதரக செயல்முறையை சேதப்படுத்துகிறது" என்று குற்றம் சாட்டியுள்ளது.

டொனால்ட் டிரம்ப்பின் கருத்துக்களுக்குப் பதிலளித்த இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், இரான் "எந்தவொரு அழுத்தம் அல்லது அச்சுறுத்தலுக்கும் எதிராக உறுதியாக நிற்கும்" என்று கூறினார்.

அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் பின்னர், இரானில் உள்ள "முக்கிய வசதிகள் மீது குண்டுகள் வீசப்படும்" என்று கூறினார்.

இரானுக்கு ஓர் ஒப்பந்தம் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் அது அதைப் பயன்படுத்தவில்லை என்றும், அமைதி ஒப்பந்தம் எதுவும் செய்யப்படாவிட்டால் இரான் மீண்டும் தாக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருந்ததாகவும் ஹெக்செத் கூறினார்.

ஏப்ரல் மாதத்தில், அமெரிக்காவும் இரானும் ஒரு போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன, அது ஆரம்பத்தில் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என்று கருதப்பட்டது. அதன் பிறகு இரு தரப்பினரும் முழு அளவிலான விரோதப் போக்கிற்குத் திரும்பாமல், அவ்வப்போது மாறி மாறி துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டனர்.

இருப்பினும், வாஷிங்டனுக்கும் டெஹ்ரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான சமீபத்திய முயற்சிகள் முடங்கியுள்ளன, மேலும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

செவ்வாயன்று, அமெரிக்க ஹெலிகாப்டர் ஒன்று தாக்கி வீழ்த்தப்பட்டது

பட மூலாதாரம், US Navy

செவ்வாயன்று, அமெரிக்க ஹெலிகாப்டர் ஒன்று தாக்கி வீழ்த்தப்பட்டது, இதற்கு இரான் மீது குற்றம் சாட்டப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க தளங்களை இலக்காகக் கொண்டு ஐஆர்ஜிசி இதற்குப் பதிலடி கொடுத்தது.

எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், மத்திய கிழக்கு "நெருக்கடிக்குள் ஆழமாக ஈர்க்கப்படுகிறது" என்றும், சமீபத்திய தாக்குதல்கள் "போர்நிறுத்தம் என்பது ஒரு குறைந்த அளவிலான குண்டு வீச்சு (lesser-fire) போன்றது" என்றும் கூறினார்.

"குறைந்த அளவிலான குண்டு வீச்சு முழுமையான போராக மாறுவதற்கான அபாயங்களை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. அனைத்து தரப்பினரும் ஒரு தூதரக தீர்வை நோக்கிச் செயல்பட வேண்டும். இனி தாக்குதல்கள் கூடாது. இனி சாக்குப்போக்குகள் இல்லை," என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

பிபிசிதமிழ்

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net