← முகப்பு தமிழ்

அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் குறித்து தான் கடும் அதிருப்தியில் இருப்பதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 54 பார்வைகள்

அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் குறித்து தான் கடும் அதிருப்தியில் இருப்பதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு பிட்டிபன மகா வித்தியாலயத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆராதனையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

"அரசியல்வாதிகளின் உலகில் இப்படியான விஷயங்கள்தான் நடக்கின்றன. இன்று ஒன்றைச் சொல்வார்கள், நாளை அதற்கு நேர்மாறான ஒன்றைச் செய்வார்கள்.

உதாரணமாக, கடந்த ஒரு அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ஒருவர், தற்போது ஜனாதிபதி நீதிமன்றத் தீர்ப்புகளை அவரே அறிவிக்கத் தொடங்கியுள்ளார் என்றும், நீதிமன்றத்தை அவமதிக்கிறார் என்றும் கூச்சலிடுகிறார்.

அதே அமைச்சர், அன்று இருந்த அரசாங்கத்தின் மூலம் எமது முன்னாள் பிரதம நீதியரசரை பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அவரது பதவியிலிருந்து பலவந்தமாக நீக்கினார். அந்த நேரத்தில் இந்த நபர் அதற்கு ஆதரவாக வாக்களித்தார்.

இப்போது வந்து இதில் தலையிடுகிறார்கள் என்று கூறுகிறார். இவ்வாறான இரட்டை கொள்கைகள் முன்னரும் வெவ்வேறு காலப்பகுதிகளில் இருந்தன. பாராளுமன்றத்தில் ஒரு பக்கத்தில் இருப்பவர்கள் மறுபக்கத்தில் இருப்பவர்களைப் பார்த்து திருடர்கள், திருடர்கள், திருடர்கள் என்பார்கள். அந்தப் பக்கத்தில் இருப்பவர்கள் திரும்பிப் பார்த்து நீங்கள்தான் திருடர்கள், திருடர்கள், திருடர்கள் என்பார்கள்.

அப்படியென்றால் அனைவரும் திருடர்கள் தான். அவர்களே தாங்கள் திருடர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். இவ்வாறு சட்டத்தை சட்டவிரோதமாக்க முற்படுகிறார்கள். நீதிமன்றம் எப்போதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பது உண்மைதான்.

ஆனால், அதனை அனைத்து அரசியல் கட்சிகளும் செய்ய வேண்டும். ஒரு தரப்பினர் அதனைச் செய்யாமல் இருந்துவிட்டு, பின்னர் மற்றைய தரப்பினரை அதைச் செய்யச் சொல்லித் திட்டுவது தவறான ஒன்றாகும்.

அது ஒரு பொய். அப்படிப் பொய் சொல்ல வேண்டாம். அரசியல் தலைவர்கள் தாம் அணியும் ஆடைகளுக்காவது குறைந்தபட்சம் மதிப்பளிக்க வேண்டும். எனவே, வெட்கமற்ற வேலைகளைச் செய்ய வேண்டாம். தான் செயல்படுத்தாத ஒரு கொள்கையைப் பற்றி இப்போது வந்து உபதேசம் செய்ய வேண்டாம். அது தவறு.

துறவிகளை பாடசாலைகளின் தலைமைத்துவத்திற்கு நியமிக்குமாறு நாம் பல வருடங்களாக இந்த அரசாங்கங்களிடம் கூறி வருகிறோம். வெவ்வேறு அரசாங்கங்கள் துறவிகளுக்கும் மதகுருமார்களுக்கும் ஆசிரியர் நியமனங்களை வழங்குவதாக வாக்குறுதி அளித்து எங்களை ஏமாற்றின.

இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்களிடம் நாம் இந்தப் பட்டியல்களைக் கையளித்தோம். துறவிகள், கன்னியாஸ்திரிகள் மற்றும் குருமார்களுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்காக பட்டியலைத் தருமாறு எங்களிடம் கூறினார்கள்.

ஆனால், அந்த ஆசிரியர் நியமனங்கள் எங்களுக்கு வழங்கப்படவில்லை. எனக்கு நினைவிருக்கிறது, மடு திருத்தலத்தில் வைத்து பின்னர் ஜனாதிபதியான ஒரு நபர், எனது முகத்தைப் பார்த்து ஒன்றரை மாதத்தில் இந்த ஆசிரியர் நியமனங்களை வழங்குவதாகக் கூறினார்.

அந்த ஒன்றரை மாதம் இன்றுவரை வரவில்லை. அந்த நபர் பின்னர் நாட்டின் ஜனாதிபதியாகவும் மாறினார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. எல்லாமே பொய்க் கதைகள். அரசியல் உலகம் குறித்து நாம் மிகவும் கசப்படைந்துள்ளோம்.

இந்த நடத்தை, இந்த வறுமை குறித்தே அவ்வாறு தோன்றுகிறது. கொள்கையற்ற, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத, பொய் சொல்லும், மற்றவர்கள் மீது சேறு பூசும், இப்படியான சமூகத்தை அசுத்தப்படுத்தும் கதாபாத்திரங்களால், அரசியல் நமக்கு வெறுத்துப் போகும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்." என்றார்.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
ஈரான் போரிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிடும் தீர்மானத்தை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை
04 Jun 2026
📰
தமிழ்
நாவலப்பிட்டி, மாபாகந்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், அதி
04 Jun 2026
📰
தமிழ்
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11
04 Jun 2026
📰
தமிழ்
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அங்கு பணியாற்றி வந்த மூன்று
04 Jun 2026
📰
தமிழ்
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shira
9 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான காதுகேளாமை (கேட்டல் குறைபாடு) பிரச்சினைகளுடன்
9 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net