பட மூலாதாரம், SP Charan
'பாடும் நிலா' என பாசமாக அழைக்கப்படும் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். இந்தியளவில் பல ஹீரோக்களுக்கு அவர் பாடியிருந்தாலும் கமல்ஹாசனுக்கும் அவருக்குமான பாசம், சினிமா பிணைப்பு மற்றவர்களை கொஞ்சம் அதிகம்.
எஸ்பிபியை கமல்ஹாசன் அன்னய்யா என பாசமாக அழைப்பார்.
அவர் குறித்து கமல்ஹாசன் அண்மையில் பேசுகையில், 'இல்லாமற் போயும் இருந்துகொண்டே இருப்பவர் என் அன்னய்யா எஸ்.பி. பாலசுப்ரமணியம்" என உருக்கமாகக் குறிப்பிட்டு இருந்தார்.
''எப்போது முதன்முதலில் உங்கள் தாயையோ அல்லது சகோதரரையோ பார்த்தீர்கள்? என்று கேட்பது போலத்தான் எஸ்பிபியை நான் முதலில் எப்போது பார்த்தேன் என சுத்தமாக நினைவில் இல்லை. நான் அவரைப் பார்ப்பதற்கு முன்பே அவரது குரலைக் கேட்டேன்.'' என கமல்ஹாசன் பேசியிருந்தார்.
''அவர் மிகவும் பிஸியான பாடகராக இருந்தார். ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை கன்னடப் பாடல்களுக்காக ஒதுக்கி வைப்பார். வழக்கமாக அவர் ஒரு நாளைக்கு எட்டுப் பாடல்களைப் பாடுவார், ஆனால் ஒரு ஞாயிற்றுக்கிழமை அவர் என்னை அழைத்து, 12 பாடல்களைப் பாடியதாக சொன்னார். கோவிட் அவரைத் தாக்காமல் இருந்திருந்தால், அவர் தினமும் பாடிக்கொண்டிருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்றும் பேசியிருக்கிறார் கமல்ஹாசன்.
சிக்கலான பாட்டு
அதேபோல் கமல்ஹாசன் உடனான நட்பு குறித்து எஸ்.பி.பாலசுப்ரமணியமும் பல மேடைகளில் பேசியிருக்கிறார்.
''என் போன் அழைப்பை தம்பி கமல் எப்போதும் எடுக்காமல் விட்டதில்லை. ஒரு நல்ல பாடல் சிறந்த பாடலாக மாறுவதற்கு பாடகருக்கும் நடிகருக்கும் இடையேயான தொடர்பு சரியாக இருக்க வேண்டும். கமல்ஹாசனுக்கு நான் அதிக பாடல்கள் பாடியது எனது அதிர்ஷ்டம். அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம் பெற்ற 'புது மாப்பிள்ளைக்கு' பாடலில், அந்த கோரஸையும் நானே பாடினேன். கமல் தவிர வேறெந்த நடிகரும் 'அபூர்வ சகோதரர்கள்' போல ஒரு படத்தை எடுக்க முன்வந்திருக்க மாட்டார்கள். கமல்ஹாசன் நடிப்பில் மற்றுமொரு படமான 'அந்த ஒரு நிமிடம்' படத்தின் 'சிறிய பறவை சிறகை விரிக்க' பாடல் சிக்கலான மெட்டு. ஆனால் அந்தப் பாடலின் மொத்த இசையமைப்பை இளையராஜா அரை மணிநேரத்தில் முடித்தார். அந்த பாடலை பாடியதும் பாக்கியம்'' என்று கூறியிருக்கிறார்.
இன்று பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியமின் பிறந்தநாள்.

மகன் எஸ்.பி.பி சரணுக்கு பிடித்த பாடல்கள்
எஸ்.பி.பி மகனும், பாடகருமான எஸ்.பி.பி. சரணனிடம் கமல்ஹாசனுக்காக உங்க அப்பா பாடியதில் உங்களுக்கு பிடித்த பாடலை பகிர முடியுமா என்று பிபிசி சார்பில் கேட்டோம்.
''சினிமாவில் அப்பா, கமல்ஹாசன் கூட்டணி பாசத்தால், இசையால் இணைந்தே இருக்கும். இரண்டு பேருக்கும் சகோதர பாசம் அதிகம். அவருக்காக அப்பா ஏகப்பட்ட பாடல்கள் பாடியிருக்கிறார். அதில் நிழல் நிஜமாகிறது படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், கண்ணதாசன் வரிகளில் அப்பா பாடிய 'கம்பன் ஏமாந்தான்' பிடிக்கும். அதே படத்தில் இடம் பெற்ற 'இலக்கணம் மாறுதோ' பாடலையும் ரொம்பவே ரசிப்பேன். இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் இடம் பெற்ற 'ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது' மற்றும் தூங்காதே தம்பி தூங்காதே திரைப்படத்தில் 'வானம் கீழே வந்தால் என்ன'? வாழ்வே மாயம் படத்தில் வரும், 'வந்தனம் என் வந்தனம்' பாடலையும் அதிகம் கேட்பேன்'' என்றார்.

பட மூலாதாரம், YT/Bravo Musik
எஸ்.பி.பி சகோதரியும், பிரபல பின்னணி பாடகியுமான எஸ்.பி.சைலஜா பிபிசி தமிழிடம் பேசுகையில், ''அண்ணா, கமலுக்காக நிறைய ஹிட் கொடுத்து இருக்கிறார். ஒரு பாடல் உருவாகும்போது இரண்டு பேருக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருக்கும். குறிப்பாக, கமல்ஹாசன் பாடல் என்றால் அண்ணா எஸ்பிபி கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்வார்.
எனக்கு அவர்கள் கூட்டணியில் புன்னகை மன்னன் படத்தில் இடம் பெற்ற 'என்ன சத்தம் இந்த நேரம்' ரொம்ப இஷ்டம். உனக்கென்ன மேலே நின்றாய் (சிம்லா ஸ்பெஷல்), வேதம் அணுவிலும் நாதம் (சலங்கை ஒலி) பாடல்களும் பிடிக்கும். அண்ணா எஸ்பிபி உடலால் மறைந்தாலும் இன்றும் பாடல்களால் வாழ்ந்து கொண்டே இருக்கிறார். எப்போதும் நம்முடன்தான் இருந்துகொண்டே இருக்கிறார். இன்றும் அந்த பாடல்களை நிகழ்ச்சிகளில், கச்சேரிகளில் பாடுகிறார்கள். யூடியூப்பில் மெய்மறந்து ரசிகர்கள் ரசிக்கிறார்கள்'' என எஸ்.பி.சைலஜா தெரிவித்தார்.
'காலத்தால் அழியாத கூட்டணி'
மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தி தொடர்பு மாநில செயலாளரும், இயக்குனருமான முரளி அப்பாஸ், கமல் – எஸ்பிபி கூட்டணியில் தனக்கு பிடித்த பாடல்களை பட்டியலிட்டார்.
1) சொர்க்கம் மதுவிலே(சட்டம் என் கையில்)
2) என்னடி மீனாட்சி (இளமை ஊஞ்சலாடுகிறது)
3) வளையோசை கலகலவென( விக்ரம்)
4) கம்பன் ஏமாந்தான் (நிழல் நிஜமாகிறது)
5) உனக்கென்ன மேலே நின்றாய் (சிம்லா ஸ்பெஷல்)

பட மூலாதாரம், YT/ Music Master
''இந்த பாடல்களில் இசை, ராகம், வரிகளின் தன்மையை தாண்டி 'உணர்ச்சி'யின் தாக்கம் இருக்கும். இந்த பாடல்கள் ஒவ்வொரு உணர்ச்சியை வெளிப்படுத்தும் அல்லது தூண்டும். இந்த பாடல்களை கேட்கும்போது எஸ்பிபி பாடுவது மாதிரி இருக்காது. கமல்ஹாசனே பாடுவது மாதிரி இருக்கும். அதேபோல், கமல்ஹாசனுக்கு ஏற்ப எஸ்பிபியும் வாய்ஸ் கொடுத்து இருப்பார். அந்த கூட்டணி ஒரு வெற்றிகரமான கூட்டணி மட்டுமல்ல, காலத்தால் அழியாத கூட்டணி'' என்கிறார் முரளி அப்பாஸ்.

'சிப்பி இருக்குது, முத்தும் இருக்குது'
கமல்ஹாசன் – எஸ்பிபியின் தீவிர ரசிகையான நடிகை லதாராவ் பிபிசி தமிழிடம்,'' ஒவ்வொரு நாளும் இந்த கூட்டணி பாடலை கேட்டு வருகிறேன். ஒவ்வொரு முறையும் பல பாடல்களை மெய் மறந்து ரசிக்கிறேன். சினிமாவை, நட்பு, பாசத்தை தாண்டி இருவருக்குள்ளேயும் ஒரு வித பந்தம் இருந்து இருக்கிறது. அதனால்தான் இருவரும் இணைந்து இப்படிப்பட்ட பாடல்களை கொடுத்து இருக்கிறார்கள். இவர்களுக்கு இடையே போட்டி, ஈகோ எதுவும் இல்லை. அதனால்தான் எத்தனையோ ஆண்டுகள் ஆனாலும் இப்படிப்பட்ட பாடல்களை ரசிக்கிறோம். இன்னும் ரசித்துகொண்டே இருக்கிறோம்'' என்று சொல்லிவிட்டு தனக்குபிடித்த பாடல்களை பட்டியலிடுகிறார்.
1) அந்திமழை பொழிகிறது (ராஜபார்வை)
2) தகிடதமிதி (சலங்கை ஒலி)
3) வந்தனம் (வாழ்வே மாயம்)
4) சிப்பி இருக்குது, முத்தும் இருக்குது (வறுமையின் நிறம் சிகப்பு)
5) கா கீ குகு (சிங்காரவேலன்)
6) இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய் (சிங்காரவேலன்)
7) எங்கேயும் எப்போதும் (நினைத்தாலே இனிக்கும்)
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு