← முகப்பு செய்திகள்

IPL 2026 LSG vs PBKS: Mohammed Shami Creates History: Breaks Jofra Archer's

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 25 பார்வைகள்
IPL 2026 LSG vs PBKS: Mohammed Shami Creates History: Breaks Jofra Archer's

லக்னோ: இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன் எவரும் செய்யாத ஒரு அசாத்திய சாதனையை நிகழ்த்திப் புதிய சரித்திரம் படைத்துள்ளார். லக்னோவில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், அவர் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தியதன் மூலம் இந்த மைல்கல்லை அவர் எட்டியுள்ளார்.

2026 ஐபிஎல் தொடரின் 68-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் லக்னோ அணிக்காகப் பந்துவீசிய முகமது ஷமி, ஆட்டத்தின் முதல் பந்திலேயே பஞ்சாப் தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யாவை ஆட்டமிழக்கச் செய்தார். ஷமி வீசிய மின்னல் வேக பவுன்சர் பந்தைச் சரியாகக் கணிக்கத் தவறிய ஆர்யா, மிட்-விக்கெட்டில் நின்றிருந்த அர்ஜுன் டெண்டுல்கரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

IPL 2026 LSG vs PBKS Mohammed Shami Creates History Breaks Jofra Archer s Record for Most First-Ball Wickets

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸின் முதல் பந்திலேயே 6 முறை விக்கெட் வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை முகமது ஷமி பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 5 முறை முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனையை ஷமி தகர்த்துள்ளார்.

ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடி மற்றும் இங்கிலாந்தின் லூக் வூட் ஆகியோர் தலா 9 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாகப் புவனேஸ்வர் குமார், முகமது அமீர் ஆகியோருடன் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி ஷமியும் இணைந்துள்ளார். குறிப்பாக, முதல் பந்துகளில் ரன்களைக் கட்டுப்படுத்துவதிலும் ஷமி கில்லாடியாக உள்ளார். அவர் வீசிய 79 முதல் பந்துகளில் வெறும் 40 ரன்கள் மட்டுமே கொடுத்து 6.66 என்ற சிறப்பான சராசரியைக் கொண்டுள்ளார்.

IPL 2026: ஆறுதல் வெற்றி கூட கிடையாது.. மரண அடி அடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.. நொந்து போன லக்னோ

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ஷமி இதுவரை 13 இன்னிங்ஸ்களில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனாலும், அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஷமியின் பெயர் இடம் பெறவில்லை. இது குறித்துப் பேசிய தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர், ஷமி தற்போது டி20 போட்டிகளில் விளையாட மட்டுமே உடல் தகுதியுடன் இருப்பதாகவும், நீண்ட நேரம் பந்துவீச வேண்டிய போட்டிகளுக்கு அவர் இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை என்றும் தெரிவித்தார்.

ஆனால், ஐபிஎல் அரங்கில் 35 வயதில் முகமது ஷமி காட்டி வரும் அனல் பறக்கும் வேகம் மற்றும் துல்லியம், தான் எப்போதுமே 'ரெடி' என்பதைத் தேர்வுக் குழுவினருக்கு உரக்கச் சொல்லும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net