கொல்கத்தா: 2026 ஐபிஎல் தொடரின் 60-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் மூவர் ஆடிய அதிரடி ஆட்டத்தை கண்டு குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள் நிலைகுலைந்து போனார்கள். கொல்கத்தா அணி 247 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆனால், அவரது முடிவு தவறானது என்பதை கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் முதல் ஓவரிலேயே நிரூபித்தனர். தொடக்க வீரராகக் களம் இறங்கிய கேப்டன் அஜின்கியா ரஹானே 14 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க வீரரான பின் ஆலன் மைதானத்தில் 'சிக்ஸர்' மழை பொழிந்தார்.

குஜராத் அணியின் நட்சத்திரப் பந்துவீச்சாளரான முகமது சிராஜ் மற்றும் ககிசோ ரபாடாவின் பந்துகளைச் சற்றும் தயக்கமின்றி பின் ஆலன் மைதானத்திற்கு வெளியே அனுப்பினார். வெறும் 35 பந்துகளைச் சந்தித்த அவர், 10 இமாலய சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். துரதிர்ஷ்டவசமாக அவர் சதத்தை நழுவவிட்டாலும், 265.71 என்ற ஸ்டிரைக் ரேட்டில் அவர் ஆடிய விதம் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்தது.
பின் ஆலன் கொடுத்த அதிரடித் தொடக்கத்தை இளம் வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி மற்றும் கேமரூன் கிரீன் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். நிதானமாகவும் அதே சமயம் அதிரடியாகவும் ஆடிய ரகுவன்ஷி 44 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுபுறம் கேமரூன் கிரீன் தனது பங்கிற்கு 28 பந்துகளில் 52 ரன்கள் விளாசினார். இந்த ஜோடியின் அதிரடியால் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் என்ற பிரம்மாண்ட ஸ்கோரை எட்டியது.
இந்தியா – ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் முக்கிய பவுலர் நீக்கம்? ஜம்மு காஷ்மீர் வீரருக்கு வாய்ப்பு
குஜராத் அணியில் இடம் பெற்றுள்ள முன்னணி பந்துவீச்சாளர்கள் கொல்கத்தா பேட்ஸ்மேன்களிடம் சரணடைந்தனர். குறிப்பாக, சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ரஷித் கான் 4 ஓவர்களில் விக்கெட் ஏதுமின்றி 57 ரன்களை வாரி வழங்கினார். முகமது சிராஜ் 50 ரன்களும், பிரின்ஸ் யாதவ் 49 ரன்களும் கொடுத்தனர். குஜராத் தரப்பில் சிராஜ் மற்றும் சாய் கிஷோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.