லக்னோ: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 2026 ஐபிஎல் லீக் போட்டியில், முன்னாள் சிஎஸ்கே வீரர் சிஎஸ்கே-வின் முதல் மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். மேலும், அவர் விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு செய்த ஒரு செயல் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக இந்த சீசனில் தனது முதல் போட்டியில் களமிறங்கிய 24 வயது இளம் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் சிங், சிஎஸ்கே அணிக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தினார். தொடர்ச்சியாக 4 ஓவர்கள் வீசிய அவர், வெறும் 26 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

ஆகாஷ் சிங் தனது இரண்டாவது ஓவரிலேயே சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டை 13 ரன்களில் வெளியேற்றினார். அதனைத் தொடர்ந்து அதிரடி வீரர் சஞ்சு சாம்சனை 20 ரன்களிலும், உர்வில் படேலை 6 ரன்களிலும் வீழ்த்தி சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டத்தை முடக்கினார். ஆவேஷ் கானுக்குப் பதிலாக அணியில் வாய்ப்பு பெற்ற ஆகாஷ், அதனை மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.
விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு ஆகாஷ் சிங் காட்டிய ஒரு காகிதக் குறிப்பு தான் இப்போது இணையதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அதில், "#Akki on fire – Akash knows how to take wickets in T20 game" (அக்கி ஃபார்மில் இருக்கிறார் – டி20 போட்டியில் எப்படி விக்கெட் எடுக்க வேண்டும் என்று ஆகாஷுக்குத் தெரியும்) என எழுதப்பட்டிருந்தது. தனது திறமையை நிரூபிக்கும் வகையில் அவர் செய்த இந்த 'மாஸ்' கொண்டாட்டம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ஆகாஷ் சிங் கடந்த 2023 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர் என்பது தான். தனது பழைய அணிக்கு எதிராகவே அவர் விக்கெட்களை வீழ்த்தி விட்டு "யாருக்கோ" ஒரு மெசேஜ் அனுப்பி இருக்கிறார். 2023இல் சிஎஸ்கே அணி தன்னை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதைத்தான் ஆகாஷ் சிங் இவ்வாறு சூசகமாக கூறி இருக்கிறாரா? என்ற சந்தேகமும் எழுகிறது.
IPL 2026: சிஎஸ்கே-வில் தோனி மட்டுமே செய்த மெகா கேப்டன்சி சாதனையை செய்து காட்டிய ருதுராஜ் கெய்க்வாட்
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், ருதுராஜ் கெய்க்வாட் ஒரு புதிய மைல்கல்லை எட்டினார். ஐபிஎல் வரலாற்றில் தோனிக்குப் பிறகு சிஎஸ்கே கேப்டனாக 1000 ரன்களைக் கடந்த 2-வது வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இந்தப் போட்டியில் 2 ரன்கள் எடுத்தபோது அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.