தர்மசாலா: இந்திய அணியில் அறிமுக வீரராக களம் இறங்கிய வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிரார், தனது முதல் ஓவரிலேயே ஆப்கானிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் சத்ரானின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார். தரம்சாலாவில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் இந்த விக்கெட் வீழ்ந்தது. வலதுகை வேகப்பந்து வீச்சாளரான பிரார் வீசிய லென்த் டெலிவரி, பந்து வீச்சு தளத்தில் இருந்து சற்று விலகிச் சென்றது. அதை எதிர்கொண்டு சத்ரான் டிரைவ் செய்ய முயன்றபோது, பந்து பேட்டின் எட்ஜில் பட்டு மிட்-ஆஃப் திசையில் பறந்தது.

அதை இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் எளிதாக கேட்ச் பிடித்தார். இந்த ஆட்டத்தில் சத்ரான் 4 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 1.5 ஓவர்களில் 13 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்து தடுமாறியது. 6.5 அடி உயரம் உள்ளதால் குர்னூர் பிரார் பந்துவீசும் போது, அது நல்ல பவுன்சை தருகிறது. இதனால், பேட்ஸ்மேன்கள் அவரை எதிர்கொள்ளும் போது தடுமாறுகிறார்கள்.
மழை காரணமாக இந்த ஆட்டம் தலா 25 ஓவர்களாகக் குறைக்கப்பட்டதை அடுத்து, டாஸ் வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்த போட்டியின் மூலம் குர்னூர் பிரார் மற்றும் ஹர்ஷ் துபே ஆகிய இருவரும் இந்திய அணியில் அறிமுகமாகினர்.
ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிரடியாகத் தொடங்கி, அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் விளாசினார். எனினும், இரண்டாவது ஓவரிலேயே குர்னூர் பிரார், இப்ராஹிம் சத்ரானை வீழ்த்தி இந்திய அணிக்கு முதல் திருப்புமுனையை ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, அர்ஷ்தீப் சிங் தனது அடுத்த ஓவரில் சதிகுல்லா அடலை ரன் ஏதும் எடுக்கவிடாமல் ஆட்டமிழக்கச் செய்தார்.
ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது குர்பாஸ் 14 ரன்களுடனும், ரஹ்மத் ஷா 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்திய அணி: சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷ் துபே, குர்னூர் பிரார், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா.
IND vs AFG: வரலாற்று சாதனை படைக்க ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு.. கோலி, தவானை முந்த 23 ரன்கள் தேவை
ஆப்கானிஸ்தான் அணி: ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான், சதிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), முகமது நபி, அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷீத் கான், முகமது சலீம் சஃபி, ஏ.எம். கஸன்ஃபர், ஜியா உர் ரஹ்மான் ஷெரீபி.